இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. வியாழன்றைய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கை அரசிடம் இந்தியாவின் கரிசனைகளை தெரிவிப்பதற்காக இரண்டு விசேட தூதுவர்கள் இலங்கை செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது. அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்படவே வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.