தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதையொட்டி மலைய கத்தின் மேற்கு பகுதியில் அடிக்கடி கடும் காற்று வீசும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாக வேண் டிய காலம் சில வாரங்கள் தாமதமடைந்துள்ளன.
இதற்கு வளிமண்டலத்தில் திடீர் திடீரென ஏற்பட்ட மாற்றங்களே காரணம். என்றாலும் இன்றோ, நாளையோ தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகும். இதன் விளைவாக மேல், தென், மத்திய சப்ரவமுவ மாகாணங்களில் அடிக்கடி மழை அதிகம் பெய்யும். அத்தோடு வடக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்ய முடியும். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதி கூடிய மழை மாலிபொடவில் 73.5 மி.மீ. பதிவாகியுள்ளது.
தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரை காணப்படுகின்றது. இது அடிக்கடி 60 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்கின்றன. இதேநேரம் தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மன்னார் குடா, வட கிழக்கு ஆகிய கடற்பரப்புக்களில் அதிக கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது என்றார்.