05

05

வாழ்விட காணிகளை வழங்குமாறு கோரிய மக்கள் போராட்டம் ! மக்கள் கட்டியிருந்த பதாகையை பிடுங்கி எறிந்து பொலிஸார் மிரட்டல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் வேணாவில் கிராமத்தில் காணி கோரி வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 பேர் தமக்கு உறவினர்களின் காணிகளில் தொடர்ந்தும் வாழ வழியின்றி தமக்கான காணிகள் வழங்க கோரி வீதிக்கு வந்து வீதியோரத்தில் அரச காணி ஒன்றில் 16 பேரும் தனித்தனி கொட்டில்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தமக்கான வாழ்விட காணிகளை வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேச காணிக்கிளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்தும் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் தமது கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றில் வீதியோரத்தில் கொட்டில்களை அமைத்து காணி கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வேணாவில் கிராமத்தில் காணி கோரி மக்கள் போராட்டம் - தமிழ்க் குரல்
சிறிய குழந்தைகளுடன் வீதிக்கு வந்த இவர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த குடும்பங்களை போராட்டம் செய்ய முடியாது என கொரோனாவை காரணம் காட்டி குறித்த இடத்தை விட்டு செல்லுமாறும் வரும் திங்கள்கிழமை பிரதேச செயலகத்துக்கு தங்களை அழைத்து சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் இவர்களை கலைந்து செல்லுமாறும் கோரினர்.

இருப்பினும் குறித்த மக்கள் பிரதேச செயலாளர் வருகை தந்து தமக்கான உத்தரவாதம் வழங்க வேண்டுமென தொடர்ந்தும் போராடி வந்தனர். இந்நிலையில் உறவுகள் தமது போராட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக குறித்த இடத்தில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தினர்.

இதன் பின்னர் உறவுகள் தமக்கான மத்திய உணவை தயாரித்து வைத்திருந்த நிலையில் மீளவும் குறித்த இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் மக்கள் கட்டியிருந்த பதாகையை பிடுங்கி எறிந்து கொரோனாவை காரணம் காட்டி மக்களை அச்சுறுத்தியதோடு நீதிமன்றில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டி குறித்த இடத்தில் வருகை தந்திருந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளையும் பொலிஸ் நிலையம் வருகை தந்து வாக்குமூலம் தருமாறு குறித்த இடத்தில் இருந்த இளைஞர்கள் சிலரை கைது செய்வதாகவும் மிரட்டினர்.
புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்திய காவல்துறை அதிகாரிகள் ! - தமிழ்க் குரல்
இதன்போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்ற இடங்களில் கொரோனா தொடர்பில் கண்டு கொள்ளாத பொலிசாருக்கு எமது போராட்ட இடத்தில் மட்டுமா கொரோனா வரும் எனவும், காணி வீடு இல்லாமல் இருப்பதை விட இதிலேயே கொரோனா வந்து சாகிறோம் என பொலிஸாருக்கு தெரிவித்தனர். நிலைமைகளை பிரதேச செயலாளருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் சம்பவ இடத்துக்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் உறவுகள் வீதியோரத்தில் இருந்து உணவருந்துவதோடு தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

“கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் அழைக்க முடியாது” – இரா.சம்பந்தன் சரத்வீரசேகரவுக்கு பதில் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சியைத் தடை செய்தே தீருவோம்’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் அங்கததவர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியாகச் செயற்பட்டதில்லை. கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் அழைக்க முடியாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச அப்போது ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச குழு பல தடவைகள் பேச்சுக்களை நடத்தியதை சரத் வீரசேகர உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் நினைவில்கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி என்றபடியாலேயே அன்று எம்முடன் மஹிந்த அரசு பேச்சு நடத்தியது. இன்றும் நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் உண்மையான – நேர்மையான – நீதியான பேச்சுக்குத் தயாராகவே இருக்கின்றோம்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்திலுள்ள ஆளுந்தரப்பினர் கருத்துக்களை வெளியிடும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். வாய்க்கு வந்த மாதிரி இனவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கை விளையாட்டுத் துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் விளையாட்டு துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05.12.2020) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது, “ விளையாட்டு அமைப்புகளின் நிதிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மட்டுமே அரசாங்கம் ஈடுபடும். இருப்பினும் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அரசியல் தலையீடு இல்லாமல் செயற்படும்.

இதேவேளை விளையாட்டு தொடர்பான புதிய சட்டம் தேவை , புதிய விளையாட்டுச் சட்டத்தை உருவாக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.

அத்தோடு லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடருக்கு விளையாட்டு அமைச்சினால் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபையினால் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை காட்டுகின்றது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன் !

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(05.12.2020) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்த பாராளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் அடங்குகின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தையும், மாவீரர் நாள் பதிவுகளையும் முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைதுசெய்துள்ள அரசு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயலாகும். இவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்.

அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேபோன்று அரசு ஏனைய விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டும். கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்குகளை – தீபங்களை ஏற்றுவதற்காகச் சிறிய அலங்காரங்களைச் செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர். நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவத்துக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றியபோது, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட முடிந்தது எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சினைகளை உரூவாக்குகின்றீர்கள்.

நீங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சஹ்ரானை உருவாக்கியதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உருவாக்கினீர்கள். நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்குக்கூட இந்த அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.

“நான் பதவியேற்கும் முதல் நாளில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்பேன்” – ஜோ பைடன் !

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் சுமார் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனிடையே இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மாதம் (நவம்பர்) 3-ந் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள ஜோ பைடன் அதற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கியுள்ளார். முககவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஜோ பைடன் நம்புகிறார்.
இந்த நிலையில் தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும், தனது பதவி காலத்தில் முதல் 100 நாட்கள் மக்கள் முக கவசம் அணிய வலியுறுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில், “நான் பதவியேற்கும் முதல் நாளில், அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்பேன். வாழ்நாள் முழுவதும் அல்ல. வெறும் 100 நாட்கள் மட்டும் முக கவசம் அணியுமாறு கேட்கப்போகிறேன்” என்றார்.
அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு புதிய ஜனாதிபதி பதவியின் முதல் 100 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒரு ஜனாதிபதி எவ்வாறு சிறப்பாக வேலை செய்கிறார் என்பதற்கான அளவீடாக இது கருதப்படுகிறது.ஒவ்வொரு அமெரிக்கரும் முக கவசம் அணிந்தால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறையும் என நம்பும் ஜோ பைடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மாகாணங்களுக்கு இடையிலான விமானங்கள் மற்றும் பஸ் போக்குவரத்தில் பயணிகள் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட போவதாகவும் அவர் கூறினார்.அதே சமயம் அமெரிக்க மக்களை முக கவசம் அணியுமாறு கட்டளையிட ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று அரசியலமைப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சீனர்களுக்கு அதிகரிக்கும் விசா கட்டுப்பாடுகள் !

அமெரிக்கா – சீனா இடையை மோதல் போக்கு நீடித்து வருகிறது. கொரோனா வைரசை பரப்பியதாக சீனா மீது குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

குறிப்பாக அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறி சீன தூதரகத்தை மூடியது. அதுபோல் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க தடை விதித்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும் கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விசா தடை விதித்தது.

இந்த நிலையில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஐக்கிய முன்னணி பணித்துறை உடல் ரீதியாக வன்முறை, திருட்டு, தனியார் தகவல்களை வெளியிடுதல், உளவு, நாசவேலை தீங்கிழைக்கும் தலையீடு ஆகிய வற்றில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2020 – யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி முதல் தோல்வி !

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் கொழும்பு கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 41 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், குய்ஸ் அஹமட் 3 இலக்குகளையும் சமீர 2 இலக்குகளையும் மத்தியூஸ், உதான, கௌசல் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 இலக்குகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி, 19.2 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 4 இலக்குகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொழும்பு கிங்ஸ் அணி 6 இலக்குகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் ஆந்ரே ரஸ்ஸல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 இலக்குகளையும் வியாஸ்காந் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின் ஊடாக வலதுக் கை சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந் வியாஸ்காந், லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். இதன்மூலம்  லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடருக்கு தெரிவான முதல் தமிழன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மத்தியூஸின் ஆட்டமிழப்பை யாழ்ப்பாண அணிக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்த  வியாஸ்காந்த்! | NewUthayan

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – 2021 பெப்ரவரியில் இலங்கையில் !

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து பெப்ரவரி நடுப்பகுதியில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளதாக மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் இதனை தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் இரு குழுக்களை அமைத்துள்ளனர்,அமெரிக்கா ரஸ்யா சீனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வருகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்தினை எந்த நாட்டிடமிருந்து பெறுவது என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பைசர்-பயோன்டெக் நிறுவனங்களின் மருந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை போன்ற நாடுகளில் அதனை சேமிப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகாவை, ஜனாதிபதியாக்கி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்” – செல்வம் அடைக்கலநாதன்

“சரத் பொன்சேகாவை, ஜனாதிபதியாக்கி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

‘வடக்கு, கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரவி புயல், மாவீரர் தினத்தன்று வந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருபேன்’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவருடைய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்களைப் புண்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதித் தேர்தலொன்றில் தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தமை மன வேதனையளிக்கின்றது. சரத் பொன்சேகாவின் கருத்து மிகவும் மோசமானது. அதனைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்தும் சரத் பொன்சேகா, ஜனாதிபதியாகி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்.

விடுதலைப்புலிகளை அரசு எதிர்க்கின்றது என்பது உண்மையாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இறந்தவர்களை அனுஷ்டிக்க உறவினர்களுக்கு உரிமை உண்டு. மனிதாபிமானமுள்ள எவரும் அதனை எதிர்க்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” – எம்.கே.சிவாஜிலிங்கம்

மாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருடைய கருத்துக்கு பதிலளித்துள்ள வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் “ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யாழில் நேற்று (04.12.2020) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அதரிவித்ததாவது,

“நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  குறிப்பாக புரெவி புயல் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தன்று வீசியிருக்கலாம் என்று சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளது.

கொடூர மன நிலையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் புரிந்தவர், இராணுவம் போர்க் குற்றத்தைப் புரிந்ததென்று இதே இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.இலங்கையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் நடைபெற்றுள்ளது எனவும் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்னொரு குழு 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் கணக்கில் வராமலும் உள்ளது என்றும் கூறியுள்ளது. ஆகவே, இவ்வாறு கொன்றுவிட்டு ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லுவது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற இழிவுபடுத்துகின்ற செயலாகும்.

இதைவிட இன்றைக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினுடைய கூற்றைப் பார்த்தால், இவர், புலிகளுடைய தற்கொலைப் படைத் தாக்குதலிலே கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்று மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.