நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் மனித நேய நடவடிக்கையை படையினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்காக அரசாங்கத்தின்மீது குற்றஞ்சுமத்துவது அர்த்தமற்றது என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (25) பாராளுமன்றத்தில் கூறினார்.
சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடந்தும் உரையாற்றுகையில்,
கிழக்கில் வாழும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தாமல் அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.
கிழக்கு மாகாண சபையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோம். அக்குறைபாடுகளை நிவர்த்திப்பதில் ஜனாதிபதி அதிக அக்கரை கொண்டுள்ளார்.
கிழக்கில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறும்போது சகல இனங்களுக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும். ஜனாதிபதியின் முயற்சியினால்தான் எமக்கு கிழக்கு மாகாண சபை கிடைத்தது.
மக்களின் சம்மதம் இன்றியே அன்று வடக்கும் கிழக்கும் ஒன்றிணைக்கப்பட்டது. இதில் எமக்கு உடன்பாடில்லை.
ஒரே நாளில் புலிகளை அழித்துவிட முடியாது. ஆங்காங்கே நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க கால அவகாசம் தேவை. அச்சுறுத்தலுக்குள்ளான கிராமங்களைப் பாதுகாக்க பாதுகாப்புச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுததுள்ளார்.
புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள் கிழக்கு மாகாணத்தில் இன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பெருந்தொகைப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.