January

January

இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா !

கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

துரித அன்டிஜென் சோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

எனினும் பிசிஆர் சோதனை முடிவுகள் நேற்றிரவு வரை வெளியாகவில்லை என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

ஜெமினி – தேனீ – கருத்துச் சுதந்திரம்: கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன்

சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.

Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.

ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.

1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.

தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.

தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.

“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்

த ஜெயபாலன்
ஆசிரியர் தேசம் – தேசம்நெற்.

“அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை” – சஜித் பிரேமதாஸ

“அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை” என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டத்தின் போதே இவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா செயற்பட்டாலும் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லாமை கவலையளிக்கிறது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.

இந்திய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அயல் மற்றும் முக்கிய நட்பு நாடுகளிலிருந்து பிரதமர் மோடியின் அரசுக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவும், கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உதவும் வகையிலுமே இந்த திட்டம் அமைகிறது.

இதன் முதற் கட்டமாக பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளிற்கான தடுப்பூசி விநியோகப் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கான விநியோகப் பணிகளை ஆரம்பிக்க முன்னர் அந்நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான அனுமதிகளை குறித்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும். ஆனால் இலங்கை வெறுமனே வாய்மூலமாக வீராப்பு பேசுகிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு எதுவும் முடியாது என்பது நிரூபனமாகியுள்ளது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எதிர்க்கட்சி முயற்சிக்கையில் அதற்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பது மாத்திரமன்றி நீதிமன்ற உத்தருகளில் நாட்டை ஆள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

போலித்தனமான பிரசாரங்களினால் மக்களை முழு அளவில் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு மற்றும் மக்களின் நலன்கள் குறித்து அக்கறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி !

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா உள்ளது. இந்த நகரில் இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் என்ஜின் பழுதாகி நின்றது.

இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருசிலர் நீந்தி உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தில் 43 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளன.

இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.

அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றனர். இதனால் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த படகு விபத்தில் அதிகமானோர் உயிரிழப்புக்கு காரணம் என்று அகதிகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஐ.நா. அகதிகள் நல அமைப்புகள் தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய புதிய ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம் !

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உரிய முறையில் செயற்பட்டனவா? என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மூவர் கொண்ட புதிய குழுவை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் நிமால்அபயசிறி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்தனவா? மனித உரிமை மீறல்கள் உறுதிசெய்யப்பட்டால் ஏதாவது நடவடிக்கை எடுத்தனவா? என ஆராய்வதே புதிய ஆணைக்குழுக்களின் நோக்கம்

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஒரு மாதகாலத்திற்குள் இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கோடாரியால் வெட்டிக்கொலை – உத்தரபிரதேச மாநிலத்தில் சம்பவம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே நடந்த 2 கற்பழிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிறுமி ஒருவரை மர்ம கும்பல் கற்பழித்து கொன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினரின் 4 வயது குழந்தையுடன் வயல் வெளிக்கு சென்றார். சிறுமியின் தந்தை வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சிறுமியும், அந்த குழந்தையும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர். 04 வயது குழந்தையை அடித்து அங்கிருந்து விரட்டிய கும்பல்  பின்னர் அந்த 15வயது சிறுமியை அவர்கள் கற்பழித்துள்ளனர். மேலும் கோடாரியால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

கும்பலால் தாக்கப்பட்ட 04வயது குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை கூறினாள். உடனே ஊர் மக்கள் அந்த பகுதிக்கு திரண்டு சென்றனர். ஆனால் சிறுமியை காணவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தூரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

செய்தி – மாலைமலர்

“நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும்” – ரணில் விக்கிரமசிங்க

“நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று(22.01.2021)  நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்காது தடுப்பூசி தொடர்பாக அரசு கதைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், தடுப்பூசியை வழங்கிய பின்னர் பிரச்சினை முடிந்துவிடும் என்று எண்ணிவிட முடியாது.

தடுப்பூசியைக் காட்டி மக்களை ஏமாற்றாது, கொரோனாவைத் தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பாக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு அரசு வெளியிட வேண்டும்.

இலங்கையில் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும் – என்றார்.

“எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன்.

வலியுத்தியதுடன் மட்டும் நின்று விடாது, அதுதொடர்பான முன்வரைவு ஒன்றை தயாரித்திருந்தேன். கடந்த வருடம் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது இந்தியப் பிரதமரிடமும் கையளித்திருந்தேன்.  இந்தியத் தரப்பினரும் குறித்த திட்டத்தினை வரவேற்றிருந்தனர்.

எனினும் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட கொவிட் – 19 காரணமாக அதனை முன்கொண்டு செல்ல முடியவில்லை.

அண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், குறித்த செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது.

உயிரிழந்தவர்கள் இந்தியக் கடற்றொழிலாளர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகள். கடந்த காலங்களில் நாம் துன்பத்தினை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள் – எமக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை எமக்கு இன்றும் ஏறபடுத்திக் கொண்டிருப்பவர்கள்.

அவ்வாறானவர்களுக்கு இன்னல் ஏற்படுவதை என்னால் எவ்வாறான சூழலிலும் தாங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ளேன்.

அதேவேளை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எந்தளவிற்கு இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவன் என்ற அடிப்படையில், இந்தியக் கடற்றொழிலாளர்களும் இச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்படாது புத்திசாதுரியமாக எதிகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறிருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டுமாயின் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இது வெறும் தொடக்கம்தான்” – முஸ்லீம்கள் மீதான தடைநீக்கம் – உலக சுகாதார அமைப்புடன் மீள் இணைவு என 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் ஜோபைடன் !

அமெரி்க்க அதிபராக பதவி ஏற்ற சிலமணிநேரங்களில் 15 முக்கிய உத்தரவுகளில் ஜனாதிபதி ஜோபைடன் கையொப்பமிட்டு, அமெரிக்க மக்களுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கினார்.

அதில் முக்கியமான உத்தரவுகளான அமெரிக்காவுக்குள் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவதற்கான தடை நீக்கம், பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா இணைதல், சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குதல், மெக்சிக்கோ எல்லையில் சுவறு கட்டும்பணியை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட 15 உத்தரவுகளில் ஜனாதிபதி ஜோபைடன் இன்று கையொப்பமிட்டார்.

வாஷிங்டனில் ஜனாதிபதி ஜோபைடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்

“ பல்வேறு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளில் கையொப்பமிட்டது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது வெறும் தொடக்கம்தான். நான் பிரச்சாரத்தில் மக்களிடம் கூறியதை நிச்சயம் நிறைவேற்றுவேன். நடுத்தர மக்கள் நலனுக்காக அரசு இயங்கும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவேன்.

நான் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்தேனோ அதை நிறைவேற்றும் பணியைத் தொடங்கிவிட்டேன். இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும், இவை தடை உத்தரவுகள் மட்டும்தான். இதற்கான சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்தடுத்து வரும் நாட்களில் பல்வேறு உத்தரவுகளை நான் பிறப்பிக்க இருக்கிறேன்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 100 நாட்களுக்கு மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவில் முதலில் கையொப்பமிட்டேன். அதைத்தொடர்ந்து பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது, அமெரிக்காவில் இனவேறுபாடு இன்றி மக்களுக்கு சமஉரிமை அளித்தல் போன்ற உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜென் சகி கூறுகையில்

“அமெரிக்காவில் 100 நாட்களுக்கு மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவை ஜனாதிபதி ஜோபைடன் முதலில் பிறப்பித்துள்ளார்.அதைத் தொடர்ந்து 15 முக்கிய உத்தரவுகளில் ஜனாதிபதி ஜோபைடன் கையொப்பமிட்டுள்ளார்.

உலக சுகதாார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகிய ட்ரம்பின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் அமெரிக்கா இணைந்துள்ளது. இதனால் உலகளவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈடுபடும். நாங்கள் நேரத்தை வீணாக்கப்போவதில்லை. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் குழுவை அமெரிக்காவில் உருவாக்க ஜனாதிபதி ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா ட்ரம்ப் ஆட்சியில் விலகியது, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் அமெரிக்கா இணைய உள்ளது. அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இலக்கை அடைய அமெரி்க்கா முயற்சிக்கும்.

கரோனா வைரஸ் பல்வேறு பொருளாதார சிக்கல்களை மக்களுக்கு அளித்துள்ளது.கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் கடனையும்,வட்டியையும் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான அவகாசத்தை அளிக்க கல்வித்துறை அமைச்சகத்துக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டும்பணியும் , அதற்கு வழங்கப்பட்டுவரும் நிதியும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சகி தெரிவித்தார்.

பொதுச் சுகாதார பாரிசோதகரின் முகத்தில் உமிழ்ந்த நபருக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை !

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த பொதுச் சுகாதார பாரிசோதகரின் முகத்தில் உமிழ்ந்த நபருக்கு பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தால் 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அட்டுளுகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது குறித்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அவரைச் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காகப் பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார பரிசோதகர் அந்தப் பிரதேசத்துக்குச் சென்றிருந்தார்.

இவ்வேளையில் தன்னை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிக்கு எதிர்ப்பு வெளியிட்ட அந்த நபர், “உங்களுக்கும் கொரோனாவைப் பரப்புகின்றேன்” என்று கூறி சுகாதாரப் பரிசோதகரின் முகத்தை நோக்கி உமிழ்ந்துள்ளார்.

இதையடுத்து அந்த நபருக்கு எதிராக பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவர் கொரோனாத் தடுப்புச் சட்டத்துக்கமைய சுகாதார அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை, சுகாதார ஒழுங்கு விதிகளை மீறியமை, அரச அதிகாரியின் உத்தரவை மதிக்காமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிப்பதாக இன்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.