24

24

‘அன்பு சகோதரர்’ வைகோவை அவமானப்படுத்திய ஜெயலலிதா

jayalalitha.jpgவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.

வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார். அதுவும் கூட வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்துபோயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார். ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த ‘அன்பு சகோதரர்’ அவமானத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.

வாக்களியுங்கள் என்று சொன்னபோது, தனது பெயரை ஜெயலலிதா சொல்லாவிட்டாலும் எழுந்து நின்று மக்களைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார் வைகோ. பாவம் வைகோ..!

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் 13 மில்லியன் ரூபா கொள்ளை

வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை வங்கி வைப்பைறையிலிருந்து இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாப்பாக வங்கியை விட்டு வெளியேறும் வரையிலும் வங்கி ஊழியர் ஒருவரை பணயக் கைதியாக கொள்ளைக் கோஷ்டியினர் பிடித்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

11வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம்

20-fast.jpgஈழத் தமிழர்களைக் காக்க்க கோரியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையி்ல பெண்கள் கூட்டமைப்பினர் நடத்தி வரும் உண்ணாவிரதம் 11வது நாளாக இன்றும் தொடருகிறது. மேலும் 6 பெண்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து பெண்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்றும் கவலைப்படாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த 13ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பேராசிரியை சரஸ்வதி (இவர்தான் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பழனியம்மாள், லித் வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகிய 6 பேருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது. நேற்று இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ரோகிணி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த பெண்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நாளை மேல்மாகாணசபைத் தேர்தல்

sri-lanka-election.jpgநாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்

மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் தமிழ் இளையோரின் தமிழ்தேசிய எழுச்சி : மயூரன் (லண்டன்)

Protest_Londonவன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிகப்பெரும் மனித அவலத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கைத் தாண்டி தற்போது ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் பெரும்பாலானோர் தமது உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது இவர்கள் மனதில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் தமிழ்த் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பி விட்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் சர்வதேச அரசியற் களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதன் முதலாக பிரான்ஸ் வாழ் எம்முறவுகளால் பாரீஸின் மையப்பகுதியில் ஒரு சாலைமறியல்ப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இது ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே இடம்பெற்றாலும் இதுவே புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வீதி மறிப்புப் போராட்டங்களுக்கு அத்திவாரம் இட்டது எனலாம். அதனைத் தொடர்ந்து லண்டன், நோர்வே என இச் சாலைமறியல்ப் போராட்டங்கள் விரிவடைந்தன.

கடந்த ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து இலங்கையின் சுதந்திர தினமான நான்காம் திகதி வரை சுழற்ச்சி முறையிலான உண்ணாவிரதத்தினை பாராளுமன்றத்தின் முன்னுள்ள சதுக்கத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில் பலர் தமது ஆதரவினைத் தெரிவித்ததோடு அவ் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஜனவரி மாதம் 31ஆம் திகதி லண்டனில் முதலாவது வரலாhறு காணாத எழுச்சிப் பேரணியையும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 125,000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே. 
அந்த எழுச்சிப் பேரணியானது லண்டனின் மத்திய பகுதிகளில் ஒன்றான மில்பாங்க் என்னுமிடத்திலிருந்து ஆரம்பமாகி பாராளுமன்றம் முன்பாகச் சென்று ரெம்பிள் பிளேஸ் என்ற இடத்தில் முடிவடைந்திருந்தது. இதற்கான ஒழுங்கமைப்பினை இயையோர்களாகிய தமிழ் மாணவர்களே முன்னின்று செய்திருந்தனர்.  இந்த எழுச்சிப் பேரணிக்கான அனுமதி மதியம் 1.30 இருந்து மாலை 4 மணிவரையே கிடைத்தது. ஆனால் மக்கள் வெள்ளம் அலை மோதியதனால் மாலை ஐந்து மணியாகியும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்றத்தைத் தாண்டிச் செல்லவில்லை. இதனால் காவல்த்துறையினர் அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கு கலந்து கொண்ட SAGT அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதனால் அங்கு வந்த மக்களும் வீதியில் அமர்ந்தனர். இவ்வாறு விதியை மறித்தவர்களை கலைப்பதற்கு பிரித்தானிய காவல்த்துறையினர் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் தலையீட்டின் பேரில் மக்களாகவே கலைந்து சென்றனர்.

இதுவே பிரித்தானியாவில் நடந்த முதலாவது வீதி மறியல்ப் போராட்டமாகும். இவ்விதி மறியல் போராட்டத்தை அன்றைய தினம் முன்னின்று நடாத்தியவர்கள் இந்த சாக்ரி (SAGT) அமைப்பினரே. முதலில் இந்த சாக்ரி அமைப்பினர் என்றால் யார் என நோக்கினால். தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கம் (Student Against Genocide of Tamil)  என்பதாகும். இதன் சுருக்கமே SAGTஎனப்படுகிறது.  இது கடந்த ஜனவரி மாதம் முதல் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுவரை தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
 
மேலும் இலங்கையின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி நான்காம் திகதி பாராளுமன்றச் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை பிரித்தானிய இளையோர் அமைப்பு மேற்கொண்டிருந்தது. இதிலும் கிட்டத்தட்ட 12 யிரம் வரையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 28 திகதி வரை சுழற்ச்சி முறையில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டமும், இனப்படுகொலைகளைச் சித்தரிக்கின்ற கண்காட்சிகளும், இனப்படுகொலை தொடர்பான புரிந்துணர்வுக் கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இதன்மூலம் மாணவர்கள் தமிழ் இனப்படுகொலைகளை பல்கலைக்கழக ரீதியில் கொண்டுசென்றனர். இந்த நிகழ்ச்சி நிரலையும் தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கமே SAGT ஒழுங்கு செய்திருந்தது.

பின்னர் வன்னியில் நடக்கின்ற இனப்படுகொலையானது நூற்றுக் கணக்கில் உயர்ந்த போது பொங்கி எழுந்த தமிழ் இளையோர்கள் கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் அணிதிரண்டு திடீரென அந்த வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதன்பின்னர் அவ்விடத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு காவல்த்துறையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் பிரித்தானிய காவல்துறையினரால் அவர்களை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் தமது வேலைகளையும் விட்டுவிட்டு அங்கு சென்று சாலைமறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இணைந்தனர். இதனால் காவல்த்துறையினர் செய்வதறியாது தவித்தனர். இது இவ்வாறு இருக்க மறுநாள் செவ்வாய்கிழமை (07.04.09) அதிகாலையில் மக்கள் தம் காலைக் கடன்களையும் வேறு வேலைகளையும் பார்ப்பதற்காக கலைந்தனர். இதனால் அங்கு 1500 வரையான மக்களே இருந்தனர்.

இச்சந்தர்ப்த்தைப் பயன்படுத்திய காவல்த்துறையினர் காலை எட்டு மணியளவில் அந்த பாராளுமன்ற வீதிக்கு விரைந்த காவல்த்துறையினரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கிருந்த மக்களின் மீது தடியடிப்பிரயோகம் செய்தனர். இதன்போது மாணவர்கள் மக்கள் எனப் பலர் கை, கால் முறிவுகளுக்கும் காயங்களுக்கும் உள்ளானார்கள். இருந்தும் மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லவில்லை. அடிவாங்கியும் நகராது இருந்தனர். காவல்த்துறையினருக்கு வேறுவழி தெரியவில்லை. உடனே அவர்கள் நாங்கள் உங்களுக்கு பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தை ஒதுக்கித் தருகின்றோம் அதற்குள் இருந்து உங்கள் ஆர்ப்பாட்டத்தினைத் தொடரலாம் என்றனர். இம்முடிவின் பேரில் மாணவர்கள் மக்களை அவ்விடத்திலிருந்து அகலச்செய்து பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்திலிருந்து தங்களது கண்டணத்தை வெளிப்படுத்த ஏற்பாடுசெய்தனர். அது இன்றுவரை தொடர்கின்றது.  இதேபோல்த்தான் நோர்வேயிலும், பிரான்சிலும் இளையோர்கள் சாலைமறியல்ப் போராட்டத்தில் இறங்கினர். இருந்தபோதும் அவர்களை காவல்த்துறையினர் அங்கிருந்து அகற்றிவிட்டனர்.
 
இது இவ்வாறு இருக்கையில் அன்று மாலை (07.04.09) 05 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவகுமாரவேல் சிவதர்சன்;, 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்வரன் ஆகிய இரு இளைஞர்களும் சாகும் வரை நீராகாரமின்றி உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இதற்கு ஆதரவாக பல உறவுகள் இரவு பகலாக அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் நான்கு நாட்களாகியும் வீடு செல்லாது அங்கேயே படுத்துறங்கி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களு ஆதரவு வழங்கியதனை என்னால் காணமுடிந்தது.  இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ் சந்தித்ததனைத் தொடர்ந்து அவர்கள் நீர் மட்டும் அருந்தி தமது உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இருந்த போதும் பிரித்தானிய இளையோர் அமைப்பு, உண்ணாவிரதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினர் செரோன் மக் டொனால்ட் அவர்களால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து சிவகுமாரவேல் சிவதர்சன் என்பவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 10.04.09 கைவிட்டார். அதாவது செரோன் மக்டொனால்ட் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பிரித்தானிய அரசு. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பிற்கும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் அழைத்து செல்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்தே சிவதர்சன் போராட்டத்தைக் கைவிடார்.

ஆனால் சுப்பிரமணியம் பரமேஸ்வரன்  இன்றுவரை போராட்டத்தினைத் தொடர்கின்றார். பரமேஸ்வரன் அவர்களிடம் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்றுவரை தொடர்ந்திருப்பதற்கான காரணத்தை வினாவியபோது என்னை இங்கிருந்து அகற்றுவதற்காக நான் எப்போது சுயநினைவை இழப்பேன் எனபிரித்தானிய காவல்த்துறையினர் எதர்பார்த்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் முடிவு கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேறாது எனது உயிர் பிரிந்துதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்குமாக இருந்தால் அதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். எமது போராட்டத்திற்கு சர்வதேசம்தான் பதில் கூறவேண்டும். சர்வதேச நாடுகள் போருக்குப் பின்புலமாக நிற்பதை நிறுத்தி தமிழ்மக்களைக் காப்பாற்ற வேண்டும். எமக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உறுதிமொழி வழங்கியுள்ளனர். அவை அமுலாக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார். பிடிவாதமாக இன்றுவரை தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வழியில் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றார்.

பரமேஸ்வரன் முதல் நான்கு நாட்களும் நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தண்ணீரைப் பருகுகின்றார். தற்போது இவருக்கு நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் குறைந்துகொண்டுவருகிறது. அதேநேரம் தண்ணீர் போதியளவு அருந்தாததனால் சிறுநீரகம் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலை தொடர்வதால் இவரது நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அத்துடன் கடந்த 21ஆம் திகதி பரமேஸ்வரன் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமது சொந்த நிலங்களை விட்டு அகதிமுகாம்களில்  இலங்கை அரசு மக்களை அடைத்திருப்பதனால் அங்கு அடைபட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலையும், மக்களின் மனோநிலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சர்வதேச நாடுகள் இதில் தலையிட்டு அந்த மக்களை உடனடியாக தமது சொந்த நிலங்களில் குடியேற்ற ஆவனை செய்ய வேண்டும் என்றார். தமிழர்கள் அல்லாத பிற நாட்டவர்களும் அங்குவந்து கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு ஸ்பானிஸ் பெண்மணி கண்ணீர் மல்க உயிருக்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது. எனவே இவர்களது உயிர்முக்கியம் எனவே உண்ணாவிரதத்தை விட்டு அமைதிவழியில் மேற்கொள்வதே சிறந்தது என்றார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ளச் சென்றவேளை பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு உதவியாக வெறும் இருபது மாணவர்களே இருந்தனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிரித்தானிய காவல்த்துறையினர். அந்த மைதானத்தில் உள்ள புற்கள் உங்கள் ஆர்ப்பாட்ட மூலம் அழிக்கப்படுகின்றது எனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புற்களைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்தனர். இருந்தும் மக்களை அந்த புற்றரைகளுக்கு அப்பால் இருந்து உண்ணாவிரதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளுமாறும் கூறினர். முன்னர் 400 பேர் மட்டும் இரவு பகலாக அங்கு தங்கியிருக்க அனுமதித்த காவல்த்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதிமுதல் வெறும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஏனையோர் அங்கு வந்து உண்ணாவிரதியைப் பார்த்துவிட்டு அகன்றுவிடவேண்டும் என்றும் கூறினார்.

இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர். எவ்வாறாவது காவல்த்துறையினர் மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் யாரும் ஒலிபெருக்கி பயன்படுத்தமுடியாது. என்று அறிவித்தனர். இதனால் ஆத்தரமடைந்த 4000 இற்கும் அதிகமான மாணவர்களும் மக்களும் ஈஸ்டர் தின விடுமுறையான திங்கட்கிழமை (13.04.09) மாலை 03 மணியளவில் வேகுண்டெழுந்து மீண்டும் வீதியைத் தடைசெய்தனர். அன்றையதினம் விடுமுறை என்றதனால் பல காவல்த்துறையினர் கடமையில் இல்லை. இதனால் அவர்கள் ஒருகணம் சங்கடப்பட்டாலும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களும் மக்களை எதுவும் செய்யவில்லை. இரவு 09 மணியளவில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பணிப்பின் பேரில் மக்கள் தாமாகவே வீதியை விட்டகன்று வீதியை வாகனங்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி ஸ்கொட்லண்ட் யாட் காவல்த்துறையினர் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனைச் சந்தித்துவிட்டு 20ஆம் திகதி காலை தமது முடிவினை அறிவிப்பதாக கூறியபின்னர். பரமேஸ்வரன் ஊடகங்களினூடாக மக்களுக்கு பணிவான வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதாவது அனைவரையும் 20ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள சதுக்கத்தில் காலை ஒன்றுகூடுமாறு மன்றாடி வேண்டினார். இதனால் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் இற்கு மேற்பட்ட மக்கள் காலை அவ்விடத்தில் கூடினர். இதனால் அவ்விடம் நிரம்பி வழிந்தது. மக்கள் நிற்பதற்கே இடமில்லாது போனது. இதனால் கடந்த 11ஆம் திகதி பிரித்தானிய காவல்த்துறையினரால் புற்களைச் சுற்றிப் போடப்பட்ட கம்பிவேலிகளை உடைத்தெறிந்து கொண்டு மக்கள் புற்தரைக்குச் சென்றனர். இதன்பின்னர் காவல்த்துறையினரே அங்கு ஏற்கணவே போடப்பட்ட கம்பிகளை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.

இதன் பின்னர் மூன்றாவது தரமாகவும் வீதிகளை மறிப்பதற்கு தமிழ்மாணவர்கள் திட்டம் தீட்டினர். அதனடிப்படையில் மாணவர்கள் காலை 9.30 மணியளவில் அங்கிருந்த மக்களையும் அழைத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கு முன்னால் செல்லும் பிரதான மூன்று வீதிகளை பிரித்தானியப் பொலீஸாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஊடறுத்துச் சென்று வீதியின் நடுவில் அமர்ந்து கொண்டனர். இதனால் எதுவுமே செய்யமுடியாத காவல்த்துறை வெறும் கைகளை மட்டும் கட்டிநின்று நடப்பதை அவதானித்துக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வினை Skynews,Bbc முதலான தொலைக்காட்சிகளும் மெற்ரோ, ஈவினிங் ஸ்ராண்டட் முதலான பத்திரிகைகளும் காட்சிப்படுத்தின. தொடர்ச்சியாக காவல்த்துறையினர் மக்களை வீதிகளை விட்டகன்று சதுக்கத்திற்குள்ளும், புற்றரைகளுக்குள்ளும் செல்லுமாறும் நீங்கள் புற்றரைகளை எதிர்வரும் மே மாதம் 11 திகதிவரை பயன்படுத்தலாம் என்று உறுதியளித்தும் மக்கள் கலைந்து செல்வதாக இல்லை. மாறாக விரியம் கொண்ட மக்களின் போராட்டத்தினால் காவல்த்துறையினர் மௌனமானார்கள்.

நேரம் இரவு 10 மணியையும் கடந்து சென்றது. மக்கள் வீதியை விட்டகல்வதாக இல்லை. இருந்தும் நேரம் நள்ளிரவு 12 மணியைத் தொடும்போது  அங்கிருந்த மக்களின் தொகை வெறும் 1500 ஆகவே இருந்தது. அங்கிருந்த மாணவர்கள் மக்களை அவ்விடத்தைவிட்டகன்று புற்றரைகளுக்குச் செல்லுமாறு வேண்டினர் காரணம் அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையையும், மக்கள் காவல்த்துறையினரால் தாக்கப்படாதிருக்கவுமே அவர்களை வீதியை விட்டகலுமாறு மாணவர்கள் வேண்டினர். அதனடிப்படையில் நள்ளிரவு 12 மணிக்கு தாயகத்தில் இறந்தவர்களுக்காகவும் அன்று பிரித்தானிய மகாராணியின் பிறந்ததினம் என்பதனாலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செய்துவிட்டு வீதியை விட்டகன்றனர். இங்கு முக்கியமாக மக்கள் வீதியை விட்டகலும் போது வீதியில் உள்ள குப்பைகளை அகற்றி வீதிகளை நன்கு துப்புரவு செய்ததன் பின்னரே புற்றரைகளிற்குச் சென்றனர். காலை 9.30 ற்கு பிரதான மூன்று விதிகளை மறித்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கே வீதிகளை விட்டகன்றனர்.

அதன்பின்னர் கடந்த செவ்வாய்கிழமை பிரித்தானிய தமிழ் மாணவர்களால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பிதழை ஏற்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் மீதமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் முயற்ச்சிகளில் தற்போது இறங்கியுள்ளனர். அத்துடன் உண்ணாநிலைப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தமிழ் மாணவர் அமைப்பு கவனிக்க. SAGT(Student Against Genocide of Tamil) என்ற இயக்கம் அதற்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பல அமைப்புக்களுக்கும் அரசியல் ரிதியிலான விளக்கங்களையும் அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

அதாவது 24 பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்திருக்கும் இந்தச் சாக்ரி SAGT இயக்கம் பிரித்தானிய மனிதஉரிமைகள் அமைப்பின் மாணவர்கிளையின் ஆதரவையும் பெற்றுள்ளது. அத்துடன் யுனிசண் Unison என்கின்ற தொழிற்சங்கத்திற்கும் எமது அவலத்தினைத் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் யுனிசன் தொழிற்சங்கம் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்தியத் தூரதரத்திற்கு ஒரு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இதில் நீங்கள் அப்பாவித் தமிழ்மக்களைக் கொல்வதற்கு ஆதரவு வழங்குகிறீர்கள். அத்துடன் அபாயகரமாக கிளாஸ்ரர் குண்டுகளையும், இரசாயண வாயூக்களை இலங்கை இராணுவம் பயன்படுத்துவதற்கும் நீங்கள் நேரடியாக உதவுகின்றீர்கள் என இந்தத் தொழிற்சங்கம் நம்புகின்றது. எனவே இவற்றை முடிந்தவரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் பிரித்தானிய ஆசிரியர் தொழிற்சங்கமும் (Union for teacher) தனது ஆதரவினை இந்த சாக்ரி அமைப்பிற்கு வழங்கியுள்ளது. மேலும் அரச வர்த்தகத்துறைச் தொழிற்சங்கமும் (Civil and Commercial Works Union) தனது ஆரதவினை இந்த மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர். அத்துடன் பிரித்தானிய மாணவர்களின் அமைப்புடன் (National Union of Student) ச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சாக்ரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இவைகள் அனைத்தும் பிரித்தானிய தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

மேலும் 22ஆம் திகதி தமிழ் மாணவர்கள் அனைவரும் பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைகளுக்குச் செல்லாது பிரித்தானிய நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடிதாக உள்ளது. இதில் 10ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து ண்டிருந்தனர். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை ஒரு தொகுதிப் மாணவர்களின் பிரதிநிதிகள் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்தோடு செவ்வாய்கிழமை கொமன்வேல்ட் நாடுகளின் ஒன்றியததின் காரியாலயமான பிரான்சுக்கும், வியாழக்கிழமை (23.04.09) வோஷிங்டனுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதனுடைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு ஒரு புறம் உடனடி யுத்த றுத்தத்திற்காக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்திலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்கள்களை இளையோர் அமைப்பு, தமிழ் மாணவர் ஒன்றியம், சாக்ரி இயக்கம் ஆகியவற்றினூடாக இணைத்து அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக மிகப்பெரிய தமிழ்த் தேசியஎழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்த இளையவர்களும் தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

இந்திய உயர்மட்டத் தூதுக் குழு இன்று இலங்கை விஜயம்

india.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக் குழுவினர் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் – இந்தியா

mugarsjee_piranap.jpg இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. வியாழன்றைய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கை அரசிடம் இந்தியாவின் கரிசனைகளை தெரிவிப்பதற்காக இரண்டு விசேட தூதுவர்கள் இலங்கை செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவிர இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது. அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்படவே வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளிடமிருந்து தப்பி வருவோர் நிலை – உச்ச அளவில் வசதிகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு

Wanni_War_Boat_Refugeesபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு உச்ச அளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாரென சுகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்ஸில் நேற்று கூடி ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பதற்காக 300 க்கும் அதிகமான மருத்துவர்களும் 550க்கும் அதிகமான தாதிமார்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது- வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சகல வசதிகளும் அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து நான் பாதுகாப்பு கவுன்ஸிலில் விளக்கமளித்தேன். 300 டாக்டர்களுக்கு மேலதிகமாக வதிவிட மருத்துவர்கள் 200 பேரும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் அங்கு அனுப்பப்படுவர்.

நோய்வாய்ப்பட்டு வரும் மக்களில் மேலதிக சிகிச்சை தேவையானவர்களை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென வேறு ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் கட்டில்களை ஒதுக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரண்டு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி வழங்க முன்வந்துள்ளது.

தப்பி வரும் மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளை பெற்று அந்த மக்களுக்கு உதவ அரசு ஆவன செய்து வருகிறது.

வன்னியில் இருந்து வரும் மக்களை அழைத்து வருவதற்கென 150 க்கும் அதிகமான பஸ்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் பஸ்கள் தேவைப்படுமானால் மேலதிக பஸ்கள் அங்கு அனுப்பப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஏற்கனவே 50 க்கும் அதிகமான பஸ்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் சகோதரர்களுக்கு உதவுங்கள் ……….

anura.jpgவன்னியிலிருந்து ஆயிரக் கணக்காக இடம்பெயர்ந்து வவுனியாவுக்குள் வரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவும் நோக்குடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

அந்த மக்களுக்கு உதவ விரும்பும் நலன்விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள், வர்த்தகர்கள், அமைப்புகள் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து உலர் உணவுப் பொருட்கள், திரவப்பால், குழந்தைகள் பால் மா, குளுக்கோஸ், பிஸ்கட் வகைகள், சமபோஷ, அரிசி, சீனி, மா உட்பட பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள் போன்றவற்றை சேகரித்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கோ, அல்லது தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ, உதவி பிரதேச செயலகத்திற்கோ, மாவட்ட செயலகத்திற்கோ ஒப்படைக்கலாம்.

புலிகளின் பிடியிலிருந்து சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் படையினரின் பாதுகாப்பைத் தேடி வருகின்றனர், வந்துள்ளனர், வந்துகொண்டிருக்கின்றனர்.

மனித நேயமுள்ள மக்கள் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என ஊட கத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக விசேட கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையிலுள்ள அனைத்து ஊடக நிறுவன பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் – எம்.பி.சிவாஜிலிங்கம்

sivajilingam0.jpg இலங்கையில் நடைபெறுவது ஓர் விடுதலைப் போராட்டம், அங்கு தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று கூறிய எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் அமையும் தமிழ் ஈழம் நாடு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் நேற்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம், ஒரு காலத்தில் இலங்கை நாடு, இந்தியாவுடன் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுனாமி தாக்குதல்கள் காரணமாக பின்னர் அது தனித்தீவாக பிரிந்தது. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான வடமொழிகளை பேசுபவர்கள் இலங்கைக்கு வந்து, அங்குள்ள பெண்களை மணந்துக்கொண்டு சிங்களர்களாக மாறிவிட்டனர் என்பது வரலாறு.

இந்தியாவை அமெரிக்கர்கள் ஆண்டகாலத்தில், அவர்கள் இலங்கைக்கும் வந்தனர். அப்போது இலங்கையை யாழ்ப்பாணம் ராஜ்யம், கண்டி ராஜ்யம், வன்னிராஜ்யம் என்ற 3 ராஜ்யங்களாக பிரித்து தமிழ் மன்னர்கள் ஆண்டுவந்தனர். இந்த தமிழ் மன்னர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராகவும் போராடி உயிர் இழந்துள்ளனர். இதை அமெரிக்க வரலாறு தெரிவிக்கிறது.

தமிழ் ஈழப் புலிகளின் போராட்டத்தை வந்தேறிகளின் போராட்டம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இலங்கையில் வந்தேறிகளாக இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல; சிங்களர்கள் தான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வசிக்கும் தமிழர்களை சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிங்களர்கள் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்? 

400 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த உரிமையை பெறுவதற்கு தான் தமிழர்கள் இப்போது போராடிக்கொண்டிருக்கிறார்கள், எனவே, இது பயங்கரவாத போராட்டம் அல்ல; இதுவும் ஓர் விடுதலைப் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்டம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோதுதான், இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. அப்போது, தனிநாடு வேண்டும் என ஜின்னா கேட்டதால் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. ஆனால், நாங்கள் இந்தியாவை நம்பினோம். ஜின்னாவை போல, நாங்களும் தனிநாடு வேண்டும் என்று அன்றே கேட்டிருந்தால் இன்று இந்த போராட்டத்துக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினை, வங்க பிரிவினை போன்றவை நடந்தபோது எங்கே போனது உங்கள் இறையாண்மை?. கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை அதிபராக ராஜபக்சே பொறுப்பேற்றதிலிருந்துதான் படிப்படியாக போரை தீவிரப்படுத்தி வருகிறார்,. இதுவரை அங்கு 20 ஆயிரம் முறை குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக அங்குள்ள பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்டதை விட மிக வலுவாக 44 லட்சம் கிலோ எடை கொண்ட கொடிய குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நடந்த 2வது உலகப் போரில்கூட இதுபோன்ற கொடூரங்கள் நடைபெறவில்லை.

இதனால், இதுவரை லட்சக்கணக்கான அப்பாவி மக்களும், பல்லாயிரக் கணக்கான புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு, 40 குழாய்களை கொண்ட பீரங்களை வழங்கியது. இப்போது 70 குழாய்கள் கொண்ட நவீன பீரங்களை வழங்கி, இலங்கை தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.

இந்திய அரசு, இன்று இலங்கை தமிழருக்கு எதிராக நடந்தாலும் எதிர்காலத்திலாவது எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்திய அரசை நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். எனவே ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக் நாங்கள் செயல்பட மாட்டோம். இலங்கையில் தமிழ் ஈழம் நிச்சயமாக அமையும். தமிழ் ஈழம் என்ற அந்த புதிய நாடு, இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்றார்.