July

July

அவர் ஏவிய பூமேராங்கினால் அவரே தாக்கப்பட்டார் – பதவி விலகுகிறார் போரிஸ் ஜான்சன் !

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.

 

இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பின்னர் அடுத்தடுத்து கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக நீடிப்பதாக பிரித்தானிய பிரதமர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பல உலகத்தலைவர்களும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல தலைவர்களும் பிரெக்ஸிட் வெளியேற்றத்தை காரணம் காட்டி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதே நேரம் உக்ரைன் ஜனாதிபதியின்  ஆலோசகர், மைக்கைலோ போடோலியாக் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது”  “ஏவுகணைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், கியேவுக்கு முதலில் வந்தவர் ஜோன்சன். எப்போதும் உக்ரைனை ஆதரிப்பதில் முன்னணியில் இருப்பதற்காக அவருக்கு நன்றி” என  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர்களிடம் தெரிவித்த போது “திரு. ஜான்சன் அவரால் ஏவப்பட்ட பூமராங்கால் அவரே  தாக்கப்பட்டார்” என்றும் இந்த கதையின் முடிவு “ரஷ்யாவை அழிக்க முயலாதே” என்பதே என்றும் கூறினார்.

பிரித்தானிய அமைச்சரவையில் வரலாறு காணாத ராஜினாமாக்கள்! ஜெயவர்த்தனபுரவில் கோட்டா Go Home – லண்டனில் பொறிஸ் Bye Bye …!!!

இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.

கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.

அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.

உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.

முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949

சூரியனை விட்டு தொலைவாகும் பூமி – குளிர் அதிகரிக்குமா..? – உடல் வலி ஏற்படுமா..?

கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் பொய் என இந்தியாவின் அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் அவர் கூறிய போது,

ஒவ்வொரு வருடமும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிக அருகிலும், மற்றொரு காலகட்டத்தில் சூரியனிலிருந்து தூரமாகவும் செல்லும். சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் அதனுடைய வட்டப்பாதையில் எப்போது சூரியனிடமிருந்து தூரமாக இருக்கிறதோ அந்நிகழ்வுக்குப் பெயர் அப்ஹீலியன். எந்த நேரத்தில் மிக அருகில் இருக்கிறதோ அதற்குப் பெயர் பெரிஹீலியன். கிரேக்க மொழியில் ‘அபோ’ என்றால் தூரம். ‘பெரி’ என்றால் அருகாமை. அதே போல் பூமி அதனுடைய சுற்றுப்பாதையில் சூரியனிடமிருந்து மிக அதிகமான தூரத்தில் இருக்கும்போது அதை அப்ஹீலியன் என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

பொதுவாக இந்த அப்ஹீலியன் நிகழ்வு ஜூலை மாதத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் சூரியனிடமிருந்து பூமி கிட்டத்தட்ட 152மில்லியன் (15.2 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும். அதே போல் பூமி சூரியனுக்கு மிக அருகாமையில் அதாவது 147மில்லியன்(14.7 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்போது அதற்குப் பெயர் பெரிஹீலியன். இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழும். பூமியின் சுற்றுப்பாதை வட்டமாக இல்லாமல் கோழி முட்டைப் போல் நீள்வட்ட வடிவில் இருப்பதனால் இது ஏற்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

அப்ஹீலியனின் போது சூரியன் பூமியிலிருந்து தூரமாகச் செல்வதால் குளிர் அதிகமாகும் என யாரோ சிந்தித்து, அதனால் காய்ச்சல், குளிர் ஏற்படும் என அவர்களே யூகித்து போலிச் செய்தியை வாட்ஸ் ஆப் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அதுவும் அப்ஹீலியனை ‘அலிபென்’ என்ற தவறான பெயரில் மெசெஜ்கள் ஃபார்வர்ட் செய்யப்படுகின்றன இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். உண்மையான அறிவியலைத்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டுமேத் தவிர, இது போன்ற போலிச் செய்திகளை பார்வார்ட் செய்வது தவறு எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி !

இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய 5 வடக்கு பிராந்தியங்களில் இத்தாலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவசர நிலை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா! ஜனாதிபதி கோட்டாவுக்கு முன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிரந்தரமாகவே வீட்டுக்குப் போக வேண்டி வரலாம்!!

சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.

“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.

இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.

ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

“பெட்ரோல் செட்டில் பௌத்த பிக்குவின் அடாவடிக்கு அடங்கும் பொலிஸார்“ – தினமும் கால்கடுக்க காத்துநின்று ஏமாறும் சாதாரண மக்கள் !

கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கந்தளாயில் உள்ள மெதகம விகாரையின் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு எரிபொருள் நிரப்புமாறு கோரி இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்டார்.

பௌத்த துறவி தினமும் எரிபொருள் நிரப்புவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எரிபொருள் நிரப்பமுடியாது என தெரிவித்ததையடுத்தே பௌத்த துறவி ரகளையில் ஈடுபட்டார்.

தமக்கு எரிபொருள் நிரப்ப முடியா விட்டால் இராணுவத்தினருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இராணுவத்தினருக்கு கடுமையான வார்த்தை பிரயோகங்களை பௌத்த துறவி மேற்கொண்டார்.

இதனையடுத்து பொலிஸார் துறவியை சமாதானப்படுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் பௌத்த துறவியின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தார்கள். இதனையடுத்து பௌத்த துறவி புறப்பட்டு சென்று விட்டார்.

………………………………….

இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு காரணமாக பல கிலோமீட்டர்கள் நீளத்துக்கு வரிசைகள் காணப்படுகின்றன. பல இடங்களில் மக்கள் 5 – 10 நாள் வரை காத்திருந்து 2 லீட்டர் பெற்றோல் பெறும் துர்பாக்கியமான சூழல் காணப்படுகின்றது. மேலும் பல இடங்களில் பல நாட்களாக தொடரும் பெட்ரோல் கரிசையால் 10க்கும் அதிகமானோர் இறந்து போன சோகங்களும் அரங்கேறியுள்ளன.

iftamil - இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை

மக்கள் கால் கடுக்க – மனது வலிக்க நீண்ட வரிசையில் நின்றும் கிடைக்காத இந்த பெட்ரோல் ஆளும் வர்க்கத்தினருக்கும் – சமய குறிப்பாக பௌத்த பிக்குகளுக்கும் – காவல்துறையினர் , அரச ஊழியர்களுக்கு இலகுவாக கிடைத்துவிடுகிறது.  பொலிஸார் தம் இஷ்டத்துக்கு ஏற்ப பெட்ரோலை பதுக்குகின்றனர். மேலும் பல அரச ஊழியர்கள் தமது தேவைக்கு மட்டுமன்றி தமது உறவினர்களின் தேவை தொடங்கி பல தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பயன்படுத்தி அடுத்தடுத்து – அடிக்கடி வந்து பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.

பாவம் சாதாரண மக்கள் ஏன் என்றும் கேட்க முடியாமல் – என்ன செய்வதென்றும் தெரியாமல் கால்கடுக்க காத்து நின்று மன உளைச்சளைடைவது மட்டும் தான் மிச்சம். இதே நேரம் தமது அலுவலகங்களுக்கு சாதாரண மக்கள் வரும் போது மட்டும் வரிசையில் நில்லுங்கள் – அமைதியாக இருங்கள் – என சட்டம் – ஒழுங்கு பற்றி பேசும் உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் என்பது எப்படியானது என்பதை இந்த பெட்ரோல் வரிசைகளுக்கு சென்று பார்த்தால் தெரிந்து விடும். நான் உயர் அதிகாரி என்னை முன்னுக்கு விடுங்கள் என கூறும் அதிகாரி ஒரு பக்கம் – நான் தான் இந்த பிரதேசத்தின் பிரதான அதிகாரி எனக்கு முதலில் பெட்ரோல் நிரப்புங்கள் என கூறி  மக்கள் நீண்ட நேரடமாக காத்து நிற்கும்  வரிசைக்கு நடுவில் நுழைந்து பெட்ரோல் நிரப்பும் அளவிற்கு இந்த அரச அதிகாரிகளின் மனோநிலை பூச்சிய அடைவில் உள்ளது என்பதே சோகம்.

அதே வரிசையில் எனக்கு முன்பு கத்தரிக்காய்களை மூடையாக கட்டிக்கொண்டு நின்ற அந்த விவசாயி எவ்வளவு கேட்டும் ஒரு லீட்டர் பெட்ரோல் கொடுக்க அங்கிருந்த காவல்துறையினரோ – பெட்ரோல் செட் ஊழியர்களோ யாரும் முன்வரவில்லை. பொறுமையிழந்த அந்த முதுமையான விவசாயி பைக்கை உருட்டிக்கொண்டே சந்தைக்கு சென்றுவிட்டார்.

நாளாந்தம் உண்பதற்கு சோறு போடும் விவசாயம் அத்தியாவசியமா – இந்த அரசாங்க அதிகாரிகள் வேலையே செய்யாது தேய்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்காலிகள் அத்தியாவசியமானதா என்றே தெரியவில்லை. இந்த அரச அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்யாததும் கூட இன்றைய நாட்டின் சீர்கேட்டுக்கு ஒரு காரணம்.

இந்த லட்சணத்தில் தான் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

“நிலவிலும் தொடரும் சீனா – அமெரிக்கப் பகை“ – இலக்கு வைக்கப்படும் நிலவின் தென்துருவம் !

சீனா ஒரு இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திரனை கைபற்றக்கூடும் என நாசா குற்றமசாட்டி இருந்தது. சந்திரனை ஆராய்வதில் சீனா தனிக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் சீனா தனது விண்வெளித் திட்டத்தின் வேகத்தை முடுக்கிவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் சீனா முதன்முதலாக சந்திரனில் தரையிறங்கியது மற்றும் இந்த தசாப்தத்தின் இறுதியில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அளவுக்கு சக்திவாய்ந்த ரொக்கெட்டுகளை ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்த நாசா நிர்வாகி பில் நெல்சன்,

“சீனா நிலவில் இறங்குவதைப் பற்றி நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். இது இப்போது எங்களுடையது, நீங்கள் வெளியே இருங்கள். சீனாவின் விண்வெளித் திட்டம் இராணுவத் திட்டம் ஆகும். மற்றவர்களிடமிருந்து யோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் சீனா திருடிவிட்டது என கூறினார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

“அமெரிக்க தேசிய விண்கலம் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் தலைவர் உண்மைகளை புறக்கணித்து சீனாவைப் பற்றி பொறுப்பற்ற முறையில் பேசுவது இது முதல் முறை அல்ல. சீனாவின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளி முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பு தொடர்ந்து ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறது. மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை சீனா உறுதியாக எதிர்க்கிறது. விண்வெளியில் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதை சீனா எப்போதும் ஊக்குவித்து வருகிறது, மேலும் விண்வெளியில் ஆயுதப் பந்தயம் மற்றும் ஆயுதப் போட்டி ஆகியவற்றை எதிர்க்கிறது என கூறினார்.

நாசா, அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டில் சந்திரனைச் சுற்றிவர ஒரு குழுவை அனுப்பவும், 2025 ஆம் ஆண்டு சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு குழுவினர் தரையிறங்கவும் திட்டமிட்டுள்ளது. சீனா இந்த தசாப்தத்தில் நிலவின் தென் துருவத்திற்கு சில நேரங்களில் திட்டமிடப்படாத பயணங்களைத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திரதினத்திலும் துப்பாக்கிச்சூடு – 06 பேர் பலி !

அமெரிக்காவின்  246-வது சுதந்திர தின விழா  நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணி வகுப்பு தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் பொது மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினார். அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி துடித்துக் கொண்டு ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருந்தனர்.

 

அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுதந்திர தின அணி வகுப்பில் மர்ம நபர் துப்பாக்கியால் 25 சுற்றுகள் சுட்டதாகவும் அவருக்கு 18 முதல் 20 வயது வரைக்குள் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடினர். இந்த நிலையில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் ராபர்ட்-இ-க்ரைமோ. 22 வயதான அந்த வாலிபரை துப்பாக்கி சூடு நடந்த பகுதி அருகே மடக்கி பிடித்தனர்.

 

அப்போது அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து ஐலேண்ட் பார்க் பொலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது

“துப்பாக்கி சூடு தொடர்பாக ராபர்ட் க்ரைமோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலியானவர்களில் ஒருவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர். குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார். வாலிபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. துப்பாக்கி சூடு காட்சி வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையின் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். அதை கைவிட போவதில்லை. இந்த சுதந்திர தினத்தன்று அமெரிக்க சமூகத்திற்கு மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்திய புத்தியில்லாத துப்பாக்கி வன்முறையால் நானும், மனைவி ஜில்டை னும் அதிர்ச்சி அடைந்தோம் என்றார். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியானார்கள். இதையடுத்து துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்த ஜோபைடன், துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொதுப்போக்குவரத்தில் பெண் நடத்துநர்கள் பணிகளில் !

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, இந்திய அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 100 பஸ்களை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை வாகனங்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்படும் பஸ்கள் பின்னர், இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, புதிதாக ஓட்டுநர்களை பணிகளில் சேர்த்துக்கொள்ளும் அதேநேரம் பெண் நடத்துநர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு பகல் போசனத்துக்கும் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.

முதலில் மாதிரி திட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டம், வரும் காலங்களில் காலி, மாத்தறை போன்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பயணிகளின் போக்குவரத்துக்காக 500 பஸ்களை அடுத்துவரும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை எரிபொருட்களை விநியோகிக்கும் இயலுமை இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஊடக நிறுவனங்கள் செயற்படுவதற்கு தேவையான எரிபொருட்களை, அரச போக்குவரத்து சபையில் இருந்து பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் அளவுக்கு எரிபொருட்கள் இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

2009க்கு முன்பு வரை வடக்கில் தென்பட்ட இராணுவத்தின் கோர முகம் இன்று தெற்கிலும் – என்ன செய்ய போகிறார்கள் பெரும்பான்மை மக்கள் !

கார்ள்மார்க்ஸ் அரசு பற்றி குறிப்பிடும் போது “இந்த அரசும் அரச கருவிகளான இராணுவமும் – காவல்துறையும் முதலாளிகளையும் – ஆளும் வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கானதே தவிர மக்களை பாதுகாப்பதற்கானது அல்ல.” என குறிப்பிடுகின்றார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் கூட  இது அரங்கேறிவருகின்றது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் வருகின்றது.

இது இலங்கையில் எத்தனை காலம் கடந்து தென்னிலங்கையும் உணர ஆரம்பித்துள்ளது.

இன்று இலங்கை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்றை பற்றியதே இந்த பதிவும்.

குறித்த காணொளியில் இராணுவ உயர்நிலை அதிகாரி ஒருவர் பெட்ரோல் செட்ல் பெட்ரோல் பெற வந்த போது அவரை தனது காலால் ஓங்கி உதைத்து விழுத்துகின்றார்.

இங்கு இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படவேண்டியவை.

01. சாதாரண மக்களை பாதுகாக்க தானே இந்த இராணுவம் பாதுகாப்பு எல்லாம். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது..?

02.இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க கூடிய  பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே மக்களுக்கு இந்த நிலை என்றால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் இந்த இராணுவ அதிகாரம் எத்தனை வன்முறையான தாக இருக்கும்..?

இந்த இரண்டு விடயங்களும் மிக ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. இதே இராணுவ வீரர்கள் தானே 2009 லும் சரி இன்று வரையும் சரி உதைத்து வீழ்த்தப்பட்ட அந்த பிரஜையின் மக்கள் குழுவின் ஹீரோக்களாக மதிக்கப்பட்டவர்கள். இன்று இந்த இராணுவத்தின் உண்மை முகத்தை பெரும்பான்மை சமூகத்து மக்கள் நேரடியாகவே புரிந்து கொண்டுள்ளனர். இதனையே பல சிங்கள சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டும் – குறிப்பிட்டும் வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து வெளியாகிருந்த ஒரு கார்ட்டூன் படம் கூட சிங்கள கார்ட்டூன் ஓவியருடையதேயாகும்.

 

தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இதனை ஒரு நகைப்பான விடயமாக பதிவிட்டு 69லட்சம் ஓட்டுக்களை நீங்கள் தானே கொடுத்தீர்கள். வாங்கி தொலையுங்கல். ஆனந்தமாக உள்ளது என கூறி பதிவுகளை இட்டுள்ளனர்.

உண்மையிலேயே நாம் எந்தளவுதூரத்திற்கு அரசியல் மயப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அரசபயங்கரவாதமும் – அரசு வன்முறையும் இராணுவத்தின் ஊடாக  யார் மீது பாய்ந்தாலும் அது தவறே. அதை கண்டிக்க வேண்டியதும் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியதும்  அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் நம்மைப் போன்ற சிறுபான்மை இனங்களின் கடமையாகும். அண்மையிலும் இது போலத்தான். ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மார்பகங்கள் தெரிந்துவிட்டன என தமிழ்தேசிய அரசியல் பேசும் பலர் நகைப்புக்குள்ளாக்கி கூவித்திரிந்தனர். இதே நாம் தான் இறுதிப்போரில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான தமிழ்ப்பெண்களுக்காக நீதி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகள் யார் மீது பாய்ந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்போம். அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

 

இந்த சந்தர்ப்பம் ஒரு வகையில் தென்னிலங்கை சமூகத்துக்கு வட-கிழக்கில் இந்த இராணுவத்தின் கோர முகம் எத்தகையதாய் இருக்கும் – இருந்திருக்கும் என்பதை உணர்த்தியிருந்தால் – இதை அவர்கள் உணர்ந்து கொண்டால் இன்னமும் ஆரோக்கியமான புரிதல் இலங்கையின் இனங்களுக்கு இடையில் வளரும்…!