பிரித்தானிய அமைச்சரவையில் வரலாறு காணாத ராஜினாமாக்கள்! ஜெயவர்த்தனபுரவில் கோட்டா Go Home – லண்டனில் பொறிஸ் Bye Bye …!!!

இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.

கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.

அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.

உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.

முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *