06

06

நாட்டில் அனைவரும் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கப்படும்:அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிப்பு

karuna.jpgநாட்டில் அனைத்து இனமக்களும் எப்போதும் எங்கும் சுதந்திமாக நடமாட வழிவகுப்பதே எனது நோக்கமாகும் என புதிதாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான தமது அமைச்சின் செயலகத்தை o4 பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைத்து கடமைகளைப் பொறுப்பேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

“கடந்த இருபத்தைந்து வருட காலமாக இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வில்லாத ஒரு நிலை நிலவி வருகிறது. அந்த நிலையை இந்த அமைச்சின் ஊடாக மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கோள்வேன். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் மொழியையும் கற்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய ஒத்துழைப்பாக இது அமையும்.

கடந்த காலங்களில் நெருக்கடியான யுத்த சூழ்நிலையில் சிக்கியிருந்த நான் உண்மையான சமாதானம் சுதந்திரம் என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டேன். நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் சிறந்த ஒரு சேவையை ஆற்றுவதற்கு நல்ல கொள்கையுடைய பெரிய ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என முடிவெடுத்தேன்.

அதனால்தான் நாட்டு மக்களின் நலனுக்காக சிறந்த கொள்கையுடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துள்ளேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். தமிழ் மக்களும் மஹிந்த சிந்தனையை பெரிதும் வரவேற்கின்றார்கள். எனது சேவையை மக்கள் நலனுக்காக மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அமைச்சர் முரளீதரன் மேலும் கூறினார்.

இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன்

சூரியன் இன்று 6ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையும் இலங்கைக்கு நேர் உச்சத்தில் (சமீபமாக) தென்படும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இதன்படி இன்று நண்பகல் 12.13 மணிக்கு காலி- ஹிக்கடுவ, நாக்கியாதெனியா, மகாலேவாய மற்றும் ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ ஆகிய இடங்களில் சூரியன் நேர் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சூரியன் வருடா வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது வழமையானதே.

அமரர் ஜெயராஜின் நினைவு தினம் இன்று

jayaraj.jpgபுலிகள் இயக்கத்தினரின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் முதலாவது நினைவு தினம் இன்றாகும்.

இத்தினத்தின் நிமித்தம் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.வெலிவேரிய காந்தி ஆரியரட்ன விளையாட்டரங்குக்கு அருகில் மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் நினைவு தூபி இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை அன்னாரின் நினைவு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை செலுத்தலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவி இருப்பதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை பலமான பதில் ஒன்றை கூற வேண்டும் என அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளன.

இந்த ஏவுகணை செலுத்தல் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர், இருந்த போதிலும் தாங்கள் வடகொரியாவுடன் அணுத்திட்டம் குறித்து சர்வதேச பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்கவுள்ளது. நிதானமாக செயல்படுமாறு ஏனைய நாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.

தங்களுடைய ஏவுகணை செய்மதி ஒன்றை பாதையில் அமர்த்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும், இந்த ஏவுகணை ஏவப்பட்டது அதனுடைய செயற்திறனை சோதனை செய்வதற்காகவே என கூறியுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகைகள் எடுக்க வேண்டும்

sri-lanka-muslim-students.jpgகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலை அதிபர்களுக்கு விடுத்துள்ள அவசர பணிப்புரையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகைகள் எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

திருகோணமலையில் சென் .மேரிஸ் கல்லூரி மாணவியான ஜூட் ரெஜி வர்ஷா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்தே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யு.கே. வீரவர்த்தன இது தொடர்பான சுற்றறிக்கையை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதில்,

“முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பாடசாலை அதிபர்களின் பொறுப்பாகும்.பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர் தவிர்ந்த ஏனையவர்கள் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டாம்.சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் இடம்பெற்றால் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றார்களை அழைத்து அம் மாணவர்களை பாடசாலை முடிந்த பின்பு அழைத்து செல்வது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும் ” என்றும் அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

500 மாணவர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்

exam.jpgபரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 500 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்தது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் (4) அறிவிக்கப் பட்டன.

ஆனால் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுமார் 500 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். விசாரணை முடிவில் குறித்த மாணவர் களின் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என தீர்மானிக்கப்பட உள்ளது.

இவர்கள் செய்த தவறின் தன்மைகளு க்கேற்ப தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இவர்களுக்கு பரீட்சை எழுத ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இதே வேளை வெளிமாவட்ட பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை இன்று (6) பாடசாலைகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு முதல் வடக்கு வரை வீசும் வசந்தம்? : ஜெ ஜென்னி

Vadakku_Vasantham2006 முற்பகுதியில் மாவிலாறு தொடங்கி 2009 புதுமாத்தளன் வரை தொடரும் யுத்தமானது கடந்த மூன்றாண்டுகளாக எம் தமிழ்பேசும் மக்களை நிர்க்கதியாக்கி, வாழ்வியல் ஆதாரங்கள் எதுவுமே அற்று, தமது சொந்த நிலப்பரப்புக்களை இழந்து, உற்றம் – உறவு – சொந்தம் – பந்தமென உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்து எம் சொந்த நாட்டிலேயே அகதிக் கூட்டங்களாக மரணத்துள் வாழ்வதாக்கி உள்ளது. இதில் இலங்கை அரசின் இனவாத அழிப்பும் – புலிப் பயங்கரவாதத்தின் ஏகபிரதிநிதித்துவ தலைமை வெறியும் முட்டி மோதிக்கொள்ளும் நிலையில் தொடரும் இந்த யுத்தம் எமது மக்களைத் தான் பயணக் கைதிகளாக வைத்துள்ளது.

இலங்கை அரசின் இனவாத யுக்திகளைப் பார்ப்போமானால் நாடு சுத்ந்திரமடைந்த கடந்த 60 வருடங்களில் பிரித்தாளும் தந்திரங்களை பல வழிகளில் தமிழ் பேசும் மக்களின் மீதும், அப்பாவி சிங்கள பாமர மக்கள் ஊடாகவும் செயற்படுத்துகின்றது.

முதலாவதாக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களிற்குள் அத்துமீறி, ஆனால் சட்ட ரீதியான ஆவணங்களை உருவாக்கி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தமிழ் கிராமங்களின் எல்லைப் பிரதேசங்களில் ஏற்படுத்தியது. இந்தக் குடியேற்றும் சிங்கள மக்களையும் இனவெறியுட்டி ஆதிக்க உணர்வுகளை அடிப்படையாக்கி அந்தந்த கிராமத்திற்கு உள்ளேயே பழைய தமிழ் மக்களுக்கும், குடியேற்றிய புதிய சிங்கள மக்களுக்கும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி முரண்பாடுகளை வளர்த்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே இனவெறியைத் தூபமிட்டு இலங்கைப் பேரினவாத அரசு காலத்திற்கு காலம் இரு கட்சி ஆட்சிமாறினாலும் இவ்விதமாக ஒரே திட்டமிட்ட இன ஒடுக்குமுறையைத்தான் செய்கின்றது.

இக்குடியேற்றமானது, தமிழ் பிரதேசங்களை மிக மோசமாக துண்டாடப் பண்ணி தமிழ் மக்களின் விகிதாசார கணக்கெடுப்புக்களையும் பரவலாக ஐதாக்கி, அந்தந்த பிரதேச உரிமைகளையும் தனித்துவத்தையும் சிதறுறச் செய்துள்ளது. இதனால் எமது சொந்தப் பிரதேசத்திற்குள் எமக்குள்ள முன்னுரிமையையும், குடிசன மதிப்பீட்டு விகிதாசாரப்படி இழக்கப்படுகின்றது.

எனவே இத்திட்டமிட்ட குடியேற்றமானது நன்கு திட்டமிட்டு, இனவாதிகளால் காலத்திற்கு காலம் வளர்க்கப்படுகின்றது. எனவே இந்த அடிப்படைப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வேண்டிய முதலாளித்துவ தமிழ் தேசிய தலைமைகளும் இதனை சரியாக கையாளவில்லை. காலத்திற்கு காலம் தமது தேர்தல் பிரச்சாரங்களில் இக்குடியேற்றப் பிரச்சனையை மெதுவாக தொட்டுச்சென்று காய்களை நகர்த்தியுள்ளனர்.

மொத்த்தில் குறித்த சில தமிழ் சிங்கள முதலாளித்துவ தலைமைகள் பெரும்பான்மையான பாமர தமிழ் சிங்கள தமிழ் மக்களை தமது அரசியல் ஆதாயங்களுக்காக இன மத மொழி பிரதேச முரண்பாடுகளை களையாமல் பகடைக்காய்களாக பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் இனமுரண்பாடுகளின் ஆணிவேர்களை அன்றே களைபிடுங்கியிருந்தால், இரு இனத்தவர்களும், ஏனைய இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் சமத்துவம் – சமாதானம் – சகோதரத்துவமாக தத்தமது இறைமைகளை பாதுகாத்துக்கொண்டு ஒரே நாட்டில் சகல உரிமையுள்ள பிரஜைகளாக கூடி வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், இந்த 60 வருடத்தில் அகிம்சைப் போராட்டம் கூடர்மையடைந்து, ஆயத போராட்டமாக மாறி, இன்று ஏகப்பிரதிநிதித்துவ தலைமையால் பயங்கரவாதமாக எமது போராட்டம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தத்தில் நாம் போராட்டம் தொடங்கிய ஆரம்ப புள்ளிக்கே போய்விட்டோமோ என அங்கலாய்க்க வேண்டியுள்ளது.

இந்த ஆயுதப்போராட்டம் தனித் தலைமை வழிபாட்டை மையப்படுத்திய சர்வாதிகாரத் தன்மையினால், மறுப்க்கத்தில் இலங்கைப் பேரினவாத அரசை – பௌத்தசிங்கள இனவாத கொள்கையை செழுமைப்படுத்த வழிகோலியுள்ளது. இதன் மூலம் இலங்கையரசு பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு தனது நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பிரித்தாளும் தந்திரோபாய வேலைத்திட்டங்களை திறம்படவே செயற்படுத்தி இனசுத்திகரிப்பை நடாத்தி வருகின்றது.

இரண்டாவதாக, இந்த பிரித்தாளும் தந்திர அரசு, தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகள் அல்லது தலைமைகளிடையே முரண்பாடுகளை தூபமிட்டு வளர்த்தோ அல்லது சலுகைகளின் மூலமாக விலைபேசக் கூடிpயவர்களை விலைபேசியோ தமது செயற்பாட்டை நகர்த்துகின்றது.
இதில் புலிகளின் பயங்கரவாதத்தால், தமிழ் தலைமைகள் அங்கிருந்து தப்ப, இலங்கையரசின் பாதுகாப்பை நாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவர்கள் புலிப் பயங்கரவாதத்hதிற்கும் இலங்கையரசின் இனவாத காய் நகர்த்தலுக்கும் இடையில் அகப்பட்டு தத்தளிப்பது மட்டுமல்லாது பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்களின் சந்தேகப் பார்வைகளுக்கும், கேள்விக்குறிகளுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்;. இதனால் கனிசமான தமிழ் மக்களிடமிருந்து இத்தமிழ் கட்சிகள் அந்நியப்படுத்தப்படுகின்றன.

இதே நிலைதான் தமிழ் முஸ்லீம் இனக் குழுக்களிற்கிடையேயும் முரண்பாடுகள் வளர்க்கப்பட்டு இனஉறவுகள் சிதைக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் உதாரணமாக அண்மைக் காலத்தில் “சிங்களகெலல உரிமைய’ வினதும் – இலங்கையரசினதும் சதிப்படி வட – கிழக்குப் பிரிவினையும், அதன்;சட்ட அமுலாக்கலும் அதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கிழக்கில் நடந்த தேர்தல் கூத்துக்களும் ஆகும்;.

இதில் இலங்கையரசு, ரீ.எம்.வி.பி.யை தத்துப் பிள்ளையாக்கி, தேர்தல் மூலம் தமது நிகழ்ச்சி நிரலை அப்படியே பிரதியிட்டு நடாத்துவதும்,படிப்படியாக தமது வெற்றிலைச்சின்ன கட்சியான ஐக்கிய முன்ணணிக்குள் இவர்களை உள்வாங்கியவையும் உலகறிந்த உண்மைகள். கிழக்கு பிரிவினையானது கிழக்கின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதே என இவர்களெல்லலாம் கூறி ‘சட்டத்தாலும் கிழக்கைப் பிரித்து தேர்தல்களாலும் வென்றுவிட்டோம் இனி தனித்துவத்தை முன்னெடுப்போம்’ என்று கூறிக்கொண்டு இன்று நடப்பவை என்ன?

ரீ.எம்.வி.பி. கட்சியிலிருந்து கருணா உட்பட 3000 பேரை மகிந்த சிந்தனையும் அதன் இலங்கையரசும் உள்வாங்கி அதற்கு பிரதியுபகாரமாக கருணாவை அமைச்சே இல்லாத அமைச்சராக்கி ரி.எம.வி.பி கட்சியை சுக்கு நூறாக உடைத்து கிழக்கு பிரதிநிதித்துவங்களை நிர்மூலமாக்கி உள்ளது. இந்த அமைச்சரவையில் இணைந்த கருணாவால் விடிந்த கிழக்கில் உடனடியாக 60 சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகங:கள் பரவலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சராசரி மாகாண சபைக்குள்ள உரிமைகளான பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட கிழக்கு மாகாணசபைக்கு வேண்டாம் என கருணாவால் முன்மொழியப்பட்டு இருக்கின்றது. இவையெல்லாம் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தை முழுமையாக விலைபேசித் தமது சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கு தகுந்த சாட்சியமே.

இந்த விளையாட்டில் முதலமைச்சர் பிள்ளையான் தற்போ பிள்ளையார் பிடிக்கப் போன கதையாகிவிட்டார். கருணாவைப் போல் முற்றுமுழுதாக மகிந்தாவின் கட்சிக்குள் உள்வாங்க முடியாத நிலையில் பிள்ளையானின் உயிரும், பதவியும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

எனவே எப்படி விடிந்த கிழக்கில் கிழக்கின் தனித்துவம் என்று சொல்லப்பட்ட ரி.எம்.வி.பி. கட்சி சின்னா பின்னமாக்கப்பட்டு பிள்ளையான் – கருணா என்ற தலைமைகள் உடைக்கப்பட்டு, அக்கடசிக்குள்ளேயே குழுத்தலைமைகள் பகை முரண்பாட்டோடு திட்டமிட்டு வளர்க்கப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே கிழக்கின் பிரதிநித்துவம் என்றவர்கள் தங்களுக்குள்ளே தாங்களே முட்டி மோதி ஆயுதத்தையும், அதிகாரத்தையும் கையிலெடுத்து ஆளை ஆள் கணக்குத் தீர்க்கின்றனர். எம் கையைக் கொண்டே எம் கண்கள் குருடாக்கப்படுகின்றது. இவ்வாறே தொடரும் காலங்களில் கிழக்கில் தமிழ் முஸ்லீம் இனக்குழுக்களிடையே இலங்கை அரசு வழக்கமான கைங்கரியத்தை செயற்படுத்தும் என்பதை விரைவில் கிழக்கு மக்கள் உணர்வார்கள்.

Vadakku_Vasanthamஇலங்கை அரசின் விடிந்த கிழக்கின் அவலங்களைத்தான் வடக்கு வசந்தத்திற்கும் பிரயோகிக்க தகுந்த நேரத்தையும் – அதற்கான தேர்தல் உத்திகளையும் செய்யத் தொடங்கிவிட்டது.

எனவே இலங்கையரச பயங்கரவாதம் இப்படியென்றால், புலி பயங்கரவாத செயற்பாடுகள் இத்தனை வருடமாக இன்னும் இன்னும் எந்த மக்களைப் பற்றியும் சிந்திப்பதில்லையென இந்நிமிடம் வரை செயற்படுகின்றது.
 
கடந்த காலங்களில் நடந்த பேச்சு வார்த்தைகளில் கூட புலிகள் எம் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்னெடுக்கக்கூடிய எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதாவது சர்வதேச அழுத்தங்களால் இலங்கையரசுக்கும் – புலிகளுக்கும் இடையில் நடந்த எல்லா பேச்சு வார்த்தைகளையும் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்தாமல் உருப்படியற்ற நிபந்தனைகளை ஒவ்வொரு பேச்சுவார்த்தை மேசையிலும் வைப்பதால் குறிக்கோளை தவறவிட்டனர். பேச்சு வார்த்தைக்கு வரவேண்டிய தகுதியான பிரதிநிதிகள் சிலர் புலிகளுக்குள்ளோ, அல்லது அதன் சார்பான மூத்த தலைமைகள் ‘தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளோ’ இருந்தும் அவர்களை முன்னிலைப்படுத்தாமலோ, என்றும் அரசியல் தந்திரோபாயங்களை முன்னெடுக்காமல் ஏகபிரதிநிதித்துவ ராணுவப் போக்கிலே மட்டுமே சர்வதேச அரங்குகளையும் கொச்சைப்படுத்தினர். இவ்வாறான பல நிகழ்வால் சர்வதேச நாடுகள் மட்டத்தில் புலிகள் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டனர்.

இப்படியே தமிழ் பேசும் மக்களை இலங்கையரசும் – புலிப் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தை நாடகங்களையும், யுத்த நிறுத்தத்தையும் பின் உலக நாடுகளில் நிதி வசூலிப்பதையும் தொடர்ந்து, தமது ராணுவங்களை பலப்படுத்துவதாக சொல்லிக் கொண்டு கோடிக்கசணக்கான பணத்தை, நாட்டையே அழிப்பதற்காகவே பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால் கிழக்கில் தொடங்கிய மனித யுத்தம் வன்னியின் குறுகிய நிலப்பரப்புவரை வந்தும் முடிவுக்கு வந்தபாடில்லை. வன்னிப் பிரதேசங்களில் நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றோராக்கப்பட்டு உள்ளனர்.

கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து, உறுப்புக்கள் உள்ளேயும் வெளியேயும் சிதைந்து, மனம் பேதலித்து, உறவு பந்தங்களை பிணக்குவியல்களிலும் பங்கர்களுக்குள்ளும் விட்டுவிட்டு ஓடித்திரிந்து, உயிர்மட்டும் மிஞ்சியிருந்தாலும் தறகாலிக கூடாரங்களும், தட்டேந்தி வாழும் அவலநிலையும் நிரந்தரமா? அவர்களின் உடல் – உள நிலைகள் எப்படியிருக்கும்? இப்படி யுத்தத்தின் ரணங்களால் எப்படி எல்லாம் இந்த சமூகம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த இருதரப்பிலும் கூட ராணுவம் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் இளைஞரை நாளாந்தம் யுத்த முனைகளில் பறிகொடுத்தும் அங்கயீனர்களாக்கியும் அனாதைப் பிணங்களாக விட்டுச் சென்றும் போh முரசம் கொட்டுகின்றார்கள். இரு தரப்பும் மாறிமாறி எண்ணிக்கைகளை வீரப் பிரதாபங்களாக வெற்றி கொண்டோம், முன்னேறுகின்றோம் என பீற்றிக் கொண்டாலும் இந்த பயங்கரவாதத்தால் நாட்டின் பொருளாதாரங்கள், வளங்கள், உற்பத்திகள் எங்கே போய்விட்டன?

எனவே நாட்டு மக்கள் தத்தமது இறைமையுடன் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ வேண்டுமென்றால் யுத்தம் உடனடியாக ஒரு அரசியல் தீர்வின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும்.

யுத்தம் இடைநிறுத்தம் என்ற போர்வையில் இருபக்க யுத்தத்திலும் தமது இழப்பை ஈடுசெய்ய – அல்லது சிறு இடைநிறுத்தி தமது யுத்த பலங்களை அதிகரித்துவிட்டு தொடர்ந்தும் யுத்த கோரப்பசிக்கு மக்களை காவு கொடுக்க வேண்டுமா? இதுவரையில் இழந்தவை அடுத்தடுத்த தலைமுறையிலும் ஈடுசெய்யக் கூடியவைகளா? எனவே, இலங்கையரசோ புலிகளோ வெறும் யுத்த நிறுத்தம் மூலம் மட்டும் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்னெடுக்க முடியாது என்பது உண்மையே.

ஏனெனில் இருதரப்புமே இதுவரை
1) மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஏகபிரதிநிதித்துவ தலைமைவெறியுடன் யுத்தததை நடாத்தி நாட்டு மக்களை காவு கொடுப்பதுதான் தொடரப்போகின்றது.

2 மனித உரிமை மீறல்களை அடுக்கடுக்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்து வருகின்றது.

3) கருத்துச் சதந்திரம், ஊடகச் சுதந்திரங்களை 3ம் தரப்பினர்க்கும், பொதுமக்களுக்கும் எதிராக காலத்திற்குக் காலம் நடாத்திவருகின்றது.

4) ஜனநாயக கருத்துக்களுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ இடம் கொடுக்காமல் அராஜக வடிவங்களை அத்தனை வழிகளிலும் இதுவரை பிரயோகித்து வருகின்றனர்.

5) தம் மக்களை மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலோ அன்றி சர்வதேச மனிதாபிமான அழுத்தங்களுக்கோ செவி சாய்க்காமல் தமது ஆதிக்க வெறியையே நிலைநிறுத்த செயற்படுகின்றது.

6) தமது இருப்புக்களை மட்டுமே நிலைநிறுத்த யாரையும் – எதனையும் பலிகொடுக்கத்தயாராக உள்ளனர். ஏனெனில் நாளை இவ்விரு தரப்புக்குள் மட்டுமே ஓர் உடன்படிக்கையுடன் (புலிகள் பலமிழந்து நிhந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருவது தொடர்ந்தால்) பேச்சுவார்த்தை நடந்தால் தமது சுய இருப்பை நிலைநிறுத்த எதனையும் செய்வார்கள். அதனை ராஜதந்திரமென்று வேறு சொல்வார்கள்.

ஏனெனில் இதே விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் இணைந்தே 1989ல் வட கிழக்கிணைந்த மாகாண சபையையும், அதை முன்நகர்த்திய இந்திய அரசையும் நிராகரித்து செய்த அட்டுழியங்களையும் இதனை முன்னெடுத்து செயற்படுத்திய ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்தமையும் எமது தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் இந்தளவு அழிவுக்கும் ஒட்டுமொத்த காரணமென்பதை வரலாற்றில் மறக்க முடியுமா?

7) கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வை மட்டுமே மையப்படுத்தி எம் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்காத ஒரு நிலையை நாம் அனைவரும் கருத்திற் கொண்டு இனியும் இந்த இருதரப்பையும் நம்பிக் கொண்டிராமல் இருதரப்பும் சாராத அல்லது இருதரப்பையும் இதுவரை நம்பி இழந்த அங்குள்ள தமிழ் தலைமைகளும், புலம் பெயர்நாடுகளிலுள்ள புத்திஜீவிகள் – முற்போக்காளர்கள், மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுமான பிரதிநிதிகளும், கிழக்கு அரசியலில் கூட அண்மைக் காலத்தில் இலங்கையரசால் துண்டாடப்பட்டு அங்குள்ள மக்களிடமிருந்து அந்நியப்பபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல சக்திகள் கூட எமது சிறு முரண்பாடுகளை மறந்து கொண்டோராக இவர்களுமாக எம் மக்களுக்கான விடிவுக்காய் சர்வதேச அரங்கிற்கு உண்மையான பிரச்சனைகளை முன்னிறுத்தி செயற்பட அனைத்து இப்படியான சக்திகளும் சேர்ந்து உடனடியாக ஒரு கூட்டுத்தலைமையை உருவாக்க வேண்டிய கடமைபாடுகளின் கடைசி விழிம்பில் நிற்கின்றோம்.
 
ஏனெனில் இருதரப்பையுமே நம்பி; ஏமாந்த நாம், மூன்றாவது தரப்பொன்று உருவாக்கவேண்டி எல்லோரும் சிந்தித்தாலும் செய்ய வேண்டிய இந்த நேரத்தில் இந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிடில் இந்த வெற்றிடங்களை மீண்டும் மீண்டும் பிழையான சக்திகளினாலேயே எமது மக்களின் போராட்டம் தொடர்ந்து கூறுபோடப்பபடும்.