இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன்.
வலியுத்தியதுடன் மட்டும் நின்று விடாது, அதுதொடர்பான முன்வரைவு ஒன்றை தயாரித்திருந்தேன். கடந்த வருடம் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது இந்தியப் பிரதமரிடமும் கையளித்திருந்தேன். இந்தியத் தரப்பினரும் குறித்த திட்டத்தினை வரவேற்றிருந்தனர்.
எனினும் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட கொவிட் – 19 காரணமாக அதனை முன்கொண்டு செல்ல முடியவில்லை.
அண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், குறித்த செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது.
உயிரிழந்தவர்கள் இந்தியக் கடற்றொழிலாளர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகள். கடந்த காலங்களில் நாம் துன்பத்தினை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள் – எமக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை எமக்கு இன்றும் ஏறபடுத்திக் கொண்டிருப்பவர்கள்.
அவ்வாறானவர்களுக்கு இன்னல் ஏற்படுவதை என்னால் எவ்வாறான சூழலிலும் தாங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ளேன்.
அதேவேளை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எந்தளவிற்கு இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவன் என்ற அடிப்படையில், இந்தியக் கடற்றொழிலாளர்களும் இச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்படாது புத்திசாதுரியமாக எதிகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
எவ்வாறிருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டுமாயின் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.