31

31

“கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” – நீதியமைச்சர் அலி சப்ரி

“கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போது கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் ஜனசாக்கள் எரிப்பதை கண்டித்து தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலே இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“உலகில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை. கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமான கோரிக்கையல்ல. உலகில் 195 நாடுகளில் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கி இருக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனமும் அதனை அனுமதித்திருக்கின்றது. அதனடிப்படையிலேயே எந்த நிபந்தனையிலாவது அடக்கம் செய்ய கோருபவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கவேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் திடீர் மரணம் !

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்குகிறது. மொத்தம் 30 லட்சம் டோஸ் மருந்தை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஜனவரி 4-ந்திகதி முதல் சுவிசர்லாந்து முழுவதும் தேவைப்படுவோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் முன்னோடியாக சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் மரணம் அடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் முதியவர் மரணத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

91 வயதான அந்த முதியவர் ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்து இருக்கிறார். கொரோனா தடுப்பு மருந்துக்கும் அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் ஐவர் பலி – மொத்தம் 200ஐ தாண்டியது !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கைக 204ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் நாட்டில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 123ஆ உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 706 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை35 ஆயிரத்து329 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்னும் ஏழாயிரத்து 595 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மா அரைக்கும் இயந்திரத்தில் கூந்தல் சிக்கி கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு !

வெலிகந்தை பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரத்தில் மா அரைப்பதில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கூந்தல் சிக்கி கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகந்தை மஹிந்தாகம கடவத்தமடு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்திரிகதக என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சுயதொழிலுக்காக பொருத்தப்பட்ட மாவரைக்கும் இயந்திரத்தில் குறித்த பெண் வழமைபோல சம்பவதினமான நேற்று மாலை மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ள நிலையில் அவரது கூந்தல் இயந்திரத்தில் சிக்கியுள்ளதால் அவர் பலமாக சுற்றப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

“நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கையை மீறி சட்டவிரோத செயற்பாட்டில் நான் ஈடுபடவில்லை ” – மாவை சேனாதிராஜா

“நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கையை மீறி ஜனநாயக விரோத – சட்டவிரோத செயற்பாட்டில் நான் ஈடுபடவில்லை ” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் போட்டியாளர் இம்மானுவேல் ஆனோல்ட்டைத் (20 வாக்குகள்) தோற்கடித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் (21 வாக்குகள்) ஒரு மேலதிக வாக்கால் வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மாவையின் தன்னிச்சையான முடிவுகளாலேயே யாழ்.மாநகர சபை பறி போனதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். இவை குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“யாழ். மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வது அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பினர்களே. உறுப்பினர்கள் ஆனோல்ட்டை விரும்பும்போது அதற்கு மாறாக வேறொருவரின் பெயரை நான் பிரேரிக்க முடியாது.

மேயர் தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் பக்குவமாக நடக்குமாறு அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை, சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராகக் களமிறக்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேயர் தெரிவு தொடர்பில் இரண்டு தடவைகள் நடைபெற்ற கூட்டங்களில் யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் எவரும் சொலமன் சிறிலை விரும்பவில்லை. அவரின் பெயரை உறுப்பினர்கள் எவரும் என்னிடம் பிரேரிக்கவில்லை.

கூட்டமைப்பின் மேயர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எமது தரப்பினரும் அந்த இரு கட்சிகளிடம் நேரில் பேசினார்கள். ஆனால், அந்தக் கட்சியினர் எவரும் நம்பத் தகுந்த வகையில் – உருப்படியான பதில் எதையும் வழங்கவில்லை.

நான் வேறு வேட்பாளரை மேயராகக் களமிறக்கியிருந்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியிருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் மணிவண்ணன் நேற்று மேயராகக் களமிறங்கியபோது அந்தக் கட்சியைச் சேர்ந்த 10 பேர் கட்சியின் தலைமையின் உத்தரவை மீறி அவருக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். இந்தநிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை நாம் எப்படி நம்புவது ? அதேவேளை, ஈ.பி.டி.பியினர் மீதும் எமக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

எமது கட்சியின் மேயர் தெரிவுக்கான பரிந்துரைக்கமைவாக ஆனோல்ட்டுக்கு கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்த 5 பேரும் வாக்களித்தனர். எமது கட்சியைச் சார்ந்த ஒருவர் மட்டும் எதிர்பார்ப்புக்கு மாறாக நடுநிலை வகித்திருந்தார். அதனால் ஒரு வாக்கால் ஆனோல்ட் தோற்றார். நடுநிலை வகித்த உறுப்பினர் ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் ஆனோல்ட்டும் மணிவண்ணனும் சரிசம வாக்குகளைப் பெற்றிருப்பார்கள். குலுக்கல் முறையில் ஆனோல்ட்டுக்கு வெற்றி வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் நேற்று ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையிலிருந்து இந்த உண்மைத்தன்மையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். எனவே, சபை உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே ஆனோல்ட்டை மேயர் தெரிவுக்குப் பரிந்துரைத்தேன். நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லைகட்சியின் கொள்கையை மீறி ஜனநாயக விரோத – சட்டவிரோத செயற்பாட்டில் நான் ஈடுபடவில்லை ” என்றார்.

“எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள்” – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நேற்றையதினம் (30.12.2020) யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

யாழ். நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளைக் கொல்லாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?, மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை, கணவன்மாரை தங்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிவஜோதி என்னும் ஒரு சமூகப்போராளி !

லிற்றில் எய்ட் இன் ஒரு தூணாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த சிவஜோதியின் இழப்பு எமது அமைப்பிற்கும் எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பு! அவருடைய சமூக போராட்டத்தையும் சமூகப் பணிகளையும் முன்னெடுப்பதே நாங்கள் அவருக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலி.
ஒரு மிகச் சிறந்த தோழனை இழந்து தவிக்கின்றோம். சாதி மத பேதம் கடந்து மனிதத்தை நேசித்த ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி, நூலகம், இலக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றோடு இணைந்து
பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் பல நாடகங்களில் நடித்தவர். தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்.
இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid பொது
அமைப்பின் இலவசக் கணினிக் கல்வி மையத்தின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டார்.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவஜோதியின் இறுதி வணக்க நிகழ்வுகள் சுழிபுரத்தில் இன்று (31.12.2020) வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Image may contain: 1 person, text that says "சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வாழ்ந்து காட்டிய சமூகப் போராளி வி.சிவஜோதி அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் அமரர் வைத்தீஸ்வரன் சிவஜோதி தோற்றம் 1971.11.18 மறைவு 2020.12.30 அவரது பிரிவால் வாடும் துணைவி யார், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். லிற்றில் எய்ட் கிளிநொச்சி"

“மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்” – இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

“மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்” என திறன் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆய்வு மற்றும் புத்தாக்கத்துக்கான இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது “தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கில் உள்ள ஏனைய கட்சிகளும் தமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் இருக்குமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது ,

இதற்கு பதிலளித்த அவர்,

அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலையே பின்பற்றி வருகிறது. சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பொறுத்தே இவ்வாறான அரசியல்வாதிகளின் நிலைநிறுத்தல் அமையும்.

வறுமை குறைந்தால், பொருளாதார நிலை ஸ்திரமடைந்தால், சுகாதார நிலை நன்றாக மாறினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த தேர்தல் காலத்தில் இவ்வாறான மக்கள் பிரச்சினைகளை அவர்கள் விற்றுப் பிழைத்தார்கள். மக்கள் வறுமையில் இருந்தால் அது பற்றி அரசியல்வாதிகள் பேசுவார்கள்.

வடக்கில் மட்டுமல்ல நாட்டின் மற்றைய இடங்களிலும் இதே நிலைதான். இதற்கும் இன மத பேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்.” என்றார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் !

நியூசிலாந்து அணி இந்த வருடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஐந்திலும் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஆஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் தசம புள்ளி அளவிலேயே இடைவெளி இருந்தது.
மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
இதனால் நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

பாகிஸ்தானில் தொடரும் இந்துக்களுக்கெதிரான மதவாத கிளர்ச்சிகள் – மக்கள் வழிபட்ட கோயில் தீக்கிரையாக்கப்பட்டு முழுமையாக உடைப்பு !

பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களை அந்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் ஆதரிப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்தில் இந்து மத கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்து மத கோவில் அமைந்திருந்த தெறி கிராமம் அருகே ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் என்ற இஸ்லாமிய மதவாத கட்சி நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.
இந்த பேரணியின் போது கூடியிருந்தவர்களிடம் இந்துமத கோவிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சை சிலர் ஒலிப்பெருக்கி மூலம் பேசினர். இந்த வெறுப்புணர்வு பேச்சால் உணர்ச்சிவசமடைந்த பேரணியில் கூடியிருந்தவர்கள் தெறி கிராமத்தில் உள்ள இந்து மத கோவிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கும்பலாக கோவில் இருந்த பகுதிக்கு சென்றனர்.

கிராமத்தில் இந்து மத கோவில் அமைந்திருந்த பகுதிக்கு சென்ற அந்த கும்பல் கோவிலை முற்றுகையிட்டனர். மேலும், அந்த இந்து மத கோவில் கட்டிடத்தை இடித்தனர். கோவிலை தீ வைத்து கொளுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் இந்து மத கோவில் தீக்கிரையாகி, கட்டிடம் தகர்க்கப்பட்டு முழுவதும் அழிக்கப்பட்டது. கோவில் முழுவது அழிக்கப்பட்ட பின்னர் சில மணி நேரம் கழித்தே அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்து மத கோவில் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்து ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் அரசியல் கட்சியின் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மௌளானா அதர் ரகுமான் தனது கட்சி பேரணிக்கும் இந்து மத கோவில் தீ வைத்தும், இடித்தும் எரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.