லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் கொழும்பு கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 41 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், குய்ஸ் அஹமட் 3 இலக்குகளையும் சமீர 2 இலக்குகளையும் மத்தியூஸ், உதான, கௌசல் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி, 19.2 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 4 இலக்குகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொழும்பு கிங்ஸ் அணி 6 இலக்குகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் ஆந்ரே ரஸ்ஸல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 இலக்குகளையும் வியாஸ்காந் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியின் ஊடாக வலதுக் கை சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந் வியாஸ்காந், லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடருக்கு தெரிவான முதல் தமிழன் என்ற பெருமையை அவர் பெற்றார்.