02

02

பைசர் கொரானா தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம் !

கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் பலனை தருவதாக அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் தற்போது பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரித்தானியா திகழ்கிறது.

இந்நிலையில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மருந்துகளாக வழங்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி மருந்துகளுக்கு பிரித்தானியா ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது. இது இரண்டு கோடி பேருக்கு கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடு வரை வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும்.

ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் மிகவும் குறைவான காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் தடுப்பூசிதான் என கூறப்படுகின்றது.

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” – சிவசக்தி ஆனந்தன்

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று(02.12.2020) சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து ஊடகங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் அதிகாலையில் புகுந்து அப்பாவி தமிழ் பொது மக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும் ,வெட்டியும் கொலை வெறித்தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52பேரும், ஒதியமலை பகுதியில் 32பேரும், செட்டிகுளம் பகுதியில் 22பேரும், மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டே வந்தனர். இந்நிலையில் இத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும் (02-12-2020) வழமைபோன்று உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. எனினும் செட்டிகுளம் பகுதியில் காவல்துறையினர் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து சென்றிருக்கின்றார்கள்.

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதி மன்றத்தினுடாக காவல்துறையினர் தடைத்தரவு பெற்றிருந்தனர். இதே போல் இக்கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர் நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது ”எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பரீட்சை சென்று வீடு திரும்பிய பாடசாலை மாணவி தற்கொலை !

கிளிநொச்சி பிரமனந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று(1.12.2020) பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு திரும்பும் போது சக மாணவிகளிடம் நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீர்கள் என கேட்டுச் சென்ற குறித்த மாணவி வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிய பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரமனந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற க.பொ.த சாதாரண தர மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை – இலங்கை கண்டனம் !

ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.

இந்நிலையில் “ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கையின் கண்டன அறிக்கையில், “டாக்டர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதை இலங்கை கண்டிக்கிறது. பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதையும், மனிதகுலத்திற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாதச் செயல்களையும் இலங்கை கண்டிக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இலங்கை அழைப்பு விடுக்கிறது.அத்துடன், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிக வெற்றிகரமான வழிமுறையாக உரையாடல் மற்றும் ஈடுபாட்டை இலங்கை உறுதியாக நம்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்தமைக்காக அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஒன்றிணைந்த தமிழ்தேசிய கட்சிகள் அறிக்கை !

இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும் காவல்துறையினரும் இணைந்து குழப்பியதற்கு எதிராகவும், அரசு இது குறித்து எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளாததைக் கண்டித்து ஒன்றிணைந்த தமிழ்தேசியகட்சிகளின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராஜா கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

“தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு. பாரம்பரியமாகவே மத அனுஷ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ்த் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது.

அவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் போராடி வருகின்றது. அவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப்பின்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்காகப் போராடி மரணித்துப் போனவர்களைத் தமிழ் மக்கள் அஞ்சலிக்கக்கூடாது என்பதற்காக, அரசு பொய்யான தவறான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கி, தமக்காக மரணித்துப் போனவர்களுக்கு அஞ்சலிப்பதற்குத் தடையினைப் பெற்றிருந்தார்கள்.

அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டினை இராணுவமும் பொலிசாரும் இணைந்து பல இடங்களில் மிக அநாகரிகமான முறையில், அந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் அதனைத் தடுத்து, அச்சுறுத்தி அவர்களை அடக்க முயற்சித்தார்கள்.

இலங்கையில் இருக்கக்கூடிய மக்கள், தாம்தாம் விரும்பிய மதங்களைப் பின்பற்றுவதற்கும், அதனை அனுஷ்டிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் அரசியல் சாசன ரீதியாக சகல உரித்தும் உடையவர்கள். ஆனால், கடந்த 29ஆம் திகதி இந்து மக்களின் கார்த்திகை விளக்கீட்டின்போது புதுக்குடியிருப்பு, பரந்தன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, வலிகாமம் போன்ற பல பகுதிகளில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் வீடுகளுக்குள் சென்றும், இந்து ஆலயங்களுக்குள் அத்துமீறி நுழைந்தும், அவர்கள் பக்தியோடு ஏற்றிய தீபங்களை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்து அவர்களது அனுஷ்டானங்களை அவமதித்ததுடன், சில பெரியோர்கள் தாக்கப்பட்டும் இருக்கின்றார்கள்.

கோவில் அர்ச்சகர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றார்கள். கார்த்திகைத் தீபமேற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்து மக்களின் மிக முக்கிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டினை இலங்கை அரசின் காவல்துறையினரும் இராணுவத்தினரும் திட்டமிட்ட வகையில் ஆயுத முனையில் குழப்பியிருக்கிறார்கள். கார்த்திகை விளக்கீடு என்பது இந்து மக்களின் மிக முக்கியமான அனுஷ்டான நாள் என்பதும், காலாதிகாலமாக அதனை அவர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள் என்பதும், இலங்கை அரசுக்கும் காவல்துறைக்கும் படையினருக்கும் தெரிந்த விடயம்.

உண்மைநிலை அப்படியிருக்க, அதனை அச்சுறுத்தித் தடை செய்ய முயற்சிப்பது என்பது தமிழ் மக்களின் மத வழிபாட்டுரிமையைப் பறித்தெடுப்பதாகும். அரசின் திட்டமிட்ட இந்தச் செயற்பாடானது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தம்மை ஒரு ஜனநாயக அரசு எனக் கூறிக்கொள்ளக் கூடியவர்கள் இன்னுமொரு தேசிய இனத்தின் மத உரிமையை அச்சுறுத்திப் பறிப்பதென்பதும் தடை செய்வதென்பதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.படையினரதும் காவல்துறையினரதும் இந்தத் திட்டமிட்ட செயற்பாட்டுக்கு அரசு மன்னிப்புக் கோரவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என்னும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.

அரசு தமிழ் மக்களுடைய மொழி, மத, நில உரிமைகளைத் தொடர்ச்சியாகப் புறக்கணிக்குமாக இருந்தால், தமிழ் மக்களைத் தொடர்ச்சியான ஓர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசே வழிசமைக்கின்றது என்று பொருள்படும்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் கோரிக்கைகளுக்கு இசைவாக அரசு உடனடியாக தனது மன்னிப்பைக் கோரவேண்டும் என்றும் அல்லது குறைந்தபட்சம் நடந்து முடிந்த சம்பவங்களுக்குத் தனது வருத்தத்தையாவது தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் வழிபாட்டுரிமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்” – எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா – பாகிஸ்தான் இடையே புதிய இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து !

சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட ஜெனரல் வே, பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்து பேசினார்.

அப்போது இருவரும் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது குறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையேயிலான உறவுகள் தொழில் நுட்பம், உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பாகிஸ்தான் இராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணம் அமைந்தது. சர்வதேச மற்றும் பிராந்திய சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்டு இராணுவ ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்பட வில்லை. சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோரை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக ஜெனரல் வே கூறும் போது, சீனா, பாகிஸ்தான் ராணுவங்கள் கூட்டாக இணைந்து அபாயங்கள், சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கும் இருந்த வரும் நிலையில் சீனா-பாகிஸ்தான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை அழைப்பு !

“யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் யாழ்.இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(01.12.2020) இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த வாய்ப்புக் காணப்படுகின்றது.  எனவே பிரதேச மட்டங்களில் கிராமசேவகர்கள் குறித்த ஆள் சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புச் சிக்கல் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்றார்.

“கடந்த கால தமிழ்தலைமைகளின் சுயநலன் சார்ந்த தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் தொடர் பிரச்சினைகளுக்கு காரணமாகும்” – அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (01.12.2020) மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந் நிலையில், இந்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய கடற்றொழில் சார் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதே நேற்றைய சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்திருந்தது.

இதன்போது, இலங்கையின் வரவு – செலவுத் திட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை, குருநகர், – பேசாலை போன்ற மீன்பிடித் துறைமுகங்களையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, நீர் வேளாண்மையை விருத்தி செய்வதிலும் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அத்துடன் துறைசார் அதிகாரிகளுடன் கலந்தரையாடி காலநிலை மாற்றம் தொடர்பான அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவை வழங்குவதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது, கடற்றொழில் செயற்பாடுகளில் காணப்படும் சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைரங்கள் தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைய முடியுமென்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தன்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையை முழுமையாக பயன்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்து கொள்வதை நோக்கி நகர முடியுமெனவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சில தமிழ் தலைமைகளின் சுயநலன் சார்ந்த – தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருப்பதனை தன்னால் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர்,

தேசிய நல்லிணக்தின் மூலமே பிரச்சினைகளை அணுக முடியும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை பாராட்டியதுடன், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற தமிழர் என்ற அடிப்படையிலும் பாராளுன்ற பேரவையின் உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.

LPL 2020 – எட்டாவது ஆட்டத்தில் கண்டியை பந்தாடியது ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் !

LPL 2020 எட்டாவது போட்டி நேற்றைய தினம் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் கண்டிடஸ்கர்ஸ் இடையே நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கிய போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 38 பந்துகளில் 61 ஓட்டங்களையும் அணித்தலைவர் திஸரபெரரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்டத்தை வலுப்படுத்திதினர். நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் 185 ஓட்டங்களை பெற்றது. கண்டி சார்பாக பந்து வீச்சில் நவீன்-  உல்-க 03 இலக்குகளையும் குணரட்ணே 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.

186 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணி சார்பாக சிம்பாவே அணி வீரர் ப்ரெண்டன்டெய்லர் 46 ஓட்டங்களையும் குணரட்னே 31 ஓட்டங்களையும் பெற்றமையே அதிகமாக காணப்பட்டது. ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டத்துடனேயே ஆட்டமிழந்து போயினர். நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து கண்டி அணி 131 ஓட்டங்களை மட்டுமே பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. ஜஃப்னா சார்பாக பந்து வீச்சில் உஸ்மன்-சின்வாரி 03பந்துப்பரிமாற்றங்களில் 03 இலக்குகளையும் திஸரபெரரா 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர பெரரா தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தன்னுடைய முதலிடத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது .

Image may contain: 1 person, text that says "OMy11CIRCLE LPLT20 JAFFN STALLIONS VS MATCH SUMMARY JAFFNA STALLIONS 185/8 TPERERA DDESILVA BHANUKA 20 OVERS 68[28) 61[38] 15(23] NAVEEN GUNARATNE PRADEEP 3/44 2/20 1/44 KANDY TUSKERS 131 TAYLOR GUNARATNE MENDIS 17.10VERS 46[32] 31(24] 20(09] SHINWARI PERERA HASARANGA 3/17 2/09 2/17 JAFFNA STALLIONS WIN BY 54 RUNS Cricket THEIPGGROUP f FACEBOOK.COM/LPLT20 I INSTAGRAM.COM/LPLT20 TWITTER.COM/LPLT20"

பொறுப்பேற்கப்படாத சடலங்களை உடனடியாக தகனம் செய்யுங்கள்” – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு !

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாமல் காவல்துறையினரின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் அவர்களின் உறவினர்களால் சவப்பெட்டிகள் வாங்கி கொடுக்க முடியாமல் மற்றும் பொறுப்பேற்காத சடலங்கள் காவல்துறை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து அவ்வாறான பூதவுடல்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களுடைய அதிருப்தியை வெியிட்டு வருவதுடன் தங்களுடைய உறவினர்களுடைய சடலங்களை கையெற்கவும் மறுத்து வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.