கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வன்னி மாவட்ட மாணவரை ஆற்றுப்படுத்த நடவடிக்கை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளப்பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் சீரான மனநிலையை மாணவர்கள் கொண்டிருப்பதை நோக்காகக்கொண்டு இந்த ஆற்றுப்படுத்தும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அண்மையில் இப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்றாமாண்டு மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து இம்மாணவர்களை ஆற்றுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அதற்கு முதல் காவலாளியாக பணியாற்றும் ஒருவரும் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இறுதியாக தற்கொலை செய்துகொண்ட மாணவி தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டதாகவும் இவரது பெயர் ரவீந்திரன் சுதர்சினி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கே மோதல் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளின் நிலை குறித்து சரியான தகவல்களை பெறமுடியாத நிலையில் மனப்பாதிப்புக்குள்ளானமை காரணமாக இவ்வாறான தற்கொலை முயற்சிக்கு மாணவர்கள் தள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளாகும் இம்மாணவர்களை கவனிப்பதற்கும் தேவையான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்மென வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை திரட்டுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா அதிகாரிகளைக் கேட்டுகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து கல்விகற்கும் 152 மாணவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கவனத்திற்குட்படுத்த வேண்டுமென கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என். பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் எந்தப்பாதிப்பும் வெளிப்படவில்லை. எனினும் வன்னியின் நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்கள் உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கலைப்பீட பரீட்சைகள் தவிர ஏனைய பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது எனவும் இவ்வாரத்தில் பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *