03

03

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.

அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.

“மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர வேண்டும்.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில், “மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவில் பிறந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை, நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

இத்தாலியில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இராயப்பு ஜோசப் ஆண்டகை, 1967இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தார். 992ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 ஒக்டோபரில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

மனிதாபிமான நடவடிக்கையின்போது நாட்டில் அமைதியைக் ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகவிருந்தது. அந்தவகையில் போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும், ஏழை மக்களுக்கு உதவவும் அவர் அரும்பாடுபட்டார்.

மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்பதை மறைமுகமாக சொல்லவே ஜனாதிபதி வவுனியாவின் சிங்கள கிராமத்துக்கு விஜயம் செய்கிறார்.” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்பதை மறைமுகமாக சொல்லவே ஜனாதிபதி வவுனியாவின் சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு விஜயம் செய்கிறார்.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-

கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது முதல் தான் ஒரு சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனையில் இயங்குபவன் என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றார். அதன் ஒரு கட்டமே அவரின் வவுனியாவின் சிங்களக் கிராமத்துக்கான வருகை.

போரின் பின்னர், தமிழ் மக்களின் பரம்பரைக் காணிகளை பிடித்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமமே கலாபோகஸ்வௌ. போரால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எத்தனையோ தமிழ் கிராமங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவை எவற்றுக்கும் செல்லாமல், சிங்களக் கிராமம் ஒன்றுக்கு கோட்டாபய செல்கின்றார்.

தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது அவரது அகராதியில் கிடையவே கிடையாது. சிங்கள – தமிழ் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்தும் சிந்தனையும் அவருக்கு கிடையாது.

சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதுமே அவரது பயணத்தின் நோக்கமாக இருக்கின்றது. அவர் இதன் ஊடாக சிங்கள மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான்.

தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஒரு துரும்பும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது என்பதுதான் அவரின் நோக்கம்” – என்றார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்கள் பதவியேற்று 16 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் இது வரை வடக்கின் எந்த பகுதிக்கும் விஜயம் செய்திராத நிலையில் இன்றைய விஜயமே வடக்கிற்கான முதல் விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“வன்னி பெருநிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ச் சூழலிலும், போர் ஓய்ந்த பின்னரும் அயராது பாடுபட்டவர் மறைந்த மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்.” – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

“வன்னி பெருநிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ச் சூழலிலும், போர் ஓய்ந்த பின்னரும் அயராது பாடுபட்டவர் மறைந்த மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்.” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கில் கிறிஸ்தவ மக்களுக்காக மட்டுமல்லாது இந்து, முஸ்லிம், பௌத்த மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்க்கை தொடர்பாக ஆயருக்கு அக்கறை இருந்தது என ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

மேலும், தான் அமைச்சராகப் பதவி வகித்த காலம் உட்பட பல சந்தர்ப்பங்களில் ஆயர் இராயப்பு ஜோசப்புடன் பேசும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ள ஹக்கீம், மக்களுக்காக ஆயர் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மொழிக்கு அப்பால் ஆயரின் ஆங்கில மொழிப் புலமைகண்டு வியந்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதேவேளை, காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்களைத் தாமும் அனுபவிப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஓய்வு நிலை ஆயரின் மறைவிற்கு தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

“தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படக்கூடாது.” – இரா.சம்பந்தன்

“தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வவுனியாவிலுள்ள சிங்களக் கிராமத்துக்கு இன்று வருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி பதவியேற்று 16 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், அவர் இன்னமும் வடக்கு,கிழக்குக்கு வரவில்லை. தமிழ்க் கிராமங்களை தரிசிக்கவில்லை. வவுனியாவிலுள்ள சிங்களக் கிராமத்துக்கு மட்டும் அவர் வருகின்றார் என்ற தகவலை அறிந்தேன்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கிராமத்துக்கான கலந்துரையாடலில் நேரடியாக பங்கேற்கும் ஜனாதிபதி, தமிழ்க் கிராமங்களை ஏன் புறக்கணிக்கின்றார் என்று எமக்குத் தெரியவில்லை.

Giving swift solutions to public grievances is neither political gimmick  nor media hype… – Presidential Secretariat of Sri Lanka

நாட்டின் மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும்,அவர்களை பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்கும் அவர் நேரில் விஜயம் செய்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.” ” என்றார்.