April
April
1.
யுத்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் வெளியே வர அங்கு என்ன நடந்தது என்ற உண்மையும் வெளிவரத் தொடங்கி உள்ளது. சர்வதேச ஊடகங்கள் அனைத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள முல்லைத் தீவு யுத்தமுனையின் மனித அவலத்தை விபரிக்க வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றனர் செய்தியாளர்கள். சில காட்சிகளைக் காட்டுவதைத் தவிர்க்க இயலாததால் அது பற்றிய எச்சரிக்கையை வழங்கியே அவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர். இந்தப் பெரும் அவலத்திற்குக் இவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டிட முடியாத அளவிற்கு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசும் எல்ரிரிஈ யும் அப்பகுதியில் வகைதொகையின்றி மனிதக் கொடுமைகளைப் புரிந்திருப்பதை வெளியேறி வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் யுத்தப் பகுதியில் இருந்து வெளியெறி வரும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவோ அவர்களுடைய துயர் துடைப்பதாகவோ இல்லை. அவர்களின் பெயரில் ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதில் அம்மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டு உள்ளனர். வன்னி மண் பூர்வீக மண் அம்மக்கள் அங்கிருக்கவே விரும்புகின்றனர் என்று கூறி அம்மக்களை யுத்தப் பகுதிக்குள் வாழ நிர்ப்பந்தித்த புலத்து உறவுகள் இலங்கை இராணுவத்தினதும் புலிகளினதும் தாக்குதலுக்கு அம்மக்களை இலக்காக்கி உள்ளனர். (இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்)
இன்று ஆயிரம் ஆயிரமாக யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்தகொண்டிருக்கும் மக்களை நோக்கி புலத்து உறவுகள் தங்கள் உதவிக் கரங்களை நீட்ட எத்தனிக்கவில்லை. தென்பகுதியில் உள்ள மக்களே சமைத்த உணவுகளை வழங்குகின்றனர். வீட்டில் ஒரு ஆபத்து என்றால் பக்கத்து வீட்டில் உள்ளவன் தான் உதவி செய்வான். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தொப்புள்கொடி உறவால் ஆபத்திற்கு தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது. மேலும் காயப்பட்ட மக்களை காப்பாற்றுபவர்கள் அனைவரும் தமிழ் மருத்துபவர்களும் அல்ல. இது இந்த யுத்த்தில் மட்டும் நிகழவில்லை. சுனாமிக் காலகட்டத்திலும் இதுதான் நிகழ்ந்தது.
அரசையும் மக்களையும் பிரத்துப் பார்க்க முடியாத தமிழ் தலைமைகள் செய்த அரசியலும் அதனைத் தொடர்ந்து வந்த இராணுவ மயமாகிப் போன தமிழ் அரசியலும் தமிழ் மக்களை பல பத்து ஆண்டுகளுக்கு பின்கொண்டு சென்றுள்ளது என்பது வேதனையான உண்மை. இப்போராட்டத்தை புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள இருந்த அத்தனை சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு அல்லது அதனிலும் பின்னே வந்து நிற்கின்றோம்.
யுஎன் செயலாளர் நாயகம் பான்கிமூன் ராயட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு “”I intend to immediately dispatch a U.N. humanitarian team to the no-fire zone. The purpose of this humanitarian team would be to first of all monitor the situation and support humanitarian assistance and try to do whatever we can to protect the civilian population who are caught in the fire zone. – நான் உடனடியாக மனிதாபிமானக் குழு ஒன்றை தாக்குதல் தவிர்ப்புப் பகுதிக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுவதும் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாகக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் தான் அந்த மனிதாபிமானக் குழுவின் நோக்கம்” என்று தெரிவித்து இருக்கிறார். இலங்கை அரசாங்கம் இக்குழுவை கட்டாயமாகவும் அவசரமாகவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பான்கீ மூன் தெரிவித்து உள்ளார். http://www.alertnet.org/thenews/newsdesk/LN183462.htm
இதற்கு முன்னர் எல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு (ஏப்ரல் 22) இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்குப் பின்னர் இன்று ஐநா செயலாளர் நாயகமும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதே கருத்தை பிரித்தானியா – பிரெஞ் வெளியுறவுச் செயலர்கள் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையிலும் தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே பெப்ரவரி நடுப்பகுதியில் இணைத் தலைமை நாடுகள் மற்றும் இந்தியாவும் இக்கோரிக்கையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. (”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்)
தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்பது பற்றி இந்திய உளவுத்துறையின் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்க பொறுப்பாக இருந்த ரோ சந்திரன் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் எண்பதுக்களின் நடுப்பகுதியில் உரையாடிய போது பிரபா அதனை மறுத்துவிட்டார். இக்கோரிக்கைகாக தன்னுடன் போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்து விட்டபின் நான் தமிழீழத்தை கைவிடமுடியாது என்று தெரிவித்து உள்ளார். இன்று கால்நூற்றாண்டுக்குப் பின் எத்தனையாயிரம் இழப்புகள். தமிழீழக் கோரிக்கை என்றைக்கோ அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. இன்றைக்கு பிரபாகரன் இந்த யுத்தப் பகுதியில் இருக்கின்றாரோ இல்லையோ அல்லது இலங்கையை விட்டுவெளியேறி இருந்தாலுமே அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்)
பிரபாவின் எதிர்காலம் மட்டுமல்ல அவர் வலிந்து தலைமை தாங்கிய தமிழ் மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. (தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்)
2.
ஏப்ரல் 20 முதல் சிகிச்சைக்கு வருபவர்கள் மூன்றில் நான்கு பங்கினர் நிலக்கண்ணி வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் ஏனையவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வருவதாகவும் வவுனியா வைத்திய சாலையில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர் போல் மக்மாஸ்ரர் தெரிவிக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில் 450 படுக்கைகள் உள்ள வவுனியா வைத்தியசாலையில் 1700 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக கூறுகிறார். அங்குள்ள நிலைமைகள் பற்றிய அவருடைய குறிப்பு வன்னி மக்களின் நிலையை ஓரளவுக்க மனக் கண்முன் கொண்டு வருகிறது.
”நாங்கள் அங்கங்களை நீக்கும் சத்திர சிகிச்சைகளை நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது. பலருக்கு கீழ்கால் மற்றும் பாதங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு அவை வெடித்துச் சிதறி உள்ளது. அதனால் நாங்கள் அவசரமாக அங்கங்களை நீக்கும் சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். பல நோயாளிகளின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. வயிற்றில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை, குடலில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை (உணவின்மையால்) நெஞ்சும் சுவாசப்பைகளும் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாள வேண்டி உள்ளது. தலைக்காயங்களையும் நாங்கள் கையாள்கின்றோம். தலையில் காயம்பட்டவர்கள் பலர் எங்களை வந்தடைவதில்லை. பஸ்களில் காயப்பட்டவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மக்கள் பஸ்களிலேயே இறக்கிறார்கள். சிலசமயம் பஸ்களில் இருந்து உயிரற்ற உடல்களே இறக்கப்படுகின்றது.”
போல் மக்மாஸ்ரர் – எல்லைகளற்ற மருத்தவர்கள் அமைப்பு
We are doing a lot of amputations. Many of the lower limbs are severely, severely injured and blown off. So we’re doing emergency amputations and a lot of these patients we’re doing abdominal expirations, or damage to internal organs and the bowel, we’re dealing with chest injuries, draining damaged chests and lungs, and we’re dealing with some head injuries as well, but the majority of the severe head injuries don’t make it to us. Buses that bring these people down, people are dying on those buses, and bodies are being taken off the buses sometimes as well.
Paul McMaster – Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF)
http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3551&cat=field-news&ref=home-center
3.
ஏப்ரல் 20ல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான இளம்தாய் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய வாக்குமூலம்.
”என்ரை பெயர் வினோ. நாங்கள் மாத்தளன் ஹொஸ்பிட்டலுக்குப் பக்கத்தில் இருந்த நாங்கள். 20ம் திகதி இரவு ஒரு மணியில இருந்து ஒரே சண்டை நடந்தது. சரியான செல்லடி. நாங்கள் வாறத்துக்காகத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்த நாங்கள். அதுக்குள்ள பதுங்குகழிக்குள்ள இருந்த நாங்கள் நினைக்கவே இல்லை உயிரோட வருவம் என்று. விடிய ஆறு மணிபோல ஓடி வந்த நாங்கள் வரும் போதும் சரியான செல் அடி. காயப்பட்டுத்தான் வந்த நாங்கள். கனபேர் செத்திட்டாங்கள். நாங்கள் காயங்களோட ஓடி வந்தநாங்கள்.
எனக்கு காலிலையும் கையிலையும் காயம் எனது கணவனுக்கு நாலைந்து இடத்தில காயம். கால்லில கையில உடம்பில தலையில எல்லாம் காயம். இன்னும் செல் துண்டுகள் உடம்பில இருக்குது.
நாங்கள் இங்கால வாறத்துக்காகத்தான் ஒரு மாசமா முயற்சி செய்து கொண்டு இருந்தம். ரெண்டு மூன்று தரம் நாங்கள் வரும்போது சரியான தடையாப் போச்சு. எங்களைத் துரத்தினாங்கள். பிடிச்சுடுவாங்கள். சரியான கரைச்சல்பட்டுத்தான் ரோட்டுக் கரையா ஒரு பதுங்குழிக்குள் இருந்தனாங்கள். அன்றைக்கு சரியான செல் அடி ஆறு மணி வரைக்கும் பங்கருக்கு உள்ளேயே இருந்த நாங்கள். பக்கத்தில எல்லாம் செல் வீழுந்து வெடிச்சது. விடிய எழும்பிப் பார்க்கேக்க எல்லாச் சனமும் ஒடினாங்கள். செல்லும் ரவுண்ஸ்ம் வந்துகொண்டிருக்க நாங்களும் எழும்பி ஓடினம். ஆஸ்பத்திரிக்கு முன்னால ஓடி வந்தநாங்கள். தண்ணிக்குள்ள விழுந்தடிச்சு ஓடி வந்தநாங்கள். அப்பிடி வரேக்க தான் காயப்பட்ட நாங்கள். நிறையப் பேர் செத்தவை. நிறையப் பேர் காயப்பட்டவை.
தங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து அங்காள போக வேண்டாம் என்று சொல்லி விடுதலைப் புலிகள் தடுத்தாங்கள். அம்மா சகோதரங்கள் எல்லாம் அங்கால. ஒருதருமே இங்கால வரேல்ல. நானும் என்ர மனுசனும் பிள்ளையும் தான் வந்திருக்கிறம் அவையின்ர நிலமை என்ன என்று ஒன்றுமே தெரியாது.
நாளாந்தம் செல்லடி. நாளாந்தம் ஆட்கள் சாகிறான்கள். நாளாந்தம் ஆட்கள் காயப்படுறான்கள். யார் உயிரோட இருப்பினம் யார் சாவினம் என்று தெரியாது. இப்படியான நிலைமையில எந்த நேரமுமே பதங்குழிக்குள் தான்.
இங்க வரேக்க ரெண்டு மூன்று சோதணைச்சாவடி வைச்சு செக் பண்ணி அனுப்பினவை. ரெண்டு பாக் கொண்டுவந்தனாங்கள். சோதிச்சவை. கொண்டுவந்த நகை காசு எவ்வளவு என்று பதிஞ்சுதான் விட்டவை. மற்றும்படி பிரச்சினையில்லை. நேற்று (21 ஏப்ரல்) ஒழுங்கான சாப்பாடு இல்லை. இன்றைக்கு கொஞ்சச் சாப்பாடு தான் வந்தது. எங்களுக்கு கிடைக்கேல்லை. மதியச்சாப்பாடு பின்நேரம் தந்தவங்க. அதுவும் ஒரு ஆளுக்குக் காணக் கூடியது தான் வந்தது. சரியா கஸ்டப்படுறம். ரெண்டு மூன்றுநாள் குழிப்பிலை வந்து அப்படியே சேறு சகதிகளோடு இருக்கிறம். உடுப்புகளும் நனைந்து அப்படி அப்படியே இருக்கிறம். மருந்து கூட ஒருக்கட்டினபடி அப்படியே இருக்கு. நேற்றுப் பின்நேரம் (ஏப்ரல் 21) தான் புதுமாத்தளனில இருந்து வவுனியாவுக்கு கொண்டு வந்தவை.
மாத்தளனில இருந்து இராணுவத்தின்ர காம்புக்கு ஓடி வந்தநாங்கள.; அந்த இடம் சாலை என்று சொல்றவை. அங்க இருந்து இன்னொரு இடத்திற்குப் போய் அங்கயும் சாப்பாடில்லாமல காஞ்சு கிடந்து ஓமந்தைக்கு கொண்டு போனவையள். பிறகு வவுனியாவுக்கு கொண்டு வந்திரக்கினம்;.
அங்க இயக்கம் பண்ட அடிச்சிருக்கு. பண்டுக்கு இங்கால கணினமான அளவு தண்ணி. அதைத்தாண்டி இங்கால வர பெரிய கடல்துண்டு மாதிரி. அதுக்குள்ளயும் இடுப்பு அளவுக்குத் தண்ணி. அதுக்ள்ளயும் பிள்ளைகள் தாண்டு ஓடேலாம. சரியா கஸ்ரப்பட்டிட்டம். அந்த நிலைமையை என்ன என்று சொல்வதென்றே தெரியாது.”
இவருடைய வாக்குமூலம் இரு வேறுபட்ட இராணுவங்களுக்கு மத்தியில் சிக்குண்ட மக்களின் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.
4.
யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருகின்ற மக்கள் பலரைச் சந்தித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் டேவிட் சாட்டருடைய வாக்கு மூலமும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”பெருமளவிலான அகதிகளுடன் கதைத்ததில் அவர்கள் தமிழ் புலிகளின் தலைமை தங்களை நடத்தியது தொடர்பாக மிகவும் வெறுப்புடன் உள்ளனர். புலிகளின் தலைமை தொடர்பாக தமிழ் பொது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைமை, தமிழ் மக்களுக்கான தாயகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்கள், அவர்களை சுரண்டுகிறார்கள், அவர்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது சுடுகின்றார்கள், யுஎன் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் களவாடுகின்றனர்.”
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுத்தத் தவிர்ப்புப் பகுதியில் பொருட்களின் விலை உச்சமாக இருப்பதாக ஐபிசி வானொலிச் செய்திகள் தெரிவித்து இருந்தது. கடந்த பல மாதங்களாக ஐசிஆர்சி ஊடாக யுஎன் உலக உணவுத்திட்டம் அனுப்புகின்ற உதவிகளைத் தவிர எவ்வித விநியோகமும் இருக்கவில்லை. இந்த விலைக்கு விற்கப்பட்ட உணவுகள் என்பது உணவுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்ட்ட உணவுப் பொருட்களே. தற்போது வெளியேறும் மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கும் விபரங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த தந்தையொருவர் அல்ஜசீரா தொலைக் காட்சியில் தாங்கள் அங்கு சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் யுஎன் அனுப்பிய உணவுகளை வாங்கவும் தங்களிடம் காசு இருக்கவில்லை என்றும் அவை உச்ச விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை இனவாத அரசு தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு இராணுவத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடாத்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய புலிகள், அந்த இனவாத அரசு சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுப்பிய குறைந்தபட்ச உணவையும் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்குக் கூட அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உணவைக் கூட புலிகள் அம்மக்களுக்க வழங்கவில்லை. குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் பட்ட அவஸ்தையையை அத்தந்தை தொலைக்காட்சியில் விபரித்தார்.
5.
கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன் டிசம்பர் 6ல் வவுனியாவிற்கு வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய தொலைபேசிப் பேட்டியில் குறிப்பிட்ட கருத்துக்களை இங்கு மீளப் பதிவு செய்கிறேன்.
சந்திரன் தனது மகளுடன் வவுனியாவுக்கு வந்திருந்தார். குடும்பமாக யாரும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிப்பதில்லை. அதனால் குடும்பத்தின் ஒரு உறுப்பினரே வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார். அதனால் இளம் குடும்பஸ்தரான சந்திரன் தனது மனைவியை பிணையாக விட்டு வவுனியாவுக்கு வந்துள்ளார். அவரது மகள் அவருக்கு பாதுகாப்புக்காக வந்திருக்கிறார். ‘அப்பாவை தனிய விட்டால் பிடிச்சுக் கொண்டு போவினம் என்று தான் அப்பாவோடு வந்தனான்’ என்று மழழை மாறாத குரலில் அச்சிறுமி கூறுகிறார். ‘அம்மாவுக்கு பாஸ் கொடுக்கினம் இல்லை’ என்றும் அச்சிறுமி கூறினார்.
சந்திரன் தினம் தினம் வேலை செய்து சம்பாதிப்பவர். அன்றாட வேலை கிடைத்தால் தான் அவரது வீட்டில் அடுப்பு எரியும். இருந்தும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது குடும்பம் தங்களாலான உதவிகளைச் செய்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளோடு நின்று தோள் கொடுத்தவர்.
‘என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை’ என்கிறார். ‘வெற்றியோ தோல்வியோ இந்தச் சண்டை இத்தோடு முடிந்துவிட வேண்டும்’ என்று விரக்தியுடன் கூறிய அவர் ‘எப்படியாவது திரும்பியும் கிளிநொச்சிக்குச் சென்று தனது மனைiவியை அழைத்து வர வேண்டும்’ என்கிறார். ‘பண வசதி உள்ளவர்கள் வீட்டையும் வளவுகளையும் காசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு குடும்பமாக வெளியேறுகிறார்கள். குறைந்தது 50, 60 இலட்சம் பெறுமதிக்கு அவர்களுக்கு கொடுத்தால் பாஸ் கிடைக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘ஆனால் அன்றாடம் காட்சிகளான தங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை. வருவதை கண்டு கொள்ளத்தான் முடியும்’ என்கிறார்.
‘வாராவாரம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கணக்குப் பார்த்து நிவாரண உணவு வழங்கப்படுகிறது’ என்று கூறிய சந்திரன் ரிஆர்ஓ விடம் இருந்து தங்களுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார். அவர்களுடைய உதவி குறிப்பிட்ட கொஞ்சப் பேருக்கே வழங்கப்படுகிறது’ என்று கூறினார். சந்திரன் மேலும் கூறுகையில் ‘குடில்கள் அமைக்க வழங்கப்பட்ட பொருட்களிலும் பெருமளவிலான பொருட்கள் கள்ளச் சந்தையிலேயே விற்கப்படுகிறது’ என்றார். ‘கஸ்டப்பட்டவர்களின் நிலைதான் மோசமாக உள்ளது’ என்றார். (தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்)
சந்திரனுடைய மனைவி இன்னமும் யுத்தப் பகுதியிலேயே உள்ளார். இரு வாரங்களுக்கு முன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின் அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை.
இங்கு வணங்கா மண் என்றும் ரீஆர்ஓ என்றும் வெண்புறா என்றும் கண்ணீர் வெள்ளம் என்றும் இரத்த வெள்ளம் என்றும் சேர்த்த நிதியில் அந்த மக்களுக்கு எதுவும் சுவறவில்லை. கடைசியில் இனவாத அரசு தனது முகத்தைக் காப்பாற்ற அனுப்பியதையும் விலைக்கு வித்துள்ளார்கள். ஆனால் புலம்பெயர் தேசத்தில் உள்ள வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ரிஆர்ஓ அங்கு வெட்டிக் கிழப்பதாக கதைசொல்கின்றன.
6.
தப்பி வந்த மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குவதற்கு அரசு தன்னைத் தயார்படுத்தி இருக்கவில்லை. உலகிலேயே மிகப்பெரும் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறும் இலங்கை அரசு அந்த மக்கள் எவ்வாறான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல. அனைத்து சர்வதேச உதவி அமைப்புகளையும் யுத்தப் பகுதிகளுக்குள் செல்லத் தடைவிதித்து தங்கால் அனைத்தும் முடியும் என்றவர்கள் அதற்கு ஏற்ப தங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இராணுவ முன்னேற்றத்தில் காட்டும் தீவிரத்தை மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசு காட்டவில்லை.
புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணிக்கும் அரசு அவர்களால் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி இருந்தது. பெருமளவிலான இழப்புக்கள் செல் தாக்குதல்களால் நிகழ்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் புலிகளை ஒழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே அரசு தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றுள்ளது. இந்த மக்களின் உயிரிழப்புகளிற்கும் ஏற்பட்ட அவலங்களிற்கும் இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள். இரு தரப்புமே மக்களுடைய நலன்களை கவனத்திற் கொள்ளவில்லை என்பதல்ல இருதரப்புமே மக்களை மண்முட்டைகளாகவே கருதி தங்கள் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு உள்ளனர். புலிகள் மக்களை மண்மூட்டைகளாக தங்களுக்கு அரணாகப் பயன்படுத்த இராணுவமோ மக்களும் மண்ணும் என்று தமிழ் மக்கள் மீது செல்களை வாரி இறைத்துள்ளது.
இந்த அவலங்களுக்கு அரசாங்கம் ‘பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கை’ என்று நியாயம் கற்பிப்பது அயோக்கியத்தனமானது. தனது அதிகாரத்தை நிலைநாட்ட மேற்குலகை வாயடைக்கச் செய்ய அவர்கள் பயன்படுத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் கையாண்டு உள்ளது. 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது பெரும்பாலும் ஜேவிபி க்கு அதரவான சிங்கள இளைஞர் யுவதிகளை நிர்வாணமாக்கி ராயர் போட்டு கொழுத்தியும் கொன்றொழித்த அரசு இன்று அதனிலும் இலகுவாக தமிழ் மக்களை எவ்வித பாரபட்சமும் இன்றி விமான மற்றும் செல் தாக்குதல்களை நடாத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து உள்ளது. அதனிலும் பல்லாயிரக் கணக்கானவர்களை காயப்படுத்தி உள்ளது.
இந்த அவலத்தில் புலிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்று சொல்லிய வன்னி மக்களை தங்களுக்கு மண்மூட்டையாக்கி இலஙங்கை இராணுவத்தைக் கொண்டு அவர்களை அழித்ததில் புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பம்மாத்து கோரிக்கைகளையும் கோசங்களையும் வைத்து நீண்ட நாளைக்கு புலிகளால் அரசியல் நடத்த முடியாது.
புலிகள் பலவீனமாவது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் என்பதோ புலிகள் ஆயுதங்களைப் போடும்படி கேட்பது சரணடையக் கூறுவது தவறான முன்னுதாரணமாக முடியும் என்று கூறுவதும் இவை இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தும் என்பதும் யதார்த்தத்தில் வன்னி மக்களுக்கு எவ்வித நலனையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதில்லை.
வன்னி மக்கள் இரு இராணுவங்களுக்கு இடையே சிக்குண்டு தங்கள் உயிரை தினம் தினம் இழக்கின்றனர். இந்த அவர்களைப் பதம்பார்க்கும் இரு இராணுவமும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் வன்னி மக்கள் மிகவும் நிம்மதியாக தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள். குறைந்தபட்சம் தங்களை நோக்கி ஆயுதங்களை நீட்டும் இரு தரப்பில் ஒரு தரப்பாவது ஆயுதங்களைக் கீழே போடுமாக இருந்தால் அம்மக்கள் ஓரளவுக்காவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இன்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மக்கள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு மற்றைய ஒரு இராணுவத்தை எவ்விதம் கையாள வேண்டுமோ அதற்கேற்ப கையாளுவார்கள். அதனை அந்த மக்களிடமே விட்டுவிடலாம். (”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்)
தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய அவசரமான அவசியமான ஒரு நிலை முன் எப்போதையும் விட இப்போது அதிகரித்து உள்ளது. அதற்கு முன்னதாக இன்னமும் யுத்தப் பகுதிக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்கள் கௌரவமாக நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்களை நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் வருடக் கணக்கில் தடுத்த வைக்கும் திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கான போராட்டங்கள் தமிழ் மக்களால் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய ‘ரா’ உளவுத்துறை சதித்திட்டம் தீட்டியுள்ளது” என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக் கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ‘ரா’ உளவுத்துறை சதித் திட்டம் தீட்டியுள்ளது என்று மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.
போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகியிருக்கிறது. கடந்த காலத்திலும் பல முறை பிரபாகரனை ஒழித்துவிட ‘ரா’ உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித் திட்டத்தை விடுதலைப்புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இச்சதியில் ஈடுபட்டுள்ள ‘ரா’ அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று அந்த அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த ஒரு காலகட்டத்திலும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளமாட்டார் எனவும் அவர் வாழ்வதற்கு மிகவும் ஆசைகொண்ட மனிதன் எனவும் படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம தெரிவித்துள்ளார்.
படையினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் பல முக்கிய தகவல்களை இராணுவத்திருக்கு வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரணடைந்துள்ள ஜேர்ஜ், தாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாராக விளங்கிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புலிகள் இயக்கத்தினரால் ஒதுக்கப்பட்டதாவும் அவ்வியக்கத்திற்கும் தமக்குமான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்வியக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் தாம் வன்னியில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தகாகவும் இடம்பெயரும் மக்களுடன் மக்களாக இடம்பெயர்ந்து வன்னியில் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள கூடாரங்களில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தாம் யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்தபோது புலிகள் மக்களுக்கு கொடுத்த துயரங்களை தாமும் அனுபவித்ததாக கூறும் அவர்கள் பிரபாகரனும் எஞ்சியுள்ள முன்னணித் தலைவர்கள் அனைவரும் யுத்த சு10னியப் பிரதேசத்திற்குள் அடங்கும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே உள்ளனரெனவும் தெரிவித்துள்ளனர்.
புதுமாத்தளன் பகுதியில் சிக்கியிருந்த மக்கள் அனைவருமே புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறுவதற்கு மிகுந்த விருப்பத்துடன் காணப்பட்டனர். ஆனால் புலிகள் மக்களின் நடமாட்டத்தை நன்றாக அவதானித்து அங்கிருந்து வெளியேற முற்பட்ட பலரை கொன்றதை கண்ணுற்று தமக்கும் அக்கதி ஏற்படும் என்ற பயத்தில் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்தாகவும் கடந்த இரு தினங்களில் அங்கிருந்த 90 சதவீதமான மக்கள் வெளியேறிய நிலையில் மேலும் அங்கு 10000 தொடக்கம் 15000 மக்கள் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.
வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார். அதுவும் கூட வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்துபோயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.
வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார். ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த ‘அன்பு சகோதரர்’ அவமானத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.
வாக்களியுங்கள் என்று சொன்னபோது, தனது பெயரை ஜெயலலிதா சொல்லாவிட்டாலும் எழுந்து நின்று மக்களைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார் வைகோ. பாவம் வைகோ..!
வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை வங்கி வைப்பைறையிலிருந்து இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாப்பாக வங்கியை விட்டு வெளியேறும் வரையிலும் வங்கி ஊழியர் ஒருவரை பணயக் கைதியாக கொள்ளைக் கோஷ்டியினர் பிடித்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களைக் காக்க்க கோரியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையி்ல பெண்கள் கூட்டமைப்பினர் நடத்தி வரும் உண்ணாவிரதம் 11வது நாளாக இன்றும் தொடருகிறது. மேலும் 6 பெண்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து பெண்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்றும் கவலைப்படாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த 13ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பேராசிரியை சரஸ்வதி (இவர்தான் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பழனியம்மாள், லித் வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகிய 6 பேருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது. நேற்று இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ரோகிணி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த பெண்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
நாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்
மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிகப்பெரும் மனித அவலத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கைத் தாண்டி தற்போது ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் பெரும்பாலானோர் தமது உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது இவர்கள் மனதில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் தமிழ்த் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பி விட்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் சர்வதேச அரசியற் களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதன் முதலாக பிரான்ஸ் வாழ் எம்முறவுகளால் பாரீஸின் மையப்பகுதியில் ஒரு சாலைமறியல்ப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இது ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே இடம்பெற்றாலும் இதுவே புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வீதி மறிப்புப் போராட்டங்களுக்கு அத்திவாரம் இட்டது எனலாம். அதனைத் தொடர்ந்து லண்டன், நோர்வே என இச் சாலைமறியல்ப் போராட்டங்கள் விரிவடைந்தன.
கடந்த ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து இலங்கையின் சுதந்திர தினமான நான்காம் திகதி வரை சுழற்ச்சி முறையிலான உண்ணாவிரதத்தினை பாராளுமன்றத்தின் முன்னுள்ள சதுக்கத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில் பலர் தமது ஆதரவினைத் தெரிவித்ததோடு அவ் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஜனவரி மாதம் 31ஆம் திகதி லண்டனில் முதலாவது வரலாhறு காணாத எழுச்சிப் பேரணியையும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 125,000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே.
அந்த எழுச்சிப் பேரணியானது லண்டனின் மத்திய பகுதிகளில் ஒன்றான மில்பாங்க் என்னுமிடத்திலிருந்து ஆரம்பமாகி பாராளுமன்றம் முன்பாகச் சென்று ரெம்பிள் பிளேஸ் என்ற இடத்தில் முடிவடைந்திருந்தது. இதற்கான ஒழுங்கமைப்பினை இயையோர்களாகிய தமிழ் மாணவர்களே முன்னின்று செய்திருந்தனர். இந்த எழுச்சிப் பேரணிக்கான அனுமதி மதியம் 1.30 இருந்து மாலை 4 மணிவரையே கிடைத்தது. ஆனால் மக்கள் வெள்ளம் அலை மோதியதனால் மாலை ஐந்து மணியாகியும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்றத்தைத் தாண்டிச் செல்லவில்லை. இதனால் காவல்த்துறையினர் அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கு கலந்து கொண்ட SAGT அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதனால் அங்கு வந்த மக்களும் வீதியில் அமர்ந்தனர். இவ்வாறு விதியை மறித்தவர்களை கலைப்பதற்கு பிரித்தானிய காவல்த்துறையினர் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் தலையீட்டின் பேரில் மக்களாகவே கலைந்து சென்றனர்.
இதுவே பிரித்தானியாவில் நடந்த முதலாவது வீதி மறியல்ப் போராட்டமாகும். இவ்விதி மறியல் போராட்டத்தை அன்றைய தினம் முன்னின்று நடாத்தியவர்கள் இந்த சாக்ரி (SAGT) அமைப்பினரே. முதலில் இந்த சாக்ரி அமைப்பினர் என்றால் யார் என நோக்கினால். தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கம் (Student Against Genocide of Tamil) என்பதாகும். இதன் சுருக்கமே SAGTஎனப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் முதல் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுவரை தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
மேலும் இலங்கையின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி நான்காம் திகதி பாராளுமன்றச் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை பிரித்தானிய இளையோர் அமைப்பு மேற்கொண்டிருந்தது. இதிலும் கிட்டத்தட்ட 12 யிரம் வரையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 28 திகதி வரை சுழற்ச்சி முறையில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டமும், இனப்படுகொலைகளைச் சித்தரிக்கின்ற கண்காட்சிகளும், இனப்படுகொலை தொடர்பான புரிந்துணர்வுக் கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இதன்மூலம் மாணவர்கள் தமிழ் இனப்படுகொலைகளை பல்கலைக்கழக ரீதியில் கொண்டுசென்றனர். இந்த நிகழ்ச்சி நிரலையும் தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கமே SAGT ஒழுங்கு செய்திருந்தது.
பின்னர் வன்னியில் நடக்கின்ற இனப்படுகொலையானது நூற்றுக் கணக்கில் உயர்ந்த போது பொங்கி எழுந்த தமிழ் இளையோர்கள் கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் அணிதிரண்டு திடீரென அந்த வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதன்பின்னர் அவ்விடத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு காவல்த்துறையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் பிரித்தானிய காவல்துறையினரால் அவர்களை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் தமது வேலைகளையும் விட்டுவிட்டு அங்கு சென்று சாலைமறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இணைந்தனர். இதனால் காவல்த்துறையினர் செய்வதறியாது தவித்தனர். இது இவ்வாறு இருக்க மறுநாள் செவ்வாய்கிழமை (07.04.09) அதிகாலையில் மக்கள் தம் காலைக் கடன்களையும் வேறு வேலைகளையும் பார்ப்பதற்காக கலைந்தனர். இதனால் அங்கு 1500 வரையான மக்களே இருந்தனர்.
இச்சந்தர்ப்த்தைப் பயன்படுத்திய காவல்த்துறையினர் காலை எட்டு மணியளவில் அந்த பாராளுமன்ற வீதிக்கு விரைந்த காவல்த்துறையினரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கிருந்த மக்களின் மீது தடியடிப்பிரயோகம் செய்தனர். இதன்போது மாணவர்கள் மக்கள் எனப் பலர் கை, கால் முறிவுகளுக்கும் காயங்களுக்கும் உள்ளானார்கள். இருந்தும் மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லவில்லை. அடிவாங்கியும் நகராது இருந்தனர். காவல்த்துறையினருக்கு வேறுவழி தெரியவில்லை. உடனே அவர்கள் நாங்கள் உங்களுக்கு பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தை ஒதுக்கித் தருகின்றோம் அதற்குள் இருந்து உங்கள் ஆர்ப்பாட்டத்தினைத் தொடரலாம் என்றனர். இம்முடிவின் பேரில் மாணவர்கள் மக்களை அவ்விடத்திலிருந்து அகலச்செய்து பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்திலிருந்து தங்களது கண்டணத்தை வெளிப்படுத்த ஏற்பாடுசெய்தனர். அது இன்றுவரை தொடர்கின்றது. இதேபோல்த்தான் நோர்வேயிலும், பிரான்சிலும் இளையோர்கள் சாலைமறியல்ப் போராட்டத்தில் இறங்கினர். இருந்தபோதும் அவர்களை காவல்த்துறையினர் அங்கிருந்து அகற்றிவிட்டனர்.
இது இவ்வாறு இருக்கையில் அன்று மாலை (07.04.09) 05 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவகுமாரவேல் சிவதர்சன்;, 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்வரன் ஆகிய இரு இளைஞர்களும் சாகும் வரை நீராகாரமின்றி உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இதற்கு ஆதரவாக பல உறவுகள் இரவு பகலாக அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் நான்கு நாட்களாகியும் வீடு செல்லாது அங்கேயே படுத்துறங்கி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களு ஆதரவு வழங்கியதனை என்னால் காணமுடிந்தது. இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ் சந்தித்ததனைத் தொடர்ந்து அவர்கள் நீர் மட்டும் அருந்தி தமது உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இருந்த போதும் பிரித்தானிய இளையோர் அமைப்பு, உண்ணாவிரதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினர் செரோன் மக் டொனால்ட் அவர்களால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து சிவகுமாரவேல் சிவதர்சன் என்பவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 10.04.09 கைவிட்டார். அதாவது செரோன் மக்டொனால்ட் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பிரித்தானிய அரசு. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பிற்கும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் அழைத்து செல்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்தே சிவதர்சன் போராட்டத்தைக் கைவிடார்.
ஆனால் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் இன்றுவரை போராட்டத்தினைத் தொடர்கின்றார். பரமேஸ்வரன் அவர்களிடம் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்றுவரை தொடர்ந்திருப்பதற்கான காரணத்தை வினாவியபோது என்னை இங்கிருந்து அகற்றுவதற்காக நான் எப்போது சுயநினைவை இழப்பேன் எனபிரித்தானிய காவல்த்துறையினர் எதர்பார்த்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் முடிவு கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேறாது எனது உயிர் பிரிந்துதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்குமாக இருந்தால் அதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். எமது போராட்டத்திற்கு சர்வதேசம்தான் பதில் கூறவேண்டும். சர்வதேச நாடுகள் போருக்குப் பின்புலமாக நிற்பதை நிறுத்தி தமிழ்மக்களைக் காப்பாற்ற வேண்டும். எமக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உறுதிமொழி வழங்கியுள்ளனர். அவை அமுலாக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார். பிடிவாதமாக இன்றுவரை தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வழியில் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றார்.
பரமேஸ்வரன் முதல் நான்கு நாட்களும் நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தண்ணீரைப் பருகுகின்றார். தற்போது இவருக்கு நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் குறைந்துகொண்டுவருகிறது. அதேநேரம் தண்ணீர் போதியளவு அருந்தாததனால் சிறுநீரகம் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலை தொடர்வதால் இவரது நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அத்துடன் கடந்த 21ஆம் திகதி பரமேஸ்வரன் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமது சொந்த நிலங்களை விட்டு அகதிமுகாம்களில் இலங்கை அரசு மக்களை அடைத்திருப்பதனால் அங்கு அடைபட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலையும், மக்களின் மனோநிலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சர்வதேச நாடுகள் இதில் தலையிட்டு அந்த மக்களை உடனடியாக தமது சொந்த நிலங்களில் குடியேற்ற ஆவனை செய்ய வேண்டும் என்றார். தமிழர்கள் அல்லாத பிற நாட்டவர்களும் அங்குவந்து கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு ஸ்பானிஸ் பெண்மணி கண்ணீர் மல்க உயிருக்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது. எனவே இவர்களது உயிர்முக்கியம் எனவே உண்ணாவிரதத்தை விட்டு அமைதிவழியில் மேற்கொள்வதே சிறந்தது என்றார்.
அத்துடன் கடந்த 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ளச் சென்றவேளை பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு உதவியாக வெறும் இருபது மாணவர்களே இருந்தனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிரித்தானிய காவல்த்துறையினர். அந்த மைதானத்தில் உள்ள புற்கள் உங்கள் ஆர்ப்பாட்ட மூலம் அழிக்கப்படுகின்றது எனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புற்களைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்தனர். இருந்தும் மக்களை அந்த புற்றரைகளுக்கு அப்பால் இருந்து உண்ணாவிரதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளுமாறும் கூறினர். முன்னர் 400 பேர் மட்டும் இரவு பகலாக அங்கு தங்கியிருக்க அனுமதித்த காவல்த்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதிமுதல் வெறும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஏனையோர் அங்கு வந்து உண்ணாவிரதியைப் பார்த்துவிட்டு அகன்றுவிடவேண்டும் என்றும் கூறினார்.
இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர். எவ்வாறாவது காவல்த்துறையினர் மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் யாரும் ஒலிபெருக்கி பயன்படுத்தமுடியாது. என்று அறிவித்தனர். இதனால் ஆத்தரமடைந்த 4000 இற்கும் அதிகமான மாணவர்களும் மக்களும் ஈஸ்டர் தின விடுமுறையான திங்கட்கிழமை (13.04.09) மாலை 03 மணியளவில் வேகுண்டெழுந்து மீண்டும் வீதியைத் தடைசெய்தனர். அன்றையதினம் விடுமுறை என்றதனால் பல காவல்த்துறையினர் கடமையில் இல்லை. இதனால் அவர்கள் ஒருகணம் சங்கடப்பட்டாலும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களும் மக்களை எதுவும் செய்யவில்லை. இரவு 09 மணியளவில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பணிப்பின் பேரில் மக்கள் தாமாகவே வீதியை விட்டகன்று வீதியை வாகனங்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி ஸ்கொட்லண்ட் யாட் காவல்த்துறையினர் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனைச் சந்தித்துவிட்டு 20ஆம் திகதி காலை தமது முடிவினை அறிவிப்பதாக கூறியபின்னர். பரமேஸ்வரன் ஊடகங்களினூடாக மக்களுக்கு பணிவான வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதாவது அனைவரையும் 20ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள சதுக்கத்தில் காலை ஒன்றுகூடுமாறு மன்றாடி வேண்டினார். இதனால் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் இற்கு மேற்பட்ட மக்கள் காலை அவ்விடத்தில் கூடினர். இதனால் அவ்விடம் நிரம்பி வழிந்தது. மக்கள் நிற்பதற்கே இடமில்லாது போனது. இதனால் கடந்த 11ஆம் திகதி பிரித்தானிய காவல்த்துறையினரால் புற்களைச் சுற்றிப் போடப்பட்ட கம்பிவேலிகளை உடைத்தெறிந்து கொண்டு மக்கள் புற்தரைக்குச் சென்றனர். இதன்பின்னர் காவல்த்துறையினரே அங்கு ஏற்கணவே போடப்பட்ட கம்பிகளை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.
இதன் பின்னர் மூன்றாவது தரமாகவும் வீதிகளை மறிப்பதற்கு தமிழ்மாணவர்கள் திட்டம் தீட்டினர். அதனடிப்படையில் மாணவர்கள் காலை 9.30 மணியளவில் அங்கிருந்த மக்களையும் அழைத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கு முன்னால் செல்லும் பிரதான மூன்று வீதிகளை பிரித்தானியப் பொலீஸாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஊடறுத்துச் சென்று வீதியின் நடுவில் அமர்ந்து கொண்டனர். இதனால் எதுவுமே செய்யமுடியாத காவல்த்துறை வெறும் கைகளை மட்டும் கட்டிநின்று நடப்பதை அவதானித்துக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வினை Skynews,Bbc முதலான தொலைக்காட்சிகளும் மெற்ரோ, ஈவினிங் ஸ்ராண்டட் முதலான பத்திரிகைகளும் காட்சிப்படுத்தின. தொடர்ச்சியாக காவல்த்துறையினர் மக்களை வீதிகளை விட்டகன்று சதுக்கத்திற்குள்ளும், புற்றரைகளுக்குள்ளும் செல்லுமாறும் நீங்கள் புற்றரைகளை எதிர்வரும் மே மாதம் 11 திகதிவரை பயன்படுத்தலாம் என்று உறுதியளித்தும் மக்கள் கலைந்து செல்வதாக இல்லை. மாறாக விரியம் கொண்ட மக்களின் போராட்டத்தினால் காவல்த்துறையினர் மௌனமானார்கள்.
நேரம் இரவு 10 மணியையும் கடந்து சென்றது. மக்கள் வீதியை விட்டகல்வதாக இல்லை. இருந்தும் நேரம் நள்ளிரவு 12 மணியைத் தொடும்போது அங்கிருந்த மக்களின் தொகை வெறும் 1500 ஆகவே இருந்தது. அங்கிருந்த மாணவர்கள் மக்களை அவ்விடத்தைவிட்டகன்று புற்றரைகளுக்குச் செல்லுமாறு வேண்டினர் காரணம் அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையையும், மக்கள் காவல்த்துறையினரால் தாக்கப்படாதிருக்கவுமே அவர்களை வீதியை விட்டகலுமாறு மாணவர்கள் வேண்டினர். அதனடிப்படையில் நள்ளிரவு 12 மணிக்கு தாயகத்தில் இறந்தவர்களுக்காகவும் அன்று பிரித்தானிய மகாராணியின் பிறந்ததினம் என்பதனாலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செய்துவிட்டு வீதியை விட்டகன்றனர். இங்கு முக்கியமாக மக்கள் வீதியை விட்டகலும் போது வீதியில் உள்ள குப்பைகளை அகற்றி வீதிகளை நன்கு துப்புரவு செய்ததன் பின்னரே புற்றரைகளிற்குச் சென்றனர். காலை 9.30 ற்கு பிரதான மூன்று விதிகளை மறித்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கே வீதிகளை விட்டகன்றனர்.
அதன்பின்னர் கடந்த செவ்வாய்கிழமை பிரித்தானிய தமிழ் மாணவர்களால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பிதழை ஏற்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் மீதமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் முயற்ச்சிகளில் தற்போது இறங்கியுள்ளனர். அத்துடன் உண்ணாநிலைப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தமிழ் மாணவர் அமைப்பு கவனிக்க. SAGT(Student Against Genocide of Tamil) என்ற இயக்கம் அதற்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பல அமைப்புக்களுக்கும் அரசியல் ரிதியிலான விளக்கங்களையும் அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
அதாவது 24 பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்திருக்கும் இந்தச் சாக்ரி SAGT இயக்கம் பிரித்தானிய மனிதஉரிமைகள் அமைப்பின் மாணவர்கிளையின் ஆதரவையும் பெற்றுள்ளது. அத்துடன் யுனிசண் Unison என்கின்ற தொழிற்சங்கத்திற்கும் எமது அவலத்தினைத் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் யுனிசன் தொழிற்சங்கம் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்தியத் தூரதரத்திற்கு ஒரு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இதில் நீங்கள் அப்பாவித் தமிழ்மக்களைக் கொல்வதற்கு ஆதரவு வழங்குகிறீர்கள். அத்துடன் அபாயகரமாக கிளாஸ்ரர் குண்டுகளையும், இரசாயண வாயூக்களை இலங்கை இராணுவம் பயன்படுத்துவதற்கும் நீங்கள் நேரடியாக உதவுகின்றீர்கள் என இந்தத் தொழிற்சங்கம் நம்புகின்றது. எனவே இவற்றை முடிந்தவரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் பிரித்தானிய ஆசிரியர் தொழிற்சங்கமும் (Union for teacher) தனது ஆதரவினை இந்த சாக்ரி அமைப்பிற்கு வழங்கியுள்ளது. மேலும் அரச வர்த்தகத்துறைச் தொழிற்சங்கமும் (Civil and Commercial Works Union) தனது ஆரதவினை இந்த மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர். அத்துடன் பிரித்தானிய மாணவர்களின் அமைப்புடன் (National Union of Student) ச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சாக்ரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இவைகள் அனைத்தும் பிரித்தானிய தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
மேலும் 22ஆம் திகதி தமிழ் மாணவர்கள் அனைவரும் பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைகளுக்குச் செல்லாது பிரித்தானிய நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடிதாக உள்ளது. இதில் 10ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து ண்டிருந்தனர். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை ஒரு தொகுதிப் மாணவர்களின் பிரதிநிதிகள் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்தோடு செவ்வாய்கிழமை கொமன்வேல்ட் நாடுகளின் ஒன்றியததின் காரியாலயமான பிரான்சுக்கும், வியாழக்கிழமை (23.04.09) வோஷிங்டனுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதனுடைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு ஒரு புறம் உடனடி யுத்த றுத்தத்திற்காக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்திலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்கள்களை இளையோர் அமைப்பு, தமிழ் மாணவர் ஒன்றியம், சாக்ரி இயக்கம் ஆகியவற்றினூடாக இணைத்து அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக மிகப்பெரிய தமிழ்த் தேசியஎழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்த இளையவர்களும் தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக் குழுவினர் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.