30

30

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்.

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன  தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நாற்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை வட மாகாண சுகாதார அமைச்சும், சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் வழங்கியிருந்தன.

இந்நிதி மூலம் ஆறு, ஏழு, எட்டு ,ஒன்பது, பத்தாம் இலக்க நோயாளர் விடுதிகளின் நிலத்துக்கு தரை ஓடு பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. வெளிநோயாளர் பிரிவும் அழகுபடுத்தப்பட்டு சகல விடுதிகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பதுடன் உள்ளக தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பிரதேசத்தில் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலைதான் அதிக வசதி கொண்ட வைத்தியசாலையாக இருந்தது. இப்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது

uthul.jpgஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர். இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய்திருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார். சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல்: ஆட்சேப மனு நிராகரிப்பு

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. மேற்படி மனு பிரதம நீதியரசர் அசோக த சில்வா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிராணி ஏ. பண்டாரநாயக்க, கே. ஸ்ரீபவன், பி.ஏ. தயாரத்ன, எஸ்.ஐ. இமாம் ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் நஷ்டஈடு எதுவும் இன்றி மனுவை நிராகரிப்பதாக அறிவித்தது. 29 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை பிரதம நீதியரசர் அசோக த சில்வா திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஐந்து பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மனுதாரர் முன்வைத்துள்ள நிவாரணங்கள் சட்டபூர்வமற்றவை. அவற்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது. மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ள தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் மனுவொன்று பூர்த்தி செய்ய வேண்டிய சட்ட தேவைகளை இந்த மனு நிறைவு செய்யவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை ஆகிய பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

தனக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவு வாக்குகள் கிடைக்காமல் போனதை உறுதி செய்ய மனுதாரர் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. மனுதாரர் குறிப்பிடுவது போல தேர்தலில் முறைகேடு நடைபெற்றால் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். ஆனால் தேர்தலை ரத்து செய்யுமாறு மனுதாரர் கோரவில்லை. கோராத நிவாரணமொன்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜனாதிபதி அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டிருந்தார். ஆனால் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினருடன் கூட்டம் நடத்த முடியும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டதாக கூறப்பட்ட போதும் தனக்கு ஆதரவு வழங்கிய ஆதரவாளர்களின் அல்லது கட்சிகளின் பெயர்களை முன்வைக்க அவர் தவறிவிட்டதாகவும் அதில் கூறப் பட்டது. இதனடிப்படையில் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஐ.ம.சு. முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி யீட்டினார். சரத் பொன்சேகா 40.15 வீத வாக்குகளையும் பெற்றார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் முறை கேடாக நடைபெற்றதாக கூறி சரத் பொன் சேகா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ, போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் ஆணையாளர், சரத் கோங்கஹகே, ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக், சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப் படுவதை ரத்துச் செய்து தன்னை முறை யாகத் தெரிவான ஜனாதிபதி என அறி விக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடங்களான பிரதி வாதிகள் பூர்வாங்க ஆட்சேபனை முன் வைத்தனர்.