26

26

“தமிழர்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் இந்த அரசை எதிர்க்க முடியும் ” – செல்வம் அடைக்கலநாதன்

“தமிழர்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் இந்த அரசை எதிர்க்க முடியும் ” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லீம் மக்களின் ஜனாசா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது. இது நியாயமான கோரிக்கையே. உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லீம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது. தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசு கொடூரமான கரங்களை நீட்டிக்கொண்டு வருகிறது. அதேபோல எமது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.

இந்தவிடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்கமுடியும். இந்த விடயத்தில் முஸ்லீம் மக்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் – அவுஸ்ரேலியா 195 ஓட்டங்களுக்குள் சுருண்டது !

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. பொக்ஷிங்டேய் டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்து விளையாடியது.
தொடக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அவுஸ்திரேலியா, விரைவில் இழந்தது. லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் சீரான இடைவெளியில் இலக்குகள் சரிந்ததால், அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும் லபுசாக்னேவும் 48 ஓட்டங்களும்  எடுத்திருந்தமையே அதிகபட்சமாக காணபபட்டது.
இந்தியா தரப்பில் பும்ரா 4 இலக்குகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 இலக்குககள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ஓட்மெதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு இலக்கு இழப்பிற்கு 36 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இந்தியா அவுஸ்திரேலியாவை விட 159 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. ஷுப்மான் கில் 28 ஓட்டங்களுடனும், புஜாரா 7 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

“நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்” – பிரிட்டன் ராணி எலிசபெத் நெகிழ்ச்சி உரை !

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறமிருக்க உருமாறிய கொரோனா வைரசில் இருந்து மக்களைக் காக்க பிரித்தானிய அரசு தற்போது போராடி வருகிறது. அங்கு கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் மற்றும் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

எனவே, பிரிட்டனின் பெரும் பகுதி கடும் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், லண்டனில் நத்தார் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கொண்டாட்டங்கள் சில தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய ராணி எலிசபெத் பதிவுசெய்யப்பட்ட தனது கிறிஸ்துமஸ் தின உரையில் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பலர் விரும்புவது ஓர் எளிய அரவணைப்பு. தனது அன்புக்குரியோரை கொரோனா வைரஸ் தொற்றால் இழந்தவர்களுக்கு அல்லது அரசால் விதிக்கப்பட்ட தடைகளால் உறவுகளைப் பிரிந்து கிடப்பவர்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும். மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இந்த பண்டிகை நாளில் தங்களது அன்பானவர்களின் இழப்புக்கு சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மக்களில் பலரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை காணவில்லை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை பராமரிப்பதிலும் நிறப்பாகுபாடு – கறுப்பின பெண் ஒருவர் பலி !

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த பெண் வைத்தியர் சூசன் மோர். கறுப்பினத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த நவம்பர் 29-ந்திகதி கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி எடுத்த படி, தீவிர காய்ச்சலுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் தான் கருப்பினத்தவர் என்பதால் வைத்தியர்கள் தனக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என சூசன் மோர் குற்றம் சாட்டினார். கடந்த 4-ந்திகதி, வைத்தியசாலையில் படுக்கையில் இருந்தபடி சூசன் மோர் பேசும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வெளியானது.

A Black doctor died of Covid-19 weeks after accusing hospital staff of  racist treatment - CNN

அதில் தமக்கு சிகிச்சை அளிக்கும்படி வைத்தியர்களிடம் கெஞ்ச வேண்டி இருப்பதாக கூறினார். மேலும் சூசன் மோர் அந்த பதிவில், தனக்கு சிகிச்சையளித்தது ஒரு வெள்ளை இன மருத்துவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த காணொளியில் சூசன் மோர் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டே கண்ணீருடன் பேசியிருந்தார்.

மேலும் தன்னை இந்த வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படியே அவர் உள்ளூரில் உள்ள வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேசமயம் சூசன் மோரின் இந்த காணொளி பதிவு கருப்பின அமெரிக்க மக்கள், அமெரிக்க சுகாதாரத் துறையில் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த ஒரு விவாதத்துக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சூசன் மோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெளி உலகிற்கு தன்னை சமாதான விரும்பியாகவும் அகிம்சைப்பிரியனாகவும் காட்டிக்கொண்டு உலக நாடுகளின் விடயங்களிலெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் அமெரிக்கா முதலில் தன்னுடைய நாட்டிலேயே நிழலாடிக்கொண்டிருக்கும் இனவெறிப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அடுத்தவர் பிர்சினைக்கு செல்லலாம். நிறவெறிப்பிரச்சினையால் இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் பறிபோன மூன்றாவது உயிர் இதுவாகும்.

மீசாலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை !

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நேற்றறையதினம் (25.12.2020) தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுமார் 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் வருகை தந்தவர்கள் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது போன்றதான சம்பவங்கள் அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றது. அண்மையில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினையின் போது பின்னிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வன்புணர்வில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள முயன்ற மூன்று பிள்ளைகளின் தாய் கோடாரியால் தாக்கி கொலை !

கண்டி – வத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தேகம – பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சித்த பெண்ணையே, சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, குறித்த பெண்ணை சந்தேகநபர், கோடரியால் தாக்கி, கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். இதையடுத்து தனது மனைவி காணாமல் போனமை தொடர்பில் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத்தொற்று – 40 ஆயிரத்தை நெருங்குகின்றது நோயாளர் எண்ணிக்கை !

நாட்டில் மேலும் 551 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 541 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 10 பேர் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36, 099 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 432 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

“முஸ்லீம்களின் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக இலங்கை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படலாம்” – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

இலங்கையில் கொரோனா வைரஸால் இறந்த முஸ்லீம்களுடைய உடல்களை எரிக்க வேண்டாம் என அவர்களுடைய உறவுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பாக பலரும் தங்களுடைய எதிர்ப்பினை இது தொடர்பாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் “முஸ்லீம்களின் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக இலங்கை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாங்கள் முஸ்லீம்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்றால் நாங்கள் அதனை தவிர்க்கவேண்டும். ஆனால் இந்த விடயத்தில் கொவிட்19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி  அறிவித்தலை வெளியிட்ட பின்னர் அரசாங்கம் அதனை இரத்துச்செய்துவிட்டு கொரோனாவினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்யும்  கொள்கையை பின்பற்றுகின்றது.

உடல்களை அகற்றுவதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலோ அல்லது விஞ்ஞானரீதியிலான அடிப்படையிலேயோ அரசாங்கம் முன்னெடுத்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளோம்.
ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை, பல பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர்கள் இலங்கையில் இன்று பின்பற்றப்படும் கொள்கை விஞ்ஞானரீதியில் எந்த அடிப்படைகளையும் கொண்டிராதது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் ” என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நண்பகலளவில் தன்னுடைய ஸ்கூட்டரில் வெள்ளவத்தை மிராஜ் ஹொட்டலுக்கு முன்பாக வந்த குறிப்பிட்ட பெண், மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு கடலுக்குள் சென்றதாகவும், சில நிமிடங்களின் பின்னர் கடல் அலைகளில் அவரது சடலம் அடித்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடலிலிருந்து அவரது சடலம் பின்னர் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். மரணமான பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

“புதிய அரசியலமைப்பின் மூலம் அனைத்து இன மக்களின் உரிமைகளும் பலப்படுத்தப்படும்” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

“புதிய அரசியலமைப்பின் மூலம் அனைத்து இன மக்களின் உரிமைகளும் பலப்படுத்தப்படும்” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்கு பொருந்தும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு முரண்பாடற்ற தன்மையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது. மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டுள்ளன.

குறுகிய கால நோக்கத்தை கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட கூடாது. அரசியலமைப்பு உறுதியானதாக இருக்கும் பட்சத்தில் அரச நிர்வாகம் பலமாக செயற்படுத்தப்படும். புதிய அரசியலமைப்பில் அனைத்து இன மக்களின் உரிமைகளும் பலப்படுத்தப்பட்டு புதிதாக பல விடயங்களும் இணைத்துக் கொள்ளப்படும்.

புதிய அரசியலமைப்பை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நடத்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.