இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்குப் பகுதிக்கென உதவியாக 840 கோடி ரூபாவை ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டின் வட,கிழக்குப் பகுதிக்கு இடைக்கால உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2011-2013 ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாட்டு தந்திரோபாய உதவியின் இரண்டாவது பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமூகத்தில் நலிவடைந்த நிலையிலுள்ளோரின் தேவைகளை கவனத்தில் கொண்டு குறிப்பாக 2009 இல் முடிவுக்கு வந்த மோதலில் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மையப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அதாவது சமாதானம், ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் என்பனவற்றை நோக்கி முன்நகர்வை மேற்கொள்வதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.