April

April

விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் போர் குற்றவாளி: மன் மோகன் சிங்

manmohan1.jpgவிடுதலைப் புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என இந்திய பிரதமர் மன் மோகன் சிங் “டைம்ஸ் நவ்” தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் ” விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி . அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை”என தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியிந்தார்” என பிரதமர் மன் மோகன் சிங் டைம்ஸ் நவ் தொலக்காட்சிக்கு தெரிவித்திருந்தார். “பிரபாகரன் நல்ல நண்பன் ” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்திற்கே மன்மோகன் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“கருணநிதியின் கருத்து அவரது தனிப்பட கருத்தாகும். ஆனால் காங்கிரஸின் நிலைப்பாடானது விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி ” என காங்கிரஸ் கட்சி பேச்சாளர் கபில் சிபால் தெரிவித்தார்.

இரு சிறுவர்களின் கொலை தொடர்பான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி

baby-01.jpgஅக்மீமனை, கோணமுல்ல பகுதியில், இரு சிறுவர்களை கொலை செய்ததாகக் கருதப்படும் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.  பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்த போதே பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

குறித்த நபர், ஐராங்கனி (வயது 10) என்ற சிறுமியையும், கவின் ரஷ்மிக் (வயது 3) என்ற சிறுவனை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வேளையில், அச்சிறுவர்களை கொலை செய்வதற்காக உபயோகித்த ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி அதனை காட்டுவதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அக்காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டைத் திடீரென எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்ற சந்தேக நபரை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அக்மீமனைக் காட்டினுள் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை தென்பிராந்திய பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ. பிரதாப சிங்ஹ மேற்கொண்டு வருகிறார்.

டாக்டர் மீரா மொகிதீன் கொலை : மட்டு. வைத்தியசாலை மருத்துவத்துறை இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

batti-pro.jpgவவுனியா பொது வைத்தியசாலையின் பெண்ணியல் நோய் நிபுணர் டாக்டர் மீரா மொகிதீன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவர்களும் ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக சுமார் ஒருமணி நேரம் கூடிய மருத்துவர்கள், தாதிகள், துணை மருத்துவ துறையினர் உட்பட பல்வேறு தர ஊழியர்கள் தமது கண்டனத்தையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியிருந்தனர். அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

வைத்தியசாலையின் வழமை நிலை பாதிக்காத வகையில் இந்தப் போராட்டத்தில் மருத்துவர்களும் ஏனைய துறை சார்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

சிவிலியன்கள் வெளியேற்றப்பட்டமைக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டு!

ban_ki-moon_.jpgபுலிகளின் பிடியிலிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் படையினர் வெளியேற்றியதை தான் பாராட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. செயலாளரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வருவதைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தினுள் நேற்று படையினர் உட்பிரவேசித்ததையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.

இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் ரயில் சேவை நாளை மறுதினம்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை இருபது வருட இடைவெளிக்குப் பின்னர் முதற்தடவையாக வவுனியாவுக்கு அப்பால் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக வவுனியாவைக் கடந்து தாண்டிக்குளம் வரை இந்த ரயில் சேவை நடைபெறவுள்ளது.

அதன்படி யாழ்தேவி ரயில் சேவை நாளை மறுதினம் முதல் தாண்டிக்குளம் வரை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவையை வெகுவிரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புலிகள் 24 மணிநேர காலக்கெடுவை பயன்படுத்தவில்லை – படை நடவடிக்கைகள் தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

army-attack.jpgஎல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கம் வழங்கிய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் புலிகள் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.

புதுமாத்தளன் மற்றும் அம்பலவான்பொக்கனை ஆகிய இடங்களில் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாக அதிகரிப்பு!

civiling_flee_vanni_01.pngபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட  பொது மக்களில் எண்ணிக்கை இப்போது 49058 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இவர்களில் 41000 பேர்  இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வந்த ஏனையோரை கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தமிழ் மக்கள் அரசியல் உரிமைகள் பெற புலித்தலைமையே தடையாக இருந்தது – அமைச்சர் டக்ளஸ் ஐ.நா. செயலாளருக்கு விளக்கம்

epdp-sec.jpgஇலங்கையில் நெடுங்காலமாக இருந்துவரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது,

அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே என சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன ரீதியாகவும் வறுமை காரணமாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கும் முகமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அமைச்சர் அங்கு ஐ.நா. செயலாளரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

புலிகளின் இத்தகைய செயற்பாடுகளால் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் துயரங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா இங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்ää அவற்றுக்கான மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆரதரவளிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியலுரிமைப் பிரச்சினைக்குரிய தீர்வு நோக்கிய முயற்சிகளுக்கு எதிராகக் காணப்படும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படும் பட்சத்தில் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை அழிவுகளிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மனித அழிவுகளும் அவலங்களும் அற்ற ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும் அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் அனுபவித்து மகிழவும் உதவ வேண்டும் என இச்சந்திப்பின்போது ஐ.நா. செயலாளரிடம் அமைச்சர் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.