முஸ்லிம் சமூகம் தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரானவர்கள். இதன் மூலம் இச்சமூகம் எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதை அங்கீகரிக்க முடியாது என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜும் ஆப் பள்ளிவாசலின் தலைவர் அஷ்ஷேய்க் பீ. நிஹ்மத்துல்லா தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில்; முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தமது நேர்த்தியான சிந்தனையினாலும், அரசியல் ஞானத்தினாலும் இக்கட்சியின் பலத்தைக் கொண்டு ஆட்சியாளர்களையும் அரசாங்கங்களையும் தீர்மானிக்கும் வலிமையைக் கொண்டிருந்தார்.
பதவியே வாழ்க்கையென எண்ணி மமதையுடன் வாழும் மனிதர்களின் வரலாறுகளைக் காண சமூகம் அங்கீகரித்ததில்லை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிந்தும் தெரியாதது போல் செயற்படுகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகத்தினை படுகுழியில் தள்ளிவிடும் துயர்மிகு செயற்பாட்டை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடமுள்ளது.
எனது அரசியல் பிரவேசமானது பாதிக்கப்பட்டு நலிவுற்று காணப்படும் மக்களின் ஈடேற்றமும் விமோசனத்திற்காகவுமே ஆகும். இக்குறுகிய காலத்துக்குள் எனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி முடியுமான பணிகளை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். எம். அபூபக்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.