03

03

ஜப்பான் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து – பாராளுமன்றில் மசோதா நிறைவேற்றம் !

பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்புமருந்து வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து  ஜப்பான்  ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் டோக்கியாவில்தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்குகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

லங்கா பிரமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து சயிட் அப்ரிடி விலகல் !

சொந்த காரணங்களுக்காக லங்கா பிரமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் விரைவில் திரும்பி மீண்டும் எல்.பி.எல் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து அப்ரிடி மீண்டும் இலங்கைக்குத் திரும்பினால் வழக்கமான முறையில் ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட மாட்டார் எனத் தெரிகிறது.கொரோனா வைரஸ் தொற்றால் அப்ரிடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார் என அறியப்படுகிறது.

கடந்த நவம்பர் 24ஆம் திகதி இலங்கைக்கு வந்த அப்ரிடி, நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

சயிட் அப்ரிடி தலைமையிலான காலி கிளேடியேட்டர்ஸ் அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் எல்லைத்தீவுகளில் ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா !

பசுபிக் கடல் தெற்கு பகுதியில் பல்வேறு தீவுகள் கூட்டமாக உள்ளன. அதில் ஒரு தீவுக்கூட்டம் ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான உரிமை சண்டையை உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் எல்லையில் அமைந்துள்ள அந்த தீவுக்கூட்டத்தினை ஜப்பான் தெற்கு எல்லைகளை கூறிவருகிறது. அதே தீவுக்கூட்டங்களுக்கு ரஷ்யா குரில் தீவுகள் என கூறுகிறது. இந்த தீவுக்கூட்டத்தை ஜப்பானிடம் இருந்து இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ரஷ்யா கைப்பற்றியது. அன்றில் இருந்து இந்த தீவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜப்பான் கூறிவருகிறது.
ஜப்பான் நாட்டின் முந்தைய பிரதமர் அபே தனது ஆட்சிக்காலத்தின்போது இந்த தீவுக்கூட்ட உரிமை பிரச்சனை தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது.
இதற்கிடையில், ஜப்பான் தற்போதைய பிரதமரான யோஷிஹைட் சுகாவும் இந்த தீவுக்கூட்டம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய குரில் தீவுகள் அல்லது தெற்கு எல்லை தீவுக்கூட்டங்களில் ரஷ்யா அதீநவீன ஆயுதங்களை குவித்துள்ளது. அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பான எஸ் 300 வி4 குரில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், தோர் எம்2 ரக குறைவான தொலைவு பாயும் ஏவுகணைகளும் அந்த தீவுகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ரஷ்யா-ஜப்பான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

மகிந்ததேசப்பிரியவின் இடத்தை நிரப்புகிறார் நிமல் புஞ்சிஹேவா !

ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தவர்களை நியமனம் செய்வதற்கு நாடாளுமன்ற சபை இன்று அனுமதி அளித்தது.

இதன்படி ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் பின்வருமாறு.

தேசிய தேர்தல் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா

பொது சேவைகள் ஆணைக்குழு – ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெகத் பாலபெட்டபென்டி

தேசிய பொலிஸ் ஆணைக்குழு – முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்னாண்டோ

லஞ்ச ஆணைக்குழு – ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர

நிதி ஆணைக்குழு – சுமித் அபேசிங்க

“மாவீரர் தினத்தன்று வடக்கு – கிழக்கில் சூறாவளி வீசியிருந்தால் சந்தோஷமடைந்திருப்பேன்”  – பாராளுமன்றில் சரத் பொன்சேகா !

“மாவீரர் தினத்தன்று வடக்கு – கிழக்கில் சூறாவளி வீசியிருந்தால் சந்தோஷமடைந்திருப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம்.

மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது.

எமது நாட்டில் அது செய்திருந்தால் பாராளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோ கணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப் பிரிக்க செயற்படவில்லை.மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

“அரசாங்கதின் வரவு-செலவு திட்டத்திற்கு கூட்டமைப்பினர் முழுமையான ஆதரவை வழங்குங்கள் . நாம் நிச்சயமாக தமிழ் மக்களை கைவிட மாட்டோம்” – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த உறுதி!

“அரசாங்கதின் வரவு-செலவு திட்டத்திற்கு கூட்டமைப்பினர் முழுமையான ஆதரவை வழங்குங்கள் . நாம் நிச்சயமாக தமிழ் மக்களை கைவிட மாட்டோம்” என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (02.12.2020) 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள் , இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார் .

அவர் மேலும் கூறுகையில் ,

“ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் குறைபாடுகள் குறித்தும் தெரிவித்தனர் . அம்மக்களின் நிலைமைகளை எடுத்துக்கூறினார்கள் . அதேபோல் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களையும் ஆதரித்துள்ளனர் . மக்களின் குறைகளை நாம் கண்டிப்பாக நிவர்த்தி செய்வோம் .

அதேபோல் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டுள்ளமைக்காக நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம் . தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது . எனவே அந்த நம்பிக்கையை நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம் . அதேபோல் இதே நம்பிக்கையில் வரவு – செலவு திட்டத்தில் அரசாங்கதத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள் . நாம் நிச்சயமாக தமிழ் மக்களை கைவிட மாட்டோம் .

அதேபோல் நாட்டில் சகல பகுதிகளிலும் வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது , 2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அத்துடன் கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்கள் போல் அல்லாது நாம் துரிதமாக வீட்டுத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் . முன்னைய ஆட்சியாளர்கள் மக்களின் வயிற்றில் அடித்த காரணத்தினாலேயே மக்கள் நல்லாட்சியை நிராகரித்தனர் . ஆனால் நாம் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம் . கருப்பு பணத்தில் நாட்டை ஆட்சிசெய்ய நினைக்கவில்லை . ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் நாட்டை சரியாக வழிநடத்தி வருகின்றது . கடந்த காலத்தில் வீடமைப்பு அமைச்சின் கீழ் இடம்பெற்ற ஊழல் , அமைச்சரின் மனைவிக்கு அழகுக்கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை , மக்களின் வரியில் நடந்தேறிய ஊழல்கள் , அரசியல்வாதிகள் தமக்கான பெயரில் நிலங்களை அரசியல்வாதிகள் தமக்கான பெயரில் நிலங்களை அபகரித்தமை என அனைத்தையும் நாம் வெளிப்படுத்துவோம் . எம்மிடம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் இல்லை , ஆனால் மக்களின் பணத்திற்கு பொறுப்புக்கூறியாக வேண்டும் . நாம் சகல மக்களுக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்போம் , வடக்கில் தொடங்கி தெற்கு வரை சகல மக்களையும் கவனத்தில் கொள்வோம் . ஆனால் சட்டவிரோத இடங்களில் எவரையும் குடியமர்த்த மாட்டோம் . நாம் பொறுப்புள்ள ஆட்சியை நம்புகிறோம் . ஜனாதிபதியும் , பிரதமரும் வீடமைப்பு அமைச்சை அதிக கவனமாக கண்காணித்து வருகின்றனர் . எனவே நாம் வெற்றிகரமாக எமது பொறுப்புகளை முடிப்போம்” எனவும் கூறியுள்ளார் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் .

இலங்கையை விட்டு மேலும் நகர்ந்தது புரவி – 9ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் யாழில் பாதிப்பு !

புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புரவி சூறாவளியை அடுத்து ஆறு மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார் அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல்மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 9346 குடும்பங்களை சேர்ந்த 31703 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களை சேர்ந்த 3189 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 48 வீடுகள் முழுமையாகவும்,

1826 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

“கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்” – அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை !

“கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்” என பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பிலான அமைச்சர் சரத் வீரசேகர, கூட்டமைப்பினர் தொடர்ந்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“போல்பொட், ஹிட்லர் உட்பட சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்தியவர்களின் தலைவர்களது கட்சிகள் முடக்கப்பட்டன. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை இதுவரை தடைசெய்யப்படவில்லை. இதற்கு யுத்தம் முடிந்தபின்னரும் மஹிந்த ராஜபக்ச வழங்கிய கருணையே காரணம்.இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் மீளுருவாகினால் அதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

“நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்” – பாராளுமன்றில் சரத்பொன்சேகா !

“நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்” என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (03.12.2020) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுநிலை விவாதத்தில்  மேலும் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது,

“இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமாகும்.நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது.

யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணமாகும்.மேலும், இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.சுமார் ஐந்து அல்லது ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.ஆனாலும், 270,000 பேரை பாதுகாக்க முடிந்தது.பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்வரும் ஆண்டுகள் பொருளாதார ரீதியாக இலங்கையை வலுப்படுத்த வேண்டிய தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும்” – இலங்கை பொருளாதார மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

“எதிர்வரும் ஆண்டுகள் பொருளாதார ரீதியாக இலங்கையை வலுப்படுத்த வேண்டிய தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக நேற்று (02.12.2020) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் பேசுவதற்கு எமக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் முதலாவதாக அச்சம்மேளனத்தின் தலைவர் உட்பட நிர்வாகச்சபையினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகிலுள்ள பல நாடுகளையும் விட இலங்கை, கொவிட் 19 தொற்றினை மிகவும் முறையான விதத்தில் கட்டுபாட்டுக்கள் வைத்திருப்பதனை அதிகளவானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் பொருளாதாரத்தை முறையாக நிர்வகித்து முன்னோக்கி செல்வதற்கு முடியும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, இதுவரை கொவிட்-19 தொற்றினை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையானது முன்னிலை வகிப்பதுடன், பல துறைகளிலும் பொருளாதார முன்னேற்றத்தினை சாதகமான முறையில் பதிவு செய்வதற்கு எம்மால் முடிந்துள்ளது.

நண்பர்களே, எமது நாடு எதிர்நோக்கியுள்ள முதன்மையான சவாலானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதியின் படி மக்களை மையமாகக்கொண்ட பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவதாகும்.இதனிடையில் கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் மதிப்பிடப்பட்ட பொருளாதார வீதம், அம்முயற்சிக்கு பாரிய தடைகள் உள்ளன எனவும் பலரினால் கணிக்கப்பட்ட போதிலும் அவ்வாறன தடைகள் ஏற்படுவதனை குறைத்து பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும்.

இக்குறிக்கோள்களை அடைய அரசாங்கம் புதிய உத்திகளை கையாண்டுள்ளது என உங்களுக்கு தெரியும். நாட்டிலுள்ள வர்த்தகர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்காக ‘கடன் விலக்குகளை’ வழங்குமாறு அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.

நாட்டின் வெளிப்புற கணக்கினை முறையாக நிர்வகிப்பதன் மூலம் ரூபாய் மதிப்பினை பாதுகாத்து அரசாங்கத்தின் கடன் அழுத்தங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கொவிட் -19 தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு நேரடி நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதன் மூலம் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க எம்மால் முடிந்தது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படையாதிருப்பதற்கு வரி மற்றும் வட்டி சலுகைகளை பெற்றுக் கொடுத்தோம். நீர், மின்சாரம், அனுமதி பத்திர கட்டணம் ஆகியவற்றை செலுத்த எம்மால் கால அவகாசம் வழங்கப்பட்டது. குத்தகை தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான சலுகைகள் வழங்கப்பட்டன.

இவ் அனைத்து நடவடிக்கைகளிலும் அரச ஊழியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் செயல்திறன்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை காரணமாக நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் இருந்தது. மேலும் சில சந்தர்ப்பங்களில் சிலர் அவ்வாறு நடைபெறும் வரை எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனாலும் இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுததுவதற்கு எமது அரசாங்கத்திற்கு முடிந்தது. இது தொடர்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

எதிர்வரும் ஆண்டுகள் எமக்கு தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும். எமது நாட்டின் பொருளாதார ரீதியான முன்னோக்கிய பயணத்தை வலுப்படுத்தும் காலமாகும். எதிர்வரும் இக்காலப்பகுதி வெற்றியளிக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இச்சவாலை நிர்வகித்துக் கொள்ள வேண்டும். அதற்கு, நாம் புதிய உத்திகளை செயற்படுத்த வேண்டும். இதுவரையான உங்களது வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் அனைவரும் இச்சவாலை ஏற்பதற்கு தயாராகவிருக்கின்றீர்கள் என்பது புலப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில்,  நாமும் அந்த பொறுப்பை ஏற்பதற்கு தயாராகவுள்ளோம். அவ்வாறாயின் எம்முடன் இணைந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.