01

01

கல்வி நிருவாகச் சேவை நியமனங்கள்!

இலங்கை கல்வி நிருவாகச் சேவையில் நிலவும் மூன்றாம் வகுப்பு தரத்திலான அதிகாரிகளின் வெற்றிடங்களுக்காக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நிமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு 225 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குத் தகுதியானவர்கள் வரையறுக்கப்பட்ட மற்றும் பகிரங்கப் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 9 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணக்கிராமங்கள் – உறவினர்களை பொறுப்பேற்க புதிய விண்ணப்பபடிவம்

Wanni IDPsநிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு ஏதுவாக வவுனியா மாவட்டத்திற்கென புதிய விண்ணப்பப் படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் மாதிரி விண்ணப்பப்படிவம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யுமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ.எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

விண்ணப்பப்படிவங்களை பொறுப் பேற்பதற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளரின் அலுவலகத்துக்கு முன்னால் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் வழிகாட்டலு டன் அரச அதிபர் அலுவலகம் இப் புதிய விண்ணப்பப்படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளி மாவட்டங்களிலுள்ளவர்கள் முன்பு போன்றே விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் உரிமைகளை ஒழித்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி – சிறுவர்தின செய்தியில் ஜனாதிபதி

290909mahinda.jpgசிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங்களும் இல்லாதொழிந்தன.

படைவீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்பு வது நமது பொறுப்பாகும். சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்கால மொன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்’ என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ் டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியா, பசுபிக்தீவில் பூகம்பம் 13 அடி உயரத்திற்கு மேல் சுனாமி அலை

300909samova_tsunamy.pngபசுபிக் பெருங்கடலிலுல், இந்தோனேசியாவின் தென் பகுதிக் கடலிலும் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 113க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் உள்ள சமோவோ தீவில் 8.3 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இலங்கை நேரப்படி நேற்றுப் பிற்பகல் 3.46 இற்கு பத்தான் நகருக்கு அருகில் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இது கொழும்பிலிருந்து 2380 கிலோ மீற்றர் தொலைவில் இலங்கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. 85 கிலோ மீற்றர் கடல் ஆழத்திலேயே இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் 10 நிமிடங்கள் வரை அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் இலங்கையிலும் கரையோரப் பிரதேசங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பி.ப. 4.10 மணி அளவில் இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 5.10 மணி அளவில் வாபஸ்பெறப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்குக் கிழக்கே இருக்கும் இந்தக் குட்டித்தீவின் தென் கிழக்கே 120 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நில அதிர்வு 8.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்தது.

கடலோரத்தில் உள்ள பகுதிகளில் இராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சில உடல்கள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. மண்ணுக்குள் பலர் புதைந்திருக்கலாம் என்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தால் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு விமானப் படையினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சி 130 விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ போய்ச் சேர்ந்தன.

இதேவேளை, டொங்கன் தீவில் 13 அடி உயரத்திற்கும் கடல் அலைகள் மேலெழும்பி யதாகவும் இதில் ஐந்து பேர் பலியானதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்தது.

ஜப்பானில் சூறைக்காற்று

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பாடசாலைகள் மூடப்பட்டதுடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. ஜப்பானில் சூறைக்காற்று வீசியதுடன், கடும் மழையும் பெய்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் பூகம்பம்

அதேநேரம், நேற்றுப் பிற்பகலில் இந்தோனேஷியா, இந்தியா, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் 7.9 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக வானிலை அவதானமையம் அறிவித்தது. எனினும், பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நியூசிலாந்து அரசாங்கம் இந்தச் சுனாமியின் தாக்கம் இங்கும் உணரப்பட்டதாக அறிவித்துள்ளதுடன் ஐந்து பேர் இதில் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதேசம் முழுதும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்களை விளிப்புடன் இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. சமோவோத் தீவில் கடல் பாரிய இரைச்சலுடன் குமிறியதாகவும் மலை போன்ற உயரத்தில் கடல் அலைகள் எழும்பியதாகவும் அறிவிக்கப்பட்டது.

காணாமல் போனோரைத் தேடும் பணிகள் முடிவடைந்த பின்னரே உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கையை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் தெரி வித்துள்ளனர். மீட்கப்பட்ட பிரேதங்கள் பொது இடங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. சொந்தங்களை இழந்தோரின் விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

மலையகச் சிறுவர்களை கொழும்பில் வேலைக்கமர்த்தும் தரகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

மலையக சிறுவர், சிறுமியரை கொழும்புக்கு வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி தெரிவித்தார்.

இவ்வாறான தரகர்களைக் கண்டறிவதற்கென குழுவொன்றை நியமித்துச் செயற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

அதேநேரம் மலையகத்திலிருந்து பெண்பிள்ளைகளைப் பிற இடங்களுக்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்ல முயற்சிப்போர் குறித்த தகவல்களைப் பொது மக்கள் பெற்றுக்கொடுத்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மஸ்கெலியாவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை (02) நடைபெறுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த யுவதிகளின் குடும்பத்தவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிலர் அறிக்கைகளை வெளியிட்டதோடு அந்த யுவதிகளின் பிரச்சினையைக் கைவிட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் பணிப்பெண்களாகக் கட மையாற்றிய மஸ்கெலியாவைச்சேர்ந்த இரண்டு யுவதிகள், கறுவாதோட்டம் கழிவு நீரோடைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பெற்றோர் முறைப் பாடு செய்ததையடுத்து சடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யுவதிகளின் தாயாரை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

50 இலட்சம் பேர் பிரார்த்தனை செய்யும் வகையில் மக்கா மசூதியை விரிவுபடுத்த சவூதி அரேபிய அரசு திட்டம்

ramadan-mosque.jpgஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்து மக்கா செல் பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால், நெரி சலை தவிர்க்க பல வளர்ச்சிப் பணிகளை சவூதி அரேபிய அரசு செய்து வருகிறது. இதில் ஒன்றாக மக்கா மசூதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்போது அதன் பரப்பளவு 4 இலட்சத்து 800 சதுர மீட்டராக உள்ளது.

இதில் 40 இலட்சம் ஹாஜிகள் பிரார்த்தனை செய்ய முடியும்.  இதை 50 இலட்சம் பேர் பிரார்த்தனை செய்யும் வகையில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கா, மதீனா நகரங்களின் கலாசார அடையாளங்களை தக்கவைத் துக்கொண்டு அந்த நகரங்களில் நவீன வசதிகளை மேம்படுத்த கோடிக்கண க்கான ரூபாய் செலவிட்டு வருவ தாக மக்கா கவர்னர் இளவரசர் கலீத் அல் பைசல் தெரிவித்தார். கனடா நாட்டு ஆலோசனை நிறுவ னம் தயாரித்த திட்டத்தின்படி வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மக்கா மசூதி அருகே உள்ள புனிதத் தலங்களான மினா, அரபா, முஸ்தலிபா ஆகியவற்றை மக்காவுடன் இணைக்கும் வகையில் மோனோ ரெயில் போக்குவரத்து ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் திட்டமிட ப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் 2011ம் ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009: சிறுபோக நெல்கொள்வனவுக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – 70,000 மெ. தொ. நெல்லை கொள்வனவு செய்ய திட்டம்

190909paddy.jpg2009 சிறுபோக நெல் கொள்வன வுக்கென அரசாங்கம் 2,000 மில் லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் இதன் மூலம் 70, 000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க நாட்டரிசி நெல் ஒரு கிலோவை 28 ரூபாவிற்கும் சம்பா ரக நெல்லை கிலோ 30 ரூபா வாகக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறுபோக அறுவடை இடம்பெற்று வருவதால் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவை, அனுராதபுரம் மாவட்டங்கள் உட்பட கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இக்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து வலயங்களாக இப்பிரதேசங்கள் கணிக்கப்பட்டு இவற்றிலி ருந்து 70, 000 மெற்றிக் தொன் நெல் இம்முறை கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்கான சகல நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதுடன் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக இக்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இதுவரை 10,000 மெற்றிக் தொன் நெல் மேற்படி சபையினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொலனறுவையில் 4, 200 மெற்றிக் தொன்னும், அனுராதபுரத்தில் 350 மெற்றிக் தொன்னும் வட மேல் மாகா ணத்தில் 2400 மெற்றிக் தொன்னும் கிழக் கில் 2800 மெற்றிக் தொன்னும் தெற்கில் 1,000 மெற்றிக் தொன்னும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் சிறுபோக நெல் கொள்வனவு இடம்பெறும் இவ்வேளையில் 2008, 2009 பெரும்போக நெல் கொள்வனவின் மூலம் பெறப்பட்ட நெல்லை சந்தையில் விற்பனைக்கு விட நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிணங்க 15,000 மெற்றிக் தொன் நெல்லை விற்பனை செய்யத் தீர்மானிக் கப்பட்டுள்ளது. பொலனறுவைக்கு 7,000 மெற்றிக் தொன், கிழக்கு மாகாணத்துக்கு, 7,000 மெற்றிக் தொன், வட மேல் மாகாணத்திற்கு 1,000 மெற்றிக் தொன் என, இவ்விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு குடைதான், ஒரு நிறக்குடையல்ல! : யூட் ரட்ணசிங்கம்

Multicoloured_Umbrella1948ம் ஆண்டு ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது இலங்கை. அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்துக்காக பல தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டு அகிம்சை வழியில் போராடிவந்தன. தனித்தனிக் கட்சிகளாக நின்று தமிழ்பேசும் மக்களின் உரிமையை வென்றுவிடமுடியாது என்று எண்ணிய இந்த தலைமைகள் 1976ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் கூடி தனித்தமிழீழத்தை வென்றெடுக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, தமிழீழத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். அதுவே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று அழைக்கப்பட்டது. (வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏதோ ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் எடுக்கப்பட்ட தீர்மானம்போல் சிலர் பிதற்றித்திரிகிறார்கள்.)

இலங்கையின் நான்கு தனித்துவமான இனங்களில் தமிழ்பேசும் மூன்று தனித்துவமான இனங்களின் பிரதிநிதிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற (TULF) குடையை உருவாக்கினார்கள். 1977ம் ஆண்டு தேர்தலில் வரலாறுகாணாத வெற்றியீட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருந்தது TULF. இதன் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். (இவர் தந்தை செல்வாவின் தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்று என் நண்பர் அடிக்கடி கூறுவார்.) இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டவல்லுனர்.

தேர்தலின்பின் ஒரு குடையில் ஏற்பட்ட விரிசலால் கூட்டுச்சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக குடைக்கம்பிகள் போன்று விலக்கப்பட்டார்கள். அல்லது விலகிப்போனார்கள். ஒரு குடையிலிருந்து விலகிப்போன திரு தொண்டமான், திரு ராசதுரை, திரு தேவநாயகம் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த J R ஜயவர்த்தனாவின் UNP யுடன் சேர்ந்து கொண்டார்கள். தனித் தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுத்தார்கள்.

மிதவாதிகளை மறுத்து அகிம்சையைப் புறக்கணித்து தீவிரவாத இயக்கங்கள் ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இவர்களுடைய இலக்கும் தமிழீழமே ஆனால் ஒரு குடைக்கொள்கையை உடனடியாக அமுல்படுத்த முயலவில்லை. காலப்போக்கில் எல்லா இயக்கங்களும் வளர்ந்து போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த பின்னர் நான்கு இயக்கத் தலைவர்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார்கள். வட்டுக்கோட்டை போல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு குடைக் கொள்கைதான். அதுவும் காலப்போக்கில் போட்டுத்தள்ளப்பட்டு முடியாட்சியில் முடிந்தது. தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்த மன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது LTTE அமைப்பும் ஒரு குடைக் கொள்கையை கையிலே எடுத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வன்னிக்கு வந்துசேர்ந்த விடுதலைப் புலிகளின் கிளிநொச்சிப் பிரகடனமாக இருந்தது.

இது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப்போல் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆயதத்தை அரணாகக் கொண்ட தீர்மானம். “வடக்குக் கிழக்கிலே வாழுகின்ற அத்தனை அசையும் அசையாச் சொத்துக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல், அதன்மூலம் தமிழீழத்தை வென்றெடுத்தல்.”

இந்தக் குடைக் கம்பிகளும் கருணாவைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக கழற்றப்பட்டன அல்லது கழன்று போயின. கழற்றப்பட்ட கருணாவும் அவர் சகாக்களும் ஆட்சியில் இருந்த சுதந்திரக்கட்சியுடன் உடனடியாக இணைந்து கொண்டார்கள். தனித்தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது மிகுதியான அரசியல் வாழ்வை அர்ப்பணிக்க விரும்புகிறார்கள்.

Tamil_Eelam_Umbrellaகடந்த கால வரலாற்றை நோக்கின் தமிழ்த் தேசியக் குடைக் கொள்கை மக்களை இணைத்ததைவிட பிரிப்பதில் அதிக பங்கு எடுத்துள்ளது. அகிம்சைவாதிகளும் சரி, ஆயததாரிகளும் சரி ஒரு குடையிலிருந்து பிரியும்போது முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஒன்றாகவே காணப்படுகின்றன.
1) ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் பொறுப்பானவர்கள் செயல்படவில்லை
2) ஒரு மாவட்டத்தின் ஆளுமை
3) தனிநபர் விரோதப்போக்கு
4) மற்றய மாவட்டங்களையும் அந்த மக்களையும் சமமாக ஏற்று மதிக்கப்படாத தன்மை
5) சாற்றை எடுத்துவிட்டுச் சக்கையை துப்புகின்ற சிந்தனை
6) மட்டக்களப்பான் மந்திரவாதி, மலையகத்தான் வடக்கத்தையான், வன்னியான் காட்டுமிராண்டி, முஸ்லீம் தொப்பிபிரட்டி, யாழ்ப்பாணத்தான் பனங்கொட்டை சூப்பி என்று சமூகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களும் அவை சார்ந்த சிந்தனைப் போக்கும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய ஒருகுடையின் கீழ் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவதுபோன்ற பல.

இதுவரை காலமும் ஒரு குடை என்றதுமே அது ஒரு நிறக்குடையாக இருக்க வேண்டும் என்பது கடுமையான நிபந்தனை. ஆளுமை செலுத்துகின்றகட்சி, மக்கள் தொகையில் எண்ணிக்கை கூடிய பிரதேசம், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட தனிநபர், அமைப்பு, ஒரு குழுமமக்கள் போன்ற குறுகிய எண்ணமும் செயலும் ஒரு குடையின் இயங்குசக்திகளாக இருந்தன.

கடந்த அரை நூற்றாண்டு கால அனுபவங்களும் கால் நூற்றாண்டு கால வன்முறைகளும் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த தமிழ்த் தேசிய குடைக்கொள்கையின் உள்ளமைப்பை தோலுரித்துக் காட்டி நிற்கின்ற நேரத்தில் மீண்டும் ஒரு குடைக்கொள்கையின் அவசியமும் அவசரமும் பலராலும் உணரப்படுகின்ற வேளை இது ஓர் ஆய்வுக்குரியதாகவும் மாறியிருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாறும் முக்கியமாக கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையோடு கூடிய அரசியலும் ஆராயப்பட வேண்டியவை. 30 ஆண்டுகால வன்முறை கலந்த ஆயதப் போரில் நான்கு தனித்துவமான இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம், மலையக மக்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சல்களும், மன மாற்றங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

தமிழ் தேசியக் குடை மீண்டும் ஒருமுறை மூன்று தனித்துவமான தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கி இயங்கும் தன்மை கொண்டதா? இல்லையென்றால் இதன்பின் ஆய்வு எதற்கு? ஆம் என்றால் எப்படி? கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை எவை?
1) இலங்கையில் வடகிழக்கில் நான்கு தனித்துவமான இனங்கள் உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளல்
2) அவர்களுடைய தனித்துவங்களான மொழி, மதம், பிரதேசம் போன்றவை முதன்மையாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்
3) தவறிப்போன நேர்மையான அரசியலை அறிமுகம் செய்து திறந்த மனதுடனான ஜனநாயக அரசியலை முன்னெடுத்தல், அதுவே ஒரு குடைக் கொள்கையாக பிரகடனப்படுத்தல்
4) சம்பந்தப்படுவோர் தமது சொந்த விருப்பு வெறுப்புகளை கைவிட்டு (முனிவர் நிலையடைதல்) அத்தனையும் தமது மக்களின் வாழ்வுக்கு அர்ப்பணித்தல்
5) அந்தந்த மாவட்டங்களை அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆளுகின்ற முறைமையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தல்
6) ஒருவரை ஒருவர் தமது தேவைகளுக்காக பயன்படுத்துவது என்ற காட்டுமிராண்டித்தனமான சிந்தனையை கைவிட்டு ஒருவரை ஒருவர் மதித்து, ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற தனித்துவமான திறன்களை சமூகம் பெறும்படியான திட்டங்களை முன்வைத்தல்
7) ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கின்ற வளங்களை அந்தந்த மாவட்டமக்கள் பெறும்படியான திட்டங்களை வகுத்து மிகுதியானவற்றை மற்றய மாவட்டங்களும் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகளை கண்டுபிடித்தல் போன்ற பல கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Multicoloured_Umbrellaஇனி உருவாக்குகின்ற குடை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அவர்களின் தனித்துவங்களையும் ஏற்றுக்கொண்டு மதித்து வாழுகின்ற ஓர் ஜனநாயகத் தளத்தை உருவாக்குகின்ற பல வர்ணக் குடையாக இருக்குமேயானால் இந்தக் குடையின் கீழ் வருவதற்கும் வாழ்வதற்கும் அத்தனை பேரும் விரும்புவார்கள் என்பது என் கருத்து.

மக்களின் மனங்களில் உள்ள சந்தேகங்களை நீக்க புதிய புதிய சிந்தனைகளை வேறுபட்ட தளங்களிலிருந்து உள்வாங்கி ஆய்வுகளை செய்யாதவரை கூடுவதும் பின் பிரிவதும் என்பது தமிழ்த் தேசியத்தின் வாழ்வாக மாறிவிடும். அந்த வாழ்க்கைச் சக்கரத்துள் தமிழ் தேசியம் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப்பட்டுவிடும்.

ஒருவரோடு ஒருவர் சார்ந்து வாழவேண்டும் என்பது தமிழ் சமூகத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட கட்டளையல்ல. நம்முடைய உருவாக்கத்தின் அடிப்படையிலிருந்து உருவான இயற்கை விதி அது. அணுவிலிருந்து அண்டவெளிவரை அனைத்துமே ஒன்றேடு ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. அந்த அணுவால் உருவாக்கப்பட்டு இந்த அண்டவெளிக்குள் வாழும் மனிதன்மட்டும் எப்படி சார்பின்றி வாழ்வது? சார்பின்றி வாழ்வில்லையென்பது வரலாற்று உண்மை. இதை இன்று முழுஉலகும் குறிப்பாக பொருளாதார வல்லரசுகளே உணர்ந்துள்ள காலம் இது. தமிழ்பேசும் மக்களும் தலைவர்களும் உணர்வார்களா?

அவுஸ்திரேலிய வீரர் முதலிடம் – உலக சைக்கிளோட்டப் போட்டி:

011009cadeel.jpgசுவிட் சர்லாந்தின் நட்சத்திர சைக்கிளோட்ட வீரர் பெபியன் கென்சல்ரா, சொந்த மண்ணில் சம்பியன் பட்டம் வெல்லும் அரிய வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். உலக சைக்கிளோட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் பெபியன் கென்சல்ரா ஐந்தாம் இடத்தையே பெற்றுக்கொண்டார். சுவிட்சர்லாந்தின் மென்டிரிசோ பகுதியில் இந்தப் போட்டி நடைபெற்றது.

அவுஸ்திரேலிய வீரர் கடெல், எவன்ஸ் 262.3 கிலோ மீற்றர் ஓட்ட தூரத்தைக் கடந்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அலக்சாண்டர் கொல்ப்நோவ் இரண்டாம் இடத்தையும், ஸ்பெய்னைச் சேர்ந்த ஜோக்கின் ரொட்ரிகஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெபியன் கென்சல்ரா பிரகாசிக்கத் தவறியமை உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற டைம் ட்ரயல்ஸ் போட்டிகளில் கென்சல்ரா முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

13 வருடங்களுக்குப் பின்னர் உலக சைக்கிளோட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் முதல் தடவையாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆபிரிக்க நாடுகளுடன் வெனிசூலா ஒப்பந்தம் கைச்சாத்து

நிலக்கரி அகழ்தல் ஒப்பந்தத்தில் ஏழு ஆபிரிக்க நாடுகளுடன் வெனிசூலா ஒப்பந்தம் செய்துள்ளது. வெனிசூலாவில் நடந்த ஆபிரிக்க தென்னமெரிக்க நாடுகளின் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

முரிட்டானியா, மாலி நைகர், சிராலியோன், தென்னாபிரிக்கா, அங்கோலா, தன்சானியா ஆகிய நாடுகளுடனே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஆபிரிக்க நாடுகளிலுள்ள எண்ணெய், எரிவாயு, இரும்பு ஆகிய மூலப் பொட்களை அகழ்தல் ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட வேலைகளில் வெனிசூலாவின் கம்பனிகள் ஈடுபடவுள்ளன.

அமெரிக்க மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கெதிராக மாற்று அணியொன்றை உருவாக்கும் திட்டம் பற்றியும் இம்மாநாட்டில் பேசப்பட்டது. நாணயம், இராணுவம் வங்கி உள்ளிட்ட முக்கிய விடயங்களை தென்னமெரிக்க ஆபிரிக்க நாடுகளிடையே பொதுவான அமைப்பொன்றின் கீழ் கொண்டுவரவும் இந்நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளின் உருக்குத் தொழில் இரும்பு, நிலக்கரி அகழ்வுத் தொழில்கள் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்களிப்புகளை வெனிசூலாவின் அறிக்கை குறைவாக மதிப்பிட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.