“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – “வேறு அதிகாரங்கள் வேண்டாம். மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!
மாகாண சபை முறை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ள கருத்து பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.
‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று. இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன். அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள். இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள். அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். என்னை தாக்க முடியாது. இவருக்கு என் தந்தையின் வயது. இவரை தாக்கி நானே சீபிஆர் செய்ய வேண்டி வரும். அதனால் தாக்கவில்லை.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்றுமொரு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சபையில் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.
இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எங்களிற்கு இந்த தேசத்தின் பிரஜைகள் விடுத்துள்ள சவாலை கரங்களில் எடுங்கள் பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுங்கள்,
நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை சிறந்த இடமாக மாற்றுவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை தலைப்புச்செய்திகளை மட்டுமே வைத்து அரசியல் பேசும் தமிழ் தேசியவாதிகள் – டில்வின் சில்வா உண்மையிலேயே தெரிவித்தது என்ன..?
டில்வின் சில்வா மாகாண சபை நீக்கம் பற்றி பேசிய கருத்தை வைத்து என்.பி.பி அரசு மீதான தமது எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் ” மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவே இல்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால் , மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந் தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரச மைப்புதேவை . அதில் மாகாண சபை இருக்குமா , இல்லையா என்பதே விடயம்” என ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துகொள்ள டில்வின் சில்வா ” 2024 நவெம்பர் 30 வீரகேசரி செய்தித்தாள் என்னுடன் நடாத்திய நேர்காணலைச் சார்ந்ததாக பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தி மற்றும் தலைப்பு காரணமாக வாசகர் மத்தியில் தவறான கருத்து தோன்றுவதால் அதனை சரிசெய்யவேண்டியுள்ளது. வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் தவறியுள்ளதெனவும் அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே அதன்போது நான் கூறினேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டின் சகல இனத்தவராலும் ஏற்றுக்கொள்ள ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை இனங்களின் அரசியல் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக என்.பி.பி மீது கல் எறிவதற்கான சூழலை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். இனவாதம் நீங்கிப் போனால் தாம் அரசியல் செய்ய முடியாது என்ற அச்சத்தின் வெளிப்பாடே தமிழ்தேசிய தலைமைகளின் எதிர்ப்புக்கு காரணம் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டிலேயே டில்வின் சில்வா கூற வந்த விடயம் இனவாதமாக ஊடகங்களினால் கையாளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மேலும் 13ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபை முறையை தமிழர்கள் தம் ஆஸ்தான நாயகர்கள் என கூறப்படும் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என சட்டத்தரணி பஷீர் செய்யத் தேசம் நெட் நேர்காணலில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகவும் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் – மக்கள் போராட்ட முன்னணி விசனம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறிய அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக்குறுகிய கால இடைவெளியில் இரண்டாவது தடவையாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் இடம்பெற்றுள்ளது. இதனை மக்கள் போராட்ட முன்னணி ஓர் ஊடக அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் “பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாட்டுச் சட்டமாக ஆறு மாத காலத்திற்குள் நீக்கப்படும் எனத் தெரிவித்தே நிறைவேற்றப்பட்டது என்பதோடு இந்த சட்டத்தின் அமுலாக்கம் பாரிய இனப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இது தமிழ் மக்களுக்கு எதிராகவும், தற்போதைய அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, இந்தச் சட்டம் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்ததையும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை தொடர்ந்து எதிர்த்து வந்ததையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்துவதன் ஊடாக அதை சமூகத்தில் சாதாரண விடயமாக மாற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாறாக தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்சட்டத்தை விரைவில் ரத்துச் செய்ய வேண்டும். மேலும், அதற்குப் பதிலாக வேறொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என்பது கொள்கையாக இருக்க வேண்டும். இனவாதத்தை முறியடித்து அதற்கு அடிப்படையாக இருக்கும் அரச அடக்குமுறையையும் தோற்கடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை எமது சமூகத்திடம் வலியுறுத்துகிறோம்.” என குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் தொடர்பில் தேர்தல் காலத்திற்கு முன்பிருந்தே அனுர தரப்பு பேசி வந்த நிலையில் தற்போது பின்னடிப்பது மக்கள் மத்தியில் விசனமான ஓர் நிலையை தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளதுடன் புதிய பாராளுமன்ற அமர்வுகள் கூட ஆரம்பித்துள்ள நிலையில் இது தொடர்பான மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை குறித்த பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழ்தேசிய தரப்பு எதிர்த்து ஓர் ஊடக அறிக்கையை கூட வெளியிடவில்லை. மாறாக தமிழரசுக் கட்சியினரும் – தமிழ் தலைமைகளும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து கிடப்பதுடன் – உட்கட்சி பூசல்களிலும் ஈடுபட்டு வருகிறது. மாவீரர் தினம் என மக்களை உசுப்பேற்றி அவர்களை மீள மீள இனவாத சகதியில் தள்ளும் வேலையை தற்போதைய தமிழ்தேசிய அரசியல் தலைமைகள் கச்சிதமாக செய்து வருவதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
மக்கள் போராட்ட முன்னணியின் ஊடக அறிக்கை முழுமையான வடிவம் !
‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை’ பயன்படுத்தி நபர்களை கைது செய்வதை நிறுத்தி, நாடாளுமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அடக்குமுறைச் சட்டத்தை நீக்கு!
சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில், ரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் அந்த நபர்கள் மீது பொதுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பது இது இரண்டாவது தடவையாகும். முன்னதாக, அறுகம் குடா சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கையிலும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் முன்வைத்தது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி 1783/2024 என்ற இலக்கத்துடனான பொலிஸாரின் ஊடக அறிக்கையில், ‘புலிகளின் மாவீரர் தினப் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேகநபர்கள் கைது’ என்ற தலைப்பில், குறித்த கைது தொடர்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
நாட்டில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் காணொளியை முகநூல் சமூக வலைத்தளக் கணக்கின் ஊடாக வெளியிட்டமை தொடர்பிலும் கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களைக் கொண்டாடும் போது எடுக்கப்பட்ட கானொளியை இந்த வருடம் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதாகக் கூறி முகநூல் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பிலும் அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஃபேஸ்புக் ஊடாக இணையத்தில் பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் காணொளிகளை பரப்பியதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தண்டனைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 27 மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 120 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக டிசம்பர் 02 ஆம் திகதிய தினமின பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாட்டுச் சட்டமாக ஆறு மாத காலத்திற்குள் நீக்கப்படும் எனத் தெரிவித்தே நிறைவேற்றப்பட்டது என்பதோடு இந்த சட்டத்தின் அமுலாக்கம் பாரிய இனப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இது தமிழ் மக்களுக்கு எதிராகவும், தற்போதைய அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, இந்தச் சட்டம் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்ததையும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை தொடர்ந்து எதிர்த்து வந்ததையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியும் அதே நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வந்ததோடு, இந்தச் சட்டத்தை ரத்துச் செய்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர அப்போதைய அரசாங்கம் முயற்சித்த போதும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது, சிலர் கூறுவது போல, இந்தச் சட்டம் அரசாங்கத்தால் நல்லெண்ணத்துடன் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்ற எளிய வாதமாகச் சுருக்கப்படவில்லை. மேலும் வரலாற்று ரீதியாக இச் சட்டம் தமிழ், முஸ்லிம் மற்றும் முற்போக்கு மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சூழலில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. மேலும் இச்சட்டத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் குற்றவியல் சட்டம், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் போன்ற ஏற்கனவே உள்ள கணிசமான சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நீதித்துறை மேற்பார்வையின்றி நிறைவேற்று அதிகாரத்தின் எதேச்சதிகார விருப்பப்படி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்களின் வரலாற்று ரீதியான இனவாத தலையீடுகளையும் இந்த சம்பவங்கள் தொடர்பான செயற்பாடுகளையும் நாம் அரசியல் ரீதியாக தெளிவாக நிராகரிக்கின்றோம் என்பதை இங்கு மேலும் வலியுறுத்துகிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இனவாதத்தைத் தூண்டும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்துவதன் ஊடாக அதை சமூகத்தில் சாதாரண விடயமாக மாற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாறாக தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்சட்டத்தை விரைவில் ரத்துச் செய்ய வேண்டும். மேலும், அதற்குப் பதிலாக வேறொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என்பது கொள்கையாக இருக்க வேண்டும். இனவாதத்தை முறியடித்து அதற்கு அடிப்படையாக இருக்கும் அரச அடக்குமுறையையும் தோற்கடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை எமது சமூகத்திடம் வலியுறுத்துகிறோம்.
“16 வயதிலேயே போராட்டத்திற்கு போனவன் நான் – எதற்கும் மிரண்டு போக மாட்டேன் ” – பிள்ளையான்
மாகாண சபை முறை நீக்கம் – ஜே.வி.பி ரில்வின் சில்வாவை வைத்து இனவாத தீயை வளர்க்கும் தமிழ்தேசியம்
இன்றைய செய்திகள்: 02.12.2024
1. “நான் எந்த நாட்டுக்கும் தப்பித்துப் போகப் போவதில்லை! ஈஸ்டர் குண்டுதாரிகளை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்!” – பிள்ளையான்: “அசாத் மௌலான தனக்கும் குடும்பத்துக்கும் விஸா எடுப்பதற்கு விட்ட ரீல்களை வைத்துக் கொண்டு படங்காட்ட வேண்டாம். ஈஸ்டர் குண்டுதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்” என்று தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று தேசம் ரியூப்பில் வெளியாகியுள்ள இக்காணொலியில், “இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்ற மௌலவியை சிறையிலிருந்த 500 வரையானவர்களில் ஒருவராக கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவர்களுடைய அதிதீவிரவாதத்தை அவர்களிடமே கண்டித்து இருக்கிறேன்” என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.
“அசாத் மௌலானா விசா எடுப்பதற்காகவும் பணத்திற்காகவும் சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத்துப் புலிகளுக்காகப் புனைந்த கதை தான் அது. ரிஎம்விபியினது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சுவிஸில் உள்ள யாழ்பாணத்து புலிகள் தமிழ் தேசியம் தமிழரசுக் கட்சி செய்த சதி தான் இது” எனவும் பிள்ளையான் குற்றம்சாட்டினார். “யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்களுக்கு ஒப்பாக நான் முப்பதினாயிரம் வரை வாக்குகளைப் பெற்றவன். என்னிலும் பார்க்க பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு எல்லாம் குறைந்த வாக்குகளே கிடைத்தது. இந்த நெருக்கடியிலும் மட்டக்களப்பு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.
“ரிஎம்விபி யும் பிள்ளையானும் இந்த வீழ்ச்சியில் இருந்து நிச்சயம் மீள எழுவோம் எனத் தெரிவித்த பிள்ளையான் 16 வயதிலேயே போராடப் போய் எத்தனையோ அனுபவித்துவிட்டோம் இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிடமாட்டோம். ஜனாதிபதி அனுரா தேர்தலில் என்னைத் தோற்கடிக்க என்னை விசாரணைக்கு அழைத்தார்;. அவர் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றும் அந்த நீண்ட நேர்காணலில் பிள்ளையான் தெரிவித்தார்.
2. தமிழ், மலையக, முஸ்லீம் தேசியவாதம் அதன் இறுதிக்கட்டத்தில்: தமிழ், முஸ்லீம், மலையக சிறுபான்மையினத் தேசியக் கட்சிகளுக்கு இதுவொரு இருப்புக்கான ஆபத்து என்று தெரிவிக்கின்றார் சட்டத்தரணியும் ஆய்வாளருமான நிஸ்தார் மொமகட். இவர்கள் இனி இனவாதம் பேசி இனமுரண்பாடுகளை தீவிரப்படுத்தவே முயற்சிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மையினங்களுக்கு தேசிய மக்கள் சக்தியைவிட மாற்றுத் தெரிவு இல்லையெனத் தெரிவித்த நிஸ்தார் மொகமட், தேசிய மக்கள் சக்தி இதுவரை நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுவருகின்றது என்றும் அவர்களுக்கு இந்த 75 ஆண்டுகால அரசியற் பொறிமுறையை மாற்றி அமைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த அவகாசம் அடுத்த ஜனாதிபதி,பாராளுமன்றத் தேர்தல் வரை வழங்கப்படுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்தார்.
3. 13வது திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்களுக்கு எவ்வித பயனும் இல்லை! ஜனாதிபதி முறைமை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்: “13வது திருத்தச் சட்டம் இந்தியா தனது நலன்களைப் பேறுவதற்காக உருவாக்கிய விடயம் அதில் முஸ்லீம்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்கிறார் சட்டத்தரணியும் மனித உரிமைவாதியும் அரசியல் ஆய்வாளருமான சையட் பஷீர். “கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக வந்தார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினை காணிப்பிரச்சினை.
4. தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் “முஸ்லீம் ஒருவர் அமைச்சராக இல்லாததை இனவாதமாகப் பார்க்க முடியாது ஏனெனில், முஸ்லீம்கள் கடந்த ஜந்து ஆண்டுகளில் தான் தேசிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள். அவர்கள் அந்தக் கட்சியில் இருந்து படிப்படியாகவே தலைமைத்துவத்திற்கு வரமுடியும்” என்றும் சுட்டிக்காட்டினார் சையட் பசீர்.
இராமலிங்கம் சந்திரசேகர் ஜேவிபி இன் மிக நீண்டகால உறுப்பினர். போராடியவர். அக்கட்சிகாக சிறை சென்றவர். அருண் ஹேமச்சந்திராவும் கட்சியில் நீண்டகால உறுப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டவர். சரோஜினி போல்ராஜ்ம் அவ்வாறே எனக் குறிப்பிட்ட அவர், அடுத்தடுத்த பாராளுமன்றங்களில் தேசிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லீம்கள் தங்களை வளர்த்துக்கொள்வார்கள் அடுத்தடுத்த பதவி நிலைகளுக்குச் செல்வார்கள் என்றும் சையத் பஷீர் தெரிவித்தார்.
“ஆனால் ஜனாதிபதி முறைமை இயலுமான வரை ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயகம் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதையும் சையத் பஷீர் அந்நேர்காணலில் சுட்டிக்காட்டினார். அம்பாறை மாவடிப்பாலத்தில் நடந்தது மிகப்பெரும் இழப்பு, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சையட் பஷீர் மதராசா பள்ளி ஏன் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பியது, பாதுகாப்புப் படையினர் ஏன் மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரத்தை அப்பாதையினூடாக அனுமதித்தனர் போன்ற கேள்விகளுக்கு முறையான நீதிமன்ற விசாரணையூடாகவே விடைகிடைக்கும் என்றும் அதுவரை நாங்கள் யாரையும் குற்றம்சாட்டுவது பொருத்தமில்லை எனவும் தெரிவித்தார் சையத் பஷீர். முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு படையினர் மீது மட்டும் உடனடியாகக் குற்றம்சாட்டுவது அவரது தேர்தல் தோல்விக்கு பழிவாங்கும் அரசியலே எனவும் சையத் பஷீர் குற்றம்சாட்டினார்.
5. இரத்தம் தானம்! அது விற்பனைக்கு இல்லை! மீறுவது சட்டப்படி குற்றம்!: இரத்தத்திற்கு பணம் வசூலிக்கும் தனியார் வைத்திய சாலைகளின் மோசடி அம்பலம். தனியார் மருத்துவ மனைகளில் இரத்தத்திற்கு மக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்கிறார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி . நாட்டின் எப்பகுதியிலும் இரத்தத்தை விற்பனை செய்வோ கொள்முதல் செய்யவோ முடியாது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரத்த வங்கியில் தொண்டர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு இலவசமாக தனியார் வைத்தியசாலை உட்பட அனைத்து நோயாளிகளுக்கும் ஏற்றப்படுகிறது என்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி.
“ஊசி அர்ச்சுனா பொய் சொல்லி பாராளுமன்ற பதவியைப் பெற்றுள்ளார்”: ஊசி அர்ச்சுனா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும், மருத்துவதுறையில் காணப்பட்ட மோசடிகளை, ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் ஊசி அர்ச்சுனா என்றால் மிகையல்ல. அந்த அடிப்படையில் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பிய பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் இருந்தது என்ற ஐபிசியின் கேள்விக்குப் பதிலளித்த வைத்தியர் சத்தியமூர்த்தி “ஊசி அர்ச்சுனா பொய் சொல்லி பாராளுமன்ற பதவியைப் பெற்றுள்ளார்” எனக் குற்றம்சாட்டினார்.
அதீத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்: அந்நேர்காணலில், பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் வைத்தியர் த சத்தியமூர்த்தி நிராகரித்தார். மருத்துவத்துறையில் தவறுகள் இடம்பெறும் போது அது தொடர்பாக முறையாக விசாரித்து தண்டணைகள் வழங்கப்படவில்லை, நோயாளிகளை வைத்திய நிபுணர்கள் பார்வையிடுவதற்குப் பதிலாக வைத்திய மாணவர்கள் பரிசோதிப்பதிக்கின்றார்கள், மருத்துவ மாணவர்கள் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர் என்றும், வைத்தியர்கள் மீது அதீத குற்றச்சாட்டுக்கள் எழும் போது அவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார் வைத்தியர் த சத்தியமூர்த்தி.
6. பாலஸ்தீன மக்களின் துயரங்கள் சகித்துக்கொள்ள முடியாதவை ஜனாதிபதி அனுரா: பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்குஆசியாவிலும் ஒருவருடத்திற்கு மேலாக நீடித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரும் அழிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை சகித்துக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களிற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர், பல சர்வதேச மன்றங்களில் இலங்கை காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடனடி யுத்த நிறுத்தத்திற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கான ஆதரவிலிருந்து இலங்கை பின்வாங்ககூடாது என்பதை பாலஸ்தீனியர்களி;ற்கான ஐநா தினம் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச சட்டம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வை காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி ஆபத்தான விதத்தில் தீவிரமடைந்துள்ளமையும், சர்வதேச அளவில் அதன் தாக்கமும்,பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஏழு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேலும் அவசியமானவையாக மாற்றியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளமை ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
7. மாகாணசபையை நீக்கி புதிய அரசியலமைப்பு– ஜேவிபி செயலாளர் ரில்வின் சில்வா: மாகாண சபை முறையை நீக்கப்போவதாக ரில்வின் சில்வா அறிவித்ததாக மேற்கோள் காட்டி குறும்தேசியவாத ஊடகங்கள் மீள ஓர் இனவாத தீயை வளர்க்க ஆரம்பித்துள்ளன. இது தொடர்பில் ரில்வின் சில்வா குறிப்பிட்டதாவது, “இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும்.”
“பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்பட உள்ளதாகவும் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகுகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8. இந்திய உயர்ஸ்தானிகர் – கடற்தொழில் அமைச்சர் சந்திப்பு: கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை டிசம்பர் 04ம் திகதி கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது. விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கிறார். இதேநேரம், கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும் இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவிடம் பேசியதும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சமும் முன்னெடுத்தது இல்லை. இந்தியா தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் – இலங்கை தமிழருக்கு இந்தியா தான் உற்ற நண்பன் என கூறி இந்தியாவின் காலில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் பிரச்சினை பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.
9. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூவர் கைது: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மூன்று கைதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பகிர்ந்தமைக்காக கைதாகியுள்ளார். அதேவேளை தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் கைதாகியுள்ளது தற்போது பாரிய பேசுபொருளாகியுள்ளது. தமிழர்கள் மேற்கொண்ட நினைவேந்தல் நிகழ்வுகளை புலிகளை மீள உருவாக்கும் செயல் – பயங்கரவாதத்தை மீள உருவாக்குகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டமைக்காக தென்னிலங்கையை சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர். பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் தவறான வகையில் கருத்து பரப்பிய அடிப்படையில் தான் இந்த கைதுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
10. பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
11. பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கு தடகொல – சட்டத்தின் முன் யாருக்கும் விதிவிலக்கு அல்ல
போக்குவரத்து விதிமுறைகளை சாதாரண மக்கள் மீறும் போது ஓர் சட்டமும், பாராளுமன்ற எம்.பிக்கள் அல்லது அமைச்சர்கள் மீறும்போது ஓர் சட்டமும் என்ற வழக்காறு நீண்ட காலமாகவே இலங்கையில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து விதிமுறை சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் போது எந்த ஒரு தண்டனையும் இன்றி சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ளும் போக்கு காணப்பட்டது. இருந்தாலும் தேர்தல் பிரச்சார காலம் முதல் நாட்டின் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது. அதனை மீள நினைவுபடுத்தும் படியான ஓர் சமூக வலைத்தள பதிவை பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திரா பகிர்ந்துள்ளார். அதாவது தான் போக்குவரத்து விதிமுறையை மீறியதாகவும் அதற்காக போக்குவரத்து பொலிசாரினால் அறவிடப்படும் தண்டனைப் பணமும் அதற்கான தடகொலவும் தான் செலுத்தியதக ஓர் பதிவை அவர் பதிவேற்றியுள்ளார்.
குறித்த பதிவில் அருண் ஹேமச்சந்திரா “Let the change start from us. Let no one be above the law despite of their position” என குறிப்பிடப்பட்டுள்ளார். அதாவது” மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும். பதவியில் இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டாம்” என அவர் குறித்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
என்.பி.பியின் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க தயார் – சுமந்திரன் வழியில் சாணக்கியன்!
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டுக்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். இது நாட்டுக்கு மிகவும் நல்லது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருகிறார். அது சாதகமான அறிகுறி. ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
காலாதி காலமாக எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் செய்துவந்ததுள்ளதே கடந்த கால வரலாறு.இதனால் எதையுமே தமிழர் தரப்பால் சாதிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி குறித்தான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தமிழ்தேசிய அரசியல் பரப்பில் முதன்முதலில் பகிரங்கமாக முன்வைத்தவர் எம்.ஏ.சுமந்திரன் தான். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது யாழ்ப்பாணத்தில் வைத்து அனுர குமார இனவாதத்தை தூண்டினார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் கருத்துக்களை முன்வைத்த போது அதனை மறுத்து உடனடியாகவே அனுர குமார இனவாத கருத்துக்களை வெளியிடவில்லை என சுமந்திரன் கூறியது நல்ல ஒரு நகர்வு என பல அரசியல் நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான இணக்கமான சூழல் ஒன்று இருப்பதாகவும் சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார். இப்படியான சூழலில் தமிழரசுக்கட்சியின் நகர்வுகளில் சுமந்திரனுக்கு மிக்க நெருக்கமான சாணக்கியனும் அதே போன்றதொரு நிலைப்பாட்டை பின்பற்றுவதானது ஆரோக்கியமான சூழலை நோக்கி தமிழ்தேசிய அரசியல் நகர்வதை காட்டுவதாக அமைந்துள்ளது.
கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நான்கு பேரும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பாடசாலைகளில் கற்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது
இதன்போது அங்கு வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன் சம்பவத்தின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நவம்பர் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரின் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த புகைப்படத்தினை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை முகநூலில் பரப்பியமை தொடர்பில் மருதானை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர், பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர், பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் மற்றும் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.