April

April

இலங்கையில் படுகொலைகளை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு.

இலங்கையில் தொடரும் படுகொலைகளை நிறுத்தக்கோரி சென்னையில் நேற்றிரவு 8.15 மணியளவில் ஒருவர் தீக்குளித்தார். கரூரைச் சேர்ந்த ஆ. சிவாநந்தம் (வயது46) என்பவர் வடபழனியில் உள்ள தமிழக தேர்தல் அலுவகத்துக்கு முன்பாக   மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் முத்துக்குமார் முதல் இதுவரை 12 பேர் ஈழத்தமிழர்களுக்காக தீக் குளித்துள்ளனர்.

காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

green-ocean.jpgயாழ்.  அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலை நேற்றிரவு தெரிவித்தார். “கிறீன் ஓஷன்” கப்பல் நாளை காலை காங்கேசன்துறையை வந்தடைந்து மாலை திரும்பப் புறப்பட உள்ளது. எனவே கப்பலில் பயணம் செய்ய பதிவு செய்தவர்களையும் அவசர தேவைக்காக பயணம் செய்ய இருப்பவர்களையும் நாளை முற்பகல் 11 மணிக்கு யாழ். ரயில் நிலையப் பகுதிக்கு பயண ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றம் தொடர்பான சட்ட மசோதா குறித்து கிழக்கு மாகாண சபையில் சர்ச்சை

pillaiyan.jpgநேற்று உள்ளுராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டம் தொடர்பான யோசனை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்ட போது எவ்வித தீர்மானமும் இன்றி எதிர்வரும் திங்கட்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெற வேண்டும் .இல்லையேல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

நேற்று கிழக்கு மாகாண சபை முதல்வர் ஏ.எச்.எம். பாயிஸ் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இதனை முன் வைத்த போது உறுப்பினர்களிடையே இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக காரசாரமான வாக்குவாதங்களும் விவாதங்களும் சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.

ஆளும் கட்சியைப் பொறுத்த வரை ஒரு தரப்பு இதற்கு ஆதரவாகவும் இன்னுமொரு தரப்பு இதற்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக உத்தேச திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கரிய அதிகாரங்களை பறிக்கின்றது என்றும் .அதே போல சிறுபான்மை மக்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பாக அமையும் என்றும் இதற்கு எதிரான தரப்புகள் தமது கருத்துக்களை முன் வைத்தன. விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும்: அமெரிக்கா

இலங்கையின் முல்லைத்தீவு பிரதேசத்தில் நடந்துவரும் உக்கிர மோதல்கள் காரணமாக பொதுமக்களின் உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும் அங்கு நிலவும் மோசமான மனிதாபிமான அவலம் குறித்தும் கவலை தெரிவித்து அமெரிக்க நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளிவரும் பொருட்டு இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.  உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான அகதி முகாம்களில் சர்வதேச தரத்தில் மனிதாபிமான சூழல் நிலவுவதையும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கப்படுவதையும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்குள் நுழைவதையும், அகதி முகாம்களுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதையும் இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இடம்பெயர்ந்த மக்கள் ஒரு லட்சம் பேர் வவுனியா மனிக்பாம் பகுதியிலும் ஏனையோர் மன்னாரிலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு- அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

badurdeen.jpgவவுனியா செட்டிகுளம் மனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நான்கு நிவாரண கிராமங்களில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு லட்சம் பேரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கு மேற்பட்டவர்களை மன்னாரில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் பற்றி அவர் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.

போர்ப்பிரதேசத்தில் இருந்து இதுவரையில் இராணுவத்தி்ன் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 68 ஆயிரத்து 728 பேர் வந்துள்ளார்கள். இவர்களில் 19 ஆயிரத்து 367 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 938 பேர் வவுனியாவில் உள்ள இரண்டு நிவாரண கிராமங்கள் உட்பட 15 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளை மேலும் மேம்படுத்துவதற்காக வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் 3 செயலணி குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உணவு விநியோகத்தைக் கவனிப்பதற்கான செயலணி குழு ஒன்றும், தண்ணீர் விநியோகம் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளைச் செய்வதற்காக ஒரு செயலணி குழுவும், தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு செயலணி குழுவுமாக 3 செயலணி குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாகவுசும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்தியாளர்களிடம் விபரம் வெளியிட்டுள்ளர்.

இந்த நான்கு கிராமங்களிலும் ஒரு லட்சம் பேர் வரையில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர், மேலதிகமாக வருபவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் அனுமதியோடு மன்னார் மாவட்டத்தில் உரிய இடம் தெரிவு செய்யப்பட்டு, தங்குமிட வசதிகள் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவி்த்துள்ளார். 

உள்ளூராட்சி சட்டமூலத்தால் எவருக்கும் பாதிப்பில்லை; 12.5% வெட்டுப்புள்ளி மீண்டும் வருமென்பதில் உண்மையில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றத்திற்கான புதிய திருத்தச் சட்டமூலத்தில் 12.5% வெட்டுப்புள்ளி உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் எதுவிதமான உண்மையும் கிடையாது என தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், தற்போதைய 5% வெட்டுப்புள்ளியும் இல்லாமற் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் தொகையின் அடிப்படையில் தொகுதிக்குத் தொகுதி மாறுபாடடையும். வெட்டுப்புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இதனால் சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதெனவும் தெரிவித்தார்.

புதிய சட்ட திருத்தத்தின்படி, உள்ளூராட்சிமன்றங்கள் சில புதிதாக உருவாக்கப்படவுள்ளன. பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், புதிய முறையின்படி 70%, தொகுதி வாரியாகவும், 30% விகிதாசார முறைப்படியும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்தத் திருத்தச் சட்டமூலம், கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டு கொண்டு வரப்பட்டதொன்றாகும்.

 இனி, இதனை மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும். கட்சியின் சுயலாபத்தைப் பற்றிச் சிந்திக்காமல், நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தொகுதிவாரி தேர்தல் முறைதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் மூலம் அபிவிருத்தியைக் கிரமமாக முன்னெடுக்க முடியும். மோசடி மிகுந்த விகிதாசார தேர்தல் முறையை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தொகுதிவாரி தேர்தல் முறையினை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அதிலுள்ள நன்மை, தீமையைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்ஆபிரிக்காவில் ஐபிஎல் இன்று தொடக்கம்

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆபிரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மே 24 ந்தேதி வரை 37 நாட்கள் நடக்கிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

18 ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 22 ந்தேதி முதல் அரை இறுதியும், 23 ந்தேதி 2 வது அரை இறுதியும், இறுதிப்போட்டி மே 24 ந்தேதியும் நடைபெறும்.

கேப்டவுடன், போர்ட் எலிசபெத், டர்பன், பிரிடோரியா, சிம்பொலி, ஜோகன்ஸ்பர்க், செஞ்சூரியன், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வது இடத்தை பிடித்தது. ஷேவாக்கின் டெல்லிடேர் டெவிலஸ் அணியும், யுவராஜ் சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் அரை இறுதியில் தோற்றன.

கடந்த முறை ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு கொடுக்க இயலாததால் இந்தப் போட்டி தென்ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஐ.பி.எல். போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பு இருக்கிறது. சோனி செட்மேக்ஸ் டெலிவிஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய நேரடிப்படி மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ஆட்டங்கள் தொடங்குகிறது.

ஐ.தே.க கூறுவதுபோல் பொருட்களின் விலை அதிகரித்தால் பதவியைத் துறக்கவும் தயங்கேன்

“ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவது போன்று அத்தியாவசி யப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்குமானால் நான் எனது அமைச்சுப் பதவியைத் துறக்கவும் தயார் என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்கும் என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மும்மடங்கு அல்ல இரண்டு மடங்காக அதிகரிக்கவும் விடமாட்டேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்; கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின் அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் இம்முறையே 5.3 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:

குறைந்த விலையில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட் களை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1,000 ‘கோப் சிட்டி’களை திறப்பதற்குத் தீர்மானிகப்பட்டுள்ளது. இதற்கென மூவாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட ‘கோப் சிற்றிகள்’ தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறைக்கு வற்வரி, வருமான வரி, வங்கிக் கடன் சலுகை வரி என பல வரி விலக்குகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு விசேட திட்டம்!

schools_stu.jpgஅடுத்த ஆண்டு முதல் பாடசாலை நாட்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் தவறாது 210 தினங்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. அதற்கேற்ப பரீட்சை தினங்களிலும் பாடசாலைகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

210 தினங்கள் அரசாங்க பாடசாலைகள் நடைபெறும் விதத்தில் க. பொ. த. சாதாரண தரம்,  உயர் தரம் பரீட்சைகள் நடைபெறும் தினங்களிலும் வகுப்புக்களை நடத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அரசாங்க பாடசாலைகள் சரியாக 210 தினங்கள் நடைபெற வேண்டும் எனினும் எந்த வருடத்திலும் குறிப்பிடப்பட்ட 210 தினங்கள் பாடசாலைகளை நடத்த முடிவதில்லை. பிரதானமாக க. பொ. த. சாதாரண தர,  உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் நீடிப்பதாலேயே இவ்வாறு நடத்த முடிவதில்லை. குறிப்பிட்ட 210 தினங்கள் பாடசாலைகள் நடத்தப்படாமையால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை  சரிவர பூர்த்தி செய்ய முடியாத நில ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்

மட்டு. மாநகர சபை நேற்றுடன் ஓராண்டு பூர்த்தி

மட்டக்களப்பு மாநகர சபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்றுத் தொடக்கம் எதிர்வரும் 25ம் திகதி வரைக்கும் ஒரு வாரத்திற்கான நிகழ்வுகளை நடத்த மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. நேற்றுக்காலை சமய வழிபாடுகளுடன் ஓராண்டு பூர்த்தி நிகழ்வுகள் ஆரம்பமாகின. மட்டக்களப்பு ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்திலும், புனித மரியாள் இணைப்பேராலயம், மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களில் சமய வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதிமேயர் ஆபிரகாம், ஜோர்ஜ்பிள்ளை, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர ஊழியர்கள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சின்ன ஊறணி பேச்சியம்மன் கோவில் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதிக்கு கிறவல் இடும் நடவடிக்கையும் நேற்று இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும், மாநகர மேயரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாம் நாளான (18.04.2009) இன்று மட்டக்களப்பு எல்லை வீதி திசவீரசிங்கம் சதுக்கம் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்படுவதுடன் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு முதல்வர் சவால் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.