15

15

நூல்களின் வரவு இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்ப அடித்தளமாகும் – தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் மத்தியில் ஜனாதிபதி

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூல்களின் வரவானது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் எழுத்தாள ர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் சாகித்திய நூல்கள் நேற்று ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டன. அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல்களைக் கையேற்று உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் மொழியூடான அறிவு வளர்ச்சியானது இனங்களுக்கிடையில் அன்னியோன்ய புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் அதன் மூலம் அமைதியான அபிவிருத்தி நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தமிழ், சிங்கள மொழி மூலமான 17 நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும, லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார ஆகியோர் கலந்து கொண்டதுடன் எழுத்தாளர்களான தெனகம சிறிவர்தன தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, திக்குவல்லை கமால், ஏ.கே.ஏ. ரஸாக், பத்மா சோமகாந்தன், ரவி ரத்னவேல், மொகமட் ராசிக், எஸ்.அரியநாதன், எல்.டீ.எஸ். உபயரத்ன, வஜிர பிரபாத் விஜேசிங்க, டெனிசன் பெரேரா, அமரசிங்க குடகல்ஆர, மடுளுகிரிய விஜேரத்ன, உபாலி லீலாரத்ன, எம்.எல்.விதான பதிரண, சிறிசுமன கொடகே, கமல் பெரேரா ஆகியோர் தம்படைப்புகளை ஜனாதிபதிக்கு கையளித்தனர்.

காதலியின் கணவரைக் குத்திக் கொன்ற இலங்கை இளைஞருக்கு மரணதண்டனை

கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனை வழங்கிய இலங்கையரொருவருக்கு டுபாயின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. தனது காதலியின் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈசா ஷெரீப் மரணதண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.

இச் சம்பவத்தில் பலியானவரும் இலங்கையராவார். நீதிமன்றம் ஏப்ரல் 5இல் பிரதிவாதிக்கு ஆயுள்தண்டனை வழங்கியதுடன் அதன்பின்னர் அவரை நாடுகடத்தும் தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரதிவாதி இறந்தவரின் மனைவியுடன் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டிருந்ததாகவும் நம்பப்பட்டது. கணவன் அவரின் காதல் வாழ்வுக்குத் தடையாக இருந்ததால் அவரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக நம்பப்பட்டது. கடந்த வருடம் பெப்ரவரி 26 இரவு அவரை பல தடவைகள் குத்தியதாகவும் உடலின் பலபகுதிகளில் காயமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் அன்றைய இரவு இரத்தவெள்ளத்தில் காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரி விசாரணையாளர்களுக்கு கூறியுள்ளார். அச்சமயம் அங்கிருந்த மனைவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தனது கணவனை ஆபிரிக்க மனிதர் ஒருவர் குத்தியதாக அப்பெண் கூறியுள்ளார். வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது வழியில் குத்தியதாக அப்பெண் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் உடனடியாகவே தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டதாகவும் பிரதிவாதி தனது கணவரைக் குத்தியதாகவும் பின்னர் அவர் தெரிவித்துள்ளார். பிரதி வாதி தான் வேலை செய்யும் இடத்தில் தொழில் பார்ப்பவர் என்றும் அப்பெண் கூறியிருந்தார். குத்தியதற்குக் காரணம் பொறாமை என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பிரதிவாதியை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்றச்செயல் நடந்த இடத்தில் அன்றைய இரவு இருந்த டக்ஸி சாரதி கூறுகையில்; அல்யாப்ரியா பகுதிக்கு ஆட்களை தான் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இரண்டு ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் பெண்ணொருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களிலொருவர் மற்றவரை அவர் கீழே விழும் வரை குத்தினார். மற்றவர் மார்பில் குத்திக் கொண்டிருந்தார் என்று சாரதி தனது சாட்சியத்தின் போது தெரிவித்ததாக கலீஜ் ரைம்ஸ் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

School_Girlsயாழ்ப் பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களின் செயல்களைக்  கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதியில் செல்லும் இளம்பெண்கள் குறிப்பாக, பாடசாலை மாணவிகள், தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் ஆகியோரிடம் தகாத முறையில் சில இளைஞர்கள் நடந்து கொள்ளும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமை தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்லும் வேளைகளிலும், பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளைகளிலும் வீதிகளில் நின்று சே~ட்டைகளின் ஈடுபடும் இளைஞர்களின் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கட்டாக்காலிகள் போல் திரியும் இளைஞர் குழுக்கள் பல வீதிச் சண்டைகளில் ஈடுபடுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் பொலிஸார் தற்போது அதிகளவில் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதே வேளை, குடாநாட்டில் முறையான ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்களின்றி வாகனங்களைச் செலுத்துவோர் மீதும் பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வன்னி, யாழ்ப்பாணத்திற்கு ஜே.வி.பியினர் மூன்று நாள் விஜயம்.!

Chandrasekaran JVPஜே.வி.பி கட்சியின் குழுவினர் June 14 2010 வன்னிப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளனர். ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர் சந்திரசேகரன், பிமல் ரட்ணாயக்க உட்பட்ட குழுவினர் இதில் அடங்குகின்றனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜே.வி.பியனரிடம் கூறி கண்ணீர் வடித்ததாக ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினர் ஆர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான இவர்களின் பயணம் மூன்று தினங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, யாழ்ப்பாணத்திற்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர். வவனியா அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட தாம் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.