பல்கலைக் கழக மாணவர்களில் 45 வீதமானோருக்குத் தற்போது விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால 2010 ஆம் ஆண்டளவில் 60 முதல் 70 வீதமான மாணவருக்கு விடுதி வசதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் 5,500 மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் 584 பேருக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால கொழும்பு பல்கலைக்கழத்தில் விடுதியிலுள்ள மாணவர்கள் வருடமொன்றுக்கு 1200 ரூபாவை செலுத்த வேண்டிய அதேவேளை, யாழ். பல்கலைக்கழக விடுதியிலுள்ள மாணவர்கள் வருடமொன்றுக்கு 200 ரூபாவை செலுத்த வேண்டுமென்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. ரவிகருணா நாயக்க கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. தனது கேள்வியில், இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகத்தின் உலகதரங்கள், விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அவற்றுக்கு பெறப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட பலவற்றை கேட்டார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்;
மொரட்டுவ பல்கலைக்கழகம் 16 ஆவது இடத்திலும் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே 18, 29, 65, 89, 95, 99, ஆவது தரங்களில் உள்ளன என்றார். விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்களின் விபரங்களை அவர் வெளியிடுகையில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3,177, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 5500, ஸ்ரீ ஜெயவர்த்தன புரபல்கலைக்கழகத்தில் 3,505, களனி பல்கலைக்கழகத்தில் 3,152, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 1,036, யாழ். பல்கலைக்கழகத்தில் 584, றுகுணு பல்கலைக்கழகத்தில் 2,032, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 543, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 743, ரஜரட்ட பல்கலைக்கழத்தில் 2,193 மாணவர்கள் விடுதி வசதிகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
விடுதிகளுக்கு மாணவர் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக கூறுகையில்;
கொழும்பு பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 1,200 ரூபா, பேராதனைப் பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 750 ரூபா, களனி பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 350 ரூபா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 650 ரூபா, யாழ். பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 200 ரூபா, கிழக்கு பல்கலைக்கழத்தில் மாதமொன்றுக்கு 60 ரூபா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமர்வொன்றுக்கு 300 ரூபா, ரஜரட்ட பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 600 ரூபா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 500 ரூபா, வயம்ப பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 550 ரூபா, திறந்த பல்கலைக்கழகத்தில் நாளொன்றுக்கு 25 ரூபாவும் அறவிடப்படும் என்றார்.