April

April

இனிமேல் சிங்களவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வைக்கட்டும் !

இனிமேல் சிங்களவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வைக்கட்டும் !

வவுனியாவில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் எம்பி சத்தியலிங்கத்திடம் ஆனையிறவு உப்பிற்கு சிங்களப் பெயர் வைத்த விவகாரம் தொடர்பில் கேட்டபோது அவர் விரசமாக பதிலளித்தார். சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்தநாயக்க ஆனையிறவு உப்பின் பெயரை பார்க்காதீர்கள், உப்பின் சுவையை பாருங்கள் என்று கூறிய கருத்திற்கு எம்பி சத்தியலிங்கம் பதிலடியாக இப்படி பேசினார்.

தமிழ் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வீட்டிற்கு வாக்களிக்க முன்னாள் எம்பி சார்ள்ஸ் கோரிக்கை !

தமிழ் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வீட்டிற்கு வாக்களிக்க முன்னாள் எம்பி சார்ள்ஸ் கோரிக்கை !

தமிழர்களாகிய நாங்கள் எங்கள் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வேண்டும். எமது வரலாற்றை கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எனவே மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கும்படி வன்னி மாவட்ட முன்னாள் எம்பி இ. சாள்ர்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நானாட்டான் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி சாள்ர்ஸ் நாட்டில் ஜனாதிபதியாக அநுரகுமார திஸ்ஸநாயக்க இருக்கட்டும். ஆனால் உள்ளூராட்சி என்பது எமது தமிழரசு. அங்கே தமிழர்களாகிய நாங்களே எங்களை ஆள வேண்டும். அப்போது தான் எங்களுடைய அடையாளங்களை பாதுகாக்க முடியும். ஆகவே தமிழர்களாகிய நாங்கள் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

 

வறுமைக்குள் செல்லும் இலங்கை !

வறுமைக்குள் செல்லும் இலங்கை !

இலங்கை 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி கண்டிருந்தாலும், மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி தற்போதும் வறுமையில் அல்லது மீண்டும் வறுமைக்குள் செல்வதற்கான அபாயத்திலும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கி பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் என்ற இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்பு நிலை சிறப்பாக இருப்பதாகவும், 2024 இல் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 4.4% வளர்ச்சியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக தொழில்துறை மற்றும் சேவைத் துறைகள், குறிப்பாக கட்டிடத் துறை மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும், உலக வங்கி எச்சரிக்கையின்படி, இந்த வளர்ச்சி எல்லோருக்கும் சமானமாக பயனளிக்கவில்லை. குறிப்பாக வறுமையில் வாழ்பவர்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வறியவர்களுக்கு உதவும் கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்பாராத வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், மற்றும் உள்ளக கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இலங்கையின் வளர்ச்சி 3.5% வரை குறைவடையும் என இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் ! ஜனாதிபதி அநுரகுமார

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் ! ஜனாதிபதி அநுரகுமார

உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும், கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை மீண்டும் நிலைநிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பி வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி, தம்புள்ளை ரஜமகா விகாரையில், இன்று பிற்பகல் ஏப்ரல் 26 ஆம் திகதி தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சட்டத்தின் மூலம் மாத்திரம் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது அங்கு மதத் தத்துவத்திற்கு ஒரு பாரிய சமூக வகிபாகம் இருக்கின்றது. கிராமத்தின் விகாராதிபதி உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு அந்தப் பணியில் முதன்மையான பொறுப்பு உள்ளது என்று ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, நாட்டிற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் அறிவார்ந்த மற்றும் நல்லொழுக்கங்களுடன் கூடிய எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்காக கல்வித் துறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்ட வகையில் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஜேர்மனி இனவாதத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது: “லோரன்ஸ்க்கு நீதி வேண்டும்” இனவெறி ஜேர்மன் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் பலி !

ஜேர்மனி இனவாதத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது: “லோரன்ஸ்க்கு நீதி வேண்டும்” இனவெறி ஜேர்மன் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் பலி !

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான ஏப்பிரல் 20 ஆம் திகதி ஓல்டன்பேர்க் நகர மையத்தில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை சமாளிக்க அழைக்கப்பட்ட ஜேர்மன் அவசர உதவிப் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இளைஞன் லோரன்ஸ் 21 வயதானவர். அவர் அந்நகரத்தில் நன்கு அறியப்பட்ட கூடைப்பந்து வீரர் என்று கூறப்படுகிறது .

சம்பவம் நடந்த அன்று லோரன்ஸ் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்த பிறிதொரு பொலிஸ் குழு லோரன்ஸ்சை எதிர்கொண்டுள்ளது. அப்போது அவர் கத்தியை வைத்து பொலிஸாரை மிரட்டியதாகவும் எரிச்சலூட்டக் கூடிய கண்ணீர்ப் புகையை தெளித்ததாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 வயதான வெள்ளையின ஜேர்மன் பொலிஸ் அதிகாரி லோரன்ஸ்சை நோக்கி ஐந்து முறை சுட்டுள்ளார். லோரன்ஸின் மேல் உடல், இடுப்பு மற்றும் தலை மீது சூடு விழுந்துள்ளது. இந்த துப்பாக்ச்சி சூடு லோன்ரஸின் பின்பகுதியிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்த லோரன்ஸ் சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

லோரன்ஸிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக ஜேர்மன் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகிறது. அதேநேரம் லோரன்ஸ் கத்தியை வைத்து பொலிஸாரை மிரட்டியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. பொலிஸாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத போது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியில்லை. அப்படியிருக்க பின்னால் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை சட்டவிரோதமானது. இது இனவெறித் தாக்குதல் என ஜேர்மனி வாழ் புலம்பெயர் மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

லோரன்ஸ் சூட்டுக் கொல்லப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் சீருடைகளில் கமராக்கள் அணிந்திருந்துள்ளார்கள். ஆனால் பொலிஸாரின் நடவடிக்கையில் ஈடுபட்ட சமயம் கமராக்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. பொதுவாகவே பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்த எத்தனிக்கும் போது சீருடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற தானியங்கி கமராக்கள் பதிவு செய்யத் தொடங்கிவிடும். ஆனால் லோரன்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் கமராக்கள் வேலை செய்யவில்லை.

கறுப்பின இளைஞரான லோரன்ஸ் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதல் என கண்டிக்கும் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் “ லோரன்ஸ்க்கு நீதிவேண்டும்“ என்ற பேரணியை நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை கோருகின்றனர். சமீபகாலங்களில் ஹாசாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி ஜேர்மனியில் நடக்கின்ற பேரணிகளில் ஜேர்மன் பொலிஸார் அத்துமீறி வருகின்றனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனுமதி பெற்று நடக்கின்ற ஆர்ப்பாட்ட பேரணிகளில் பங்குபற்றும் முக்காடு அணிந்த பெண்கள் மீது ஜேர்மன் பொலிஸாரால் இனவாதத்தோடு தாக்கும் வீடியோப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

2020 ஆண்டு ஜோர்ஜ் புளோயிட் (George Floyd) என்ற கறுப்பினத்தவர் மினிசோட்டா வெள்ளையின பொலிஸாரின் இனவெறித்தாக்குதலில் கொல்லப்பட்டமையத் தொடர்ந்து எழுந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிடத்தக்கன. அமெரிக்காவைப் பொறுத்தவரை கறுப்பினத்தவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கும் அல்லது அவ்வாறான கிரிமினல் குற்றவாளிகள் கொடுமையான இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றமை வழமையானவையாகும்.

இந்தநிலமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013 ஆண்டு தொடங்கப்பட்ட “#பிளைக் லைவ்ஸ் மற்றர்#”( Black lives matters) இயக்கம் தொடர்ந்து போராடி வருகின்றது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்பிரல் 25 ஒல்டன்பேர்க்கில் ஆயிரக்கணக்கானோர் கூடி லோரன்ஸ்க்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக வெளிநாட்டவர்கள் மற்றும் ஜேர்மனி குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி இனவாத அரசியல் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அநியாயமான முறையில் லோரன்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டமையும் இப்பின்னணிகளிலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்று வரும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வெள்ளி ஏப்ரல் 25 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி வழமைபோல சம்பவ தினம் பாடசாலைக்குச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று,
அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில், வியாழக்கிழமை 24 ஆம் திகதி மாலை குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற வேலையில் இச் சம்பவத்தில் இரு மாணவர்கள் தப்பித்து கரை ஏறியுள்ளதாகவும், குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிர் இழந்தவரின் ஜனாசா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தம்பி !

அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தம்பி !

பாணந்துறை பிரதேசத்தில் தனது மூத்த சகோதரனை தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் தம்பி சரணடைந்துள்ளார். இரவு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்வத்த மீகஹா கோவில வீதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், தம்பி தனது கையால் மூத்த சகோதரனின் தலையில் அடித்ததாகவும், தாக்கப்பட்ட மூத்த சகோதரர் தரையில் விழுந்து தலை மோதியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

யாழில் கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம் எப்ரல் 24 ஆம் திகதி வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார். கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் – இந்தியா!

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் – இந்தியா!

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.