April

April

ஏப்ரல் குண்டுத்தாக்குதல்தாரிகளுக்கு வெடிமருந்து வழங்கியவர் கைது !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

28 வயதுடைய காத்தான்குடி பகுதியை சேர்ந்த ராஸிக் ராஸா எனும் நபர் கல்முனை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் தீவிரவாத ஒழிப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த சந்தேக நபரை மீண்டும் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கவுள்ளோம்.” – கனடா பிரதமர்

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை வாங்குவதற்கு 10 மில்லியன் டாலரை இந்தியன் ரெட் கிராஸ் அமைப்புக்கு வழங்கியுள்ளோம். மேலும் கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

யாழில் குடும்பஸ்தர் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்கிறேன்.” – ஜெனரல் சவேந்திர சில்வா

யாழ்ப்பாண நகரப் பகுதியில் குடும்பஸ்தர் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ். நகரில் குடும்பஸ்தர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே அதனை மேற்கொண்டனர் என்று அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இது தொடர்பில் இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களைப் பாதுகாக்க வேண்டியது முப்படையினரின் பொறுப்பு. இவ்வாறான தாக்குதல் தொடர்பில் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன்” – என்று பதிலளித்தார்.

யாழில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித்தாக்குதல் – இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் வெள்ளாந்தெருவில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்த உடைமைகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்குதலை நடத்தினர் என்று வீட்டார் குற்றம் சுமத்துகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் ஒழுங்கையில் மதுபோதையில் இருவர் நின்றிருந்தனர். அவர்கள் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாகத் தெரிவித்து வீதியால் சென்ற இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது தாக்குதலை விலக்குப் பிடிப்பதற்கு சென்றதாகவும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீங்கள் யார் என்று கேட்டதாகவும் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் தெரிவித்தார்.

“அவர்கள் தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவித்து அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தனர். அதனை நான் படம் எடுத்தேன். அவர்களது மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்தேன். இந்தநிலையில், அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 7 – 8 மோட்டார் சைக்கிளில் வந்த 15 – 20 பேர் என் மீது தாக்குதல் நடத்தினர். எனது கைப்பேசி எங்கே என்று கேட்டனர். நான் கொடுக்க மறுத்தபோது அதனைப் பறித்து எடுத்துச் சென்றனர். எனது சங்கிலியையும் பறித்துச் சென்றனர். வீட்டிலிருந்த பொருட்களால், போத்தல்களால் என் மீது மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தினர்” என்று குடும்பஸ்தர் குறிப்பிட்டார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடைபெற்ற உடனேயே யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்றேன். அவர்கள் காலையில் (மறுநாள் திங்கட்கிழமை) வருவதாகத் தெரிவித்தனர்” என்று தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி தெரிவித்தார்.

மறுநாள் காலையில் சிவில் உடையில் வந்த காவல்துறையினர், வீட்டில் பொருட்கள் உடைந்திருந்ததைப் படம் எடுத்தனர் என்றும், அதன் பின்னர் அந்தப் பொருட்களை வாங்கித் தந்தால் போதுமானது என்ற கோணத்திலேயே கதைத்தனர் என்றும், முறைப்பாடை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மனைவி குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கையை ஆரம்பித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ், யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

‘ரிசைன் மோடி’ ‘ஹாஷ்டேக்’ முடக்கிய பேஸ்புக் – தெரியாமல் நடந்து விட்டதாம் !

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 3,645 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையை பிரதமர் மோடி சரிவர கையாளவில்லை, ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன.

இதனால் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை பிரதமர் மோடிமுன்வைத்துள்ளன.

இதையொட்டி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ‘ரிசைன் மோடி’(‘மோடியே பதவி விலக வேண்டும்’) என்ற ‘ஹாஷ்டேக்’ நேற்று முன்தினம் வைரலானது.

ஆனால் திடுதிப்பென்று இந்த ‘ஹாஷ்டேக்’ முடக்கப்பட்டது. அதில் தங்கள் கருத்துக்களை பதிவிட முயன்றவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. “தற்காலிகமாக இங்கு மறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த பதிவுகளில் சில உள்ளடக்கங்கள் எங்கள் சமூக தரத்துக்கு எதிரானது” என அறிவிப்பு வந்தது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பொதுவாக பேஸ்புக் சமூக வலைத்தளம், ஹாஷ்டேக்குகளையும், பதிவுகளையும் பல்வேறு காரணங்களைக் கூறி முடக்குவது வழக்கமான நடவடிக்கைதான்.

பின்னர் அந்த முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக, பேஸ்புக் நேற்று விளக்கம் அளித்தது. இதுபற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் தவறுதலாக அந்த ‘ஹாஷ்டேக்’கை முடக்கி விட்டோம். இந்திய அரசு எங்களை கேட்டுக்கொண்டதால் நாங்கள் அதைச் செய்யவில்லை. இப்போது அதை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

“உங்கள் குடும்பத்தில் ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது விளையாடிக்கொண்டிருப்பீர்களா..?” – ஐ.பி.எல் தொடலிருந்து விலகிய அவுஸ்ரேலிய கிரிக்கெட்வீரர் !

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உடனடியான ஆஸ்திரேலியா சென்றார்.
நேற்று  சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘‘நாங்கள் சில விதிமுறைகளுக்குள்  கட்டுப்ப்டிருந்தோம். அது மிகவும் பாதிக்கக்கூடியதாக நான் உணர்ந்தேன். இப்படி உணர்ந்ததற்கு, போட்டி இந்தியாவில் நடப்பதுதான் காரணம். நான் எப்போதுமே இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கவனம் குறித்து பேசுகிறேன். அதனால் இது மிகவும் பாதிக்கக்கூடியதாக உணர்ந்தேன்.
ஐபிஎல் போட்டி ஆறு மாதத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது நான் இதுபோன்று உணர்ந்ததில்லை. மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில், இந்த ஐ.பி.எல் போட்டியை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் என உணர்கிறேன். ஆனால் உண்மையிலேயே, ஏராளமான அரசியல் உள்ளன.
இந்த வருடத்தின் கடைசியில் ஐ.பி.எல் போட்டியில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் உலகத்தில் இது அடுத்த விவாதமாக இருக்கும். ஆறு மாதம் என்பது நீண்ட நாட்களை கொண்டது. கொரோனா சூழ்நிலை மிகவும் மோசமான உள்ளது. நான் அணியில் விளையாடவில்லை. பயிற்சி மேற்கொண்டேன். அதனால் உத்வேகத்தை நான் காணவில்லை. கட்டுப்பாடுகளிலுள்ள கடினம், சொந்த நாட்டிற்கு  செல்லும் வாய்ப்பு, விமானத்தடை என பலவிதமான பேச்சுக்கள் எழுகின்றன. அதனால் இது சிறந்த நேரம் என்று நினைத்தேன்.
ஏராளமான வீரர்கள், பயிற்சியாளர்கள், இக்கட்டான இந்த நிலையில் கிரிக்கெட் ஒரு நிவாரணமாக இருக்கும் என்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது கிரிக்கெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்’’ என்றார்.

“இராவணனை சிங்கள அரசனாக காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.” – சி.சிறிதரன்

‘தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மண்ணிலே இருந்தபோது கல்விக் கழகத்தின் ஊடாக தமிழின வரலாறு என்கின்ற ஒரு செய்தி எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்டது.” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறுதான், இராவணனையும் இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாகக் காண்பிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில்,

“இலங்கையில் சித்திரப் பாடத்தினை எடுத்தால் பல சொற்கள் சிங்களத்தில்தான் சொல்லப்படுகின்றது. சித்திரப் பாடத்தில் இருக்கின்ற தமிழ் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன. காசியப்பனின் காலம், சிகிரியாவின் மலைகூட சிவபெருமானையும், உமாதேவியாரையும் குறிப்பிடுகின்ற சிற்பங்கள் எல்லாம் இன்று சிங்கள முனிவர்களிற்குரியதாக அல்லது சிங்கள கலைஞர்களுக்குரியதாக மாற்றிவிட்டார்கள்.

எந்தவொரு சித்திர நூலைத்திறந்தாலும் அங்கு சிங்கள கலைதான் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழர்க்ளுக்கு இருந்த கலைகளும், தமிழர்களுக்கான சந்தர்ப்பங்களும் இல்லாமலே போய்விட்டன. நாங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கின்றபோது பண்டார வன்னியன், சங்கிலியன் பற்றி படங்கள் ஊடாகப் படித்தோம். பண்டாரவன்னியனின் நிலைனவுக் கல்லை புத்தகத்தின் ஊடாகப் பார்த்திருக்கிறோம்.

அதேபோல், சங்கிலிய மன்னனின் சிலையோடு படங்கள் ஊடாகப் பாடத்தில் படித்திருக்கின்றோம். சமயப் புத்தகங்களில்கூட படித்தோம். இன்று பண்டார வன்னியனை பிள்ளைகள் படிப்பதில்லை. சங்கிலிய மன்னனை மறைத்துவிட்டார்கள். நாங்களே எங்கள் வரலாறுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால், எங்கள் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தன்னுடைய பெரிய தலயாய வேலையைச் செய்துகொண்டிருக்கின்றது. இராவணனைக்கூட ஒரு சிங்கள அரசனாக இராவண வலவேகய என்ற சிங்கள பெயரோடு நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.

நாங்களும் எங்களுக்குள் இருக்கின்ற பயங்களின் அடிப்படையில் விட்டுவிடுகின்றோம். ஒருகாலத்திலே ராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் அல்லது கரிகாலன், சேர, சோழ மன்னர்கள் எல்லாம் தங்களுடைய கொடிகளிலே புலிகளையும், மீன்களையும் பறக்கவிட்ட காலங்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பிற்பட்ட காலத்திலே நாங்கள் கொண்டிருந்தாலும்கூட சொல்லமுடியாத மனிதர்களாக நாங்கள் வாழ்கின்றோம். இன்றும்கூட வரலாற்றுப் புத்தகங்களை எடுத்துப்பார்த்தால் இலங்கையில் தரம் ஆறு முதல் 11 வரை வரும் வரலாற்றில்கூட தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வரலாறுகள் இல்லாமலே செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மண்ணிலே இருந்தபோது கல்விக் கழகத்தின் ஊடாக தமிழின வரலாறு என்கின்ற ஒரு செய்தி எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்டது. அதேபோலதான், இந்த சித்திரப் புத்தகத்தை நான் பார்த்தபொழுது கேட்கப்படுகின்ற ஒவ்வொரு கேள்விகளும் சிங்களப் பெயர்களாகவே சொல்லவேண்டிய நிலை தமிழ் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், இன்றுள்ள ஆசிரியர்கள், கலைஞர்கள் ஊடாக இன்றும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் இவற்றை நாங்கள் கொண்டு செல்கின்றோம். ஆகவே, எங்களுடைய கலைகளையும், வரலாறுகளையும் காப்பாற்றவேண்டிய கடமை கல்விமான்களையும் கல்வியலாளர்களையும் சார்ந்தது.

நாங்கள் ஒடுங்கிஒடுங்கிப் பயந்து தலைகுனிந்து வாழ்ந்தோம். வாழ்கின்றோம். இதனால், இன்னுமின்னும் எங்களுடைய வரலாற்றைத் தொலைத்துக்கொண்டே போகின்றோம். எங்களுடைய வரலாறு எங்களிடமிருந்து தள்ளிப்போகின்றது.

இன்னும் 10 ஆண்டுகள் போனால் எங்கள் சந்ததிக்குச் சொல்வதற்கு வேறு செய்திகளைத்தான் சொல்ல வேண்டியேற்படும். வரலாறுகள் எல்லாம் மாற்றி எழுதப்படும். குறிப்பாக வெடுக்குநாறி மலையிலே தமிழ் கல்வெட்டுக்களை வாசிப்பதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை.

குருந்தூர் மலையிலே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒரு தூணாகவே சித்தரித்து மாற்ற முனைகின்றார்கள். உருத்திரபுரத்திலே நான்காயிரம் ஆண்டுகள் கடந்துள்ள சிவாலய வளாகத்திலே சிங்கள பௌத்த அடையாளங்களைக் காண்பிக்க முயற்சிக்கின்றார்கள்.

கந்தரோடையில் இருக்கின்ற அடையாளங்களைத் தோண்டினால் தமிழ் பௌத்த அடையாளங்கள்தான் வரும் என்பதற்காக தோண்டாமலே விட்டிருக்கின்றார்கள். ஆய்வே செய்யப் பயப்படுகின்றார்கள்.

ஆகவே, நாங்கள் தமிழ் பௌத்தர்களாகவும் இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கின்றோம். தமிழை நேசித்த மனிதர்களாக இருந்திருக்கின்றோம். தமிழ் பிராமிய எழுத்துக்கள்தான் இங்கு இருந்திருக்கின்றன. வரலாறு எங்களுக்கு முன்னாலே பல்வேறுபட்டவர்களைத் தந்திருக்கின்றது.

நாங்கள் பல வரலாற்று அடையாளங்களைக் கண்டவர்கள். நாகர், இயக்கர் என்ற இனம்தான் இலங்கையில் முதன்முதலில் இருந்ததாக வரலாறு சொல்கின்றது. அதிலும், இயக்கர்களுக்கான வரலாறு கொஞ்சம் தள்ளிப்போனாலும், நாகர்கள் எனும் வரலாற்றில் பல்வேறுபட்ட விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் வாழும் பிரதேசத்தில்கூட பூநகரியில் நாகதேவன்துறை, இந்தியாவில் நாகப்பட்டினம், நாகலாந்து போன்ற இடங்கள் எல்லம் எங்களுடைய இனங்கள் வாழ்ந்த இடங்களாகவே சொல்லப்படுகின்றன.

புளியம்பொக்கனை நாகதம்பிரான், பதூர் நாகதம்பிரான் என அண்மையில்கூட பொலன்னவையிலே 108 ஈமத்தாலிகளை எடுத்திருக்கின்றார்கள். நாகர் காலத்திலே புதைக்கப்பட்ட ஈமதாலிகள் அவை. அந்த ஈமதாலிகளை நாகபாம்புகளே பாதுகாத்ததாக காண்பித்திருக்கின்றார்கள்.

நாகருடைய ஏழாயிரம் ஆண்டுகளிற்குரிய ஈமதாலிகள் என்றுதான் வரலாறு சொல்கின்றது. அது உண்மையிலே வெளியே வருமாக இருந்தால் இங்கு தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு அதுவொரு அடையாளமாக இருக்கும்.

ஆகவே, இந்த வரலாறுகளையு்ம, அடையாளங்களையும் தொலைத்து இந்த மண்ணிலே நாங்கள் நிர்க்கதியாக வாழ்கின்ற இந்தக்காலத்திலே வரலாறுகளை சொல்லிக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் !

நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் 10 ஆயிரத்து 338 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையில் தீ பரவல் – 82 பேர் உயிரிழப்பு !

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள், ஊழியர்கள் என அனைவரும் அலறியடித்து வெளியேறினர். எனினும் தீ சூழ்ந்ததால், ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இன்று காலையில் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

“சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.” – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி குற்றச்சாட்டு !

“சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றது.” என இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக ஜனநாயகக் கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“நாட்டில் ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்ந்த இடம்பெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இந்த அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள் தற்போது முஸ்லிம்களை இலக்கு வைத்து சர்வதிகார போக்கை வெளிப்படுத்தி வருகின்றது.

அதாவது சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்துவமே தங்களது நோக்கம் என்பதையே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் கலாசாரம், அடையாளங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதும் முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும் முஸ்லிம் தலைவர்களை கைது செய்வதும் என முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே ரிஷாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையான கண்டிப்பதுடன் இத்தகைய செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.”  என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.