June

June

ஏழரை இலட்சம் ரூபா கப்பம் கோரி மூன்று வயதுச் சிறுவன் கடத்தல்

இந்தச் சம்பவம் புத்தள நகர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  புத்தளையைச் சேர்ந்த முகமட் ரஸ்மி என்ற மூன்று வயதுச் சிறுவனே கடத்தப்பட்டவராவார்.

சிறுவனைக் கடத்திய நபர் குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்து சிறுவனுக்கு இனிப்பு பண்டங்களைக் கொடுத்து சிறுவன் மீது அளவற்ற பாசம் கொண்டவர் போல் நடித்து சிறுவனை அயலிலுள்ள கடையொன்றிற்கு தூக்கிச் சென்றுள்ளார். சிறுவனைக் காணாத தாய், சிறுவனைக் கூட்டிச் சென்றவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை உடன் கூட்டி வருமாறு கேட்டுள்ளார்.

விரைவில் கூட்டிவருவதாகக் கூறிய அந்நபர் சிறிது நேரம் சென்றதும் சிறுவனின் தாய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி ஏழரை இலட்சம் ரூபாவின் கப்பமாக தரும் பட்சத்தில் சிறுவனை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தாய் அயலிலுள்ள கடைப்பக்கம் சென்ற போது சிறுவன் மோட்டார் சைக்கிளொன்றில் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்ட சிறுவனையும் தாயுடன் கதைக்குமாறு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாகவும் தாய், புத்தளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார்.

சிறுவனைக் கடத்திய நபர் வர்த்தகம் தொடர்பான விடயல்களை கதைக்கும் பொருட்டு வீடு வந்து தங்கியிருந்த போதே சிறுவன் கடத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மிஹிந்தலை பொசன் உற்சவம்; 27 பாடசாலைகள் 6 தினங்கள் பூட்டு

teachers.jpgஅநுராதபுரம், மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 27 பாடசாலைகளை 21-26 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கே.எம்.ஜினபால தெரிவித்தார்.பொசன் நிகழ்வுகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்குவதற்காக இப்பாடசாலைகள் மூடப்படவிருக்கின்றன.

ஜாகிர் நாயக்குக்கு விசா மறுப்பு

jakkir1.jpgஇந்திய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஜாகிர் நாயக் என்று காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், ஆனால் ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்றும் ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.  இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்
BBC

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் கையளிப்பு – அகாஷி, பசில் பங்கேற்பு

இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று கிளிநொச்சி விவசாயிகளுக்கு 33 உழவு இயந்திரங்களை வழங்கினர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட 29 சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கையளிக்கப்பட்டன.

அடுத்த பெரும் போகத்தின் போது வடமாகாணத்தில் அனைத்து விளைநிலங்களிலும் செய்கை பண்ணும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிளிநொச்சி விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டன. ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட எம்.பி. எம். சந்திர குமார், தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. சிவஞானம் சிறிதரன், கிளிநொ ச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி கட்டளை த்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜ குரு ஆகியோரும் கலந்து கொண்டனர்

இலங்கையில் சீனர்கள்; இந்தியாவுக்கு ஆபத்து: ஜெயலலிதா

1jaya.jpgஇலங்கையில் சீனர்கள் குவிக்கப்படுகின்றனர்.  இதனால் இந்தியாவுக்கு ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று எச்சரித்துள்ளார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக்கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனத்தில் இருந்து வந்துள்ளது குறித்து இந்திய அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.

 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது.  ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.  இதிலிருந்து,  இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.  

 இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை.  இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

 1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவ மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது.  குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.     

இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்து

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.  27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.   பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும். 

இந்தப் பிரச்சினையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்;  கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

48,000 பேர் மட்டுமே மனிக்பாமில் – வவுனியா அரச அதிபர்

Rehabilitation_Wanni500 பேர் மீள்குடியேற்றத்துக்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இன்றைய தினத்தில் சுமார் 48,000 பேர் அளவில் மட்டுமே தங்கியுள்ளனர்.

இவர்களில் தினமும் தலா 500 பேர் வரை மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் விலகிச் செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளதுடன் ஓமந்தை 561 படையணி முகாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.  மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதை தொடர்ந்து படையினர் பொது மக்களிடம் அவர்களது காணியை ஒப்படைத்துச் செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேபோன்று நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்து மீளக்குடியேற்றத்துக்காக மக்கள் அனுப்பிவைக்கப் படவுள்ளனர்.

இலங்கைக்கு 840 கோடி ரூபா ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்குப் பகுதிக்கென உதவியாக 840 கோடி ரூபாவை ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டின் வட,கிழக்குப் பகுதிக்கு இடைக்கால உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2011-2013 ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாட்டு தந்திரோபாய உதவியின் இரண்டாவது பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூகத்தில் நலிவடைந்த நிலையிலுள்ளோரின் தேவைகளை கவனத்தில் கொண்டு குறிப்பாக 2009 இல் முடிவுக்கு வந்த மோதலில் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மையப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அதாவது சமாதானம், ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் என்பனவற்றை நோக்கி முன்நகர்வை மேற்கொள்வதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு படமாளிகை தீக்கிரை

111.jpgமட்டக் களப்பில் அமைந்துள்ள பிரபல சினிமா படமாளிகை ஒன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள படமாளிகையே தீக்கிரையாகியுள்ளது.  இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற iifa திரைப்பட விழாவை தமிழ் திரையுலக நடிகர்கள் புறக்கணித்தமையைக் கண்டித்து இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வடகிழக்கு சினிமா திரையரங்குகளில் இந்தியத் தமிழ் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என சுதந்திர இலங்கையின் தமிழர்கள் அமைப்பு துண்டுப்பிரசுரம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் இன்று ராவணா திரையிடப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட படமாளிகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் விஜயம் செய்தார். இச் சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

111.jpg

11112.jpg

தலை வணங்குவோம் தியாகிகளுக்கு : ரஞ்சன்

Tharasu Cover

தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினம் 19 June 2010 4.30 pm – 9.00 pm, Southfields Community College Hall, 333 Merton Road, London SW18 5JU (Entrance via Burr Road) அனுஸ்டிக்கப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம். இக்கட்டுரையானது பத்மநாபாவின் 2008ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஈபிஆர்எல்எவ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்டது.

அது 1990 யூன் மாதம் 19ந் திகதி!

மானுடவர்க்கத்தின் மனிதப் பண்புகளுடன், அமைதி, சமாதானம், ஜனநாயகம் நிறைந்த சமதர்த வாழ்வை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க போராடி மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவும், பன்னிரு தோழர்களும், சென்னையில் பாசிசப் புலிகளால் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்!

ஈழத்தமிழர் வரலாற்றின்; சோகமிகு இந்நாளே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால், தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும்  நினைவு கூரப்பட்டு வருகிறது.

ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போரட்டத்தில் ஒரு இயக்கத்தினர் மட்டும் மரணிக்கவில்லை. சகல இயக்கங்கள், கட்சிகளைச் சாhந்தோரும் உயிரை அர்ப்பணித்தல் உட்பட சகலவித தியாகங்களையும் செய்திருக்கின்றார்கள்.

தமிழ்பேசும் மக்களுக்காகப் போராடி இலட்சியப் பாதையில் மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆற்றல் மிகு தோழர்களுக்கும், சகஇயக்கப் போராளிகளுக்கும், வினையாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் தினமே தியாகிகள் தினம்!

அந்தக் கரிநாளுக்குப் பின்னர் இற்றைவரையான பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னரும் அதற்கு முன்னருமான காலகட்டத்திலும், தமிழ்ப் பயங்கரவாதிகள் ஒரு பக்கத்தாலும், சிங்களப் பேரினவாதம் மறுபக்கத்தாலும் நாளாந்தரம் நசுக்க, தமிழ்பேசும் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

சமாதானம் அமைதி என்பதெல்லாம் கானல் நீராகிப் போய் விட்ட துர்ப்பாக்கிய நிலையில், கொலை, கொள்ளை, கப்பம், பட்டினிச்சாவு, வறுமை எனும் வாழ்க்கை முறைக்குள் வலுக்கட்டாயமாகத் தமிழ் மக்கள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குருட்டுத் துப்பாக்கி ஏந்தும், வரட்டுச் சித்தாந்தம் கொண்ட முரட்டு வாதிகளால், இடிபாடுகளுக்கு மத்தியில் இருட்டு வாழ்க்கையில் செக்காடுகள் போல், செம்மறி ஆடுகள் போல் தமிழ் மக்கள் என்று தம் வாழ்வு விடியும் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறார்கள்.

நிலங்களற்று, நிலையிழந்து, பலமிழந்து, மலங்க விழித்து, மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.

சிங்களப் பேரனினத்திற்கு எதிராக, தமிழர்களின் விமோசனத்திற்காக போராட தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணிப் போராட முன்வந்த எத்தனை எத்தனை நல் மாந்தரை நாம் பறிகொடுத்து விட்டோம்! 

EPRLF Pathmanaba

வீழ்ந்த போராளிகள் அனைவருமே எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் அரச படையினரால் மட்டும் கொல்லப்படவில்லை. உயிர்ப் பலியெடுக்கப்பட்ட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், கல்விமான்களும், வினையாளர்களும், பொதுமக்களும் எதிரியினால் மட்டும் காவுகொள்ளப்பட வில்லை. உண்மையில் இவர்களில் அதிகமான எண்ணிக்கையினர் சொந்த சோதரர்களாலேயே – குறிப்பாகவும், அதிக எண்ணிக்கையாகவும் புலிகளாலேயே – சுட்டும் வெட்டியும் வீழ்த்தப் பட்டவர்கள் என்பதுதான்  வேதனையானதும், வெட்ககரமானதுமானதும், கசப்பானதுமான உண்மை! தமிழர் வாழ்வை வளம்படுத்த வேண்டிய ஆர்வமும் தகுதியும் கொண்ட எத்தனை எத்தனை தளிர்கள் கருக்கப்பட்டு விட்டன!

புலிகளின் ஏதாச்சாதிகார வேட்கையால் ஏற்படுத்தப்பட்ட இப் படுகொலைகளுடன் ஈழப் போராட்டத்தின் தார்மீகம் அழிந்து விட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட சக இயக்கங்களின் தடை, மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுப்பு ஆகியவையுடன் ஈழப் போராட்டம் தடம் புரண்டு விட்டது. பிரேமதாசாவிடம் பணமும், ஆயுதங்களும் பெருவாரியாகப் பெற்று இந்தியாவுடன் புலிகள் யுத்தத்தை தொடர்ந்தவுடன்  ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அஸ்தமித்துவிட்டது.

இவைதான் பேரினவாத ஸ்ரீலங்கா அரசின் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமம் அடைவதற்கும், வடக்கு கிழக்கின் அவலங்களுக்கும், போரின வாதிகளின் கைகள் ஓங்கியிருப்பதற்கும்  மூல காரணிகளாக அமைந்து விட்டன!

Pirabakaran 2007

பாசிசப்புலிகளின் பேடித்தனமான படுபாதக கொலைகளுக்குப் பலியாகிப் போன மாந்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா!

மாதிரிக்கு மட்டும் சிலரைப் பார்ப்போமானால், –

வடக்கு கிழக்கு மாகாண அரசின் தலைமைச் செயலகம் அமைந்திருந்த திருகோணமலையிலிருந்து நிலாவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றவதற்காக ஜீப்பில் சென்றுகொண்டிருந்த வேளையில்; ஸ்ரீலங்கா இராணுவத்தின் கூட்டு முயற்சியுடன் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் படுகொலை செய்யப்பட்ட,  ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்தக் கொண்ட, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் ஜோர்ஜ், சகதோழர்கள்,

புலி இயக்கத்தின் உட்கட்சிச் சதியால் தன் காலை இழந்த கிட்டுவிற்காக அருணா என்ற புலியால் அநியாயாகமாகப் படுகொலை செய்யப்பட்ட புலிகளால் சிறைபிடிக்கப்பட்டிருந்த, ஈபிஆர்எல்எவ், புளொட் உறுப்பினர்கள் உட்பட்ட 60 இளைஞர்கள்

ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினமும், உறுப்பினர்களும்,
யாழ் மருத்தவக் கல்லூரி உடல் கூற்றியல் துறைத் தலைவர், ரஜனி திரணகம,
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், பொன் சிவபாலன்,
பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராசா,
யாழ் முன்னாள் அரச அதிபர் பஞ்சலிங்கம்,
யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன்,
பெண் கவிஞர் செல்வி,
கிழக்கின் விடிவெள்ளி சாம் தம்பிமுத்து, அவரது மனைவி,
ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் தோழர்கள் பத்மநபா, ரொபேர்ட், இன்னும் பலர்
புளொட் இயக்கத் தலைவர் வாசுதேவா,
புலிகளச் சேர்ந்த மாத்தையாவும், இதர போராளிகளும்,
இணையற்ற புத்திஜீவிகளாகிய நீPலன் திருச்செலவம், கேதீஷ் லோகநாதன் இன்னும் எத்தனையோர் தேசத் துரோகிகள், சமூக விரோதிகள் எனப் போலியாகச் சித்தரிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டுவிட்டார்கள். சொல்லி மாளா அவர்தம் பட்டியல்!
இந்தக் கொலைப்பட்டியல் இன்னமும், இன்றும் தொடர்கிறது – நீண்டு கொண்டே போகிறது!
சிங்களவர் தமிழரைக் கொன்றால்; அது இனப் படுகொலை!
இலங்கை இராணுவம் தமிழரைக் கொன்றால் அது ஆக்கிரமிப்புக் படுகொலை!
தமிழர்கள் தமிழரைக் கொன்றால் அதற்குப் பெயர் தமிழ் ஈழ விடுதலையா?

EPRLF_Yogasangaree’s Funeral

இத்தனை கொடூரங்கள் நடந்த போதும் மக்கள் மௌனமாக இருந்தார்கள். புலிகளால் மற்றைய இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள். மற்றைய இயக்கப் போராளிகள், தலைவர்கள் குற்றியிரும் குலையுயிருமாக எரியூட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்! எம்முடன் ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டபோது, இரவோடிரவாக  விரட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்!

– இறுதியில், நாமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் – ஏனென்று கேட்க யாரும் இல்லை! ஈவிரக்கமற்ற யுத்தத்தினாலும், தமிழர்களின் ஏகபோக தலைமை என்று துப்பாக்கிமூலம் அந்தஸ்து கோரும் சர்வாதிகாரப் போக்கினாலும், ஈழத்தமிழினம் தேய் பிறையாகி வருகிறது!

உள்நாட்டுப் பத்திரிகைகளும், புலம் பெயர்ந்தோர் நடாத்தும்  புலிசார்பு ஊடகங்களும். உண்மை நிகழ்வுகளை அறியாதவாறு இருட்டடிப்புச் செய்கின்றன, அல்லது திரித்துக் கூறுகின்றன. உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் கூறப்படுகின்றன. உண்மைக் காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.

போததற்கு, சிங்களவர்கள் எல்லோருமே கொடியவர்கள் என்றே சித்தரிக்கப்படுகிறார்கள். பேரின வாதிகள் வேறு, சாதாரண சிங்கள மக்கள் வேறு என்று தெரிவிக்கப்படவில்லை. தமிழ்மக்கள் பேலவே, அப்பாவிச் சிங்களப் பொது மக்களும் வகைதொகையின்றி கொல்லப்படுகின்றார்கள். ஏழைத் தமிழ் மக்களின் பிள்ளைகள்போல் ஏழைச் சிங்கள மக்களின் பிள்ளைகளே இந்த யுத்தத்திற்கு பலிக்கடா வாக்கப்படுகின்றார்கள்.    

நாம் பயத்திலிருந்து விடுபடவேண்டும். சுதந்திரமாக எவர்க்கும் அஞ்சாமல் கருத்துக் கூறும், செயற்படும் நிலை ஏற்பட வேண்டும்.
ஒரு எஜமானர்களின் அடிமையிலிருந்து எங்களை மீட்பது இன்னொரு எஜமானர்களின் அடிமைக்கு நாம் ஆளாவதாக அமைந்துவிடக் கூடாது.
ஈழவிடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்த தியாகிகள் அனைவரையும் இத் தியாகிகள் தினத்தில் நாம் நினைவு கூருவோhம்!
தலை வணங்குவோம் அத் தியாகிகளுக்கு!

”போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது” யாழ்ப்பாணத்தில் பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vயாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டொவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தனர். வடபகுதி மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென இவ்விரு அமைச்சர்களும் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (June 17 2010) யாழ். செயலகத்தில் ஊடகவியலர்களிடம் கருத்தத் தெரிவித்த பிரதி அமைச்சர் முரளிதரன் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போத யாழ்ப்பாணம் அபிவிருத்தியடைந்திருப்பதகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் எனவும், தடுப்பு முகாம்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கி சுமார் 200 யுவதிகளுக்கு முதற்கட்டமாக கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், மகிந்த அரசோ, அதன் அமைச்சர்களோ இனவாதமற்றவர்கள் எனவும், இந்த அரசின் காலத்திலேயே தமிழ் மக்களுக்கான சகல பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒஸ்மானியா கல்லூரியில்  அம்மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் வீடுகள் கட்டங்களின் இடிபாடுகளை தாம் நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் அம்மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்தாலோசித்து முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார். வடபகுதி முஸ்லிம் மக்களுக்கான உதவிகள் யாவும் அபிவிருத்தியடைந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.