December

December

அனுர அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள். அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.

யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும். ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.

ஒவ்வொரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது. அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.

முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார்.

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய கப்பல் – மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா !

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய கப்பல் – மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா !

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த படகு நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது. இந்நிலையில், இன்று (20.12/2024) காலை திருகோணமலை துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டன. பின்னராக மருத்துவ பரிசோதனைகளுக்காக படகிலிருந்து பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர், சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவேளை கப்பல் கரையொதுங்கிய விவகாரம் தொடர்பாக நேரடியாக களத்திற்கு விஜயம் செய்துள்ளார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா. தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, உள்நாட்டு யுத்தம் காரணமாக 110 நபர்கள் மூன்று படகுகளில் தமது நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அதன்போது கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இரு படகுகள் விபத்திற்குள்ளானதாகவும் குறித்த அனர்தத்தில் சிறுவர்கள் உட்பட 6 நபர்கள் மரணமடைந்திருப்பதுடன் எஞ்சிய அனைவரும் குறித்த படகில் ஏறி உயிர்தப்பியதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இவர்களுக்கான ஆரம்பநிலை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் நீதித்துறையின் கட்டமைப்புக்களுக்கு இணங்க அவர்களுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதன்போது தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்! 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்!
இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு 31 ஆம் திகதி வழங்கப்படவிருக்கிறது. ஏலவே இப்பரீட்சையானது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த உள நெருக்கடியை வழங்குவதாக கல்வியாளர்கள் கண்டிக்கின்றனர். ஆளும் என்பிபி அரசாங்கமும் இப்பரீட்சை இலங்கையின் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்களை சிதைக்கிறது என கூறுகிறது. கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் மாணவர்களை உளநெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், தமது அரசு இந்த பரீட்சைகளை நிறுத்த திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்விக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியம் பற்றி தேசம்நெற் செய்திகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே. அண்மையில் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் ஒன்பது மற்றும் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட வகுப்புகளுக்கு தனியார் கல்விநிலையங்கள் வகுப்புகள் எடுக்கக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய உத்தரவு !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகி இருக்காமையின் காரணமாகவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறபித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முல்லைத்தீவில் ஒதுங்கியவர்களை, விரும்பமின்ற திருப்பி அனுப்பக்கூடாது! தஞ்சம் வழங்கப்பட வேண்டும்”

முல்லைத்தீவில் ஒதுங்கியவர்களை, விரும்பமின்ற திருப்பி அனுப்பக்கூடாது! தஞ்சம் வழங்கப்பட வேண்டும்”

‘முல்லைத்தீவில் கரை ஒதுங்கியவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் அவர்களை அவர்களுடைய விரும்பமின்றி எங்கும் திருப்பி அனுப்பக்கூடாது’ என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரோஹிங்யா முஸ்லீம்கள், மியன்மாரில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருந்தது. முல்லைத்தீவிற்கு வந்தவர்கள் ரோஹின்யா முஸ்லீம்கள் எனில் அவர்களுக்கு ஆளும் என்பிபி அரசு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவிடயத்தில் அந்த மக்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோருகின்றனர். வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் நீண்ட காலம் அகதி வாழ்க்கையை அனுபவித்தது. உலகின் பலநாடுகளிலும் இன்றும் அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள், அந்த அடிப்படையில் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்புவது வடக்கு – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் குரல் கொடுக்கும் வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் இது விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மனதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டமையை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்று வெளிநாட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று தத்தளித்திருக்கிறது. வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களே குறித்த படகை கண்டுள்ளனர். அப்படகில் 25 மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், இரண்டு கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்கள் உட்பட 103 பயணிகள் இருப்பதாக தெரியவந்தது. படகில் இருப்பவர்கள் மிகவும் சோர்வாகவும் பசியோடும் இருந்தனர். இவர்கள் மியான்மாரிலிருந்து வந்த சிறுபான்மையின மக்களான ரோஹிங்கியா முஸ்லீம்கள். ரோஹிங்கியா முஸ்லீம்கள் பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில் அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களால் திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மியான்மாரின் இனப்படுகொலையிலிருந்து தப்பி 7 இலட்சங்களுக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்கள் பங்களாதேசில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஏற்கனவே வறுமையில் உழலும் பங்களாதேசத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி முகாம்களில் ரோஹிங்கா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பங்களாதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கயா அகதிகளில் பலர் அதிக சன நெரிசல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் காரணமாக முகாம்களை வெளியேறுவதாகவும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் ஒதுங்கிய மாதிரியே 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து 104 பேர் கொண்ட அகதிகள் குழுவை கடற்படையினர் மீட்டனர். அவர்கள் மியன்மார் பிரஜைகள் என கடற்படையினர் அடையாளப்படுத்தினர். இவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண சிறையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு மிரிஹான மற்றும் வெலிசர குடிவரவு தடுத்து வைத்தல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த ரோஹிங்கியா அகதிகளைப் போன்று வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் ஆபத்தான படகுகளில் பயணித்துச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் கடலோடும் சங்கமமாகி உள்ளனர்.

நேற்றைய தினம் அகதிகளுடன் கடற்கலத்தை கண்டதும் மீனவர்கள் விரைந்து இத்தகவலை கடற்படை உட்பட அனைத்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்களுக்கும் அறிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர முன்னரே மீனவ சங்கத்தினர் படகில் சோர்வுடன் பசியோடு இருப்பவர்களை உடனடியாக உண்ணக் கூடிய உணவு, தண்ணீர், உலர் உணவு என்பவற்றை விநியோகித்தனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்த முல்லைத்தீவு மக்கள் படகில் வந்தவர்களுக்கு ஓடோடிச் சென்று மனிதாபிமான உதவிகளை நல்கியதில் ஆச்சரியம் இல்லை.

கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த எம்பி ரவிகரன் தெரிவித்தார். மேலும் அகதிகள் படகிற்கு வைத்தியர் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், அகதிகள் யாரும் கடும் சுகவீனமுற்று இருக்கவில்லை என்றும் கூறினார். படகில் உள்ளவர்களோடு உரையாடுவதற்கு மொழி தடையாகவுள்ளதால் மேலதிக தகவல்களை பெறுவதில் சிரமம் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

சோதனை மேல் சோதனை: தமிழரசுக் கட்சி மீது மற்றுமொரு வழக்கு!

சோதனை மேல் சோதனை: தமிழரசுக் கட்சி மீது மற்றுமொரு வழக்கு!
தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப சத்தியலிங்கத்திற்கு ‘கட்சியின் மத்திய குழுவிலிருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை’ என்பதை உறுதிப்படுத்துவதற்காக டிசம்பர் 18இல் கட்சியின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான சிவமோகன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே தமிழரசுக் கட்சி மீது இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, கட்சி இழுபறியில் உள்ளது. அக்கட்சிக்கு யார் தலைவர் என்பதிலும் இதுவரை தெளிவில்லை. மாவை உள்ளே – வெளியே விளையாட்டில் உள்ளார். சிறீதரன் தலைவரா இல்லையா என்று பல சிக்கலில் கட்சி உள்ள நிலையில், இன்னுமொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தை கொடுத்து பின் அதனை மீளப்பெற்று நடந்த சர்ச்சையால் தலைவர் யார் என்ற பிரச்சினை எழுந்தது. கடந்தவார இறுதியில் தமிழரசுக் கட்சி கூடிய போது அதற்குத் தீர்வுகாணப்படாமல் கூட்டம் டிசம்பர் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எம் ஏ சுமந்திரன், “இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர் மற்றும் சிலர் இடைநிறுத்தப்படுவர்” எனப் பூடகமாகத் தெரிவித்திருந்தமை டிசம்பர் 15இல் தேசம்நெற்இல் வெளியானது. “தமிழரசுக் கட்சி தான் பிரதான கட்சி, வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற கட்சி. ஆகவே நாங்கள் தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள்” என்ற தொனிப்பட கருத்து தெரிவித்தார் எம் எ சுமந்திரன். “வேறு யாராலும்: சிறிதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் உருவாக்குகின்ற வரைபுகளுக்கு இணங்கிச் செல்ல மாட்டோம்” எனவும் வைராக்கியமாக கூறினார் அவர்.
அதற்கு எதிர்வினையாகவே டிசம்பர் 18இல் சிவமோகன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப சத்தியலிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை சுமந்திரன் ஏற்காததால் அதனை சுமந்திரன் ப சத்தியலிங்கத்திற்கு மடைமாற்றினார். அதனால் சுமந்திரனின் விருப்பம் ப சத்தியலிங்கத்தினூடாக நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 28 தமிழரசுக் கட்சியின் தலைவராக ஒருவர் செயற்பட வேண்டியிருப்பதால் அதற்கு சி வி கெ சிவஞானத்தை கொண்டு வரும் முயற்சிகளில் சுமந்திரன் அணி ஈடுபட்டுள்ளது. அதனால் கூட்டத்தின் ஏற்பாட்டு ஒழுங்குகளை தலைவர் மாவையின் வழிகாட்டலின்படி செய்ய வேண்டும், சுமந்திரனின் வழிகாட்டலின் படியல்ல என்பதை உறுதிப்படுத்தவுமே சிவமோகன் இந்த வழக்கைத் தாக்கல் செய்ந்துள்ளார்.
“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. அதனை அவர் எதிர்வரும் நாட்களில் செய்வார். இதற்கு மத்திய குழுவும் சம்மதித்துள்ளது” என்று சென்ற வார இறுதியில் எம் ஏ சுமந்திரன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவர்” என்றும் தெரிவித்தார்.

யாழில் இருந்து ஹம்பிரியா வரை: பிரித்தானியாவின் பாலியல் வெறியர்கள்! பிடிக்கப்போன

யாழில் இருந்து ஹம்பிரியா வரை: பிரித்தானியாவின் பாலியல் வெறியர்கள்!

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் படகு !

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் நாட்டுப்படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25 மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நாட்டுப்படகு இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்  விவகாரம் – சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட கருணா !

பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்  விவகாரம் – சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட கருணா !

கிழக்கு மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விரிவுரையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையில் சிலர் பதவிகளை துறந்து நாட்டை விட்டு வெளியேறினர்.

அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்த கலாநிதி கே. பத்மநாதன் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் புதிய துணை வேந்தராக பதவியேற்று கொண்ட பேராசிரியர் சி. ரவிந்திரநாத், பதவியேற்று சில வாரங்களின் பின்னரே மர்மமான முறையில் காணாமல் போனார்.

இவர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்து அவ்வேளை கருணா குழுவாக செயல்பட்டவர்களே பொறுப்பு என மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன அக் குழுவினரால் அவை அவ்வேளை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்  விவகாரம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த கருணா ஊடகங்களிடம் பேசும் போது, ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை !

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கில் இன்று அவர் ஆஜராகவேண்டிய நிலையில் வழக்கிற்கு வருகை தரவில்லை என்பதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

கலகோட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

எவ்வறாயினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.