யாழ்தேவி ரயில் சேவை திட்டம்: கே.கே.எஸ் வரை 34 நிலையங்களை புனரமைக்க தேசிய மட்டத்தில் பங்களிப்பு.

railways-in-jaffna.jpg யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். ‘உத்துறு மித்துறு’ (வடக்கு நட்பு) என்ற இந்த ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய செயலகமொன்றையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைகளுக்கமைய யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்கவென தேசிய பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரின் ஊடகச் செயலாளர் சுமித்சந்தன வீரசிங்க தெரிவித்தார்.

ரயில் பாதையை மீளமைப்பதற்கு நிதி உதவி வழங்க ஈரானிய அரசு முன்வந்துள்ளது. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதையை அமைப்பதற்காக தண்டவாளத்திற்கும், சிலிப்பர் கட்டைகளுக்குமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் அதேநேரம், வடக்கின் கலாசாரப் பிணைப்பையும், வாழ்வியல் பண்புகளையும் ஏனைய மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த யாழ்தேவி ரயில்சேவை திட்டத்திற்கு மூவின மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுமித் வீரசிங்க தெரிவித்தார்.

இதற்கிணங்க ஒன்பது மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களின் உடல் உழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணியை அம்பாந்தோட்டை மாவட்டம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் வீரசிங்க, அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்டம், கிளிநொச்சி ரயில் நிலையத்தைப் புனரமைக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு ஓமந்தையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வரை உள்ள 9 பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 நிலையங்களைப் புனரமைப்புச் செய்ய மாவட்ட ரீதியில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் ஒருங்கிணைப்பார்கள். ஆளணிப் பங்களிப்பைத் தவிரவும், பொதுமக்கள் சிலிப்பர் கட்டைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிப்பர் கட்டைக்கான செலவு 12,500 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்க முடியாதவர்களுக்காக மாற்றுத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதாவது, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ரயில் அனுமதிச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமும் வடக்கு நட்பு ரயில் சேவை திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடியும். இந்த ரயில் அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். இந்த அனுமதிச்சீட்டை வைத்திருந்து, யாழ்தேவி பயணத்தைத் தொடங்கியதும் அதில் யாழ்ப்பாணம் சென்றுவர முடியும் எனவும் சுமித் சந்தன வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்தேவி ரயிலை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரை கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்த நாளான 1956 ஏப்ரல் 23 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில், இந்தத் திகதியில் அதன் பயணத்தை வவுனியாவுக்கும் அப்பால் கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டதாக சுமித் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்ப உத்தரதேவி, யாழ்தேவி என்ற பழைய பொப்பிசை பாடலுக்கு மீண்டும் மவுசு வரப்போகுது. அன்றைய இரயில் பயணங்களை மீண்டும் மீட்டிப் பார்க்க ஒரு சுகமான அனுபவம் இருக்கத்தான் செய்கின்றது. ….

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    ஆமாம் பார்த்திபன். ஆனால் முன்பு அச்சம் பயம் இல்லாமல் பாடித் திரிந்தோம். இப்போ வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டல்லவா பாட வேண்டியிருக்கும். முன்பு பாடும்போது பயமில்லை அதனால் பாட்டில் சுரமிருக்கும். இப்போ பாட்டில் சுரமிருக்காது பயம் மட்டும் இருக்கும். அன்றைய ரயில் பயணங்களின் சுகானுபவம் அன்றோடே போய் விட்டது நண்பரே. அதை மறந்திருங்கள்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • பகீ
    பகீ

    ஸ்ரீலங்கா ரயில்வேயின் முன்னைநாள் அதிகாரியாக பணியாற்றிய ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது (1998இல்) 1985 இன் பின்னர் ஸ்ரீலங்கா ரயில்வே மிக மிக நஷ்டத்தில் ஓடுவதகவும் காரணம் ஒருவரும் யாழ் செல்லாததே எனவும் சொன்னார். அத்துடன் ரயிலில் செல்லுவோரில் யாழ் செல்லுவோரே பயணச்சீட்டு பெறுவதாகவும் மத்திய இலங்கை மக்கள் பொதுவாக இலவசமாகவே பயணம் செய்வதாகவும் குறிப்பிட்டார். சிலர் வறுமை காரனமாகவும் பலர் ‘அகங்காரம்’ காரணமாகவும் எனவும் கூறினார். முன்னர் யாழ்தேவி/உத்தரதேவியில் நிற்க இடமில்லாமலேயே பயணம் செய்வது பலருக்கு வழமை. இதைப்போக்க கூடுதலான ரயில் சேவை அல்லது கூடுதலான பெட்டிகளை இணைக்குமாறு கோரியபோது (1970களில்) கட்டுப்படியாகாது என அரசு கைவிரித்ததையும் கூறினார்.

    அமைச்சரின் கூற்றுப்படி வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு (1995 இல் இருந்தே புலிகள் கிடையாது) இருக்கிற தண்டவாளத்தில் ஓடவே இரண்டு மாதம் தேவைப்படுகிறது. இல்லாத தண்டவாளம் போட்டு நாங்கள் எப்ப தாளம் போட்டு பாட்டுப்படிக்கிறது.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    பகீ சொல்வதும் சரிதான். தண்டவாளம் இல்லாத பாதையில் ஓடும்படியான ரயிலைக் கண்டு பிடிக்க வேண்டும் அல்லது அடித்து முடித்த குண்டுகள் பீரங்கிகளின் வெற்றுத் தோட்டாங்களையும் சன்னத் துண்டுகளையும் உருக்கித் தண்டவாளம் செய்ய வேண்டும். அவற்றைச் சேர்த்துப் பிடித்தால் இலங்கையிலுள்ள அனைத்துக் குக்கிராமங்களுக்குமே தண்டவாளம் போட்டு முடிக்கலாம். இதெல்லாம் இப்போ நடக்கக்கூடிய காரியமா?

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • palli
    palli

    பகீ என்ன இது சின்ன பிள்ளைதனாமன பேச்சு. ஆரம்பம் என்றுதானே சொன்னார்கள். அதெல்லாம் தோழர் பாத்துக்குவார். ஆனால் என்ன ஒவ்வொரு புகைவண்டியிலும் பாதுகாப்பு கருதி 2000 ராணுவம் பயணம் செய்யும். பாதுகாப்பாக மக்கள் 20பேர் பயணம் செய்வார்களென பல்லி பலன் சொல்லுகிறது. பல்லில்லாத கிழவன் பற்பொடி தேடினானாம் பல்லு விளக்க.

    Reply
  • accu
    accu

    நீண்ட குகையின் அடியில் ஒரு வெளிச்சம் தெரிகிறது.

    Reply
  • palli
    palli

    பல்லிக்கு தெரியவில்லை. அம்புளி மாமா காட்டி சோறு ஊட்டின பளக்கம் இன்னுமா இருக்கு.

    Reply