நேற்று 10/ 10/2010 லண்டன் லேயிட்டனில் ரெலோவின் பல முன்னாள் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மற்றும் ரெலோவின் அப்போதைய படைத்துறைத் தளபதி இளங்கோ ஆகியோர் அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று பல முன்னாள் ரெலோ உறுப்பினர்களையும், இன்றைய ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறீரெலோ உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர்களை சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லண்டன், லேய்டனில் ரெலொ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள், புலிகளுடனான சகோதரப் படுகொலைகளில் பாதிப்புற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பல முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் அமைப்பு ரீதியாக இயங்காமலும், நாட்டில் உள்ள ரெலோ அமைப்புடன் இணைந்து வேலை செய்யாமலும் வாழ்கின்றார்கள். இவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமது மக்களுக்கான பணிகள், மக்களுக்கு சிரமதான உதவிகள், மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகள் புரிய வேண்டும் என வலியுறுத்தியும், தாம் மக்களின் அபிவிருத்தி நலனில் அக்கறையுடன் செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதரவினையும், உதவிகளையும் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர்.
இந்த கோரிக்கைகள் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரிடையே ஒரு ஒன்று கூடலை வற்புறுத்தியும் உள்ளது.
மேலும் புலம்பெயர்நாட்டில் உள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் பலர் தாம் தனிப்படவும், பல்வேறுபட்ட பொது அமைப்புகள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்வதையும், இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, ரெலோ உறுப்பினர்கள் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு உதவிகள் புரிய விரும்புவதாகவும் தெரிவித்தமையையும் தொடர்ந்து இந்த ஆரம்பக் கூட்டம் கூட்டப்பட்டது.
இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த வழிகளிலும் உதவி செய்தலையே அடிப்டையாக கொண்டு இயங்குவது என்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ரெலோ உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமது முன்னாள் உறுப்பினரிடையே நிநி சேகரிப்புக்களை நடாத்தி, வடகிழக்கில் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு சிறுகைத்தொழில் மற்றும் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் மேற்கொள்வது என்றும் இது பற்றிய மேலதிக முடிவுகளை பரந்த ரெலோ உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் முடிவு செய்வது என்றும் முடிவானது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒன்றுகூடலை நவம்பரில் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இன்று நாட்டில் இருக்கும் ரெலோவினரிடையே ஒரு ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மக்களின் அரசியலையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஒருசாரர் கருத்து வெளியிட்டனர். நாட்டிலுள்ள ரெலோவின் அரசியலில் புலம்பெயர் ரெலொ உறுப்பினர்கள் நேரடியாகத் தலையீடக்கூடாது என மறுசாரர் கருத்து வெளியிட்டனர். லண்டனில் ரெலோவிற்கு உத்தியோகபூர்வ அலுவலகத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முன்னையோரும், ரெலோ அலுவலகம் அல்ல தாயக மக்களின் உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் ஒன்று அவசியம் என மறுசாராரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் வேண்டும் என்பவர்கள் ஒரு உதவி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மாறுப்பட்ட கருத்துக்களில் எதை ஏற்றுக் கொள்வது என்பது விரைவில் கூட்டப்படவுள்ள ரெலோ உறுப்பினர்களின் பரந்த கூட்டத்திலேயே முடிவு செய்யப்படவுள்ளது.
