அங்க வீனரான நிலையில் இருப்போருக்கு 3 வீதமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வேலைத் தளங்களில் அங்கவீனராகவுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இணங்கியுள்ளதுடன் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்ற கொடுப்பனவுகளை இவர்களுக்கு வழங்குவதற்கும் நிறுவனங்கள் சம்மாதம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கவீனர்கள் தமது கடமையின் போது கூடுதலான அக்கறையுடன் பணியாற்றுவதோடு அதிக பயனுள்ள வகையிலும் அவர்கள் சேவையாற்றுகின்றனர். மேலும், அங்கவீனர்களைக் கடமைக்காகச் சேர்த்துக் கொள்ளும் போது தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தொழில் வாய்ப்புக்காக 500 அங்கவீனர்கள் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ள இருப்பதோடு அனைத்து அங்கவீனர்களையும் இந்த தொழில் சந்தைக்குள் பங்குக் கொள்ளச் செய்ய முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அனைத்து அங்கவீனர்களையும் இந்தத் தொழிற் சந்தைக்குள் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் அதற்குள் பொருத்தமான வேலைகளை அவர்கள் தெரிவு செய்ய முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்