June

June

உலக கிண்ண கால்பந்தாட்டத்துக்கு வடகொரியா முதற்தடவையாக தகுதி

football.jpgவடகொரியா 43 வருட இடைவெளிக்குப்பின்னர் முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ரியாத் நகரில் மன்னர் பஹத் விளையாட்டரங்கில்; 66 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற சவூதி அரேபியா அணியுடனான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதையடுத்து வடகொரியாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிச்சுற்றில் ஆசிய பிராந்தியம் சார்பாக விளையாட வடகொரியா தகுதி பெற்றுள்ளது. தென்கொரியா, ஜப்பான்,அவுஸ்திரேலியா ஆகியன ஆசியா சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய அணிகளாகும்.

பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்படத்தேவை இல்லை – மருந்து தயாராக இருப்பதாக அறிவிப்பு

19swine-flu.jpgஇலங் கையில் முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகைகள் தயாராக உள்ளதெனவும் இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி ரிசின பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதாரக் கல்விப் பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டாக்டர் ரிசின பிரேமரத்ன இவ்வாறு தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

பன்றிக்காய்ச்சல் குறித்து நாம் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், சிகிச்சை அளிப்பதற்குரிய மருந்துவகைகளும் தருவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 8 வயதுச் சிறுவனுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் உள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது.

இச்சிறுவனுக்கு வைத்தியசாலையின் பிரத்தியேக அறை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு சாதாரண காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகளான தடிமன், இருமல், உடல்வலி, வாந்தி என்பவற்றுடன் டயறியாவும் காணப்படலாம். பன்றிக்காய்ச்சலுக்குரிய மருந்துவகைகள் தயாராக உள்ளபோதும் இதற்குரிய ஊசி மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பன்றிக்காய்ச்சல் தொற்றிலிருந்து எம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்தை அதிகூடியளவில் கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்த முன்னர் கைகளை சவர்க்காரத்தால் கழுவும் அதேநேரம், அடிக்கடி கைகளால் முகத்தை தொட்டுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன், சன நெருசல் மிகுந்த இடங்களிற்குச் செல்வதை தவிர்ப்பதுடன், கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படின் வாய் மூக்குப்பகுதியை துணிகளால் மூடிக்கட்ட வேண்டும்.

அத்துடன் சுத்தமான கைக்குட்டைகளையே பயன்படுத்த வேண்டும். இதேவேளை, அதிக போஷாக்குள்ள சுத்தமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சலை அடையாளங்காண்பதற்குரிய சாதனமே விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது

இச்சாதனத்தின் மூலம் காய்ச்சலுகுக்கு உள்ளானவர்களை மாத்திரம்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரை கண்டுபிடிக்க முடியாது. பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவரிலிருந்து 5 அல்லது 7 நாட்கள் கடந்த நிலையிலேயே சரியான தாக்கத்துக்கு உள்ளானதை கண்டுபிடிக்க முடியும்.

பனடோல் உட்கொண்ட ஒருவர் இச்சோதனைச் சாதனங்களூடு சென்றால் கண்டுபிடிக்க இயலாதெனத் தெரிவித்தார்.

கல்வி நிருவாக சேவையில் பதவி உயர்வு

teacher.jpgகல்வி நிருவாக சேவையில் முதலாம் தர உத்தியோகத்தர்களுக்கான 24 வெற்றிடங்களையும் நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன்படி கல்வி நிருவாக சேவையில் இரண்டாம் தராத்திலுள்ள 24 பேருக்கு முதலாம் தரத்துக்கான  பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்பித்திருந்தார்.

நெலுங்குளத்தில் மூன்று புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொலை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgவவுனியா, நெலுங்குளம் பகுதியில் இன்று காலை மூன்று புலி உறுப்பினர்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் இன்று காலை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா விஷேட பொலிஸ் பிரிவினர் வாகனம் ஒன்றை சோதணை செய்ய முற்பட்டபோது இந்த மூன்று புலி உறுப்பினர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனை வெற்றிகரமாக முறியடித்த பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இம்மூவரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 11 இல் ஆரம்பம் – ஓகஸ்ட் 23 இல் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை

examination_department.jpgஇவ் வருடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான நாட்களை பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அகதி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : எதிர்க்கட்சிகள் வழக்குத் தாக்கல்

court-unp.jpgவடக்கில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் பலர் முகாம்களில் அகதிகளாக அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை எமது நாட்டு எதிர்க்கட்சிகளுக்கோ மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கோ அரசு வழங்கவில்லை.

எமது நாட்டு மக்களின் நிலையை நேரில் சென்று அறிய முடியாத நிலையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்தன, லஷ்மன் செனவிரத்ன, மங்கள் சமரவீர, ஹசன் அலி, மனோ கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று பிரதம நீதியரசர் அசோக் டி சில்வாவின் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதத்தின் பின்னர் இம்மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermen.jpgஇலங்கைக் கடற்படையினரால் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்ட இவர்கள் இந்திய கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சீன அபிவிருத்தி வங்கியால் 25 மில்லியன் டொலர் நிதியுதவி

ranjith_siyambalapitiya.jpgநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலரை நிதியுதவியாக வழங்க முன் வந்துள்ளதுடன் அதற்கான பினைச் சாண்றிதழ் ஒன்றை சமர்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நிதி அமைச்சரான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சமர்பித்திருந்தார்.

இந்தக் கடனுதவித் தொகை மூலம் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது

arrest.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்

இலங்கை அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழு பிரதான அங்கத்தவர் கைது!

sl-cricket-teamattack.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான அங்கத்தவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பொன்றின் உறுப்பினரான இந்த நபர் நேற்று லாகூர் நகரில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்ட இந்த நபர்,  இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை வீரர்களைக் கடத்திச் செல்வதே தமது இலக்காக இருந்தது என்றும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது குழுவினர் லாகூர் நகருக்கு வந்து அங்குள்ள சிறு வீடொன்றினுள் இருந்தே தாக்குதல் திட்டங்களை வகுத்ததாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை அணி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேர் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் 6 பேரும் ஒரு பயிற்றுவிப்பாளரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.