24

24

46 ஆண்டு கால சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த லயனோல் மெஸ்ஸி !

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை வீழ்த்தி 7-வது வெற்றியை சுவைத்தது.

65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயனோல் மெஸ்ஸி  ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644-வது (749 ஆட்டம்) கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பார்சிலோனா கிளப்புக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் 33 வயதான லயனோல் மெஸ்ஸி கூறுகையில், ‘நான் கால்பந்து விளையாடத் தொடங்கிய போது எந்த ஒரு சாதனையையும் தகர்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் பிலேவின் சாதனையை கடப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகள் எனக்கு பக்கபலமாக இருந்த அணியின் சக வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்க்குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா – அணிவகுத்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் !

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ்  பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் நிலவியது.
இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தையில், இங்கிலாந்தில் இருந்து சரக்கு லாரிகளை பிரான்ஸ் எல்லைக்குள் நுழைய அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், எல்லையிலேயே லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே சரக்கு லாரிகள் இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லாரி டிரைவர்கள் பலரும் இரு நாட்டு எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான லாரிகள் இங்கிலாந்து-பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.

“உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்காக முஸ்லீம் அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது ? ” – பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி !

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம்வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கேள்வியை எழுப்பியுள்ள விஜயதாச ராஜபக்ச இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலன்களிற்காக வழங்கப்பட்ட நிதி என்பதால் அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயமாகும்.

2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் முஸ்லீம்வேர்ல்ட் லீக்கும் கலந்துகொண்டது .  அந்த அமைப்பின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன என்பதை கூறியுள்ள விஜயதாச ராஜபக்ச அந்த நிகழ்வில்  மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் கலந்துகொண்டிருந்ததையும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்மஸ் கொண்டாட்ட வழிபாடுகள் நடைபெறவுள்ள ஆலயங்களில் விசேட பாதுகாப்பு !

நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன், இன்றிரவு மற்றும் நாளை காலை வரை வழிபாடுகள் இடம் பெற உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாது காப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரலில் ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது தீவிரவாதிகளால் இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவில் கொடூரம் – இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை !

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது இனக்குழு அம்ஹாராக்கள். இப்பகுதியில் உள்ள அம்ஹாராக்கள் மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு ஒரோமியா பிராந்தியத்தில் நவம்பர் 1-ம் தேதி நடந்த ஒரு கிளர்ச்சி தாக்குதலில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அங்கு மீண்டும் 100க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று, பெனிஷங்குல் – குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் நேற்று(23.12.2020) அதிகாலை இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக சாட்சிகளை மேற்கோள் காட்டி ஒரு தனி அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை தொலைதூர கிராமங்களில் சிலர் சுற்றிவளைத்து மக்களுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் என்று அங்குள்ள முக்கிய அரசியல் கட்சியின் தேசிய இயக்கத் தலைவர் பெலட் மொல்லா தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் குமுஸ் போராளிகள் என்று பெலட் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியான பெனிஷங்குல்-குமுஸ் செழிப்பு கட்சி ஒரு அறிக்கையில்,” ஆயுதக் கொள்ளைக்காரர்கள்” இந்த தாக்குதலை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

அந்நாட்டு பிரதமர் அபி அகமது அப்பகுதிக்குச் சென்று இதற்கு முன் நடந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய ஒரு நாள் கழித்து, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்க அபி அகமது முயற்சிப்பதால் இனப் பதட்டங்கள் ஒரு பெரிய சவாலாக கருதப்படுகிறது.

இதேபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட மக்களை இடமாற்றப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகிறது ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் – முதற் கட்ட பணிகள் ஆரம்பம் !

ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய மருந்து செலவு குறைந்தது அதனை சேமிப்பது சுலபம்; என அமைச்சர் தெரிவித்துள்ள அவர் இது குறித்து ரஸ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஸ்புட்னிக்கின் மூன்று மருந்துகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது எனவும் மருந்து தொடர்பில் பேராசிரியர் லமாவன்ச ரஸ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மருந்துகளுடன் ரஸ்ய மருந்து ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறியமக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் மலசலகூடங்கள் அமைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறியமக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் 3200 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இன்று(24.12.2020) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில்,

இவ்வாண்டு 25 மில்லியன் செலவில் ஆடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை குறுகிய காலத்தினுல் நடைமுறைப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், மேலும் இம்மாவட்டத்தில் 17 ஆயிரத்தி 723 மாலசலகூடத் தேவை காணப்படுகின்றது. இவற்றில் எதிர்வரும் ஆண்டு 3200 மலசல கூடங்களை 360 மில்லியன் செலவில் அமைத்துக் கொடுக்க அனுமதியும் சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தினை எதிர்வரும் 9 மாதங்களில் நிறைவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் இவற்றுக்கான பயனாளிகளின் விபரங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மாவட்ட செயலாளரூடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் பிரதேச செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசினால் 60 மில்லியன் ரூபாவுமாக 360 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இவ்வமைச்சினால் இஞ்சி, உழுந்து, பழவகை உற்பத்திக்கான உதவிகள், தொடர் மாடி வீட்டுத்திட்டங்கள், கோழி வளர்பிற்கான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை எதிர்வரும் ஆண்டில் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.சேனநாயனக, மேலதிக செயலாளர் கலாநிதி, எஸ். அமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதிநிதி என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

“புறாக்களைப்போல் கபடமில்லாமலும், சர்ப்பத்தைப்போல் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் எமது மக்கள் இருக்க வேண்டும்” – நத்தார் தின வாழ்த்துச்செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

“புறாக்களைப்போல் கபடமில்லாமலும், சர்ப்பத்தைப்போல் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் எமது மக்கள் இருக்க வேண்டும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில்  ,

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி. யாரும் யாருக்கும் அடிமைகள் என்றில்லாத எமது உரிமையை வெல்லும் திசை நோக்கி எமது மக்களை வழிநடத்தி செல்லவே நாம் இந்த பூமிக்கு வரவழைக்கப்பட்டவர்கள். எமது நிலங்கள் யாவும் எமது மக்களுக்கே சொந்தம். எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும், எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும் நீடித்து நிலவ வேண்டும்.

எமது மக்களின் நியாயமான உணர்வுகளை ஏற்று நாம் என்றும் பரிசுத்தமாகவே உழைத்து வருகின்றோம். ஆகவேதான், துயரச்சிலுவைகளை எமது மக்கள் சுமந்து நடந்த இரத்தப்பலிகளுக்கு மத்தியிலும், அடுத்தவர்களை போல் எமது மக்களை கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் எமது மக்களுடனேயே நீரில் வாழும் மீன்களைப்போல் இடையறாது நாமும் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

முட்களிலும் கற்பாறைகளிலும் நடந்து வதைபட்ட எமது மக்களின் பாதங்களின் வலி தடவி, பசுந்தரையின் பாதை நோக்கி அவர்களை அழைத்துவர நாம் அயராது உழைத்து வந்திருக்கிறோம். எமது மக்களை நேசித்து நாம் கட்டியெழுப்ப நினைக்கும் சமத்துவ சமாதான கனவுகளுக்காக நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும், கொள்கைகளும், அதற்கான யதார்த்த பூர்வமான நடைமுறைகளும்.

எமது தீர்க்கதரிசனங்களும் மழை நீரால் அரித்துச் செல்லப்படும் மணல் மீது இடப்பப்பட அத்திவாரங்கள் அல்ல.மாறாக எந்த காட்டாற்று வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கல்மலைகள் மீதே எமது கொள்கைகளின் அத்திவாரங்களை நாம் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

புறாக்களைப்போல் கபடமில்லாமலும், சர்ப்பத்தைப்போல் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் எமது மக்கள் இருக்க வேண்டும். ஏனெனெனில், எமது மக்கள் மீது பாசத்தை காட்டுவதாக பாசாங்கு செய்து கொண்டும், திட்டங்களும் வழிமுறைகளும் இல்லாமல் வெற்று வீர முழக்கமிட்டுக்கொண்டும், சாத்தான்கள் போல் வேதம் ஓதிக்கொண்டும், ஆட்டுத்தோல்களை போர்த்திக்கொண்டு ஓநாய்களாகவும் எல்லோரும் எமது மக்களிடம் இன்னமும் வருகிறார்கள்.

அவர்கள் எமது மக்களை துயரங்களில் இருந்து ஒரு போதும்மீட்க மாட்டார்கள். நித்திய வெளிச்சத்தை நோக்கி மக்களை வழி நடத்தி செல்லவும் மாட்டார்கள். மாறாக, எமது மக்களின் மீது நீடித்த அவலங்களையும் அக்கிரமங்களையும் மறுபடி சுமத்தவும், அவைகளின் மீது ஏறி நின்று அரசியல் சுயலாபம் நடத்தவுமே அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அவலங்கள் நடக்காத, அழுகுரல்கள் கேட்காத, நோய் பிணிகள் இல்லாத,.பஞ்சம் பசி பட்டினி வறுமை இல்லாத, அடிமைத்தனங்களும் ஒடுக்குமுறைகளும் இல்லாத, உயர்வென்றும் தாழ்வென்றும் இரு வேறு சமூகங்கள் இல்லாத, எமது மக்கள் எவரிடமும் கையேந்தி நிற்காத சமத்துவ சாம்ராச்சிய கனவொன்றே எமதும் எமது மக்களினதும் ஆழ்மன இலட்சிய கனவாகும்.

அதற்காக நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் எமது வழிமுறைகளும் ஒரு போதும் ஒழிந்து போகாது.

எமது தீர்க்கதரிசனங்களும், நம்பிக்கை தரும் சாத்தியமான வழிமுறைகளுமே இன்று எல்லோராலும் ஏற்கப்பட்டு வெல்லப்பட்டும் வருகின்றன.

இனிவரும் காலங்களிலாவது மக்கள் எமக்கு வழங்கும் ஆணையின் பலத்தில் ஒளி பிறந்த தேசமாக எமது சொந்த பூமியை சொர்க்க பூமியாக மாற்றிட உறுதி கொண்டு எழுவோம்.

விசுவாசங்களையும், நேசிப்புகளையும் வேறோர் இடத்தில் மதிமயங்கி கொட்டி விட்டு, நித்திய வெளிச்சத்தின் விடியலை இன்னோர் இடத்தில் தேடிக்கண்டு விட முடியாது, இது இயேசு பாலன் பிறப்பெடுத்த இத்தினத்தில் நான் உங்களுக்கு கூறும் அறிவுரையாகும்.

இவ்வாறு தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிறந்திருக்கும் நத்தார் தினத்தை வல்லமையுடையவர்கள் மகிமையானவற்றை தருவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டில் தங்கியிருக்காது நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்யப்பழக வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது”  – பிரதமர் மகிந்த ராஜபக்ஷ

“வெளிநாட்டில் தங்கியிருக்காது நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்யப்பழக வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது”  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று(23.12.2020) இடம்பெற்றது.

இதில், அமைச்சர்களான பவித்ரா வன்னி ஆராச்சி, காமினி லொகுகே, சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, சீதா அரம்பேபொல, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எச்.முணசிங்க, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய பிரதமர்,

“வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தல் மற்றும் நிறுத்துவதுடன் நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது.

விசேடமாக 2012ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்று 4470 மில்லியன் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. அதனால் இந்நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து நான் புதிதாக எதையும் கூற தேவையில்லை. எனினும், நாம் 70 வீதமான ஒளடதங்களை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். நாம் அவ்வாறு இறக்குமதி செய்கின்றோமாயின், அந்த ஒளடதங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதனை செய்வதற்கான ஞானம் மற்றும் அறிவு மிகுந்தவர்கள் எம்மிடம் உள்ளனர்.

அதனால், அவ்வாறான ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும் என நம்புகின்றோம். இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனால் அதற்கான வேலைத்திட்டங்களை நாம் அனைத்து துறைகளிலும் செயற்படுத்த வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.

“இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம்” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜெனீவாவில் எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில்  இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதற்காக தமிழ்தேசிய கட்சிகள் வரைவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக பல அரசியல்கட்சிகளும் ராஜபக்ஷக்கள் அரசை எச்சரித்திருந்தனர். இந்நிலையில் “இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனாவை ஒழிப்பதில் நாம் நியமித்த கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். முழுநாட்டையும் முடக்காமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் கொரோனா பரவும் இடங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்தித் தொற்றுப் பரவலைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர். இதற்கு ஒத்துழைத்துவரும் மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர், முப்படையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளும், பாராட்டுக்களும் எப்போதும் இருக்கும்.

பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் உருவெடுத்துள்ளது. அது இலங்கையிலும் பரவக்கூடாது என்பதற்காகவே அந்த நாட்டிலிருந்து இங்கு பயணிகள் வருவதை இன்று முதல் தற்காலிமாகத் தடை செய்துள்ளோம். இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து கொரோனாத் தடுப்புக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, 2021இன் ஆரம்பத்திலேயே இலங்கையில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும். இதனிடையே எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வை முன்னிலைப்படுத்தி இங்கு எதிர்க்கட்சியினர் தமது சுயலாப அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது. எனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம். எதிர்க்கட்சியினரின் ஜெனிவாப் பரப்புரைகள் தொடர்பில் நாம் எவரும் அலட்டிக்கொள்ளக்கூடாது தெரிவித்துள்ளார்.