ஏற்றுமதித் தொழிற் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் தேசிய உற்பத்தியாளர்களுக்கு நிவாரணத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டுச் சபை ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறை சார்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
பல்வேறு துறைகளையும் சார்ந்த பாரிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்ட இப்பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம் பெற்றது. சர்வதேச ரீதியில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் சம்பந்தமாக இதன்போது ஏற்றுமதியாளர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர். உலக நாடுகள் பலவும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடுகளிலிருந்து தமக்கான கேள்விகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது உற்பத்திகளின் அளவைக்குறைக்க நேர்ந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கான தீர்வினை விரைவாகப் பெற்றுக்கொடுக்குமாறு முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.