
முத்துகிருஸ்ணா சர்வானந்தன் என்ற ‘பொருளாதார நிபுணர்’ சென்ற வருடம் லண்டன் வந்திருந்த பொழுது வித்துவான் அவதாரத்தில் உலக – இலங்கை பொருளாதாரம் பற்றி எமக்கெல்லாம் மிருதங்கம் வாசித்துபோன கதை பலருக்கும் தெரியும். உலக பொருளாதாரம் சரியாது. மேற்குலக அதிகாரம் எல்லாத்தையும் சிம்பிளா வெண்டு போடும். இதனால் இலங்கைக்கு பாதிப்புவராது என்று அவர் பினாத்திக் கொண்டிருந்த பொழுது தடுத்தாண்ட கேள்விகளை நோக்கி நெற்றிக்கண் திறக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டதும் எமக்கு தெரியும்.
இந்த முட்டாள்தனத்தை சுட்டிக்காட்ட வெளிக்கிட்ட த.ஜெயபாலனுக்கு படிப்பறிவு கிடையாது என்ற கண்டு பிடிப்பை செய்து இவர்கள் யாழ்ப்பான -வெள்ளாள மத்தியதர வர்க்க மேலாண்மையை நிலைநாட்ட முயன்றதும் எமக்குத் தெரியும். ‘பொருளாதார சரிவு தொடர்ந்தும் நீடிக்காது’ என்ற அடிப்படையிலேயே வித்துவான் விளாசினார் என்று எமக்கு விளக்கங்கள் தரப்பட்டது. இதுகளை பொருளாதார விரிவுரையாளர் புதியவன் ‘மென்மையாக’ கண்டித்திருந்ததும் அறிவோம். அவரது பழைய கதைகள் கிடக்க. மீண்டும் வித்துவான் மிருதங்கம் எடுத்துள்ள கதைக்கு வருவோம்.
தெற்கில் சனம் செக்பொயின்றுகளுக்குள் சிக்கி விழுந்தெழம்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு ஜனநாயக சூரியன் மக்களின் முள்ளந்தண்டுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வடக்கு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இதுகிடக்க, எங்கள் அன்பு வித்துவான் – பொருளாதார புலிக்கு பொங்கிக்கொண்டு வருகிறது பாருங்கள் கோபம்! கோபம்! இலங்கை ராணுவம், கருணா, பிள்ளையான், சங்கரி முதலானவர்கள் மேல் என்று அவசரப்பட்டு கதறிப்போய் விடாதீர்கள். “பிள்ளையின்” கோபம் மியா என்ற இசை கலைஞர் மேல். மியா கணக்கு வழக்குகளில் பிழைவிட்டு கதைத்து விட்டதாகக் கோபம்.
முதல் அடி என்னவாக இருக்கும் என்பது நீங்கள் ஊகிக்கக்கூடியது. ஜெனொசைட் என்ற சொல்லை பாவிக்கக் கூடிய அளவுக்கு மியாவுக்கு படிப்பறிவு இல்லை என்பதே அந்த அடி. எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? என்று சந்தேகித்து கிழே படிக்க அடுத்த அடி விழுகிறது எங்கே எப்படி 3,00,000 தமிழர்கள் யுத்த பிரதேசத்துக்குள் மாட்டியுள்ளார்கள் என்று மியா கவனமாக எண்ணினார்? என்ற கெட்டிக்காரத்தனமான கேள்வி. 30,000 அல்ல 3,00,000 என்ற எண்ணிக்கையை எப்படி செய்தார் என்ற தொனியுடன் கேட்கப்படுகிறது கேள்வி. பின்பு தன் படிப்பறிவாள் வந்த கெட்டிக்காரத்தனத்தை கொட்டி பின்வருமாறு அவர் விளக்குகிறார்.
“2003 சுனாமிக்கு பின்பம் 2005 ஐ.நா.வுக்காக புலிகளின் கட்டுப்பாடு பகுதிகளில் வேலை செய்தவன் என்ற முறையிலும் யுத்தப் பிரதேசத்தில் 1,00,000 இருந்து 1,50,000 வரையிலான மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதே என்னால் அடித்துக்கூற முடியும்.” அற்புதம் என்று கூரை அதிர நாம் சிலாகித்தோம். உலகம் முழுக்க ‘அகதி’யாக திரிவதால் மீயாதான் கற்பனை செய்த தாயகத்தில் நடப்பது பற்றி தெரியாதவர் என்றொரு அடிவேறு.
ஐயோ பாவம் மியா, அந்த பாடகி செய்த தவறென்ன? சனத்தொகை மற்றும் ராணுவத்தின் எண்ணிக்கை முதலான எண்களை அதிகப்படுத்தி கூறியதுதான் அவர்செய்த தவறு.
அந்த தவறை திருத்த நமது பொருளாதார புலிக்கு உரிமை உண்டு. உண்டே உண்டு ஐயா! 1,00,000ல் இருந்து 1,50,000 என்ற கணிப்பீட்டை கரெக்டா எப்படி மேதை கணிப்பிட்டார் என்ற விபரம் எமது மூளைக்கு எட்டவில்லை. தவிர இந்த நம்பர் விளையாட்டு உங்களுக்குத்தான் தேவை. நமக்கல்ல. உணர்ச்சிவசப்படும் கலைஞர்களுக்கு தேவையில்லை. பாதிக்கப்படும் மக்கள் மூன்று லட்சமாக இருந்தால் என்ன முப்பதினாயிரமாக இருந்தால் என்ன? உரத்து குரல் கொடுக்க ஒருத்தி முன்வருவது பிழையா? 70,000 மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு கத்துகிறதே அது பற்றி ஏன் கோபம் வரவில்லை? மீயா செவ்வி வழங்கிய அதே காலப்பகுதியில் வெளியான இங்கிலாந்து கார்டியன் பத்திரிக்கையில் 4 1/2 லட்சம் மக்கள் அகப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை? இதுகள் பற்றி உங்கள் மண்ணாங்கட்டி கோபம் ஏன் மௌனம் கொண்டிருக்கிறது?
‘மியா கணக்கில் வீக்’ என்று கண்டுபிடித்து காட்ட இக்கட்டுரை எழுதியாதாக நம்ப முடியவில்லை? உங்கள் பிரச்சினை மியா புலி ஆதரவு தொனியில் பேசியதுதான். அதை நேரடியாக சொல்லி வெளிப்படையாக பேசாமல் குத்தி முறிகிறீர்கள்.
பின்பு ‘புலி புள்ள புடிக்குது’ என்ற பழைய பல்லவியை பாடி நெத்தியில் அடிக்கிறமாதிரி ஒரு கேள்வி கேட்கிறார் அவர். தமிழ் பிள்ளைகளை புலிகள் காவு கொள்வது ஜெனோசைட் இல்லையா என்ற அக்கேள்வி சபாஸ் சரியான கேள்வி என்று நிர்மலா குதிக்கலாம். ஆனால் எமது கழுத்துக்கு மேல் இருக்கும் மூளை சொந்தமாக சிந்திப்பதால் கோபம் கிளறுகிறது. இலங்கை ராணுவம் செய்வது ஜெனோசைட் கிடையாது என்று வாதிடும் நீர் புலி செய்வது ஜெனோசைட் இல்லையா என்று கிண்டல் அடிப்பது உமது உயர்வர்க்க மொக்கத்தனத்தை படம் போட்டு காட்டுகிறது. இன்றிருக்கும் சூழலில் இதைவிட கோரமான அயோக்கியத்தனத்தை கோத்தபாய ராஜபக்சேவிடம் தான் நாங்கள் பார்க்க முடியும். அடுத்த “சிங்கள ரத்தினா” உங்களுக்கு தான் முத்து!
இந்த போக்கிரி பார்வையுடன் அவர் சொல்கிறார் இரண்டு பக்கமும் மக்களை கொன்று கொண்டிருப்பது தமக்கு ‘concern’ ஆக இருக்கிறதாம். ஐயா உங்களைப் போல் மீயாவுக்கு ‘concern’ வரவில்லை. ஒரு கலைஞராக அவருக்கு கொதிப்பு வந்திருக்கிறது. நான் ஒரு அகதி என்று நெஞ்சை நிமிர்த்தி கூறும் ஒரு கலைஞரை ஒரு அகதியான நான் பெருமையுடன் பார்க்கிறேன்.
புலிகள் முஸ்லீம்களை கொல்வது தெரியாதா? சிங்கள கிராமங்களில் வேட்டையாடியது தெரியாதா? மூஸ்லீம்கள் வேட்டையாடப்பட்டது தெரியாதா? என்று வரிசை படுத்திய உமது கேள்விகள் பலமானவை. கேட்கப்பட வேண்டிய கேள்விகளே. ஆனால் இந்த கேள்விகளை நாம் கேட்பதற்கும் நீர் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நீர் அதிகாரம் சார்ந்து கேட்கிறீர் நாம் மக்கள் சார்ந்து கேட்கிறோம்.
மக்கள் பிரதிநிதித்துவம் செய்ய உமக்கு யார் அதிகாரம் வழங்கியது என்று மீயாவை கேட்டு பீற்றும் உமக்கு மக்களை பற்றிப் பேச யார் அதிகாரம் வழங்கினார்கள்? லாபத்துக்கு மக்களை விற்கும் நீர் உயர் மட்டங்களில் குசுகுசுப்பதோடு நிறுத்திக்கொள்ளும். 84ல் அகதியாக போனவர் 25 வருடமாக இலங்கை வராதவர் மற்றும் அவர் இலங்கை தமிழரா என்பதே சந்தேகம் போன்ற அம்புகளை மியா நோக்கி எறியும் நீர் ஒரு கணம் சிந்தித்து பாரும்.
உமக்கு வெளி நாடுகளில் இருக்கும் நட்பு வட்டாரங்கள் எப்போது அகதியாகின? லண்டனில் உம்மை அழைத்துக் கூட்டம் போட்ட கோஸ்டிகள் எல்லாம் இப்ப தான் வன்னியில் இருந்து வந்தவை என்று நினைப்பா? குண்டு சத்தமென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? யுத்தத்தில் வாழ்தல் தெரியுமா?
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் தமிழரை நோக்கி ஒரு அகதியான மியா நீட்டும் கரங்களை தட்டிவிட்டு உனக்கு தகுதி இல்லை என்று ராஜபக்ச கூரையில் நின்று கூவும் நீர் கொழும்பில் நிம்மதியாக வாழலாம். உம்மை அதிகாரம் காப்பாற்றும் உமது பணி அவர்களுக்கு தேவை. “நான் உயிர்தப்பியிருப்பது அதிர்ஷ்டவசமானது” போன்ற ஜோக்குகளை அடிக்காதயும்.
போக்குவரத்து விதிகள் ஒரு சொட்டுமற்ற சென்னை தெருக்களை அடிக்கடி கடக்கும் நான் உயிர் பிழைத்துக் கொண்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம் தான். அப்படியானதே உமதும்!
பாவம் மியா, நீர் ஒரு பொருளாதார புலி அல்லவா. மீயாவை விட்டுவிட்டு உம்மிட எடியுகேசனுக்கு ஏத்த மாதிரி ஒரு ஆள பிடிச்சி மோதும்.