04

04

இலங்கை பொதுப்போக்குவரத்தில் பெண் நடத்துநர்கள் பணிகளில் !

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, இந்திய அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 100 பஸ்களை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை வாகனங்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்படும் பஸ்கள் பின்னர், இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, புதிதாக ஓட்டுநர்களை பணிகளில் சேர்த்துக்கொள்ளும் அதேநேரம் பெண் நடத்துநர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு பகல் போசனத்துக்கும் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.

முதலில் மாதிரி திட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டம், வரும் காலங்களில் காலி, மாத்தறை போன்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பயணிகளின் போக்குவரத்துக்காக 500 பஸ்களை அடுத்துவரும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை எரிபொருட்களை விநியோகிக்கும் இயலுமை இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஊடக நிறுவனங்கள் செயற்படுவதற்கு தேவையான எரிபொருட்களை, அரச போக்குவரத்து சபையில் இருந்து பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் அளவுக்கு எரிபொருட்கள் இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

2009க்கு முன்பு வரை வடக்கில் தென்பட்ட இராணுவத்தின் கோர முகம் இன்று தெற்கிலும் – என்ன செய்ய போகிறார்கள் பெரும்பான்மை மக்கள் !

கார்ள்மார்க்ஸ் அரசு பற்றி குறிப்பிடும் போது “இந்த அரசும் அரச கருவிகளான இராணுவமும் – காவல்துறையும் முதலாளிகளையும் – ஆளும் வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கானதே தவிர மக்களை பாதுகாப்பதற்கானது அல்ல.” என குறிப்பிடுகின்றார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் கூட  இது அரங்கேறிவருகின்றது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் வருகின்றது.

இது இலங்கையில் எத்தனை காலம் கடந்து தென்னிலங்கையும் உணர ஆரம்பித்துள்ளது.

இன்று இலங்கை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்றை பற்றியதே இந்த பதிவும்.

குறித்த காணொளியில் இராணுவ உயர்நிலை அதிகாரி ஒருவர் பெட்ரோல் செட்ல் பெட்ரோல் பெற வந்த போது அவரை தனது காலால் ஓங்கி உதைத்து விழுத்துகின்றார்.

இங்கு இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படவேண்டியவை.

01. சாதாரண மக்களை பாதுகாக்க தானே இந்த இராணுவம் பாதுகாப்பு எல்லாம். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது..?

02.இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க கூடிய  பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே மக்களுக்கு இந்த நிலை என்றால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் இந்த இராணுவ அதிகாரம் எத்தனை வன்முறையான தாக இருக்கும்..?

இந்த இரண்டு விடயங்களும் மிக ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. இதே இராணுவ வீரர்கள் தானே 2009 லும் சரி இன்று வரையும் சரி உதைத்து வீழ்த்தப்பட்ட அந்த பிரஜையின் மக்கள் குழுவின் ஹீரோக்களாக மதிக்கப்பட்டவர்கள். இன்று இந்த இராணுவத்தின் உண்மை முகத்தை பெரும்பான்மை சமூகத்து மக்கள் நேரடியாகவே புரிந்து கொண்டுள்ளனர். இதனையே பல சிங்கள சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டும் – குறிப்பிட்டும் வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து வெளியாகிருந்த ஒரு கார்ட்டூன் படம் கூட சிங்கள கார்ட்டூன் ஓவியருடையதேயாகும்.

 

தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இதனை ஒரு நகைப்பான விடயமாக பதிவிட்டு 69லட்சம் ஓட்டுக்களை நீங்கள் தானே கொடுத்தீர்கள். வாங்கி தொலையுங்கல். ஆனந்தமாக உள்ளது என கூறி பதிவுகளை இட்டுள்ளனர்.

உண்மையிலேயே நாம் எந்தளவுதூரத்திற்கு அரசியல் மயப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அரசபயங்கரவாதமும் – அரசு வன்முறையும் இராணுவத்தின் ஊடாக  யார் மீது பாய்ந்தாலும் அது தவறே. அதை கண்டிக்க வேண்டியதும் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியதும்  அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் நம்மைப் போன்ற சிறுபான்மை இனங்களின் கடமையாகும். அண்மையிலும் இது போலத்தான். ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மார்பகங்கள் தெரிந்துவிட்டன என தமிழ்தேசிய அரசியல் பேசும் பலர் நகைப்புக்குள்ளாக்கி கூவித்திரிந்தனர். இதே நாம் தான் இறுதிப்போரில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான தமிழ்ப்பெண்களுக்காக நீதி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகள் யார் மீது பாய்ந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்போம். அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

 

இந்த சந்தர்ப்பம் ஒரு வகையில் தென்னிலங்கை சமூகத்துக்கு வட-கிழக்கில் இந்த இராணுவத்தின் கோர முகம் எத்தகையதாய் இருக்கும் – இருந்திருக்கும் என்பதை உணர்த்தியிருந்தால் – இதை அவர்கள் உணர்ந்து கொண்டால் இன்னமும் ஆரோக்கியமான புரிதல் இலங்கையின் இனங்களுக்கு இடையில் வளரும்…!