March

March

வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

axman-yappa.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மக்கள் நலன் கருதி அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரிகளை குறைத்ததால் அரசாங்கத்தக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

மக்களுக்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதற்கு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்கச்செய்ய 13 வகையான அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரியை அரசாங்கம் குறைத்தது. பால்மா ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்டு வந்த 96 ரூபா வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டது. பருப்பு ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்ட 36 ரூபா ஆறு ரூபாவாக குறைக்கப்பட்டது. இவ்வாறான வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேயிலை உரம், உரமானியம் மற்றும் சமுர்தி போன்ற நிவாரண உதவிகளையும் தொடர்ந்து வழங்கியும் வருகின்றோம். இதனால் இலங்கை நடுத்தர நிலையிலான ஒரு நாடாகத் திகழ்கின்றது.

பணம் இருந்தாலும் தேவையானபோது தேவையான பொருளை கொள்வனவு செய்யமுடியாது  என்ற நிலையை உணர்ந்ததால் விவசாய உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதன் பயனாக தற்போது நாட்டுக்கு எட்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிறுப்பில் உள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்க் கட்சிகள் பொருட்களின் விலை அதிகரிக்கப் போவதாக பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3.2 பில்லியனை கடனாகப்பெற உரிமை இருக்கின்றுது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அந்த நிதியத்திடமிருந்து கடன் எதுவும் பெறப்படவில்லை. உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நெறுக்கடியை கவனத்தில் கொண்டே இந்தக்கடனை எடுக்க முற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவுக்கு 1000 மெ. தொன் உணவுப் பொருட்கள்!

sb_diwarathnass.jpg தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த வார இறுதியில் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார்.

இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு முல்லைத்தீவு பிரதேசத்துக்கு ஒரே தடவையில் அனுப்பப்படும் ஆகக் கூடுதலான அளவு உணவுப் பொருள் தொகுதி இதுவாகும். இதேவேளை, யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

உணவு மற்றும் துணி வகைகள் அடங்கிய 300 மெற்றிக் தொன் அளவான இந்தப் பொருட்கள் 20 லொறிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அப்பிரதேசத்துக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

‘சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவேயே நாம் இன்று எதிர்கொள்கிறோம்.’ அபுயுசுப் சிறி – ரெலோ பேச்சாளருடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Apuysef_Sri_TELO._._._._._. 

கொம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பின்னர் ஈபிஆல்எல்எப் இல் இணைந்து கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக செயற்பட்ட அபுயூசவ் தற்போது சிறி – ரெலோ அமைப்பின் பேச்சாளராக செயற்படுகிறார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

தேசம்நெற்:உங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் செயற்ப்பாடகள் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

அபுயுசுப் : நாங்கள் தற்போது கொழும்பிலும் வட- கிழக்கு மாகாணங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். மாவட்டக் குழுக்கள் அமைத்து அந்த மக்கள் மத்தியில் செயற்;பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேசம்நெற் : எவ்வாறான அரசியல் வேலைத் திட்டங்களை முன் வைத்து செயற்படுகிறீர்கள் ?

அபுயுசுப் : ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் ஓர் தீர்வு கண்டு தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற திட்டத்துடன் அரசியல் முயற்ச்சியுடன் செயற்ப்படுகிறோம்.

ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் – 3 தசாப்த்தங்களின் பின்னர் தமிழீழம் கேட்டுப் போராடி இன்று தமிழ்பேசும் மக்கள் எங்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்? இயக்கங்கள் மக்களை வழிநடாத்தி போராட்டம் எப்படி வந்து நிற்கிறது என்பதை தெட்டத் தெளிவாக ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு சேதாரம் இல்லாமல் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் தமது ஜனநாக உரிமைகளுடன் வாழக்கூடிய போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்றும் நீண்டகால மூலோபாயம் என்ன அதற்காக தற்போது செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவும் முக்கியமாக அரசியற் கட்சிகளுக்கு தேவை.

ஆயுதப் ஆபாராட்டத்திற்கு முன்பு செய்யப்பட்ட ஜனநாயக போராட்ட அனுபவங்களில் இருந்தும் எமது தற்போதய புதிய ஜனநாயக வழிவகைகளை மூலோ பாயங்களை கண்டறிந்தாக வேண்டும். தற்பேததுள்ள வன்னிப் பிரதேசம் வட – கிழக்கு பிரதேசம் நாடுதழுவிய தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றியும் கருத்திற் கொண்டே இந்த மூலோபாயத்தை கண்டறியும் போராட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசம்நெற் : தமிழ் மக்களுக்கான போராட்ட அமைப்புக்கள் தான் தமிழ் மக்களுக்கு தீங்கு இழைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்hபக ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் கடத்தல் கப்பம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு.

அபுயுசுப் : சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவே அன்றி வேறேதும் இல்லை. தனி நாட்டைப்பெற்று உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று ஆயுதம் ஏந்திப் போராடினர். ஆயுதம் ஏந்தியது பலாத்காரத்தை செய்வதற்காகவா? பலாத்காரத்தை எதிர் கொள்வதற்காகவா? என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள தவறி விட்டோம்.

ஆயுதங்களைக் கொண்டு மக்களை அடக்கி விட்டோம் என்பதும் ஆயுதங்களால் மக்களின் அபிலாசைகளை  நிலைநிறுத்தவில்லை என்பதே இந்த நீண்ட போராட்டத்தின் கசப்பான அனுபவம். அதன் காரணமாகத்தான் பல பிரச்சினைகள் தோன்றின. ஆட்கடத்தல் கொலை கொள்ளை கப்பம் போன்ற விடயங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு அரசியல் இல்லாமல் ஆயுதம் ஏந்தியதன் விளைவேயாகும்.

தேசம்நெற் : அதை நிறுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?

அபுயுசுப் : ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் சக்தியினை நம்பி மக்கள் உரிமைக்காக போராடுவோம். கடந்த கால அரசியல் இராணுவ போராட்டங்கள் தற்போது எமக்கு அரசியல் பாசறைகளாக உள்ளன. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் புதிய நடைமுறைகளை வழிமுறைகளை கண்டு போராட வேண்டும் என்பதேயாகும்.

தேசம்நெற் : இந்தப் பாடத்திற்கு கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் 100 000 க்கு மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்துள்ளோம்.

அபுயுசுப் : உண்மை. உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதானால் போராட்டத்தை ஆரம்பித்த தங்கத்துரை அவர்கள் சர்வதேசம் போராட்டம் ஆயுதம் இவைபற்றியே சர்வதேச பாடங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டத்தை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அவர் உயிர் துறந்தார். அவர்கள் நினைத்த மாதிரி இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு தவறவிடப் பட்டுவிட்டது. அவர்கள் எப்படி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தார்களோ அவையாவும் வெளிவர முன்பே அவர்கள் உயிர் நீத்ததும் ஒரு காரணமாகும். அதன் பின்னர் ஆரப்பித்த ஆயுதப் போராட்டம் சித்தாந்த தெளிவில்லாமல் போனதால்தான் அதனுடைய அத்தனை விளைவுகளையும் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். லட்சக் கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். நிர்க்கதியாகி இருக்கிறோம்.

தேசம்நெற் : இப்போ நீங்கள் குறிப்பாக ஒருவிடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை வைத்துள்ளீர்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடந்த செயற்பாடுகளால் குறிப்பாக புலிகளால் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டனர். பின்பு முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற தங்கள் அடையாளத்தை நிராகரித்தனர். ஆனால் நீங்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடனேயே முஸ்லீம்களை பார்க்கிறீர்கள் ?

அபுயுசுப் : தான் எந்த இனம் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ தமிழன் என்றோ தீர்மானிப்பது எப்படிப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்படும் என்றால் மொழிதான் தீர்மானிக்கும். மொழி மூலம்தான் சிந்திக்கிறார்கள். மொழிமூலம் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தான் தமிழன் அல்ல முஸ்லிம் என்று தமிழ் மொழியில்தான் சொல்கிறார். ஆகவே இது இடையிலே ஏற்பட்ட விபத்தும் விபரீதமானதுமாகும். இந்த நாட்டிலே நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் மொழி அடிப்படையிலேதான் வஞ்சிக்கப்பட்டோம். தமிழ் மொழி பேசியதால் தான் வஞசிக்கப் பட்டோம். ஆகவே விமோசனம் தமிழ்பேசும் மக்களின் விமோசனமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தமிழர்கள் முஸ்லிம்கள் என்று தனித்தனியாக இருக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே அடிப்படையில்தான் இருக்க முடியும்.

முஸ்லிம் என்பது இனம் அல்ல. அது ஒரு மார்க்க அடையாளம் மட்டுமே. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் அல்ல. பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அங்கே அரபுக்களுக்கும் – யூதர்களுக்குமான பிரச்சினையே தவிர அது முஸ்லிம் போராட்டமாக பார்க்க முடியாதே.

இதைவிட எதுசரி எப்படி பிரச்சினைகளை தீர்ப்பது அதற்கான சரியான நடைமுறை என்பதையே கவனத்தில் எடுக்க வேண்டும்.

சாதாரணமாக சொல்வோமானால் இன்று வட கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் 600க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் சிங்களவர்களுடைய வெற்றிடங்களை நிரப்புகின்றனவே அன்றி தமிழ்பேசும் மக்களிடையேயான வெற்றிடங்களை நிரப்பத் தயாரில்லை. எனவே இதை தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப் பார்த்து தீர்க்கவும் முடியாது.

முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்களே என்ற கருத்து பல முஸ்லிம்களிடம் இன்றும் உள்ளது. பலர் இதில் தெளிவாக உள்ளார்கள்.

இந்த தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லிம்கள் செறிந்த இடங்களின் வாக்குகளுக்காக முஸ்லிம் என்ற அடையாளர் உயர்த்தப்பட்டதே தவிர இது சரியாக தெளிவாக யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்படியான முடிவாகவும் இருக்க முடியாது. இந்த சரியான கருத்தை முஸ்லிம்களிடையே தெளிய வைக்க வேண்டியதும் எமது கடமையாகும்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும். அதேபோல வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட  தமிழர்களும் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும். அவர்களது உரிமை இது. 

வட கிழக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அத்தனை மக்களும் மீள குடியமர்த்துவது எமது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும். அந்த மக்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பிப் போவது என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.

Apuysef_Sri_TELOதேசம்நெற் : இன்றைய இலங்கை அரசு பற்றிய உங்களது மதிப்பீடு என்ன ?

அபுயுசுப் : இலங்கை அரசு ஒரு முதலாளித்துவ அரசு. நான் ஒரு கமியூனிஸ்ட் இப்படித்தான் சொல்வேன். இனிவரப் போகும் யுஎன்பி அரசம் முதலாளித்துவ அரசுதான். முதலாளித்துவ நடைமுறைகளை கொண்ட அரசு. இந்த முதலாளித்துவ அரசில் முதலாளித்துவ வாதிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதல்ல. இந்த அரசுகள் சமாதானப்படுத்தப்ப முடியாத வர்க்க முரண்பாடு காரணமாக தோன்றி விஸ்வரூபம் எடுத்திருக்கிறதொன்று.

ஆளும் அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கத்தின் அடக்குமுறை யந்திரம்தான் அரசு என்று எமக்கு தெரியும். அதை பல்வேறு விதமாக ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த நாட்டடில் முதலாளித்துவம் இருக்கும் வரையில் முதலாளித்துவ அரசாகத்தான் இருக்கும். அது தனது நலனை பாதுகாக்கவே முற்படும். அது அந்த வர்க்க நலனுக்காக இனப்போராட்டத்தையும் தீவிரமடைய வைக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் இடையே இனக்குரோதத்தை வளர்த்தால்தான் தனது நலன் பேணப்படும் என்றால் அதை தந்திரமாகவும் நளினமாகவும் அது செய்து கொண்டிருக்கும். அதைத்தான் இவ்வளவு காலமும் செய்து கொண்டுவந்தது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை மக்களின் தேசிய ஜனநாயக உரிமைக்காக தமிழபேசும் மக்களைத் தயார்படுத்துவதும் சிங்கள மக்களை தயார்படுத்துவதும் அவசியம். இதற்கு ஜனநாயக சக்திகளை நாம் இனம் கண்டு அந்த சக்திகளடன் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கையிலுள்ள ஒட்டுமொத்தமாக அனைத்து அல்லல்படுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்காக செயற்ப்படுவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டம் மேலும் வீரியமடையும் என்பது எமது கருத்து.

தேசம்நெற் : நீங்கள் உங்களை கம்யுனிஸ்ட் இடதுசாரி என்று கூறுகிறீர்கள். அப்படியான பின்னணி உடைய நீங்கள் ரெலோ என்ற அமைப்புடன் எப்படி உங்களை அடையாளம் காண்கிறீர்கள்?

அபுயுசுப் : நான் ரெலோ என்பதற்கு முன்பாக ஈபிஆர்எல்எப் டன் என்னை அடையாளம் கண்டு கொண்டேன் அங்கிருந்து தான் ரெலோவிற்கு வந்தேன். சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும்.

தேசம்நெற் : கம்ய+னிச சித்தாந்த பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் ஈபிஆர்எல்எப் இடமிருந்து ரெலோவிற்கு வருவதன் காரணம் என்ன?

அபுயுசுப் : அடிமைப்பட்ட மக்கள் அல்லவா? அந்த மக்களுக்காக போராடுவது கம்யூனிஸ்டின் கடமையல்லவா? சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும். கம்யூனிஸ்ட் அந்த பங்களிப்பை நிராகரிக்க முடியாதே கண்மூடித்தனமாக பார்க்காமல் இருக்க முடியாதே.

இலங்கையில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கா தமிழ்பேசும் மக்களின் பாட்டாளிகளையும் அழைக்க வேண்டிய கடமை உண்டல்லவா. தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் செயற்ப்பாட்டை முதலாளித்துவ வழியில் செல்லவிடாது இழுத்துச் செல்லும் கடமையை கம்யூனிஸ்ட் செய்ய வேண்டும் அல்லவா. அதற்காக நாங்கள் இந்த அமைப்புகளினுள்ளும் சென்று அரசியல் வேலைகளை செய்வதன் மூலம்தானே அது சாத்தியப்படும்.

தேசம்நெற் : ஆனால் துர்திஸ்டவசமாக அது நடக்கவில்லையே?

அபுயுசுப் : நடக்கவில்லை. சில தமிழ் மார்க்ஸிஸ்ட்டுக்கள் முயற்ச்சித்தார்கள். பலர் அதை கண்டு கொள்ளவில்லை அதே போல சிங்கள மார்க்ஸிஸ்ட்டுக்களும் இவர்களுடன் செயற்ப்படவில்லை. அது அவர்களடைய தப்பு. நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தான் ஈபிஆர்எல்எப் க்கு ஒரு அமைச்சராக போனேன்.

தேசம்நெற் : எந்த கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து?

அபுயுசுப் : இலங்கை மாஸ்கோ சார்பு கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து அந்த கட்சியின் அரசியல் குழு அங்க்த்தவனாக இருந்தவன். அங்கு இருக்கும் போது தோழர் நாபா நீங்கள் எமது அமைச்சரவைக்கு வாருங்கள் என்று கேட்டார். நானும் சென்றேன். தமிழ் பாட்டாளி வர்க்கத்தை உலக பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து செயற்ப்படும் கடமை ஒன்று இருந்தததை உணர்ந்து தான் அவர்களுடன் இணைந்து செயற்ப்பட சென்றேன். இந்த மக்களை சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைக்க வேண்டும் என்று தான் செயற்ப்பட்டடேன்.

தேசம்நெற் : இன்று வன்னியில் நடைபெறும் யுத்தம் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையேயான இனவாதத்தை அதன் உச்ச அளவிற்கு தூண்டியுள்ளதே?

அபுயுசுப் : இருபக்மும் உள்ள இனவாதிகள் தமது சுயநலன்களுக்காக இனவாதமாக  மாற்றிவிட்டார்கள். இந்த யுத்தத்தை தமிழர்க்கும் சிங்களவர்க்கு மிடையிலான யுத்தமாக மாற்றிவிட்டார்கள்.

தேசம்நெற் : இந்த இனவாதத்ததை கடந்து தமிழ் முஸ்லீம் மலையக சிங்கள மக்கள் ஒன்னிணைந்த போராட்டத்தை நடாத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

அபுயுசுப் : நிச்சயமாக. இன்னும் ஆழமாக நம்புகிறேன். அதுதான் ஒரே வழி. இலங்கையின் விமோசனத்திற்கு தமிழ் மக்களின் சிங்கள மக்களின் முஸ்லீம் மக்களின் விமோசனத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கையின் விமோசனத்திற்காக இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கான சமானிய அன்றாட ஜீவியத்திற்க்காக பாடுபடும் மக்களின் விமோசனத்திற்கு அனைத்து மக்களும் சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான கொள்கையில் செயற்ப்பட வேண்டும். அது இப்போது செய்ய முடியாது. இப்போது அழைக்க முடியாத. அழைத்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இப்போது யுத்தம் நடக்கிறது. இந்த யுத்த்தின் விளைவு என்ன? இதிலிருந்து நாம் மக்களை அரசியல் மயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு பாரிய பணியாகும். ஒரு பாரிய காரியமும் ஆகும.; அந்த காரியத்தை சித்தாந்த தெளிவு உள்ளவர்களாலேயே நடாத்த முடியும். அது மட்டுமல்ல அவை அன்றாடம் செய்யப்பட வேண்டியவைகளுமாகும்.

இந்த நாட்டிலே உண்மையான  தேசிய ஜக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்பேசும் மக்களும் சிங்கள மொழிபேசும் மக்களும் அந்த மக்கள் மத்தில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்க மக்களும் ஒன்னிணைய வேண்டும். அப்போது தான் தேசியங்களின் விடுதலை பற்றி பேச முடியும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களும் சுபீட்சம் பெறமுடியும்.

அதற்காக போராடுவோம் எமது போராட்டத்தில் அதுவும் ஒரு அம்சம். தமிழ்பேசும் மக்கள் படும் கஸ்டம் போலவே பெரும்பாலான சிங்கள மக்களும் கஸ்டப்படுகிறார்கள் அவர்களக்காகவும் போராட வேண்டியது தெளிவடைந்த அரசியற் கட்சிகளின் கடமையாகும். இது இந்த யதார்த்த்ததை புரிந்து கொண்ட மக்கள் சிந்தனையாளர்களைக் கொண்ட கட்சியால்த்தான் அது முடியும்.

தேசம்நெற் : இறுதியாக தேசம்நெற் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்களா ?

அபுயுசுப் : சொல்வதற்கில்லை. இனி செய்தாக வேண்டும். செய்ய நிறையவே உண்டு. செய்ய வேண்டிய கடமைகளைப் புரிந்து கொண்டு தெளிவான பார்வையுடன் தெளிவான போராட்டததை தியாக மனப்பானமையுடனும் முன்னெடுத்துச் செல்வோமேயானால் தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் மக்களும் ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் இங்கே வாழ முடியும்.

எங்கள் போராட்டம் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருடன் இணைந்து நடத்தப்பட்டு இருந்தால் எங்கேயோ போயிருக்கும். ஜேவிபி கூட அந்த தவறை செய்துள்ளது.

ஜேவிபி யின் திட்டமே ‘சிங்கள இனவெறியைத் தூண்டி பதவிக்கு வந்து நியாயமான விடயங்களை செய்வோம். அதில் தமிழ் மக்களுக்கும் நியாயம் கிடைக்க வைப்போம்’ என்ற உபாயம். அவர்கள் குட்டிப்பூர்சுவாக்கள் தானே இப்படியான உபாயங்களைத் தான் அவர்கள் வளர்ப்பார்கள். குட்டிப்பூர்சுவாக்களின் உபாயம் அப்படித்தான் இருக்கும்.

அவர்கள் பாரிய பின்னடைவை சந்தித்தார்கள் அவர்களே இரண்டாக பிளவடைந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த தேர்தலில் மக்கள் இவர்களின் பேச்சை நம்பவில்லை. எந்த சிங்கள மக்களை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்கள் கடந்த தேர்தலில் அவர்களை நிராகரித்து விட்டனர்.

அந்த இருதரப்பு ஜேவிபி யினரையும் மக்கள் நிராகரித்தது விட்டனர். உபாயத்தை சரியாக வகுக்காதுவிட்டால் அந்த உபாயம் வர்க்க எதிரியின் கையில் ஒரு ஆயுதமாகிவிடும்.

தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் எந்த இனவாத உபாயத்தை எடுத்தார்களோ அந்த உபாயம் இவர்களுக்கு எதிராக போய்விட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்திக்காது! கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிப்பு

sampandar-pr-con.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளார்.
 
தமிழ்க் கட்சிகளின் பிரதிநதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது எனவும் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஜானகி ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் ஷெல் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் தினமும் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.காயமடைகின்றனர். முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான உணவு இல்லை, குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை, மருந்துகள் இல்லை. இதன் காரணமாக இறப்புக்கள் கூட சம்பவிக்கின்றது.

மக்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவது அர்த்தமற்றது. எனவே முல்லைத்தீவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான சூழ் நிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையடுவது அர்த்தமுள்ளதாகும்” என தெரிவித்தார்.

அரசியல் தீர்வு மூலம் தமிழர்களின் பிரச்சினைகளிற்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் ,அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

எனினும் இவ்வலயத்தின் மீது விமானத்தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களிம் மேற்கொள்ளப்படுவதால் சாராசரியாக தினமும் 40 முதல் 50 வரையான பொதுமக்கள் உயிரிழப்பதுடன்,காயமடைகின்றனர். அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை

மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர்.மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கபடுகின்றது.

இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர்.ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றது .எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது.இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும், போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும், அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

அங்கே மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் வெளியேறுகின்றனர்.சர்வதேச சட்ட விதிகளிற்கு அமைவாக மோதல்களின் போது பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என சம்பந்தன் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

dalas_alahapperuma.jpgயாழ். பிராந்தியத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத முதல்வாரத்தில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான பதினொரு பேர் கொண்ட உயர் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள், கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களுக்கு விஜயம் செய்வதுடன், அமைச்சரின் விஜயத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக, கோண்டாவில் டிப்போ முதல்தர டிப்போவாக தரமுயர்த்தப்பட்டு பத்து புதிய பஸ்கள் டிப்போவுக்கு வழங்கப்படவுள்ளன.

இலங்கை தமிழர் பிரச்சினை, ராஜீவ் கொலை என்பன தொடர்பில் இந்தியா நடவடிக்கை: ராகுல் காந்தி

rahul.jpgஇலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆகியன தொடர்பில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் இந்திய மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் குறித்து ஆலோசனைகள் நடத்துவதற்காக ராகுல் காந்தி புதுச்சேரி சென்றிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ பிரமுகர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் ராகுல் காந்தி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு பற்றியும், இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “இரண்டு விடயங்கள் குறித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தற்போதும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

ஜனாதிபதியின் 7 நிதி திருத்த சட்டங்கள் நிறைவேற்றம்

ranjithsiyabalapitiya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் ஏழு நிதித் திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நேற்று (25) நிறைவேற்றப்பட்டன. கடந்த 2008 டிசம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட 16 பில்லியன் ரூபாய் பெறுமதியான பொருளாதார நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நிதிச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சமர்ப்பித்த 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்குப் புறம்பாக பொருளாதார நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிதிச் சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதாக அரச வருவாய்த்துறை மற்றும் பிரதி நிதியமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அடுத்த புதிய நிதியாண்டு ஆரம்பமாகும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நிதித் திருத்தச் சட்டமூலங்களை விவாதித்து நிறைவேற்றுவதற்காக நேற்றைய தினம் பாராளுமன்றம் விசேட அமர்வாகக் கூட்டப்பட்டிருந்தது.

வழமையான அமர்வுகளைப் போலன்றி, வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நேற்று இடம்பெறவில்லை. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குக் கூடியபோது, அமைச்சர் சியம்பலாபிட்டிய ஏழு நிதித் திருத்தச் சட்டமூலங்களைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வர்த்தக சமூகத்தினர் குறிப்பாக ஏற்றுமதித்துறையின் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரிவிலக்களிக்கும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த நிவாரணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச்சலுகையை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதித் திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் பொதுமக்கள் மீது வரிச் சுமையைத் திணித்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினாலும், இந்தச் சட்டமூலங்களால் பாரிய வரிச்சலுகை வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

முக்கியமாக தேசிய உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய ரீதியாக உற்பத்தி செய்யப்படும், தேயிலைத் தொழிற்துறைக்குத் தேவையான இயந்திர, உபகரணங்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளால் சேதமடைந்த பஸ் வண்டிகளுக்காக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் பித்தளை தொழிற்துறைக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நகைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்திரளானோரை மேம்படுத்தும் வகையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் தங்கநகைகளுக்கு வற்வரி நீக்கப்பட்டுள்ளது.

தேயிலையை பக்கற்செய்து ஏற்றுமதி செய்வோருக்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை நிறுவனமொன்றோ, தனி நபரோ இலங்கைக்கு வெளியில் சேவையாற்றி ஈட்டும் வருமானத்தை வங்கி ஊடாக நாட்டுக்குக்கொண்டு வரும் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் கமநெகும, மக நெகும, சமுர்த்தி அபிவிருத்தி ஆகிய திட்டங்களுக்கு வற்வரி நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வரிச்சலுகை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தகமொன்றை எழுதுவதன் மூலம், மேடை நாடகத் தயாரிப்பின் மூலம், பாடலொன்றை எழுதுவதன் மூலம், இசையமைப்பதன் மூலம், பாடுவதன் மூலம் கலைஞர்கள் பெறும் வருமானத்திற்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மேம்பாட்டுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு பாரிய சவால்களையும் எதிர்கொண்டு அரசாங்கம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஐ.தே.க. வினர் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டு 45 ஆயிரம் கோடிக்காக உலகைச் சுற்றினர். ஆனால், நாம் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

கடந்த மூன்று தினங்களில் 75 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற மற்றுமொரு இலங்கை மீனவர்கள் குழு ஒன்றை இந்திய கரை யோர பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் (24) இரவு கைது செய்துள்ள தாக மீன்பிடித்திணைக்கள உதவிப் பணிப் பாளர் லால் பெரேரா தெரிவித்தார். 7 படகுகளில் சென்ற சுமார் 30 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 75 மீனவர்கள் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் 15 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 200 மீனவர்களும் 37 படகுகளும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, சென்னை மற்றும் நிகோபார், அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லால் பெரேரா கூறினார்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட 27 இலங்கை மீனவர்கள் நேற்று (25) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களின் 4 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைவரென எதிர்பார்க்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக சென்னை பிரதி உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் லால் பெரேரா தெரிவித்தார். 

சர்வதேச நாணய நிதியத்தால் இலகுகடன் திட்டம் அறிமுகம் கடன் பெறுவது தொடர்பில் இலங்கை நேற்றும் பேச்சுவார்த்தை – சரத் அமுனுகம

sarath-amunugama.jpgசர்வதேச நிதியத்திடம் கடன்பெறுவது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை யொன்று நேற்றும் இடம்பெற்றதாக அமைச்சர் சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், பாரிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படமாட்டாதென சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாடு நிதிநெருக்கடியை எதிர்நோக்கும் வேளையில் ஆட்சியைப் பிடிக் கும் தந்திரோபாய நோக்கிலேயே ஐக்கிய தேசி யக் கட்சி இது தொடர்பில் பல்வேறு விமர்ச னங்களை முன்னெடுக்கிறது. உலகின் பொருளாதார நெருக்கடியைக் கருத் திற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலகு கடன் திட்ட மொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளா தாரத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையும் இக்கடனைப் பெறத் தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், யுத்தம் நிறைவடைந்ததும் பல்வேறு துறைகளும் பாரிய அபிவிருத்தி காண்பது உறுதியெனவும் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியா, சீனா போன்ற அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளுக்குச் செலவிடவே சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் பெறவுள்ள கடன் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்படுகின்றன. இம் முறை கடன் பெறப்போவது வழமையான நிபந்தனைகளுடனல்ல என்பது தெளிவுபடுத்திக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

கொலைச் சம்பவங்களுக்காக அரசாங்கத்தின்மீது குற்றஞ்சுமத்துவது அர்த்தமற்றது – பாராளுமன்றத்தில் அமைச்சர் முரளிதரன்

parliament.jpgநாட்டில் சமாதானத்தை உருவாக்கும் மனித நேய நடவடிக்கையை படையினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்காக அரசாங்கத்தின்மீது குற்றஞ்சுமத்துவது அர்த்தமற்றது என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (25) பாராளுமன்றத்தில் கூறினார்.

சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கில் வாழும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தாமல் அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.

கிழக்கு மாகாண சபையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோம். அக்குறைபாடுகளை நிவர்த்திப்பதில் ஜனாதிபதி அதிக அக்கரை கொண்டுள்ளார்.

கிழக்கில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறும்போது சகல இனங்களுக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும். ஜனாதிபதியின் முயற்சியினால்தான் எமக்கு கிழக்கு மாகாண சபை கிடைத்தது.

மக்களின் சம்மதம் இன்றியே அன்று வடக்கும் கிழக்கும் ஒன்றிணைக்கப்பட்டது. இதில் எமக்கு உடன்பாடில்லை.

ஒரே நாளில் புலிகளை அழித்துவிட முடியாது. ஆங்காங்கே நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க கால அவகாசம் தேவை. அச்சுறுத்தலுக்குள்ளான கிராமங்களைப் பாதுகாக்க பாதுகாப்புச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுததுள்ளார்.

புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள் கிழக்கு மாகாணத்தில் இன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பெருந்தொகைப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.