05

05

யாழ்தேவி ரயில் சேவை திட்டம்: கே.கே.எஸ் வரை 34 நிலையங்களை புனரமைக்க தேசிய மட்டத்தில் பங்களிப்பு.

railways-in-jaffna.jpg யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். ‘உத்துறு மித்துறு’ (வடக்கு நட்பு) என்ற இந்த ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய செயலகமொன்றையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைகளுக்கமைய யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்கவென தேசிய பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரின் ஊடகச் செயலாளர் சுமித்சந்தன வீரசிங்க தெரிவித்தார்.

ரயில் பாதையை மீளமைப்பதற்கு நிதி உதவி வழங்க ஈரானிய அரசு முன்வந்துள்ளது. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதையை அமைப்பதற்காக தண்டவாளத்திற்கும், சிலிப்பர் கட்டைகளுக்குமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் அதேநேரம், வடக்கின் கலாசாரப் பிணைப்பையும், வாழ்வியல் பண்புகளையும் ஏனைய மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த யாழ்தேவி ரயில்சேவை திட்டத்திற்கு மூவின மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுமித் வீரசிங்க தெரிவித்தார்.

இதற்கிணங்க ஒன்பது மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களின் உடல் உழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணியை அம்பாந்தோட்டை மாவட்டம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் வீரசிங்க, அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்டம், கிளிநொச்சி ரயில் நிலையத்தைப் புனரமைக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு ஓமந்தையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வரை உள்ள 9 பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 நிலையங்களைப் புனரமைப்புச் செய்ய மாவட்ட ரீதியில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் ஒருங்கிணைப்பார்கள். ஆளணிப் பங்களிப்பைத் தவிரவும், பொதுமக்கள் சிலிப்பர் கட்டைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிப்பர் கட்டைக்கான செலவு 12,500 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்க முடியாதவர்களுக்காக மாற்றுத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதாவது, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ரயில் அனுமதிச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமும் வடக்கு நட்பு ரயில் சேவை திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடியும். இந்த ரயில் அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். இந்த அனுமதிச்சீட்டை வைத்திருந்து, யாழ்தேவி பயணத்தைத் தொடங்கியதும் அதில் யாழ்ப்பாணம் சென்றுவர முடியும் எனவும் சுமித் சந்தன வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்தேவி ரயிலை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரை கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்த நாளான 1956 ஏப்ரல் 23 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில், இந்தத் திகதியில் அதன் பயணத்தை வவுனியாவுக்கும் அப்பால் கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டதாக சுமித் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து திங்கள் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் விபரம்

vanni-injured.gif
67. ராசலிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 66),
68. எஸ்.பரமேஸ்வரி, முல்லைத்தீவு, செல்வபுரம், (வயது44),
69. ஆர்.தங்கராணி, புதுக்குடியிருப்பு, (வயது 70),
70. எஸ்.தவமலர் முள்ளியவளை, (வயது61),
71. ஏ.முத்தையா, மாத்தளன், (வயது63),
72. எஸ்.கனகசபாபதி, யாழ்ப்பாணம், அளவெட்டி (வயது75),
73. சுஜா, முல்லைத்தீவு, பொக்கணை (வயது 12),
74. ரி.சிவபாக்கியம், முல்லைத்தீவு, பொக்கணை, (வயது57),
75. எஸ்.சிதம்பரம், கருணை நிலையம், (வயது52),
76. எஸ்.ருக்மணி, வட்டக்கச்சி, (வயது 46),
77. எம்.ராசகுகன், மாதலன், (வயது 56),
78. எஸ்.ராமு.முல்லைத்தீவு, வவுனிக்குளம், (வயது64),
79. வி.பேரின்பராணி, கிளிநொச்சி, உதயநகர், (வயது30),
80. விஜக்ஷா ராகுலன், மாதலன், (வயது03),
81. பிதுஷண, யாழ்ப்பாணம், நல்லூர், (வயது02),
82. எஸ்.ரமேஸ்குமார், யாழ்ப்பாணம், நல்லூர், (வயது38),
83. பி.நடராசா, இலுப்பைக்கடவை, (வயது85),
84. கலைவாணி, யாழ்ப்பாணம், (வயது24),
85. யதுசனன், யாழ்ப்பாணம், (வயது 7 1/2),
86. எஸ்.சீதாலட்சுமி, மாதலன், (வயது70),
87. ஆர்.சோபனா, அல்வாய் கிழக்கு, (வயது7),
88. ஆர்.கலைவாணி, அல்வாய் கிழக்கு (வயது32),
89. வனிதாதேவி, மாதலன், (வயது61),
90. விஜயராகவன், மாதலன், (வயது2.5),
91. வி.லட்சுமி, வவுனியா, (வயது60),
92. எம்.யோகதாஸ், பெரியவிளான், இளவாலை (வயது28),
93. கே.கோபாலசிங்கம், முள்ளியவளை (வயது61),
94. நந்தாவதி மெண்டிஸ், கிளிநொச்சி, (வயது44),
95. ஏ.சிவரஞ்சனி, கிளிநொச்சி, (வயது25),
96. இறப்புபெயர் தரப்படவில்லை,
97. கே.பொன்னம்மா, கிளிநொச்சி, (வயது90),
98. என்.சத்தியரூபன், வட்டக்கச்சி, (வயது13),
99. செவிப்புலன், பேசும் சக்தி அற்றவர்,
100. ஏ.ராசலிங்கம், மாங்குளம், (வயது59),
101. மகேஸ்வரி, வல்லிபுரம் (வயது51),
102. சிறிமா, கருணை நிலையம், (வயது84),
103. பௌத்தமணி, (வயது48)
104. அந்தனி, திரேஸா, கருணை நிலையம், (வயது35),
105. குழந்தை, முள்ளியவளை, (வயது74),
106. கிருஷ்ணகுமாரி, கிளிநொச்சி, (வயது15),
107. கே.முத்துவேற்பிள்ளை, திருகோணமலை, கிரியாய், (வயது56),
108. தீபா, கருணை இல்லம், (வயது12),
109. ஜே.தம்மிகா, அம்பலன், பொக்கணை, (வயது04),
110. எஸ்.ஜேயசீலன், அம்பலன், பொக்கணை, (வயது34),
111. ஹம்ஸிகா, அம்பலன், பொக்கணை, (வயது10),
112. ஜே.சுகந்தினி, அம்பலயன், (வயது33),
113. அனுஜா, அம்பலயன், (வயது29),
114. கே.ரோசா, அம்பலன், (வயது06),
115. கே.யோகராணி, அம்பலயன், (வயது54),
116. ஐ.மகேந்திரன், கிளிநொச்சி, (வயது49),
117. எஸ்.சிவசோதி, சிவபுரம், கிராஞ்சி, (வயது4),
118. பி.அருளானந்தம், முள்ளியவளை, (வயது53),
119. பி.கந்தசாமி, நீதிமன்ற வீதி, யாழ்ப்பாணம், (வயது33),
120. ஏ.யோகேஸ்வரன், கிளிநொச்சி, கணேசபுரம், (வயது72),
121. ஜே.ஜில்லிபுஷ்பா, மாதலன், (வயது61),
122. பி.மகேஸ்வரி, கிளிநொச்சி, (வயது58),
123. பி.ராணி, மாதலன், (வயது58),
124. எஸ்.சிவகுமார், யாழ்ப்பாணம், புங்குடுதீவு, (வயது45),
125. சிவகாமுகானி, மன்னார், (வயது76),
126. டி.தவராஜா, விளாங்குளம், வவுனிக்குளம், (வயது60),
127. துலக்ஷன், விளாங்குளம், வவுனிக்குளம், (வயது10),
128. வி.சகுந்தலா, வற்றாப்பழை, (வயது29),
129. வி.மதுஷா, வாற்றாப்பழை, (வயது5),
130. வரதராணி, வற்றாப்பழை, (வயது7),
131. எஸ்.பிரியா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது2),
132. ஜனுஷா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது6),
133. எஸ்.இராசமலர், பொக்கணை, (வயது55),
134. எஸ். நேசம்மா, மட்டக்களப்பு, (வயது61),
135. எம்.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது51),
136. விஜயலட்சுமி, கருணை நிலையம்,
137. வி.துரைராஜசிங்கம், உடையார்தட்டு (வயது60),
138. கமலாம்பிகை, ஆனைக்கோட்டை, (வயது78),
139. எஸ்.மயில்வாகனம், தர்மபுரம்,
140. ஜே.சரஸ்வதி, பண்டங்கண்,
141. ஏ.உதயராணி, பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு(வயது34),
142. ஏ.தாரண்யா, புளியங்குளம், (வயது08),
143. ஏ. தாரகன், புளியங்குளம், (வயது10),
144. சுமித்திராதேவி, பண்டாவெளி,(வயது49),
145.கே. ராசம்மா, பண்டங்கண்டி,(வயது 57),
146. தெய்வானை/ கிளி, உருத்திரபுரம்,(வயது66),
147. கே.மதுரம்,யா/தாளையடி, (வயது51),
148. கே.சத்தியவதி,தாளையடி, (வயது 21),
149. என்.ரோபிசியா,காத்தான்குளம்,மன்னார், (வயது 36),
150. தமிழ்வினி, காத்தான்குளம்,மன்னார், (வயது 01),
151. எல்.மகேஸ்வரன், காத்தான்குளம் ,மன்னார், (வயது 35),
152. தாரணி, காத்தான்குளம் ,மன்னார், (வயது03),
153. செவிப்புலனற்றவர் கருணை இல்லம்,
154. பி.கிருபாகரன், யாழ்ப்பாணம், புளியங்கூடல்,
155. ஏ.சொக்கலிங்கம், வவுனிக்குளம், (வயது 73),
156. வள்ளிப்பிள்ளை, முரசுமோட்டை, (வயது75),
157. எஸ்.சின்னம்மா,பேராளை, பளை, (வயது69).

விடுதலை சிறுத்தைகள் தொண்டர் தீக்குளித்து சாவு

srithar.jpgசென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்து இறந்தார். அவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் குடும்பச் சண்டை காரணமாக அவர் தீக்குளித்தார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளை கே.எம்.கார்டனைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழும்பூர் பகுதி அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு லட்சுமி (21) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். தமிழ் மீது அதிக பற்று கொண்ட இவர் தனது குழந்தைகளுக்கு தமிழ்செல்வன், ஈழச்செல்வன் என பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த `நாம் தமிழர்’ நடைப் பயணத்தில் பங்கேற்று விட்டு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் இன்னும் சமையல் செய்யவில்லை என்று கூறி லட்சுமி சாப்பாடு வாங்குவதாக கூறிவிட்டு கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதர் வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் கடைக்கு சென்ற மனைவி லட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். கணவன் உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்த லட்சுமி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்து ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து நிருபர்களிடம் கூறும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஸ்ரீதர் எழும்பூர் பகுதி அமைப்பாளராக இருந்து வருகிறார். இன்று பெரம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நாம் தமிழர் நடைபயணத்தில் பங்கேற்ற அவர் சோகமாக காணப்பட்டார். இடையில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீதர் இலங்கை தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார் என்றார். ஆனால் இதை மறுத்த போலீஸார், மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பசண்டை காரணமாகத்தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

‘யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை’

pmsrilanka.jpgஎத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லையென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அழிவின் இறுதித் தருணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் எதனையும் செய்யத் துணியலாம். அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற இவ்வேளையில் சகல தரப்பினரினதும் பூரண ஆதரவு அவசியமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் சில தொண்டர் அமைப்புகள் சர்வதேச ரீதியில் திரிபுபடுத்தப்பட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவதாக அவ்வமைப்புகள் பிரசாரம் செய்கின்றன. இது உண்மையெனில் தெற்கிலும், மத்திய மாகாணத்திலும் தமிழ் மக்கள் வாழ முடியுமா? அம்மக்கள் கடந்த தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்திருப்பார்களா எனவும் பிரதமர் கேள்வியெழுப்பினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

இரவில் விழுந்த குழியிலேயே பகலிலும் மீள விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை. சில சத்திகள் மீண்டும் ஒரு யுத்தநிறுத்தம் பற்றி அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. அதை ஏற்க முடியாது. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்க்கும் போது, இன்னும் சில காலங்களுக்கு இவர்களை விட்டு வைத்திருந்தால் முழு நாடும் அழிவடைந்திருக்கும் என்பதையே உணர்த்துகிறது. மீண்டும் மீண்டும் புலிகளை நம்ப அரசு தயாரில்லை. வரலாற்றில் கற்ற பாடங்களை எளிதில் மறக்க மடியாது. இதனால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் யுத்தநிறுத்தமொன்றை அரசாங்கம் புலிகளுடன் மேற்கொள்ள மாட்டாது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேசமும் செயற்படுகின்ற காலகட்டமிது. நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து, சகல மக்களும் வாழக்கூடிய ஜனநாயகச் சூழலை உருவாக்குவதற்கே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எனினும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன. இவர்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் டொலர்களுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தமது மக்களைப் பணயக் கைதிகளாகவும் தற்கொலைப் போராளிகளாகவும் சிறுவர் போராளிகளாகவும் நடத்துகின்றனர். இதனால் சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் மக்களும் அவர்களை நிராகரித்துள்ளனர்.

அம்பாறைக் கிராமமொன்றில் புகுந்து புலிகள் செய்த அட்டகாசத்தால் பல உயிர்கள் பலியான சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தமது மக்களையே அழிக்கும் விடுதலை இயக்கமாக அவ்இயக்கம் செயற்பட்டு வருகிறது. இத்தகைய நிலையிலும் புலிகளுக்கு ஆதரவாக சில தொண்டர் அமைப்புகள் செயற்படுகின்றன. யுத்தநிறுத்தம் ஒன்று அவசியமென அவை வலியுறுத்துகின்றன. ஒரு போதும் இதற்கு இடமளிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடுவர் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது -பிரிட்டிஷ் பிரதமர்

20090302.jpg
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரவுண் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளின் பிரச்சினையை பாகிஸ்தான் கையாளவேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  “இது மனித இருப்புக்கான யுத்தம். நாம் தோற்றால் அது உலகின் தோல்வி. தோல்வி இதில் தெரிவு அல்ல’ என்று வோல் ஸ்ரீட் கேர்னலுக்கு கோல்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தானின் பலம் வாய்ந்த இராணுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றால் அவரின் நிலைப்பாடு பலவீனப்படுத்தப்பட்டுவிடுமென்று மேற்குலக இராஜதந்திரிகள் அச்சப்படுகின்றனர். ஏனெனில், பாகிஸ்தான் இராணுவமும் ஐ.எஸ்.ஐ. யும் லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்று “லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.

ஏனெனில், ஐ.எஸ்.ஐ. யின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தத் தாக்குதல் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென்று தனது ஊகத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு இந்தியப் புலனாய்வுத் துறையின் பின்னணி இருந்திருக்கக்கூடும் எனவும் மும்பைத் தாக்குதலுக்கு பதிலடியாக இதனைச் செய்திருக்கலாமென்றும் அவர் கூறியிருந்தார்.  “இது இந்திய உளவுத்துறையின் வேலையென்பது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது’ என்று ஓய்வுபெற்ற ஜெனரல் ஹமீட் குல் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போதியளவு ஆதாரமில்லையாயினும் இந்த மாதிரியான விடயங்கள் சாதாரண பாகிஸ்தானியர் இலகுவாக நம்பக்கூடிய விடயங்களாகிவிடுமென கூறப்படுகிறது. பல தரப்பினரும் செறிந்து வாழும் லாகூரில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறித்து பாகிஸ்தானியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

அத்துடன் விளையாட்டானது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதொன்றாகும். பாகிஸ்தானியரால் இதனை செய்திருக்க முடியாதென்று சாஷியா சர்தாரி (வயது 28) என்ற குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள தீவிரமாக சிந்தித்து கருத்து கூறுபவர்கள் “இந்தியாவின் சதி’ என்று கூறப்படும் கதைகளை நிராகரித்துள்ளதுடன், பாகிஸ்தானின் புகழை நாசமாக்கியுள்ள தீவிரவாதிகள் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.  அரசு மறுத்துவிடும் நிலைமைக்குச் சென்றால் அது மோசமான விடயமாகும். பாகிஸ்தானை அழித்துவிடும் நிகழ்ச்சித்திட்டத்துடன் நாம் வைத்திருக்கும் குழுக்கள் தொடர்பாக எவ்வளவு காலத்துக்கு நாம் மறுக்கப்போகின்றோம் என்று “டெய்லி டைம்ஸ்’ பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

இது இவ்வாறிருக்க, லாகூரில் கடாபி விளையாட்டரங்கின் வெளிப்புறத்தின் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதல் லஸ்கர்இதொய்பா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒத்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். மும்பையில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இக்குழுவே சூத்திரதாரியென குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் , இதில் “வெளிநாட்டுக் கரம்’ இருப்பதாக பலர் சூசகமாக கூறுகின்றனர். மும்பைத்தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக முழுமையான போதிய ஆதாரங்கள் இல்லாமல் சாதாரண பாகிஸ்தானியர் மத்தியில் ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் பொலிஸின் குற்றவிசாரணை திணைக்களம் கடந்த ஜனவரியில் எச்சரிக்கை விடுப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்திய உளவுத்துறை முகவரமைப்பானது கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடுமென்றும் எச்சரிப்பதாக பிழையான அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

22 ஜனவரி 2009 திகதியிடப்பட்ட அறிக்கையில் , இந்தியாவின் ரோவானது இலங்கை கிரிக்கெட் குழுவினரை இலக்கு வைக்குமாறு தனது முகவர்களுக்கு பணித்துள்ளதாகவும் விசேடமாக அவர்கள் ஹோட்டலுக்கும் விளையாட்டரங்கிற்கும் பயணம் செய்கையில் இலக்குவைக்க பணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் குற்றப்புலனாய்வு திணைக்கள மேலதிக பொலிஸ்மா அதிபர் மலிக் முகமட் இக்பால் கையெழுத்திடப்படவிருந்ததாக தென்படுகின்றது. இதேவேளை அந்த அறிக்கை தொடர்பாக “த ரைம்ஸ்’ இக்பாலுடன் தொடர்பு கொண்ட போது அவர் உறுதிப்படுத்துவதையோ அல்லது மறுப்பதையோ நிராகரித்துவிட்டார். “கசிந்துவிட்டதொன்று’ புலனாய்வு விடயங்கள் தொடர்பாக நான் கருத்து கூறமுடியாது’ என்று அவர் தெரிவித்துவிட்டார்.

புலிகளுக்கு ஆதரவுகொடுத்த பிரிட்டிஷ் எம்.பி வருத்தம் தெரிவிப்பு

l-yaappa-abayawardana.jpgபுலிகளுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்த கீத் வாஸ் எம்.பி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். புலிகளின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டதாக அவர் கூறியிருப்பதை வரவேற்கிறோம் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளுக்கு ஆதரவாக இவர் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தார். இதனால் இலங்கை மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகலாம் என எமது பாராளுமன்றத்தில் கூட பல தடவைகள் கலந்துரையாடப்பட்டது.

ஆனால் புலிகளின் உண்மையான சுயரூபத்தை அவர் உணர்ந்து அது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆரம்ப முதலே நாம் ஒரே நிலைப்பாட்டிலே இருந்தோம். இன்று எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.

இலங்கை அணி மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு -ஆதாரம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி

crc-04032009-01.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை “இரும்புக் கரம்’ கொண்டு கையாளப்போவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி நேற்று சூளுரைத்திருக்கும் நிலையில், செவ்வாயன்று இடம்பெற்ற தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகத்தின் (எவ்.பி.ஐ.) பணிப்பாளர் ரொபேர்ட் மில்லர் தலைமையிலான குழு நேற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்துள்ளது. இச்சந்திப்பின்போதே இலங்கைக் கிரிக்கெட் குழுவினர் மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக கிலானி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

அத்துடன் மும்பைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லையென்று கிலானி எவ்.பி.ஐ. அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை தாக்குதல் தொடர்பாக 14 பேர் மீது ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது செவ்வாய்க்கிழமை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய முகமூடியணிந்த 12 பேர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1,25,000 டொலர்கள் (இலங்கை நாணயப்பெறுமதி சுமார் 1 கோடி 25 இலட்சம்) சன்மானம் வழங்கப்படுமென பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டும் 6 இலங்கை கிரிக்கெட் வீரர்களும் உதவி பயிற்றுவிப்பாளரும் காயமடைந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம்

reg-camp.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று (4) விஜயம் மேற்கொண்டது. இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் இவர்கள் வவுனியாவுக்கு விஜயம் செய்தனர். இவர்களிடையே பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மாலைதீவு நாட்டு தூதுவர்களும் வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹனவும் அடங்குவர்.

இவர்கள் மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச உடன்பாடு அவசியமென்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

l-yaappa-abayawardana.jpg பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு சர்வதேச உடன்பாடொன்று எட்டப் படவேண்டும் என்பதையே லாஹ¤ர் தாக்குதல் உணர்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் பூரணமான விசாரணைகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் கோருமானால் விசாரணைகளுக்கு எமது அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- எதிர்வரும் காலங்களில் எமது அணியை வெளிநாட்டுக்கு அனுப்பும் போது பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்திய பின்னரே அது தொடர்பில் முடிவு செய்யப்படும்.

லாஹ¤ரில் இடம் பெற்ற சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அது தொடர்பில் சகல ஆலோசனைகளையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினார். இதன்படி, இலங்கை வீரர்கள் உடனடியாக திரும்பி அழைக்கப்பட்டனர்.

1996 உலகக் கிண்ணப் போட்டி இலங்கையில் நடைபெற்ற போது பல நாடுகள் இங்கு வரமறுத்தன. அந்த சமயம் பாகிஸ்தானும் இந்தியாவுமே இங்கு விளையாட முன்வந்தன. வலய நாடுகளிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்பும் வகையிலே இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்றது. உச்சப் பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் வாக்களித்தாலும் பாகிஸ்தான் வழங்கிய பாதுகாப்பில் குறைபாடு இருந்தது.

விளையாட்டுத்துறையில் பயங்கரவாதம் நுழைய முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க சகல தரப்பும் ஒன்று பட வேண்டும். அதனையே இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை எந்த ஆயுதக் குழு செய்தது என இதுவரை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை. ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது உள்நாட்டு மோதல் காரணமாகவோ இந்தத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தினால் காயமடைந்த இலங்கை அணி வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஒரு வரலாற்று ஆவணதத்தின் மீள் வெளியீடு : மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்

Wanni_War இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பாரிய உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. இலங்கையை 400 ஆண்டுகள் தமது காலனித்துவ பிடியின் கீழ் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளினால் உருவாக்கப்பட்ட இப்பிரச்சினை சிங்கள – தமிழ் முதலாளித்துவ அரசியல் சக்திகளினால் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி இனவாத பாதையில் இழுத்து செல்லப்பட்டதால் இன்று நாடு முழுவதுமே அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.

தமிழ் மக்கள் தம்மீதான தேசிய ஒடுக்குமுறையை ஏகாதிபத்திய எதிர்பபு தேசிய -ஜனநாயக போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ் முதலாளித்தவ இனவாத சக்திகளின் தவறான வழிகாட்டல்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இன்று உலகின் மிகமோசமான இனவாத பாசிச இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிடியில் சிக்கி, இருந்த உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இன்று தமிழ் மக்களது போராட்டம் சிங்கள பேரினவாத தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரானதாக மட்டுமின்றி, தமிழ் இனவாத பாசிசத்துக்கு எதிரானதாகவும் பரிணமித்து நிற்கின்றது. மக்களுக்கு எதிரான, இந்த இரண்டு போக்குகளையும் சர்வதேச ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆதரித்து நிற்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களின் போராட்ட அடிப்படையாக இருக்கின்றது.

மறுபக்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி பெற்ற தேசிய சுதந்திரத்தை இறுதிவரை முன்னெடுத்தச் சென்று, நாட்டில் உண்மையான மக்கள் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு பதிலாக, தமது நீடித்த அதிகார இருப்புக்கு பேரினவாத அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய சிங்கள இனவாத முதலாளித்துவ சக்திகளின் திட்டங்களுக்கு பலியானதன் மூலம், நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் இன்று தேவையற்ற இனவாத யுத்தமொன்றின் சுமைகளால் அழுத்தப்பட்டு அவல வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்தாலும் உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், ஒரு சரியான நிலைப்பாட்டை பின்பற்றி, நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய விடுதலை போராட்டத்தில் வழிநடாத்தி, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை சிருஷ்டித்திருக்க வேண்டிய இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்ட் – சமசமாஜ கட்சிகள்), 1960க்கு பின்னர் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திலும், அதன் உடன்பிறப்பான இனவாதத்திலும் மூழ்கி, தேசிய இனப்பிரச்சினையை முதலாளித்துவ சக்திகளிடம் முற்று முழுதாக கையளித்து, பெரும் வரலாற்று தவறை இழைத்துள்ளனர்.

1964ல் சர்வதேச அரங்கில் நிகிட்டா குருஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபுவாத பாதையில் பயணிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அதை பின்தொடரத் தொடங்கியது. அதன் காரணமாக திரிபுவாத, பாராளுமனற் வாத கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினராயினும், அக்கட்சியின் தலைமையும் சரியான கொள்கைகளை பின்பற்றத் தவறிவிட்டது. அக்கட்சி தலைமை பின்பற்றிய வரட்டுத்தனமான, இடது சந்தர்ப்பவாத போக்கு காரணமாக, தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சரியான நிலைபப்பாட்டை எடுகக் முடியாமல் போய்விட்டது. சொல்லில் புரட்சியும், நடைமுறையில் தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத வேலைமுறையையும் கொண்டிருந்த அக்கட்சியின் தலைமை, தேசிய இனப்பிரச்சினையை கட்சி கையில் எடுப்பது, கட்சியை இனவாதப்பாதையில் கொண்டு போய்விடும் என்ற மார்கசிச – லெனினிச விரோத வாதத்தை முன்வைத்தின் மூலம் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டத்துக்கான தலைமையை தமிழ் பிற்போக்கு சக்திகளிடம் கைகழுவிவிட்டது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய இந்த நவநவீன திரிபுவாத பாதையை பெரும்பாலான கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கீழ்மட்ட உறுப்பினர்களும் ஏற்கவில்லை. அதனால் அவர்களால் 1972ல் மார்கசிச – லெனினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சிக்குள்ளும் இழுபறி நிலையே தோன்றியது.

கட்சி தேசிய இனப்பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி வேலை செய்வதின் அவசியத்தை நிராகரித்த ஒரு பிரிவினர் தேசிய முதலாளித்துவத்தின் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்) பின்னால் இழுபட்டு செல்லும் போக்கை பின்பற்ற ஆரம்பித்தனர். அவர்களை வெளியேற்றி கட்சியை தூய்மைப்படுத்திய பின்னர், இரு நாட்கள் விசேட தேசிய மாநாடொன்றை கூட்டி, தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான சரியான கொள்கையை கட்சி வகுத்தது. இருந்தும் நாட்டில் உருவாகி வந்த தீவிரமான இனவாத சூழல் காரணமாகவும், தமிழ் பகுதிகளில் பாசிச சக்திகள் தலைதூக்கியதின் காரணமாகவும், கட்சி சில ஆண்டுகளில் செயலற்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. (இன்று தனிநபர்களாக இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் தற்பொழுது கட்சியை மீண்டும் புனரமைப்பதற்கான முயற்சிகளில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.) இருப்பினும் அக்கட்சி, தமது தாய்வழி கட்சிகள் இரண்டும் பின்பற்றிய வலதுசாரி – இடதுசாரி சந்தர்ப்பவாத பாதைகளை சீர்செய்வதில், கணிசமான அளவுக்கு சித்தாந்த – அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

அதில் முக்கியமானது, தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால, சரியான கொள்கையை உயர்த்தி பிடித்ததாகும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களுக்கு சுயாட்சி அமைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச்சரியான, ஆரம்பகால கொள்கையை மார்க்கிச – லெனினிச கட்சி மீண்டும் உறுதி செய்ததுடன், அதை பல்வேறு தமிழ் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து அடைவதற்காக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற வெகுஜன போராட்ட அமைப்பையும் தோற்றுவித்தது.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் புதிய தலைமை, பின்னர் உருவாகி வந்த ஆயுதப்போராட்ட சூழலில், தனது பெயரையும் (தமிழீழ தேசிய விடுதலை முன்னணி – NLFT), கொள்கைகளையும், போராட்ட வழிமுறைகளையும் மாற்றியது. எனினும், தமிழ் தேசியப் போராட்டத்தின் கடந்த 25 ஆண்டுகால அனுபவங்கள், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகால பெயர், கொள்கைகள், போராட்ட வழி முறைகள் என்பனவற்றின் பிசகற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவுற நிரூபித்துள்ளன. அது மாத்திரமின்றி இன்றைய சூழலில், அத்தகைய ஒரு பரந்தபட்ட வெகுஜன போராட்ட ஸ்தாபனம் ஒன்று, தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

எனவே இன்றைய சூழ்நிலையில், வரலாற்றை மீள் மதிப்பீடு செய்வதற்கு உதவியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கு ஒர் உதாரணமாக, 1975ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேச குழு வெளியிட்ட மிக முக்கியமான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அறிக்கையை வெளியீட்டில் இணைத்து உள்யோம். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ உருவாகக்ப்பட்டது.

தேசிய இனபிரச்சினை உருவெடுத்து 25 அண்டுகளைக் கடந்து, தமிழ் மக்கள் பல பெறுமதிமிக்க அனுபவங்களை பெற்றுவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் சில சிங்கள இடதுசாரிகள் சிங்களப் பேரினவாத தேசிய இறைமையின் பெயராலும், தமிழ் இடதுசாரிகள் சிலர் தமிழ் இனவாத பாசிசத்தை தமிழ் தேசிய விடுதலையின் பெயராலும் நியாயப்படுத்தி நிற்கும் ஒரு சூழலில் இந்த அறிக்கை 33 ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் மிகச் சரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன், தீர்க்கதரிசன பார்வையையும் கொண்டுள்ளதையும் காணமுடியும்.

அத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீர்த்தி வாயந்த வட்டுக்கோட்டை மாநாட்டு தமிழழீ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அது நடைபெற்றது 1976ல்), இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தது (அவர் ஆட்சிக்கு வந்தது 1977ல்), நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது (அது 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது), 1983ன் இனவன்செயலும், அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பமாகியது, என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்த அறிக்கையை தயாரிப்பதில், மார்க்சிச – லெனினிச கட்சியின் அன்றைய முக்கிய தலைவர்களான, காலஞ்சென்ற தோழர்கள் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததுடன், அவர்கள் உட்பட கட்சியின் வட பிரதேச குழுவின் 15 உறுப்பினர்களினதும், ஏகமனதான ஆதரவுடன் அது வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கையினை அன்றைய தினசரி பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்ததோடு, இவ்வறிக்கை கட்சியினால் துண்டு பிரசுரமாக அச்சிடப்பட்டு நாடு முழுவதும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை மூல நகல் இவ்வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழியாக்கம், கனடிய – சோவியத் நட்புறவு கவுன்சில், கனடாவில் வெளியிடும் மாத சஞ்சிகையான NORTH STAR COMPASS, தழிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்
இலங்கை
04 – 03 – 2009

._._._._._._.

தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

குடியரசு தினத்தை பகிஷ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா, என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்பனவும் தற்போது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ்மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாக பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம், இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பை சம்பாதித்ததுமல்லாமல் தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாக பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு அரசியல் சுயலாபம் தேடும் பூர்ஜூவாக் கட்சிகள், சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சர்தர்ப்ப வாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பது மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு, சைப்பிரஸில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை உணர்ந்ததினால் பொலும் இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகு முறையையும், கொள்கையையும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் முன் வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்துவிட்டார்கள். இது இந்நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.

இன்று பண்டாரநாயக்கா கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்படுத்த தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெருவாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விஷயமல்ல.

எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இன பாதுகாப்புக்கான சரத்துக்கள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல பதிவுப் பிரஜைகளுக்கும், இலங்கை பிரஜைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இனரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்கள பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்தபட்சம் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒரு புறத்தில் நாசம் செய்கிறது. மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதன் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிரக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும். போராட வேண்டும். இதைத்தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் கூட்டணித் தலைமைக்கும் அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழர் விரோதப் போக்குக்கும், எதிராக ஐக்கியப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ வேறெந்த ஏகாதிபத்தியத்தையோ அல்லது அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வு காண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலைபெற முடியும். தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான பரந்த அணி ஒன்றே தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும். பெரும் முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால், தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காடட் முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் திர்க்கமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.

எமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்)
வட பிரதேசக்கமிட்டி
19–5-75
நாவலன் பதிப்பகம் நல்லூர் யாழ்ப்பாணம்