November

November

“நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தைப் பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்று சனிக்கிழமை (25) பிற்பகல் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். சில பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, தான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்..

அவ்வாறு ஏற்றுக்கொண்ட நாட்டை சரியான திசையில் கொண்டு சென்று பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து 5 வருடங்கள் சென்றாலும் மீட்க முடியாது என எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறினாலும், 16 மாத குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்திருக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை பாராட்டிய பிரதேச அரசியல் பிரதிநிதிகள், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

2021 முதலில் ஒரு நாடு என்ற வகையில் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டோம். 2022இல், இது ஒரு நெருக்கடியாக மாறியது. நாட்டின் அனைத்து விவகாரங்களும் முடங்கியது. நாடு பணத்தை இழந்தது. வருமானம் இல்லாமலானது. அதே நேரத்தில், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் நிறுத்தப்பட்டன. நாம் வங்குரோத்து அடைந்த நாடாக மாறியதால், வெளிநாடுகளின் உதவியையும் இழந்தோம்.

அந்த சவாலான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று சொன்னவர்கள் கைவிட்டுச் செல்லும்பொது, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதன்போது, அரசியல் வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் எனக்கு உதவின. எவ்வாறாயினும், நாங்கள் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றோம்.

நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, வீழ்ச்சியடைந்துள்ள இந்தப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப 04 – 05 வருடங்கள் ஆகும் என்று பலர் கூறினார்கள். இதற்குத் தீர்வு இல்லை என்று பலர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர். நாங்கள் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனும் ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு வங்குரோத்து என்ற முத்திரையில் இருந்து விடுபடும் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்காக எங்களுக்கு 16 மாதங்கள் தேவைப்பட்டன. எதிர்க்கட்சிகள் எங்களை ஆதரித்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே இதை நிறைவேற்றியிருக்கலாம்.

நாம் கடினமான பயணத்தையே மேற்கொண்டோம். எவ்வாறாயினும் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க முடிந்துள்ளது. இவ்வாறு செய்ய முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. மேலும், சமுர்த்தியைப் போன்று மூன்று மடங்கு அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. இவை கடினமான நேரத்திலே செய்யப்பட்டன. மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களின் மேம்பாட்டிற்காக பணத்தை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

நான் அத்தோடு நிற்கவில்லை. இந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முடிந்த அளவு நிவாரணங்களை வழங்கவே நான் முயற்சிக்கிறேன். அதற்காக நாட்டில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலின் முதல் படி உரிமையாகும். இதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தச் செயற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். இந்தத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இது யாராலும் செய்ய முடியாத காரியம். ஏனையவர்கள் வெறுமனே கதை பேசினார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் இணைந்து இவற்றை நடைமுறைப்படுத்தினோம்.

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எமக்காக அல்ல, நம் குழந்தைகளுக்காக, குழந்தைகளின் குழந்தைகளுக்காக ஒரு நல்ல நாட்டை உருவாக்க வேண்டும். நாம் அவர்களுக்காக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மாத்திரமே கவலைப்படுகிறார்கள். எவ்வாறு ஆட்சியைப் பிடிப்பது என்று சிந்திக்கிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி எங்களுடன் இணைவதே என்று நான் அவர்களுக்குக் கூறுகின்றேன். எங்கள் அனுபவத்தைப் பெற்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்குமாறு நான் அவர்களிடம் கூறுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்வோம்” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபைத் தலைவர் எல். டி.நிமலசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மலேசியாவிற்கு கடத்தப்படும் வடக்கு – கிழக்கு சிறுவர்கள்!

இந்த நாட்டில் இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

அந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் ஊடகப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட தமிழ் சிறுவர்கள் மலேசியாவிற்கு அனுப்பப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

இந்த சிறுவர்கள் இந்நாட்டில் இருந்து மலேசியா செல்வதற்கு சட்டபூர்வ கடவுச்சீட்டை பயன்படுத்துவதாகவும், மலேசியாவில் போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

 

இந்த முறையில், இந்த நாட்டிலிருந்து சுமார் 13 சிறுவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் இடைத்தரகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வைத்தியர் 200,000 ரூபா பிணையில் விடுதலை !

புளியங்குளத்தில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வைத்தியர் 200,000 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் !

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.

வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

பாலஸ்தீனம் – வெளியுறவு கொள்கைகள் !

இஸ்ரல் பாலஸ்தீன் பிரச்சினை உச்சமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் தேசம் திரையின் இந்த காணொளி பாலஸ்தீனின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பில் அலசி ஆராய்கிறது.

[தேசம் திரையின் புதிய YouTubeபக்கத்தை Subscribeசெய்வதன் மூலம் நமது புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க முடியும்.]

 

https://youtu.be/B2vLXZaTfo0?si=biC5NLt-utYl4YKh

ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் – இஸ்ரேல்

ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் என இஸ்ரேல் படை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பில் வெள்ளியன்று இரவு இஸ்ரேல் படைத்துறை பேச்சார் டானியர்ஹகாரி தெரிவிக்கையில்,

ஹமாஸ் அமைப்பின் தலைமைகள் காசாவிலும் உலகம் முழுவதும் பின்தொடரப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஹகாரியின் எச்சரிக்கை கத்தார் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹமாஸ் தலைமைக்கு இஸ்ரேல் படை அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பின்தொடரும் என்று சமிக்ஞை செய்கிறது.

இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை ஒழிப்பதற்கான பல புகழ்பெற்ற இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு இது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

 

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை – ஐ.நா விசேட பிரதிநிதிகள்

ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் மூவரால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

 

இந்த இரு சட்டமூலங்களும் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து வௌியிடுவதற்கான சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான விசேட பிரதிநிதி Irene Khan, அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் செயற்படுதலுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule மற்றும் தனியார் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி Ana Brian Nougrères ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

 

மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தினால் பாதுகாக்கப்பட்ட தனிநபருக்கான உரிமைகள், கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மற்றும் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கான உரிமை என்பன இந்த இரண்டு சட்டமூலங்களாலும் மீறப்படுவதாக

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேற்கூறப்பட்ட இரு உலகளாவிய பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக ஐ.நா விசேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரடனங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

உத்தேச சட்டமூலங்களின் ஊடாக நிகழ்நிலையில் கருத்து வௌியிடுவதற்கான உரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், கடுமையாக அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தடைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்த சடடமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வெவ்வேறு துறைகளை சேர்ந்தோர் கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கமைய ஆணைக்குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் பக்கசார்பற்ற முறையில் செயற்படும் ஊடக நிறுவனங்களை தண்டிக்கவோ அல்லது உரிமத்தை இரத்து செய்யவோ நாட்டின் நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்த ண்காணிப்பு செயற்பாடு சுதந்திரமான மற்றும் அழுத்தங்களுக்கு உட்படாத அமைப்பாக இருக்க வேண்டும் எனவும் அதில் அரசியல் தொடர்புகள் இருக்கக்கூடாது எனவும் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த இரு சட்டமூலங்க​ளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச நிறுவனங்களில் ஊழல் பற்றி ஆராய பிரதேச செயலக மட்டத்தில் நேர்மையான அதிகாரி !

சில அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு செயற்படவேண்டிய முறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் 2023.11.17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 

அதற்கமைய, பிரதேச செயலக மட்டத்தில் நேர்மையான அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

 

இதன்போது குழு முன்னிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது.

 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு திறமையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முடியாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அந்தந்தப் பதவிகளுக்கு போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் திறமையான அதிகாரிகளை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சம்பளத்துடன் ஒப்பிட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் கேட்டுக்கொண்டனர்.

 

அதற்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சேவைகளை வினைத்திறனுடன் பெற்றுக் கொள்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு சரியான சம்பள அளவை அமைத்து சம்பளம் வழங்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார். சம்பள அதிகரிப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைகளை உரிய பிரிவுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

புதிய சட்டத்தின் மூலம் முன்பை விட பல துறைகளில் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிக்கைகளை வழங்கும் அனைத்து நபர்களிடமிருந்தும் அந்த அறிக்கைகளைப் பெறுவதற்கு தமக்கு உரிமை உண்டு என்றும், அது இலத்திரனியல் முறையில் (electronic system) மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், அதற்குத் தேவையான இலத்திரனியல் கட்டமைப்பு, தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமை காரணமாக அந்தச் செயன்முறையை ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர்.

 

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளைக் குறைப்பதற்கு அந்த ஆணைக்குழுவினால் சமூகத்தில் மேற்கொள்ளும் விழிப்புணர்வைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கும், அந்த விழிப்புணர்வை அதிகரிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது !

சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை நேற்று வழங்கியிருந்தார். அதனடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.” – இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

 

இந் நாட்டில் மக்களின் வரிகளை பெற்றுக்கொண்டு மாளிகைகளும் கோபுரங்களும் கட்டி வைத்துள்ள இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ மேலதிகாரிகளின் பாதுகாப்புக்கென பாரிய நிதி செலவிடப்படுகின்றது.

 

இருப்பினும் இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் யுத்தம் முடிந்த பின்னும் கோட்டாபயவினார் மேலதிகமாக இணைக்கப்பட்டு அவர்கள் மேசன், தச்சுத்தொழில் மற்றும் கூலி வேலைகளுக்க்காக அமர்த்தப்பட்டார்கள்.

 

இலங்கை மக்கள் அவர்களின் வேதனத்துக்கும் சேர்த்து தற்பொழுது பாரிய வரி செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுள்ளார்கள்.

 

இருப்பினும் இவர்களும் இப் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுள்ளனர். ஆனால் இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் ஆனது இன விரோதத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் அவமரியாதை செய்யும் விதமகாவும் அமைந்துள்ளது.

 

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டதை நான் மிகவும் துக்ககரமான சம்பவமாக கருதுகின்றேன்.

 

ஓர் இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இந்த இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிப்பதாகும். அவர்களின் பெற்றபெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் பிள்ளைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள் என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.