மகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று. ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு.” இதன் அவசியம் இன்று நம் தமிழ் சமூகத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமூக மாற்றம் பற்றி பேசும் பலரே இன்று சமூகத்தின் பல்வேறு சிரழிவுகளுக்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள். இது தாயகத்தில் மிகவும் ஒரு மேசமான நிலையில் உள்ளது. அதற்காக புலம் பெயர் மண்ணில் உள்ளதெல்லாம் திறம் என்று கூறவரவில்லை. புலம்பெயர் மண்ணில் இன்று வேறு ஒரு வியாதி பிடித்துள்ளது. கற்பனையில் கப்பலோட்டும் தமிழனாக புலம்பெயர் தமிழன் மிகவும் மோசமான ஒரு தமிழ் சமூகத்தை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி வருகிறான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக 20 வருடங்களுக்கு மேலாக உழைத்து பின்னர் தகடு வைப்புகளால் ஓய்வு பெற்ற கே.பி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா பத்மநாதன் அவர்கள் புலிகளின் மறைவிற்கு பின் பரவலாக அதிகம் பேசப்பட்டு வந்த ஒருவர். இவர் நல்லவரா கெட்டவரா என்ற விவதாம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆனால் அண்மையில் தமிழ் பத்திரிகையாளர் டீ. பி. எஸ் ஜெயராஜ் நான்கு பகுதிகளாக கே.பியுடனான நேர்காணலை மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தார்.
நம்மவர்களுக்கு விடுப்பு பூராயம் அறிவதில் மிகுந்த அக்கறை! ஆனால் இந்த நேர்காணல் இந்த விடுப்பு பூராயங்களை விறுவிறுப்பாக்கவில்லை. யதார்த்த நிலையை விளக்கியது. கே.பி முன்னர் வெளியில் இருந்து சொன்னதைதான் மீளவும் சொல்லியிருக்கிறார். கே பி உடன் மே18க்குப் பின் பலதடவை உரையாடி இருந்தேன். விவாதித்தும் இருந்தேன். தேசம்நெற் ஆசிரியர்களும் கே பி யுடன் கதைத்ததைப் பதிவு செய்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்ன விடயங்களைப் பேசினாரோ அதே விடயங்களையே அவர் கைது செய்யப்பட்ட பின்னரும் பேசுகின்றார். நானும் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவன் என்பதை முன்னரே எழுதி உள்ளேன். அவ்வாறே கே பி யும் விடுதலைப் புலிகளுடன் நீண்ட காலம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.
இப்போதுள்ள நிலையில் கே பி தங்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் சிறைகளில் வாடுவதனாலும் தங்களை நம்பிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதால் அவர் குற்ற உணர்விற்கு உள்ளாகி இருப்பதை அவருடன் உரையாடியதில் இருந்து உணருகிறேன். அந்தக் குற்ற உணர்வு பாதிக்கப்பட்டவர்களிற்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற உந்துதலை வழங்குகின்றது.
ஆனால் இதுபற்றி உடைந்து போய் பல்வேறு அணிகளாகி உள்ள புலம்பெயர் புலிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை தம் வசதிக்கேற்ப வெளியிடத் தொடங்கினார்கள். கே.பியே அடுத்த முதல்வர்! கே.பி டீ.பி.எஸ் கூட்டில் ஒரு பத்திரிகை. கே.பி ஒரு ஆயுதக்குழுவை கட்டுகிறார். கே.பி அபிவிருத்தி என்ற பெயரில் காசு சேர்க்கிறார். கே.பி மீளவும் புலிகள் பாணியில் மாபியா நடத்த முனைகிறார். என்று தாம் விரும்பிய படி காது மூக்கு வைத்து தொடங்கிய கதைகள் இன்று கடைசியல் கே.பிக்கு அரசு 500 பரப்பு காணியை இலவசமாக வழங்கியுள்ளதில் என்பதில் வந்து நிற்கிறது.


இயக்கத்தை விட்டு கே.பியை ஓய்வெடுக்க சொன்னபோது அவரிடம் இருந்த கடைசி குண்டூசி வரை இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் வெளிநாட்டு புலிகளிடமிருந்து ஒரு ஓய்வூதிய சம்பளமே அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கியிருக்க கூறிய அதே இயக்கம் கே.பியை ஒரு அரசியல் ஆலோசகராக 2003இல் கொண்டுவர மீளவும் விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றதை பலர் மறந்து விட்டனர். அதை அன்று இக்பால் அத்தாஸ் ஹின்டு பத்திரிகையில் விலாவாரியாக எழுதியிருந்தார். http://www.hinduonnet.com/2003/10/15/stories/2003101511111000.htm
கே.பியை எப்படியாவது இயக்கத்தினுள் வைத்திருக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முயன்ற போதும் அதுவும் கூடிவரவில்லை. இதற்கு பின் நடந்தவைகளை தனது நேர்காணலில் கே.பி விரிவாக கூறியள்ளார். கே.பியுடன் வேலைசெய்த முன்னைநாள் இயக்க நண்பர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் தாமுண்டு, தம்பாடு உண்டு என்று இருக்கிறார்கள். இவர்கள் யாரும் கே.பியை குறை கூறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு விலத்திய பல்வேறு பதவிகளை வகித்தவர்கள் இன்று புலம்பெயர் மண்ணில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யாரும் கே.பியின் இந்த அறிக்கை பொய் என்று கூறவில்லை.
ஆனால் இதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று இவர் தற்போது ஒரு சூழ்நிலைக்கைதி எனவே இவரை விட்டு விட்டு நாம் நமது வேலையான தேசியத்தை கட்டுவோம் என்று தேசிய வியாதி பிடித்த கூட்டம் அலைகிறது. இவர்களில் 99வீதமானோர் எந்த ஒரு இயக்கத்திற்கும் போகாதவர்கள். போராட்டம் தொடங்கிய மறு கணமே வெளிநாடு வந்தவர்கள். ஒரு சிலர் வெறும் சாக்கு போக்குக்காக தம் சொந்த நலனுக்காக இயக்கங்களிற்கு போனவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர் ஊடகங்களை தம் வசம் வைத்திருப்பவர்கள். இவர்கள் தான் இன்று கே.பியை ஒரு துரோகியாக்கி அவரை ஏதாவது ஒரு நாட்டின் உளாவளி என்று முத்திரை குத்தமுனைபவர்கள். இவர்களில் ஒரு தரப்பு உலகப் புகழ் பெற்ற புனைபெயர் தமிழ் ஊடகவியலாளர்கள். இணைய செய்திகளை படித்து விட்டு நோரக கண்டது போல் விலாவாரியாக எழுதித் தள்ளுகிறார்கள்.
ஊடக தர்மத்திற்காக இலங்கைக்கு உயிரைப்பணயம் வைத்து சென்ற டைம்ஸ் சஞ்சிகையின் மேரி வாழும் இந்த நாட்டில் தான் இந்த கூட்டமும் வாழ்கிறது. ஒரு ஊடகவியலாளனிற்கு இருக்க வேண்டிய அடிப்படை தகமைகள் கூட இருக்க வேண்டாம்? குறைந்த பட்சம் நேர்மையாவது வேண்டாமா?
நான் கடந்த ஆவணியில் இலங்கை போய் வந்ததும் மீண்டும் எனக்கு கே.பியுடன் பேச வாய்ப்பு வந்தது. பேசிய பின் தான் அங்கு அவரைப் போய் பார்த்திருக்க வேண்டும் என்று பின்னர் கவலைப்பட்டேன். காரணம் தற்போது அவர் செய்யும் முயற்சி! அந்த முயற்சி வெறும் கண்துடைப்புக்காவோ காசு பணம் சேர்க்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் வன்னியில் நேரடியாக பார்த்து பாதிக்கப்பட்ட விடயங்களை விட அவரை பல விடயங்கள் மிகவும் மன அழுத்தத்திற்குள்ளக்கி இருந்தது. இதை அவருடனான உரையாடலில் புரிய முடிந்தது. இயக்கம் நடாத்திய காலங்களில் அதீத விசுவாசம் காட்டாது அந்த மனிசனும் சொத்து சேர்த்திருந்தல் மலேசியா போயிருக்கத் தோவையில்லை. பிடிபட்டிருக்கவும் மாட்டார்.
பத்மநாதனின் படமே அவர் பிடிபட்ட பின்னரே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. புலம்பெயர் நாட்டில் மே 18 இற்கு பின் தலைமறைவான பணக்காரப் புலிகளில் ஒருவராக கே.பியும் இருந்திருக்க முடியும். இயக்கம் முழுவதும் அழிந்ததை ஊர்ஜிதம் செய்த செல்வராசா பத்மநாதன் ஒரு பற்றிக்காக (Patrick) தென் ஆபிரிக்காவிலேயோ அல்லது டேவிட்டாக எரித்திரிவியாவிலோ ஒதுங்கியிருக்க முடியதா?
மக்கள் மீது பற்றுள்ளவர்கள் மக்களை விட்டு ஓட மாட்டார்கள். நம்பிக்கை இழந்த மக்களிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்றுதான் சிந்திப்பார்கள். இந்த ஒரு நோக்கிற்கா தன் அடையாளத்தை வெளியில் கொண்டு வந்த கே.பியை இலங்கை அரசு கைது செய்ததையே பொய் என்று தமிழீழத்தை இதோ நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதிய அதே புலம்பெயர் ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து எழுதுகிறார்கள்.
கே.பி மலேசியவில் தங்கியிருந்த போது பல்வேறு தடவைகள் மணிக்கணக்கில் தொலைபேசியில் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து. ”புலிகளின் ஏகப்பிரதிநிதுத்துவத்தை நீங்கள் மூட்டை கட்டிவைக்க வேண்டும்” என்று நான் தொடங்கவே, ”தம்பி இது தான் நாங்கள் விட்ட பெரிய பிழை இதை இனியும் விடக்கூடாது” என்று கூறியதோடு நிற்காது, பல்வேறு பட்ட இயக்க தோழர்களை அணுகியதுடன் அவர்களை தொடர்ந்து சந்தித்தும் வந்தார். இது தான் இங்குள்ள ஏகப்பிரதிநிதித்துவ புலிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. தமது பதவிகள் பணம் அனைத்தும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் கே.பி எதிர்ப்பு யுத்தத்தை அவர்கள் அன்றே ஆரம்பித்து விட்டார்கள்.
இன்று புலிகள் செய்த அனைத்து தவறுகளிற்கும் அனைவரிடமும் பொது மன்னிப்பும் கோரியுள்ளார் கே.பி. புலிகளின் அராஜகத்தை விமர்சித்து அவர்களை விட மிக மோசமாக ஆராஜகம் செய்த கட்சிகள் கூட இன்னமும் குறைந்த பட்ச மன்னிப்பை கூட இலங்கை மக்களிடம் கோரவில்லை. ஆனால் இதைக் கூட இந்த போலி ஊடகவியலாளர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இவர் சூழ்நிலைக் கைதியாம். அதுதான் மன்னிப்பு கேட்டவராம்.
”மாற்றம் என்பது உன்னுள் ஆரம்பிக் வேண்டும்” என்பதை கே.பி இன்று நிரூபித்துள்ளார்.
நேர்டோ என்ற அமைப்பை கே.பி தொடங்கியதன் காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கஸ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு மட்டும் அல்ல. மாறாக மனித நேயம் கொண்ட எந்த ஒரு மனிதனுக்கும் உருவாகும் ஒரு உணர்வு. வன்னிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்த்து அந்த மக்கள் படும் அவலங்களை பார்க்கும் ஒவ்வரு மனித நேயம் கொண்டவர்களுக்கு உருவாகும் அந்த உணர்வே கே.பிக்கும் உருவாகியது.
தடுத்து வைக்கப்படுதலின் உளவியல் தாக்கத்தை தானே அனுபவித்து உணர்ந்த கே.பி, தடுத்து வைக்கபட்டிருக்கும் முன்னை நாள் போராளிகளின் வேதனையையும் தாக்கங்களையும் நன்கே உணர்ந்தார். இவை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும் அவர் உணர்ச்சிவசப்படுவதை என்னால் புரிய முடிந்தது. ”நான் வாழ்ந்து முடிந்து விட்டேன் ஆனால் இவர்கள் வாழவேண்டும்” என்பதிலும் ”அவர்கள் நல்ல மனிதர்களாக வெளியில் வந்து தங்கள் சொந்த காலில் நிற்பதை பார்க்க வேணும்” என்பதே அவரின் விருப்பம். கே.பியும் ஒரு கொஞ்ச காலம் சிறையில் அப்பிடி இப்பிடி காலத்தை தள்ளிப்போட்டு பொது மன்னிப்பில் மயிலிட்டியில் தன் வாழ்க்கையை முடித்திருக்க முடியம். ஆனால் அதை செய்ய அவர் விரும்பவில்லை.
”அரசாங்கம் செய்யட்டும். நாங்கள் ஏன் செய்ய வேண்டும்” என்று விதண்டாவாதம் பேசவில்லை. அவர் இதை வைத்து அரசியலும் செய்யவும் விரும்பவில்லை. யுத்தத்தால் பாதிகப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை ப+ர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவே முனைகிறார். இன்று வட கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குறிப்பாக இந்த போராட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை நேரில் பார்த்த, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனிதன் செய்யும் ஒரு செயற்பாட்டையே இன்று நேர்டோ ஊடாக கே.பியும் செய்ய முனைகிறார்.
அண்மையில் மிகவும் இரகசியமாக புலம்பெயர் மண்ணிலிருந்து சென்று கே.பியை சந்தித்தவர்கள் அங்குள்ள பலரிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நாடு திரும்பினர். கே.பியும் இவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வந்த ஒருவர் போட்ட குத்துக்கரணத்தால் எல்லாமே தலைகீளாக மாறியது. உதவியை எதிர்பார்த்தவரகள் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை அரசை சார்ந்தவர்களோ பார்தீர்களா புலம்பெயர் தமிழர்களை என்று ஏளனம் செய்தனர். ஆனால் நல்ல மனம் படைத்த ஒரு சிலரின் உதவியுடன் தன்னால் இயன்றதை கே.பி செய்யாமல் இருந்து விடவும் இல்லை.
இன்று அவர்களிற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. ஆழுக்கொருவர் ஒரு பவுண் மாதம் கொடுத்தாலே அது ஒரு மாற்றத்தை கொண்டுவரும். புலிகளின் பணத்தை இங்கு வைத்துள்ளவர்கள் அதை காப்பாற்ற கே.பியை துரோகியாக்குவதிலேயே கவனமாயுள்ளனர். இவர்களிற்கு மக்களைப் பற்றியோ அவர்கள் படும் துன்பம் பற்றியோ அக்கறை கிடையாது. கே.பி ஏன் செய்ய வேண்டும்? எம்மை நேரடியாக செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று ஒருவர் கேட்கிறார்.
20 வருடங்களிற்குமேல் தனது உழைப்பால் ஒரு அமைப்பை எந்தவித சுயநலமும் பாராது கட்டிக்காத்ததுடன் இன்று ஒரு சதம் காசு கூட கையில் இல்லாது வெறும் கைதியாக இருப்பதே ஒரு முக்கிய காரணம். காசுதான் பெரிது என்றிருந்தால் கே.பி மலேசியா முதல் மயிலிட்டி வரை பினாமி பெயர்களில் முதலிட்டு விட்டு இன்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும்!
இலங்கை அரசை அணுகி தாம் ஒரு அரச சார்பற்ற ஸ்தாபனத்தை நடாத்த போகிறோம் என்றதும் அரசு இணங்கியதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இந்த விடயத்தில் ஏற்கனவே பலரை நம்பி செயற்பட விட அவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதிலேயே கவனம் செலுத்த முனைந்தார்கள். ஆனால் தனது எதிர்காலம் என்ன என்று தெரியத நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாது யுத்தத்தால் பாதிக்ப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த் வேண்டியது தனது கடமை என்று இலங்கை அரசிடம் கோரி அவர்களை இணங்க வைத்தார். அதை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போது செய்து வருகிறார்.

உடல் நலம் ஓத்துளைக்காது போதும் வன்னிக்கு அடிக்கடி சென்று அந்த மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களின் நலனை எந்த வித அரசியல் லாபமும் பாரக்காது முழுநேரமாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறார். கே.பியை பொறுத்தவரை இது சமூக சேவை மாத்திரம் அல்ல. தன் மனதில் ஏற்பட்ட வடுக்களை போக்க உதவும் ஒரு நீவாரணம். கே.பி மீதான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் தொடரவே போகிறது. ஆனால் அவை அனைத்துமே காலப்போக்கில் அடிபட்டுப்போகும். தனது விடா முயற்சியால் எவ்வாறு புலிகள் என்ற அமைப்பை கட்டியமைக்க உதவினாரோ அதேபோல் இந்த மக்களின் வாழ்வை கட்டிமையக்க இவரால் நிச்சயம் முடியும் என நம்புவோம்!
குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:
(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )
”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்
”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்
பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்
”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்