March

March

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வன்னி மாவட்ட மாணவரை ஆற்றுப்படுத்த நடவடிக்கை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளப்பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் சீரான மனநிலையை மாணவர்கள் கொண்டிருப்பதை நோக்காகக்கொண்டு இந்த ஆற்றுப்படுத்தும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அண்மையில் இப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்றாமாண்டு மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து இம்மாணவர்களை ஆற்றுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அதற்கு முதல் காவலாளியாக பணியாற்றும் ஒருவரும் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இறுதியாக தற்கொலை செய்துகொண்ட மாணவி தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டதாகவும் இவரது பெயர் ரவீந்திரன் சுதர்சினி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கே மோதல் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளின் நிலை குறித்து சரியான தகவல்களை பெறமுடியாத நிலையில் மனப்பாதிப்புக்குள்ளானமை காரணமாக இவ்வாறான தற்கொலை முயற்சிக்கு மாணவர்கள் தள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளாகும் இம்மாணவர்களை கவனிப்பதற்கும் தேவையான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்மென வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை திரட்டுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா அதிகாரிகளைக் கேட்டுகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து கல்விகற்கும் 152 மாணவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கவனத்திற்குட்படுத்த வேண்டுமென கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என். பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் எந்தப்பாதிப்பும் வெளிப்படவில்லை. எனினும் வன்னியின் நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்கள் உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கலைப்பீட பரீட்சைகள் தவிர ஏனைய பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது எனவும் இவ்வாரத்தில் பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாநாடுகள் முல்லை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? : த ஜெயபாலன்

Wanni_Tragedy1.

இந்தத் தலைப்பை இட்டுக் கொண்டு இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு, எனது மனைவியின் மைத்துனியும் அவரது மூன்று குழந்தைகளும் நேற்று (26 மார்ச்) நடந்த செல்வீச்சில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்தனர். புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே இடம்பெற்ற இத்தாக்குதலிலேயே இத்தாயும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். தனது மனைவியையும் குழந்தைகளையும் பறிகொடுத்த இளம் தந்தை விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் போராளி. பதின்மூன்று வயதில் இயக்கத்தில் இணைந்த ஒரு குழந்தைப் போராளி. இன்று உடல்முழுவதும் சன்னங்களுடன் சிகிச்சை பெறவும் வசதியின்றி தெற்காசிய நாடொன்றில் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருப்பது மட்டை போட்டல்ல புலத்து மக்கள் பகட்டுக்காகச் சொல்லும் தாயக விடுதலைக்கு உதவியாக இருந்தமைக்காக.

அவர் தனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டு மூன்று வருடங்கள் இருக்கும். இளம் குடும்பம். அவர் புலத்தில் உள்ள உறவுகளுடன் கதறி அழுகிறார். இங்குள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் வார்த்தைகள் இல்லை. அவரை ஐரோப்பாவிற்கு எடுத்துவிட முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் நெஞ்சை நெருடியது.

காயப்பட்டதனால் போராட இயலாத நிலையில், தொழில் வாய்ப்புகளும் இல்லாத நிலையில், புலிகளுக்கு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே அவருடைய குடும்பம் தங்கி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவர் வெளிநாடு வர முயற்சித்து இருந்தார். ஆனால் அவ்வளவு தொகையை அவரால் திரட்டிக் கொள்ள முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் இருந்திருக்க மாட்டார்கள். இந்த யுத்தத்தில் மடிந்திருக்க மாட்டார்கள்.

தான் இளவயதிலேயே இயக்கத்தில் சேர்ந்து கல்வியைப் பாழடித்ததால் தன்னுடைய மகனை படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளம் குடும்பத்தினரிடம் இருந்தது. ஆர்வம் மட்டுமல்ல அவ்வளவு கஸ்டத்திலும் தாயார் தன் மூத்த மகனை புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தி பெற வைத்தார். இது நடந்தது சில மாதங்களுக்கு முன். இன்று அவர்கள் நினைவுகளில் மட்டுமே உள்ளனர்.

இது விதியல்ல. சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகளின் சதி. அதில் புலத்து தமிழனுக்கும் பங்கு இருக்கின்றது. இப்படி வன்னி மண்ணில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு உருக்கமான சொந்தக் கதையுண்டு. சொல்வதற்கு நாதியில்லை. அதனால் புலத்த தமிழன் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகின்றான்.

ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை தனது உயிராகவே கருதுகின்றனர். தாய் தந்தையைப் பொறுத்தவரை குழந்தையின் இழப்பு என்பது அவரகளது மரணம் வரை தொடரும் சோகம். ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படுகின்ற வலியின் கொடுமையில் ‘இந்தப் பிள்ளை எனக்கு வேண்டாம்’, ‘இந்தப் பிள்ளையைக் கொல்லுங்கள்’ என்று தாய் கதறுவாள். அவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதமும் குழந்தை பிறந்ததும் ஏற்படப் போகும் பெருமகிழ்ச்சியும் இருந்தாலும் வலியின் கொடுமை அவர்களை அவ்வாறு சொல்ல வைக்கிறது.

ஆனால் இன்று வன்னி மக்கள் அனுபவிப்பதோ மரணவலி. அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமோ என்கிற பயம். அந்த மரண பயத்தில் தப்பி ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுத் தள்ளுகிறார்கள் பிடித்துவந்து பச்சை மட்டையால் அடிக்கின்றனர் புலிகள். ஒரு புறம் இலங்கை அரச படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகின்றனர். மறுபுறம் புலிகள் தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளில் இருந்து வன்னி மக்களை வெளியெறவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். புலிகளதும் புலத்து தமிழர்களதும் தாயக வேள்விக்கு வளர்க்கப்பட்ட விலங்குகள் போல் ஆகிவிட்டனர் வன்னி மக்கள்.

2.

Sambandan R TNA MPஇந்த நிலையை வேதனையை யாரிடம் சொல்ல முடியும். யாருக்கு எடுத்துரைக்க முடியும். ‘விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா’ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, ”அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும்? அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்” எனப் பதிலளிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர் சம்பந்தன். ஆர் சம்பந்தன் சொல்வது போல் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தவர்கள் அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றே வைத்துக் கொண்டால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற இந்த 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கே? அவர்களது குடும்பங்கள் எங்கே? அவர்கள் மட்டும் ஏன் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்? தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் மிக மோசமான அவலத்தை எதிர்கொண்டுள்ள போது அந்த மக்களை மரணப்பொறியில் விட்டுவிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் ஐரோப்பாவின் நகரங்களிலும் இருந்து கொண்டு ‘வன்னி தமிழர்களின் பூர்வீக மண்’, ‘ஏன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கேட்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த அரசியல் அருகதையும் கிடையாது. அந்த ‘மக்களை வெளியேற்ற வேண்டாம்’, ‘வெளியேற வேண்டாம்’ என்று சொல்வதற்கு புலத்துத் தமிழனுக்கும் எந்த அருகதையும் கிடையாது.

‘தெற்கிற்குச் சவப்பெட்டிகள் வரும்’ என்று முட்டாள்தனமாகப் பாராளுமன்றத்தில் பேசுவதும், பொழுது போக்காக பொங்கு தமிழ் வைத்து போர் முழக்கம் செய்வதும், இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு துணைபோன இவர்களின் அரசியலை என்னவென்பது.

‘தமிழ் சமூகம் படித்த சமூகம். லண்டனிலலும் ஆயிரக் கணக்கான டொக்டர்கள் என்ஜினியர்கள் எக்கவுண்டன்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு தங்கள் சேவையை செய்கிறார்கள்.’ என்று மேரிக் கொல்வினை அழைத்து நடத்திய சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் சென் கந்தையா குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது. உண்மை. படித்தவர்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். லண்டனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் வந்து தங்கள் சேவையைச் செய்கிறார்கள். தங்கள் பெருந்தன்மையைக் காட்ட ‘வணங்கா மண்’ கப்பல் விடுகிறார்கள். ‘வன்னி மாடுகள்’ படிக்கவில்லை. வசதியும் இல்லை. புலியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள்.

மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வருகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரை தேசம்நெற் க்காக நேர்கண்ட போது கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று ‘நீங்கள் ஏன் இந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையை வைத்துள்ளீர்கள்?’ என்பது. அதற்கு அவர்கள் மூவருமே கிட்டதத்தட்ட ஒரே பதிலையே தெரிவித்தனர். ‘நாங்கள் இந்த உறுப்புரிமையை எடுக்காவிட்டால் அரச ஆதரவாளர்கள் தமிழ் விரோத சக்திகள் அதில் உட்கார்ந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைச் செய்வார்கள்.’ அப்படியானால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்காக இதுவரை சாதித்தது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வை ஏன் முன்வைக்கவில்லை? ‘புலிகள் தமிழ் மக்களுடைய ஒரு ஆயுத அமைப்பு’ என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னெடுக்கவில்லை. ‘விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்’, என்று சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்தத் தவறிற்கு வன்னி மக்கள் கொடுத்துக் கொண்டுள்ள விலை மிக மிக அதிகம். அது மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்றுத் தவறுகள் என்று பட்டியல் இட்டால் அதனைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். அந்தப் பட்டியலை தேசம்நெற்றின் கருத்தாளர்களிடமே விட்டுவிடுகிறேன்.

முல்லைத் தீவில் நடைபெறும் மனித அவலத்தில் – இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் அரசு – புலிகள் என்ற இரண்டு தரப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த இரு தரப்புகளுமே உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதற்கு இந்த இரு தரப்புகளுடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவது அவசியம். நாங்கள் ஒரு தரப்பினருடன் மட்டுமே பேசுவோம் மற்றயைவர்களைத் தீண்டமாட்டோம் மற்றையவர்களுடன் பேசமாட்டோம் என்று அடம்பிடித்தால் எப்பொதுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இதுவே யதார்த்தம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (26 மார்ச்)  இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்து இருந்தார். ‘வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது’ எனவும் குறிப்பிட்டு ஆர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். வன்னிப் படை நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்பொது ஒரு சில 10 கிரோமீற்றருக்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளது. இன்று தினம் தினம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.  யுத்தத்தை நடத்துகின்ற அரச தரப்பை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்துவதை விட்டுவிட்டு ‘படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும்வரை சந்திப்பை மேற்கொள்ள மாட்டோம்’ என்று ஜனாதிபதிக்கு கடிதம் போடுவது எவ்வகையில் வன்னி மக்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள் கேட்பதை மகிந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தந்துவிடாது. அதற்காகப் தொடர்ந்து அவர்களுடன் போராட வேண்டும். ‘நாங்கள் உங்களுடன் டூ. உங்களுடன் பேசமாட்டோம்’ என்று கோபித்துக் கொண்டிருக்க இது என்ன எங்கள் வீட்டு குழந்தைகளின் சண்டையா? மூத்த அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் ஆர் சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தால் என்ன பயன்?

யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுகிறார்களா என்பதை வன்னி முகாம்களில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பி க்கள் மேற்பார்வை செய்திருக்க வேண்டும். பாராளுமன்றம் சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி கோரி இருக்க வேண்டும். அப்படி கேட்பதற்கு முடியாவிட்டால் ‘எங்களை வன்னிக்கு அனுப்பி வையுங்கள்! எங்கள் மக்களோடு இருக்க விடுங்கள்!’ என்று பாராளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும். அதற்கு அரசு சம்மதிக்கவில்லை என்றால் ஒரே நேரத்தில் தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை திறந்து சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு உங்கள் பாராளுமன்ற பதவியை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இன்று ஒட்டுமொத்த வன்னி மக்களும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களுக்கு கொள்ளி வைப்பதற்காக நீங்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினீர்கள். உங்கள் எம்பி பதவிகளை எதற்கு இன்னமும் காவிக்கொண்டு திரிகிறீர்கள்.

3. 

இதற்கிடையே லண்டன் கொழும்பு பெங்களுர் என்று இலங்கையின் நிலவரம் பற்றிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பற்றி எரிகின்ற ஒரு பிரச்சினை பற்றி தமிழர்கள் கலந்துகொள்கிற மாநாடு. ஆனால் மூன்று மாநாடுமே பெரும்பாலும் இரகசியமான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சாரார் மற்றைய மாநாட்டை குழப்பி விடுவார்கள் என்ற அச்சம் இரு தரப்பிலுமே காணப்படுகிறது. இது தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கிய அரசியல் விடயம் தொடர்பாக வெளிப்படையான விவாதம் ஒன்றை மேற்கொள்ள முடியாத சூழல் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அறுபது நாட்களுக்குள் 3000 உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த மக்களின் அவலங்களை அரசியலாக்குகின்ற மூன்றாம்தர அரசியலே நடைபெறுகின்றது. அவல ஓலங்களை ஐபிசி வானலைகளில் பரவவிட்டும், மரணத்தின் அவலத்தை ஜி ரிவியில் காட்சிப்படுத்தியும், தங்கள் புலி அரசியலை விற்கும் இவர்கள், ‘காணத் தவறாதீர்கள் சூரியாவின் ‘அயன்” என்று சொல்லவும் தவறுவதில்லை. மாறாக புலிப் புலம்பல் புலம்பி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, தங்கள் பழைய இயக்க சாகசங்களை தூசிதட்டி றீல்விடும் இணையங்களுக்கும் குறைவில்லை.

இந்த துருவ அரசியலில் இதுவரை தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் பந்தாடப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் மேல் சென்று தமிழ் மக்களின் – வன்னி மக்களின் தலைகளே பந்தாடப்படுகிறது.

இவ்வளவு அவலங்களுக்குப் பின்னரும் ஒரு காத்திரமான அரசியல் விவாதத்தை வெளிப்படையாக நடத்துவதற்கு முடியாத சூழல் இருக்கின்றது என்பது வேதனையான விடயம். புலிசார்பான அமைப்புகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தால், புலி எதிர்ப்புக் குழுக்களும், அரச ஆதரவு சக்திகளும் அதனை குழப்ப விளைகின்றனர். அதேபோல் புலிக்கு ஆதரவற்றவர்கள் மாநாடுகளை போராட்டங்களை ஏற்பாடு செய்தால் புலி ஆதரவு சக்திகள் அவற்றைக் குழப்புகின்றனர். இதன் எதிரொலியே லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் இரகசியமாக நடத்தப்படுவதற்குக் காரணம்.

லண்டன் மாநாடு நேற்று (26 மார்ச்) புலிகளுக்கு சார்பான அரசியல் நிலைப்பாட்டையுடைய பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் நடக்க இருந்து பின்னர் சிங்கப்பூருக்கும் அதன் பின்னர் கொழும்பிற்கும் மாற்றப்பட்ட மாநாடு இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. பெங்களுர் மாநாடு இந்திய அரசில் தங்கியுள்ள ஈஎன்டிஎல்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாடு ஏப்ரல் முற்பகுதியில் நடக்க இருக்கிறது.

இந்த மூன்று மாநாடுகளுமே ஒரே விடயத்தைப் பற்றியே பேசுகின்றன. அதாவது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை. அவர்களின் எதிர்காலம். மூன்று மாநாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்கேற்று உள்ளனர். வட அமெரிக்கா ஐரோப்பா அவுஸ்திரெலியாவில் இருந்து வேறு வேறு புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல இந்த மாநாடுகளும் திரைமறைவிலேயே நடத்தப்படுகிறது. ‘ஏன் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றது, என்ன விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட இருக்கின்றது’ என்பது பற்றிய விடயங்களை முன்னரே வெளிப்படுத்தி இருந்தால் அது பற்றிய விவாதங்களை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மக்களுடைய கருத்துக்களையும் பெற்றிருக்க முடியும். மக்களையும் இன்றைய அரசியலுடன் ஈடுபடுத்தி இருக்க முடியும். அதுவே ஜனநாயகச் செயன்முறையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் தெரிவு செய்யப்பட்ட சிலர் (மக்களால் அல்ல), கூடி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை வெளியிடுவது, அதற்கு மக்கள் ஆதரவைக் கோருவது ஜனநாயக நடைமுறையாகாது. இந்த மூன்று மாநாடுகளின் ஏற்பாட்டாளர்களுமே அடிப்படையில் மக்களை மிகத் தொலைவிலே வைத்துக்கொண்டு மக்கள் பற்றிய விவாதத்தை நடத்துகின்றனர்.

இந்த மாநாடுகள் நடத்தப்படுவதும் விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதும் அவசியம். ஆனால் இந்த மாநாடுகளை அதன் ஏற்பாட்டாளர்கள் தங்கள் அரசியல் நலன்சார்ந்து கையில் எடுக்கும் அபாயம் உள்ளது. அது தொடர்பான விழிப்புணர்வு அதில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பது அவசியம். அவற்றிற்கு அப்பால் இவ்வாறான மாநாடுகள் உடனடித் தீர்வை ஏற்படுத்தாத போதும் தீர்வை ஏற்படுத்துவதற்கான விவாதிப்பதற்கான அரசியல் சூழலை உருவாக்க இவை அவசியம்.

லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் வேறு வேறு நாடுகளில் மட்டுமல்ல வேறு வேறு அரசியல் பின்புலத்திலும் நடைபெறுகின்றன. இந்த மாநாடுகளின் ஏற்பாட்டாளர்கள், அதாவது பின்னணியில் உள்ளவர்கள், அவர்களே உண்மையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள். இன்றைய அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. அவர்களுடன் தொடர்ந்தும் மக்கள் சார்ந்து உரையாடுவதும் விவாதிப்பதும் தவிர்க்க முடியாதது.

30 வருடமாக ஆயுதத்தை நம்பிய தலைமை இன்று மரண ஓலத்தையே தனது அரசியல் ஆயுதமாக்கிக் கொண்டு உள்ளது. ஆனால் 30 வருடம் உறுதியான அரசியலுடன் விவாதித்து இருந்தால் ஏனைய சிறுபான்மை மக்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது ஆதரவையும் தமிழர் போராட்டம் பெற்றிருக்கும்.

இந்திய அமைதிப்படையை வெளியேற்ற முற்பட்ட போது பிரேமதாசாவே பிரபாகரனை தம்பி என்று அழைத்தது மட்டுமல்ல மாவீரர் உரையும் இலங்கை முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சுனாமியைத் தொடர்ந்து தமிழ் பகுதிகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள சிங்கள மக்கள். அன்றைய காலத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லீம் மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் ஒத்தழைத்தனர். ஆனால் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்கள் அம்மக்கள் இணைந்துவிடமால் தடுத்தது.

இந்த மாநாடுகளால் முல்லை அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனாலும் இவ்வாறான மாநாடுகள் விவாதங்கள் அதன் மீதான விமர்சனங்கள் மட்டுமே இலங்கையில் உள்ள இனமுரன்பாட்டை தீர்ப்பதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தும். சகல சமூகங்களும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆயுதங்களிலும் பார்க்க இந்த மாநாடுகளும் விவாதங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களும் ஆரோக்கியமானதே.

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி : பொதுக் குழுவில் முடிவு

26-ramsoss.jpgமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படை வீரர் தற்கொலை

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் வீதிக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படைச் சிப்பாயொருவர் இன்று மாலை தனக்குத் தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ளார்

ஊறணி விசேட அதிரடிப் படை முகாமில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் யு.எஸ்.பி. திசாநாயக்கா ( வயது 25) என்பவரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

vithyathara-01.jpgசுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணி ஊடாகத் தாக்கல்செய்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் அநுர சேனாநாயக்க , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் எ.ஜி.ரி.பி. விஜெரட்ண, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

இந்தியப் பிரதமரின் தலைமைச் செயலாளர் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

nayar.jpg இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் கொள்கை அமுல்படுத்தலுக்கான தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ. நாயிர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின்பேரில் ரி.கே.ஏ. நாயிர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ரி.கே.ஏ. நாயிரின் பாரியார், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோருடன் வெளிவிவகாரம், நிதி, சுகாதாரம், கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில்! அதில் 20 ச.கி.மீ. பாதுகாப்பு வலயம்!

khegeliya_rampukhala.jpgபுலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் 20 சதுர கிலோ மீற்றர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

படையினரால் புலிகள் இப்போது ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பு வலயத்திலும் ஊடுறுவி அங்கிருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று அவாகள் அங்கிருந்து இலங்கை விமானப்படையின் பெல்  212 ரக ஹெலிகொப்டர்கள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இதற்கான சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை வெற்றிகரமாக சமளித்துக்கொண்டு படையினர் நிதானமாக முன்னேறுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்றவேண்டிய முக்கியமான பணி என்னவென்றால். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித நேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்த ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் ;கூறினார். 

கோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து

sri-lanka-air-lanka.jpgகோவை, கொச்சின் உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை இலங்கை ரத்து செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்துள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.

இதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.

புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் நேற்றைய மோதலில் பலி – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற கடும் மோதலென்றில் புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது.

புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர். படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 30 க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களுள் வரதர் அண்ணன், காதர், சூரியன் மற்றும் ஈழவன் ஆகியோர் அடங்குவர்.

கிழக்கில் வாகரைப் பிரதேசத்தில் படையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது 5 கிலோ கிறாம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது

புலிகளின் பிடியிலிருந்து இதுவரையில் 55286 பொது மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாலை தெற்குப் பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டுக்கான பாலமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதன் அமைப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பிரிகேடியர் கூறினார்