“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நான் கொச்சைப்படுத்தமாட்டேன்.
ஆனால், நாட்டின் சட்டத்தை மீறி அவர்கள் செய்த மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால்தான் அவர்களைப் பகிரங்கமாக நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக நாடாளுமன்றில் நான் உரையாற்றினேன்.
ஆயுதப் போராட்டத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களை நேரில் கண்டறிந்தவன் நான். போர் முடிவுக்கு வந்திராவிட்டால் அவர்களின் அவலங்கள் தொடர்ந்திருக்கும். மீண்டுமொரு போரை தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்குத் தந்த அமோக ஆதரவை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வைப் பகிரங்கமாக நடத்த அனுமதிக்க முடியாது என நான் வலியுறுத்திய காரணத்தால் என்னைத் தமிழ் மக்களுக்கு எதிரானவனாக வெளிக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயன்றுள்ளார்கள். ஆனால், நான் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. இன்றும் தமிழ் மக்களை நான் நேசிக்கின்றேன். அரசியல் தீர்வே அவர்களின் கனவாக இருக்கின்றது. எனவே, முழு நாடும் ஏற்கும் ஒரு தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும்.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாராளுமன்றில் பொன்சேகா மாவீரர் தினத்தன்று புரவி புயல் வடக்கில் வீசியிருந்தால் மகிழ்வடைந்திருப்பேன் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.