02

02

காயமடைந்த 52 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில்

vanni-injured.gifவன்னியி லிருந்து படுகாயமடைந்த நிலையில் கப்பல் மூலம் திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 52 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  11 அம்புலன்ஸ்களில் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுகமாகும் நோயாளர்கள் நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வவுனியாவில் உள்ள உறவினர்கள் பொறுப்பேற்றால் அனுமதிக்கப்படுவர். எவரும் இல்லாதவர்கள் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் கடும் உஷ்ணம்

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் உஷ்ணமான காலநிலை நிலவுகின்றது. பகல் வேளைகளில் கடும் வெயிலுடன் கூடிய வெப்ப மான காலநிலை நிலவுவ துடன் இரவு வேளைகளிலும் கடும் உஷ்ணம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

இந்த வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக குழந்தைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். போதிய காற்றோட்ட வசதிகளற்ற வீடுகளில் வசித்து வரும் வறிய மக்களும், அடிப்படை வசதிகள் வழங்கப்படாத நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களும் உஷ்ணமான காலநிலையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தத்திற்கு அவசியமில்லை – வெளிவிவகார அமைச்சர்

bogolagama-1612.jpgஅரசாங் கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகமான ஜோன் ஹோம்ஸ் நேரடியாக சென்று பார்வையிட்டதையடுத்தே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

பாதுகாப்புச்சபை கட்டிடத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தம் அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது கூட்டம் முடிவுற்ற நிலையில் அதுதொடர்பில் சனிக்கிழமை மாலை இன்டர்கொண்டினால் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்கு வருகைதந்துள்ள பொதுமக்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை ஜோன் ஹோம்ஸ் நேரடியாகச் சென்று அவதானித்து திருப்தியுற்ற நிலையிலேயே விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு கோரியுள்ளார்.

பொதுமக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாதவாறு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில் இடம்பெயர்ந்துவரும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது.

32 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரசு உரியமுறையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசின் மனிதாபிமான நடவடிக்கைகளையடுத்து ஜப்பான் உட்பட ஏனைய உலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே வைக்குமாறும் அவர்களால் தடுத்து வைக்கப்படும் மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறும் கோரியுள்ளது.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை தடைசெய்வது சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும்.

இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க நான்கு ஆஸ்பத்திரிகள் தயார்

trico.gifவன்னியி லிருந்து கடல் மார்க்கமாக திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் நோயாளர்களை கந்தளாய், பொலன்நறுவை, வவுனியா மற்றும் மன்னார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள். மருந்துப் பொருட்கள், ஆளணிகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்தலியனகே உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அடங்கலான குழுவினர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்றனர்.  அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சகல நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் விசேட பணிப்பிற்கிணங்க நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் சுகாதார தேவைகள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் போஷாக்கின்மையால் உள்ளவர்களுக்கு எவ்வித வயது வித்தியாசமுமின்றி திரிபோஷா வழங்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.