June

June

யுத்தத்தினால் பாதிப்புற்ற சிறுவர்களுக்கு வவுனியாவில் பாடசாலை: இந்திய நடிகர் விவேக் ஒபரோய் முதற்கட்டமாக ரூ.50மில். நிதியுதவி

viv-ob.jpgயுத்தத் தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையை அமைத்துக் கொடுக்கத் தீர்மானித்துள்ள பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் அதற்கென முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது அமைதி சூழல் உருவாகியுள்ளதை சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள ஐஃபா திரைப்பட விழா வழிவகுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.  சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் தலைமையில் ஐஃபா விருது விழா சம்பந்தமான இச்செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.  இங்கு நடிகர் விவேக் ஒபரோய் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :-

நான் வவுனியாவிற்குச் சென்றிருந்தேன் யுத்தத்தினால் பாதிப்படைந்த பகுதியைப் பார்வையிட்டேன்.  அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்மாடி வீடுகளை நிறுவ புலிகள் முயற்சி -அவசரகால சட்டத்தை சமர்ப்பித்து பிரதமர் உரை

dmd.jpgகொழும் பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தினர் தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகளின் அனுதாபிகளான தமிழர்களுக்காக இந்த வீடுகளை நிர்மாணிக்க புலிகள் முதலீடுகளைச் செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பிரதமர் உரையாற்றினார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்த பிரதமர், அவசர காலச் சட்டம் தொடர்பான பிரேரணையையும் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஜயரட்ன, கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணித்து புலிகள் மீள ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதி யுத்தம் நடைபெற்ற போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாகக் கலந்துள்ளதாகவும் தற்பொழுது தென் பகுதியில் தங்கியிருக்கும் அவர்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொட ர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், ஏற்கனவே, கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய 71 பேர் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் மேலும் பலரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிbழ அரசை’ நிறுவ வாக்கெடுப்புகளை நடத்தியிருக்கிறார்களென்று சுட்டிக்காட்டிய பிரதமர் இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் புலிகளின் செயற்பாடுகளை முற்றாகத் தடுப்பதற்கும் அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.

2010 நிதியாண்டுக்கான செலவு ரூ.97,474 கோடி – வரவு செலவுத் திட்ட யோசனை சபையில் தெரிவிப்பு

dm.jpg2010  நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவாக 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளதாக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தி.மு. ஜயரத்ன வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

இலங்கையில் இருந்தோ இலங்கைக்கு வெளியில் இருந்தோ கடனாக 89 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பெறமுடியாது எனவும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீடுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு அமைச்சிற்கே அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாதுகாப்பு அமைச்சிற்கு 20,221 கோடி 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி திட்ட அமுலாக்கல் அமைச்சிற்காக 6348 கோடி 29 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும் சுகாதார அமைச்சிற்கு 5309 கோடி 65 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடாக 734 கோடி 37 இலட்சத்து 7 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அபிவிருத்திப் பணிகளுக்காக 381 கோடி 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்காக 6083 கோடி 66 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் துறைமுக, விமான சேவை அமைச்சிற்காக 3090 கோடி 3 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து அமைச்சிற்கு 3509 கோடி 97 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாவும் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபை அமைச்சிற்கு 11,326 கோடி 30 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண சபைக்கு 1150 கோடி 71 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் கிழக்கு மாகாண சபைக்கு 1369 கோடி 77 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மாவட்ட செயலகத்துக்கு 35 கோடி 81 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு 12 கோடி 40 இலட்சம் ரூபாவும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு 13 கோடி 98 இலட்சம் ரூபாவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு 12 கோடி 22 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சுக்கு 307 கோடியே 43 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 2750 கோடியே 78 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு 9553 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சுகள், திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்கள் வருமாறு;

பாதுகாப்பு அமைச்சு 20221 கோடியே 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 9559 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா,நெடுஞ்சாலைகள் அமைச்சு 8351 கோடியே 23 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு 11326 கோடியே 30இலட்சத்து 10 ஆயிரம் ரூபா,நிதி திட்டமிடல் அமைச்சு 6348 கோடியே 29 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 6083 கோடியே 66 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா, சுகாதார அமைச்சு 5309 கோடியே 65 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா, கல்வி அமைச்சு 2750 கோடியே 78 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா, மீள்குடியேற்ற அமைச்சு 307 கோடியே 43 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா, புனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு 405 கோடியே 43 இலட்சத்து 4 ஆயிரம் ரூபா,ஜனாதிபதி செயலகம் 5029 கோடியே 95 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு 3090 கோடியே 3 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா, போக்குவரத்து அமைச்சு 3509 கோடியே 97 இலட்சத்து 4 ஆயிரம் ரூபா, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு 9கோடியே 69 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா, கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு 162 கோடியே 5 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா, கமத்தொழில் அமைச்சு 3790 கோடியே 39 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா,மின்வலு எரிசக்தி அமைச்சு 2628 கோடியே 47 இலட்சத்து 86 ஆயிரம் ரூபா,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 126 கோடியே 30 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா, தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு 754 கோடியே 91 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, நீதி அமைச்சுக்கு 355 கோடியே 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, வெளிநாட்டு அமைச்சு 647 கோடியே 33 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாசிறுவர் அபிவிருத்தி மகளிர் அலுவல்கள் அமைச்சு 74 கோடியே 25 இலட்சத்து 39 ஆயிரம் ரூபா, வெகுசன ஊடக தகவல் அமைச்சு 195 கோடியே 9 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா, நிர்மாணப் பொறியியல் சேவைகள், வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சு 80 கோடியே 63 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா, சமூக சேவைகள் அமைச்சு 66 கோடியே 26 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா, தொழிலுறவுகள் விளைவு பெருக்க மேம்பாட்டு அமைச்சு 130 கோடியே 20 இலட்சத்து 39 ஆயிரம் ரூபா, பாரம்பரிய கைத்தொழில் , சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு 68 கோடியே 73 இலட்சத்து 58 ஆயிரம் ரூபா, தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு 246 கோடியே 97 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா, தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு 35 கோடியே 66 இலட்சத்து 41 ஆயிரம் ரூபா, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 417 கோடியே 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா , விளையாட்டுத்துறை அமைச்சு 120 கோடியே 59 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா, சுதேச மருத்துவத்துறை அமைச்சு 107 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா. கடற்றொழில் நீர் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு 550 கோடியே 50 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா, கால்நடை வளர்ப்பு கிராமிய சனசமூக அபிவிருத்தி 188 கோடியே 78 இலட்சம் ரூபாவும் தேசிய மரபுரிமைகள் கலாசார அலுவல்கள் அமைச்சு 265 கோடியே 22 இலட்சத்து 63 ஆயிரம் ரூபா, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு 36 கோடியே 94 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, கைத்தொழில் வாணிப அமைச்சு 219 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சு 1532 கோடியே 48 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா, காணி, காணி அபிவிருத்தி அமைச்சு 375 கோடியே 90 இலட்சத்து 43 ஆயிரம் ரூபா, இளைஞர் அலுவல்கள் அமைச்சு 573 கோடியே 52 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா, சுற்றாடல் அமைச்சு 295 கோடியே 66 இலட்சத்து 68 ஆயிரம் ரூபா, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு 2513 கோடியே 91 இலட்சத்து 93 ஆயிரம் ரூபா, உயர்கல்வி அமைச்சு 2011 கோடியே 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, அரச வளங்கள், தொழில் முயற்சி, அபிவிருத்தி அமைச்சு 17 கோடியே 43 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

‘தேசத்துரோகத்துக்குரிய தண்டனையை நீதித்துறை தீர்மானிக்க வேண்டும்’ – லக்ஷ்மன் ஹுலுகல்ல. “உண்மைகளை கூறுவது தனது கடமை” -பொன்சேகா

sa-pon.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பி. பி. ஸியின் ‘ஹார்ட்டோக்’ நிகழ்ச்சிக்கு இரகசியமாக தொலைபேசியில் பேட்டி கொடுத்த பொன்சேகா,  ‘புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவ அதிகாரிகள் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார். பி.பி. ஸி ‘ஹார்ட்டோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீபன் ஸக்கூர் இதனை இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்’.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் கூறியதாவது; ‘பி.பி.ஸியுடன் இரகசியமாக செய்து கொண்டதாக கூறப்படும் தொலைபேசி பேட்டியின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும், பாதுகாப்பு படையினரையும் மட்டுமன்றி முழு நாட்டையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சுதந்திர விசாரணையின் போதும் தான் இது பற்றி சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது இரகசிய தொலைபேசி பேட்டியில் மேலும் கூறியிருந்ததாக தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கூர் மேலும் கூறியிருக்கிறார்.

“இவ்வாறான தேசத்துரோகத்தனமானதும், ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் காட்டிக்கொடுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்” என்றும் ஹுலுகல்ல சுட்டிக்காட்டினார். மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படைகளில் இருந்த அதிகாரிகளும் ஏனையவர்களும் மிகுந்த கடமையுணர்வுடனும் தியாக சிந்தையுடனும் செயற்பட்டனர் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகிறார்.

அவர்கள் மேற்கொண்ட தியாகங்களினால் இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது. அதற்கான தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த ஜெனரல் பொன்சேகா அவர்களை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவ்வாறான அறிக்கைகள் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்டயுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடவைக்கும்.

தனது முன்னைய கூற்றுக்களை ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ள போதிலும் இறுதியாக பி.பி.ஸிக்கு வழங்கிய இறுதியான தொலைபேசி பேட்டியை அவர் எந்த வகையிலும் மறுக்க முடியாது. ஏனெனில் அது அவரது சொந்த குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகா முன்னர் உண்மையான இராணுவத் தளபதியாக நடந்துகொண்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசத்துரோகமாக நடந்துகொண்டதால் இலங்கை சமூகத்திடம் இருந்த நன்மதிப்பை இழந்ததுடன் கெட்ட பெயரையும் சம்பாதித் துக்கொண்டுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்டயசிரி கூறியுள்ளார்.

நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் லாபம் பெற ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்வதாகவும் கோமின் டயசிரி மேலும் கூறினார்.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” – கோட்டாபாய ராஜபக்ஷ

இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ”தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக” தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ”ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்” என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.

அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ”அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.” என்று கூறீனார்.

 “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா

 இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, ” பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.” என்று கூறியிருந்தார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgவிடுதலைப் புலிகளின் நிதி தொடர்பான விபரங்களை வழங்குவது தொடர்பாக கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அளித்த உதவிக்காக அவருக்கு மன்னிப்பு வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்தால் அது தொடர்பாக தான் ஆச்சரியப்படமாட்டேன் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அத தெரணவின் 360 நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கே.பி.வெளியிட்ட தகவல் மூலம் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் பலவற்றை அதிகாரிகளால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தச் சொத்துகளின் பெறுமதி குறித்துக் கண்டறியப்பட்டதா அல்லது இலங்கைக்கு அவை கொண்டுவரப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது அதனை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் உரிய வேளையில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனுக்கு விசேடமான பதவி ஏதாவது வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இது தொடர்பாக தீர்மானிப்பது உயர்மட்ட அதிகாரிகளைப் பொறுத்தது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டுக்கு எதிராக கே.பி. மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவர் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவது தொடர்பாக அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, “அவருக்கான தண்டனையை அவர் தற்போது பெற்றுக்கொண்டிருக்கிறார். தனது சொந்த மனச்சாட்சிக்கு எதிராகப் போராடுவது அதிகளவுக்குப் போதுமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது அவர் தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியா பயணம் – உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவும் ஏற்பாடு

india.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்குப் பயணமானார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபாபட்டேல், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப் படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.

இஸ்ரேலை கண்டித்து சபையில் அஸ்வர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

ahm-azwar.jpgபலஸ் தீனத்துக்குச் சென்ற துருக்கி உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பது தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்று இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேலிய படையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய தாக்குதலினால் பத்தொன்பது பேர் உயிர் இழந்தனர். இரு இலங்கையர்கள் உட்பட ஏராளமான பிரயாணிகள் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை மக்களின் கண்டனத்தை தெரிவித்து சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதுடன் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களில்

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதையொட்டி மலைய கத்தின் மேற்கு பகுதியில் அடிக்கடி கடும் காற்று வீசும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாக வேண் டிய காலம் சில வாரங்கள் தாமதமடைந்துள்ளன.

இதற்கு வளிமண்டலத்தில் திடீர் திடீரென ஏற்பட்ட மாற்றங்களே காரணம். என்றாலும் இன்றோ, நாளையோ தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகும். இதன் விளைவாக மேல், தென், மத்திய சப்ரவமுவ மாகாணங்களில் அடிக்கடி மழை அதிகம் பெய்யும். அத்தோடு வடக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்ய முடியும். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதி கூடிய மழை மாலிபொடவில் 73.5 மி.மீ. பதிவாகியுள்ளது.

தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரை காணப்படுகின்றது. இது அடிக்கடி 60 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்கின்றன. இதேநேரம் தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மன்னார் குடா, வட கிழக்கு ஆகிய கடற்பரப்புக்களில் அதிக கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது என்றார்.

அவசரகாலச் சட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற் கான பிரேரணை 68 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்க் கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜனநாயக தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. ஐ. தே. க எம்.பி. ஏ. ஆர். எம். ஏ. காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

கிளிநொச்சியில் இரு பெண்கள்மீது பாலியல் துஸ்பிரயோகம் ஆறு இராணுவத்தினர் கைது!

யூன் 6ல் கிளிநொச்சி ரெட்பானா பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்தே யூன் 7ல் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் யூன் 8ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் யூன் 14ல் அடையாள அணிவகுப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதணைக்காக வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.