ரத்ம லானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
உயர்கல்வி வாய்ப்பை இழந்த நிலையில் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் நாட்டின் இளம் சந்ததியினருக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாடு பூராகவுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது 70 ஆயிரம் பேர் வரை பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையை ஒரு இலட்சமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ரத்மலானையிலுள்ள தேசிய கைத்தொழில் கற்கை நிறுவன வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராதனைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் கபில குணசேகரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இலங்கையின் தொழில் பயிற்சிக் கல்வியை உயர்தரத்தில் பேனுவதற்கு தேசிய தொழில்சார் மதிப்பீட்டு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக சலக கற்கைநெறிகளும் சமகாலத்துக்குப் பொருத்தமானதாக வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மருதானை மற்றும் அம்பாறை உட்பட நாடு முழுவதிலுமுள்ள 9 தொழில்நுட்பக் கல்லூரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.