April

April

ஐ.நா.பிரதிநிதி வோல்டர் கேலன் வவுனியா விஜயம்

walterkelin.jpgஇலங்கை வந்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி பேராசிரியர் வோல்டர் கேலன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

விசேட வவுனியா முகாம் வன்னி இராணுவ தலைமையகத்திலிருந்து செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம் அருவித்தோட்டம் முகாம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். இவருடன் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ் விஜேயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் முக்கிய இராணுவ அதிபர், பொலிஸ் அதிகாரிகளும் இங்கு சென்றிருந்தனர். .

மக்களின் நிறைகுறைகள், மக்களுக்கான சேவைகள், ஏற்கனவே தங்கவைத்த மக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மேலும் செய்யப்பட வேண்டிய சேவைகள் என்பன குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடினர். அதன் பின்னர் வன்னி இராணுவ தலைமையகத்துக்குச் சென்று இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். வவுனியா நகரப் பகுதிகளையும், சில நலன்புரி நிலையங்களையும் விஜயம் செய்தனர்

வணங்கா மண் கப்பலுக்கான பொருட்கள் பிரான்ஸில் சேகரிப்பு

vanangamanship.jpg பிரான்ஸில் வணங்கா மண் கப்பலில் அனுப்பி வைப்பதற்கான  பொருட்கள் சேகரிக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் அனைத்துப் பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையங்களில் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ  வெகுவிரைவாக வழங்குங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வழங்கவேண்டிய இடங்கள்

1. சிப்பி மண்டபம்
Chippy
12 Av Jules Ferry
93140 Bondy

2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம்
26 Rue de Departement
75010 Paris
 
உங்கள் பகுதிகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களூடாகத் தொடர்பு கொண்டும் பொருட்களை வழங்கலாம்.

வணங்கா மண்ணிற்கு தேவையான பொருட்கள்

உணவுப்பொருட்கள்
1. குழந்தைகளுக்கான உடனடி உணவுப்பொருட்கள்- ( ரின் அல்லது போத்தல் )
2. குழந்தைகளுக்கான பால்மா வகைகள்
3.வளர்ந்தவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுவகைகள்( ரின். பொலித்தீன். போத்தல் )
4.சோயா வகையைச்சேர்ந்த உணவுவகைகள்
5.உடனடி நூடில்ஸ்
6.ரின் வகைகள்
7. சீனி 
8.மரக்கறி எண்ணெய் வகைகள்
9.காலையுணவாக உண்ணக்கூடிய உலர்உணவு ( சிறியல்.கான்பிளெக்ஸ். பைக்கற்போன்றவை)
10.ஊட்டச்சத்துநிறைந்த மென்பானம் ( விற்றமின் நிறைந்தவை ) 
11.ஊட்டச்சத்துநிறைந்த பிஸ்கற்வகைகள்)

மருத்துவப்பொருட்கள் 
1.பன்டேச்வகைகள்
2.விட்டமின் குளிசைகள்
3.தண்ணீர் சுத்திகரிக்கும் குளிசைகள்
4.தண்ணீர் பில்ரர் 
5.பனடோல் போன்ற தலையிடிக்குப்பாவிக்கும் குளிசைகள் ( ஐஸ்பிறின் டொல்பிறின் )
6.பச்சை கறுப்புநிறம் தவிர்ந்த புதிய பருத்தித்துணி ( கொட்டின் )

03.04.2009 – வெள்ளிக்கிழமை முதல் 08.04.2009 புதன்கிழமைவரை காலை 08.30 மணிமுதல் இரவு 08.30 மணிவரை வரும் பொருட்களே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தை ஏற்படுத்த நடவடிக்கை -வெளிவிவகார அமைச்சர்

rohitha_bogollagama_.jpgஇலங்கை யில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் வேலைத்திட்டம் வெற்றியளித்து வருகின்றது. நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கட்டார் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கையில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்வதில் கட்டார் மிகவும் ஆர்வமாக உள்ளது. தற்போதைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான ராஜாங்க அமைச்சர் காலித் பின் மொஹம்மட் அல் அத்தியா தலைமையிலான தூதுக்குழுவினரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது :

“இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய தொடர்புகள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பில் அதிகமான அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டார் அரசாங்கம் பாரிய ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக அவருக்கு விளக்கிக் கூறினேன். இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது. முக்கியமாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கட்டார் அரசாங்கம் இலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கின்றது. அது தொடர்பில் கட்டார் அமைச்சருடன் மிக நீண்டநேரம் கலந்துரையாடினோம். அதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். அனைத்து விடயங்களும் சரியாக அமைந்தால் விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

இலங்கையில் கட்டார் நாட்டின் வங்கி ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அதற்குச் சாதகமான பதிலை வழங்கினார். எனவே அதற்கான சாத்தியங்களும் மிக அதிகமாகவே உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்துக்கு 36 தடவைகள் விமான பயணங்கள் இடம்பெறுகின்றன. அதனை மேலும் விருத்தி செய்யவுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் அதனை செய்ய முடியும். கட்டாரில் பணிபுரிகின்ற இலங்கை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கக் கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சரின் இலங்கை விஜயமானது மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

கட்டார் அமைச்சர் கருத்து

செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட கட்டார் அமைச்சர் காலித் பின் மொஹம்மட் அல் அத்தியா கூறுகையில்,  இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராய்ந்தோம். ஆரம்ப காலத்தில் எமக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அதிகளவிலான சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. அதனை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விசேடமாக சுற்றுலாத்துறை மற்றும் மின்சக்தி தொடர்பில் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது” என்றார். 

கிளிநொச்சி முல்லைத்தீவில் 60 000 மாணவர்களில் 45 000 (75 வீதம்) மாணவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. வன்னியின் கல்விச் சமூகம் சிதறடிக்கப்பட்டு உள்ளது. : புன்னியாமீன்

students-vavuniya.jpgசுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக் காலம்வரை இலங்கையில் கல்வித்துறையால் முன்னேறிய சமூகமாகவே ஈழத்தமிழ்ச் சமூகம் காணப்பட்டு வந்தது. கல்வியால் தமிழன் சாதித்தவை ஏராளம். தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கு உந்துசக்தியாகவும், அத்திவாரமாகவும் இருந்த மூல காரணி கல்வியாகும். இதில் விவாதத்துக்கு இடமேயில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் யுத்தநிலை காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கல்விநிலை அவ்வப்போது பாதிப்புக்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. ஆனாலும் யுத்த நிலைகளின் போதும் பெருமளவுக்கு கல்வி நிலையில் இழப்பு ஏற்பட்டது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், இக்கால கட்டங்களில் ஏற்பட்ட சரிவுகள் ஏதோ ஒரு வகையில் சீர்செய்யப்பட்டு வந்தே உள்ளன. 1980களுக்கு முற்பட்ட கால கல்வி நிலையுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் கூட, சரிவின் மத்தியிலும் கல்விநிலை முழுமையாக வீழ்ந்து விடாது பேணப் பட்டுள்ளது. இருப்பினும் யுத்தநிலையின்போது கல்விக்கான அடிப்படை வசதிகள் இழக்கப்பட்டமை மாணாக்கரின் மனோ நிலையில் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆரம்பகால கல்வி நிலைகளுடன் ஒப்புநோக்க தடைகளாகவே காணப்படுகின்றன.

ஆனால், இன்றைய நிலை மிகவும் நேர்மாற்றமானது. இன்று தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை. முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். மக்களே இல்லாத நிலையிலும் யுத்தம் உக்கிரமமடைந்துள்ள நிலையிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விளையும் மக்களுக்கு கல்வியைப் பற்றி சிந்திக்க முடியாத நிலை அங்குள்ளது. உயிர் இருந்தால்தான் ஏனையவை என்ற நிலை அங்கு. மேலும், மடு, வவுனியா வடக்கு (நெடுங்கேணிக் கோட்டம்) ஆகிய கல்வி வலயங்களிலும் பாடசாலைகள் இயங்காமல் இருக்கின்றன.

இதுகாலவரை நடந்த யுத்தநிலைகளுடன் ஒப்புநோக்கும் போது இரு பிரதான மாவட்டங்களிலும் சில கல்வி வலயங்களிலும் ஒருமித்து பாடசாலை இயங்காத நிலை ஏற்படவில்லை. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும், வலயங்களிலும் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க முடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

யுத்தம் உக்கிரமமாக நடைபெற்றுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 10 இடைத்தங்கல் முகாம்களிலும், மன்னாரில் அமைக்கப் பட்டுள்ள 02 இடைத்தங்கல் முகாம்களிலும், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 இடைத்தங்கல் முகாம்களிலும் அறைகுறையாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் கல்வியினைத் தொடர்ந்து வருகின்றனர். யாழ்ப்பாண, மன்னார் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத் தங்கல் முகாம்களைவிட வவுனியா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் மாணவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுகின்றனர். வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பு உத்தியோகத்தரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திருவாளர் த. மேகநாதன் அவர்களின் அறிக்கைபடி 2009 ஏப்ரல் மாதம் 01ம் திகதிவரை வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர் தொகையும், ஆசிரியர் தொகையும், அதிபர் தொகையும் கீழே தரப்பட்டுள்ளது.

01. இடைத்தங்கல் முகாம் – வ/ தமிழ் மத்திய  மகா வித்தியாலயம் –   மாணவர் தொகை 1020 – ஆசிரியர் தொகை 43 – அதிபர் தொகை 06

02. இடைத்தங்கல் முகாம் – வ/ சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் – மாணவர் தொகை 558 – ஆசிரியர் தொகை 34 – அதிபர் தொகை 06

03. இடைத்தங்கல் முகாம் – வ/ காமினி வித்தியாலயம் – மாணவர் தொகை 379 – ஆசிரியர் தொகை 13 – அதிபர் தொகை 00

04. இடைத்தங்கல் முகாம் – வ/ பூந்தோட்டம் ம.வி – மாணவர் தொகை 395 – ஆசிரியர் தொகை 16 – அதிபர் தொகை 04

05. இடைத்தங்கல் முகாம் – வ/ கோவில்குளம் இந்துக் கல்லூரி – மாணவர் தொகை 337 – ஆசிரியர் தொகை 11 – அதிபர் தொகை 03

06. இடைத்தங்கல் முகாம் – வ/ முஸ்லிம் ம.வி – மாணவர் தொகை 394 – ஆசிரியர் தொகை 11 – அதிபர் தொகை 02

07. இடைத்தங்கல் முகாம் – வ/ நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் –  மாணவர் தொகை 731 – ஆசிரியர் தொகை 17 – அதிபர் தொகை 02

08. இடைத்தங்கல் முகாம் – வ/ செட்டிக்குளம் ம.வி – மாணவர் தொகை 629 – ஆசிரியர் தொகை 22 – அதிபர் தொகை 02

09. இடைத்தங்கல் முகாம் – வ/ அருவித்தோட்டம் சிவானந்தா – மாணவர் தொகை 173 – ஆசிரியர் தொகை 07 – அதிபர் தொகை 01

10. இடைத்தங்கல் முகாம் – கல்வியியற் கல்லூரி – மாணவர் தொகை 1509 – ஆசிரியர் தொகை 58 – அதிபர் தொகை 14

11. இடைத்தங்கல் முகாம் – தொழில்நுட்பக் கல்லூரி – மாணவர் தொகை 818 – ஆசிரியர் தொகை 15 – அதிபர் தொகை 00

12. இடைத்தங்கல் முகாம் – பம்மைமடு வளாக விடுதி – மாணவர் தொகை 1041 – ஆசிரியர் தொகை 43 – அதிபர் தொகை 04

13. இடைத்தங்கல் முகாம் – கதிர்காமர் வித்தியாலயம் – மாணவர் தொகை 1860 – ஆசிரியர் தொகை 133 – அதிபர் தொகை 03

மொத்தம் 9844 மாணவர்களும், 423 ஆசிரியர்களும், 47 அதிபர்களும் இருக்கின்றனர். 

இந்த இடைத்தங்கல் முகாம்களின் நிலைப்பாடுகள் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் த. மேகநாதன் அவர்களுடன் கலந்துரையாடிய போது பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தன.

வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் நிலைப்பாடுகள்

students-vavuniya01.jpgமேற்குறிப்பிட்ட இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் கதிர்காமர் வித்தியாலயம் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் முறைசார் கல்விமுறைக்கமைய கற்பிக்க முடியாமல் உள்ளதென தெரியவருகின்றது. விசேடமாக பெரும்பாலான இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கொண்டே கற்க வேண்டியிருக்கின்றது. மேலும், இடைத்தங்கல் முகாம் பாடசாலைகள் சுமார் 03 மணிநேர சுழற்சி அடிப்படையில் இயங்குகின்றன. உரிய பாடங்களுக்கான உரிய ஆசிரியர் இன்மையாலும், அடிப்படை வசதிகள் இன்மையாலும் இங்கு முறைசார் கல்வி நிலையைப் பேணுவது கடினமாகக் காணப்படுகின்றது. இதை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் மாணவர்கள் கற்றவற்றை மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இங்கு பாடசாலைகள் செயல்படுகின்றனவே தவிர முழுமையான கல்வியை போதிப்பதென்பது பின்னிலையாகவே உள்ளன.

இப்பாடசாலைகளில் கற்றல் தொடர்பான செயற்பாடுகளை அவதானிக்கும்போது இட நெருக்கடி மற்றுமொரு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் இடப்பெயர்வுக்கு உட்படுபவர்கள் தங்கவைக்கப்படுவதினால் இப்பிரச்சினை மேலும் வலுவடையக் கூடிய நிலையுள்ளது.

எல்லாவற்றையும்விட இடைத்தங்கல் முகாம் மாணவர்களின் மனோநிலை கற்றலுக்குரிய நிலைப் பாட்டினை வெளிப்படுத்தக் கூடியதாக இல்லை. உறவுகளை இழந்து, உறவுகளைப் பிரிந்து பாரிய மன அழுத்தங்களுக்கு உட்பட்ட நிலையில் இம்மாணவர்கள் காணப்படுகின்றனர்.

இம்மாணவர்களுக்காக வேண்டி அரசாங்கம் இலவச பாடநூல்களை விநியோகித்துள்ளது. அத்துடன், இலவச சீருடைகளையும் வழங்கியுள்ளது. சில முகாம்களில் மதிய உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இம்மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உசாத்துணை நூல்கள், அப்பியாசப் புத்தகங்கள், தைத்த உடுதுணிகள், கல்வி உபகரணங்கள் மாணவர்களின் சில அத்தியாவசிய தேவைப் பொருட்கள் போன்றவற்றை அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஓரளவுக்கு நிறை வேற்றுகின்றன.

ஆனாலும் இவைகள் மாணவர்களின் முழுமையான தேவைகளையும் ஈடேற்றத்தக்க வகையில் உள்ளதா என்பது கேள்விக் குறியே.

இடைத்தங்கல் முகாம்களில் கல்வி நெருக்கடிகள்

இதனை இரண்டு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதலாது: இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் நிரந்தரமாக கற்று வந்த மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மையினால் இப்பிரதேசத்தில் நிரந்தர மாணவர்கள் பாதிப்புக்களுக்குட்பட்டுள்ளனர். மேலும், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் இங்கு ஏற்கனவே கல்வி கற்ற பயிற்சி ஆசிரியர்களினதும், தொழில்நுட்ப மாணவர்களினதும் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் முறைசார் கல்விக்கமைய கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய கல்விப் பாதிப்புகள்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மாணாக்களின் கல்வி சார் நடவடிக்கைகளை அளவிடக்கூடிய அளவுகோலாக மூன்று பிரதான அரசாங்க பரீட்சைகள் அமைகின்றன.

01. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
02. க.பொ.த (சாதாரண தர) பரீட்சை
03. க.பொ.த (உயர்தர) பரீட்சை

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மிக முக்கியமான பிரச்சினை மேற்குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வதென்பதாகும். புறக்கிருத்தியங்களை செயல்படுத்தக் கூடிய வாய்ப்புகளே இங்கில்லை. மறுபுறமாக கல்விசார் வெளிச்செயற் பாடுகளை அல்லது உசாத்துணை வழிகாட்டல் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. மேற்குறிப்பிட்ட நிலைகளின் பின்னணியில் பரீட்சைகளுக்கு மாணாக்கரைத் தயார் செய்வதென்பது விசாலமான பிரச்சினையாகும்.

இந்நிலைகளை ஒப்புநோக்கும்போது  இடப் பெயர்வுகளுக்கு உட்பட்டுள்ள மாணாக்கரின் எதிர்காலம் பலமாக சிந்திக்கப்படக் கூடியதொன்றாகும்.

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி; முல்லைத்தீவு மாவட்டங்களிலும், மடு வவுனியா வடக்கு கல்வி வலயங்களிலும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றதாகக் கூறப்படுகின்றது. இந்த 60,000 மாணவர்களுள் 20%க்கும் குறைவான மாணவர்களே வவுனியா,  மன்னார், யாழ்ப்பாணம் இடைத்தங்கல் முகாம்களில் கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர். அப்படி என்றால் மீதமான 80% பங்கு மாணவர்களின் நிலையென்ன? அவர்களில் எத்தனை பேர் உயிருடனிருக்கின்றார்கள்? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? யுத்தப் பிரதேசத்தில் எத்தனை மாணவர்கள் இருக்கின்றார்கள்? போன்ற வினாக்களுக்கு விடை காண்பதென்பது தற்போதைய சூழ்நிலையில் இயலாததே.

இத்தகைய நிலைகளைப் பார்க்கும்போது யுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சரி. ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை நிரப்ப பல தசாப்தங்கள் போராட வேண்டியிருக்கும்.

எனவே, ஏற்பட்டு வரும் கல்வி இடைவெளியை ஓரளவாவது சீர்செய்ய எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றோம். குறைந்த பட்சம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர்களுக்காவது முறைசார் கல்விக்கான வழிமுறைகளை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த முடியுமா?

அரசாங்கப் பரீட்சைகளை எதிர்நோக்கவுள்ள மாணவர்களை கல்விசார் நடவடிக்கைகளை ஊக்குவிக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட இரு வினாக்களுக்கும் விடை காண வேண்டியது காலத்தின் தேவையாகும்.

யுத்தம் பலவழிகளிலும், பல துறைகளிலும் பாரிய பின்னடைவுகளையும், பாரிய இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதை யாருக்கும் மறுக்க முடியாது. இந்த இழப்புகளுடன் ஒப்புநோக்கும்போது கல்வித்துறை  இழப்பு என்பது ஒரு சிறு விடயம்தான். ஆனாலும் ஒரு சமூக எழுச்சிக்கான வித்தினையிடும் அத்திவாரமென்பதை யாராலும் மறுக்க முடியாது.                              

கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் கடிதம்

karunanithi.jpgதமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்து மர்மக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை நகர காவற்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்குத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மத்திய அரசின் உள்துறையிடமிருந்து ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘இசெட் பிளஸ்’ அளவுகோலின்படி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 3ஆந் திகதியன்று முதல்வரின் கோபாலபுர இல்ல முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கும் தேசிய உற்பத்தியாளருக்கு நிவாரணம்

mahinda.jpgஏற்றுமதித் தொழிற் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் தேசிய உற்பத்தியாளர்களுக்கு நிவாரணத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபை ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறை சார்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

பல்வேறு துறைகளையும் சார்ந்த பாரிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்ட இப்பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம் பெற்றது. சர்வதேச ரீதியில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் சம்பந்தமாக இதன்போது ஏற்றுமதியாளர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர். உலக நாடுகள் பலவும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடுகளிலிருந்து தமக்கான கேள்விகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது உற்பத்திகளின் அளவைக்குறைக்க நேர்ந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கான தீர்வினை விரைவாகப் பெற்றுக்கொடுக்குமாறு முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

najib-razak.jpgமலேஷி யாவின் புதிய பிரதமராக நஜீப் ரஸாக் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  மலேஷிய நாடும் அதன் ஆளும் கட்சியும் மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் புதிய ஆட்சித் தலைவராக ரஸாக் பொறுப்பேற்கிறார்.

மலேஷியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு சுருக்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஸாக் இப்போது வழிநடத்தும் ஐக்கிய மலாய் கட்சி நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கடந்த ஆண்டில் இழந்தது.

இதன் விளைவாக அப்போதைய பிரதமர் அப்துல்லா பதாவி ராஜினாமா செய்து வெளியேற நேரிட்டது. புதிய பிரதமர் ரஸாக்கின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கப்பலில் புல்மோட்டைவந்த மக்கள் விடுதலைப் புலிகள் மீது புகார் – பிபிசி தகவல்

taking-to-green-ocean.jpg புல்மோட்டையில் கரையிறக்கப்படும் தமிழ் அகதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெள்ளியன்று 480 பேர் புல்மோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதி மறுப்பதாகவும், 14 வயதுடைய சிறுவர்களைக் கூட தமது படையணியில் அவர்கள் கட்டாயமாகச் சேர்ப்பதாகவும் புல்மோட்டைக்கு வந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய பிரதேசத்தில் ஷெல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஒருவர், அங்கு தண்ணீருக்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து கூட நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதால், சிறார்களை வெளியே அனுப்பவே பயப்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் விரும்பினாலும் புலிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நம்மிடம் கூறிய ஒரு பெண்மணி, தப்பி வர முற்படும் மக்கள் மீது புலிகள் சுடுகின்றனர் என்றும் கூறினார். இதற்கிடையே, புதுமாத்தளன் பகுதியிலிருந்து 2 இயந்திரப் படகுகளின் மூலம் எவ்வித வழித்துணையும் இன்றி 21 பேர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர்.

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்வும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு-மட்டக்களப்பு நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை – ஞாயிறு ஆரம்பம்

bati-trnco.jpgகொழும்பிற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பமாகவிருக்கின்றது.”புதிய உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி சேவை” என இந்த ரயில் சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

தினமும் காலை 7.45 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4.30 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் .கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 10.30 இற்கு புறப்படும் ரயில் மாலை 6.40 இற்கு மட்டக்களப்பை சென்றடையும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் பிரகாரம் முதலாவது ரயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருக்கின்றது.

ஏறாவூர் ,வாழைச்சேனை ,வெலிக்கந்தை ,பொலன்னறுவை ,ஹிங்கராகொட ,கல்லோயா சந்தி ,கெக்கிராவை ,மாகோ சந்தி ,குருநாகல் ,பொல்காவெலை சந்தி ,வியாங்கொடை ,மற்றும் ராகமை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிறுத்தப்படும் என இது தொடர்பாக மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் பிரதம அதிபர் கூறுகின்றார்.

பிரதியமைச்சர் நிஜாமுதீனின் இணைப்பு செயலாளரின் துஷ்பிரயோகம் அம்பலம்

snijamudeen.jpgபிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீனின் இணைப்புச் செயலாளர் எஸ். எல். லாபீர் பிரதியமைச்சரின் பெயரைப் பயன்படுத்தியும் அமைச்சின் பெயரைப் பயன்படுத்தியும் பல்வேறு துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர்,

லாபீர் என்பவரை கடந்த 29 ஆம் திகதிமுதல் அவரது பதவியை இடைநிறுத்தி யுள்ளதாகவும் அவரது சகல துஷ்பிரயோகங்களையும் கண்டு பிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இரகசியப் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

மேற்படி நபர் கடந்த ஒரு வருடகாலமாக தனது தனிப்பட்ட நியமனத்தின் பேரில் அக்கரைப்பற்று பகுதிகளில் தனது அரசியல் நடவடிக்கைக்கான இணைப்புச் செயலாளராக பணியாற்றினார்.

இக்காலத்தில் எனது அமைச்சின் கடிதத் தலைப்பையும் தனியார் டிஜிட்டல் நிறுவனத்தின் உதவியுடன் எனது கையெழுத்தையும் ஸ்கான் பண்னி வேறு ஒருவருக்கு இணைப்பாளர் அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். அத்துடன் இவர் கிழக்கு மாகாண அமைச்சர் ரீ. நவரத்தினராஜாவின் இணைப்புச் செயலாளராகவும் அடையாள அட்டையொன்றை தயாரித்து எடுத்துள்ளதாக குறித்த டிஜட்டல் நிறுவனம் எனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன் எனது அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் ஊடாக 315 தாதி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பயிலுனர்களிடமிருந்து பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பயிலுனர்கள் எனக்கு அறிவித்துள்ளனர். மேலும் எனது வாகனமொன்றையும் சட்டரீதியற்ற முறையில் போலி ஒப்பந்தமொன்றை தயாரித்து தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சித்துள்ளமையும் அம்பலத்துக்கு வந்திருப்பதாகவும் பிரதியமைச்சர் கூட்டிக்காட்டினார்.