October

October

ஜனாதிபதி வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

290909mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நுவென் மின் ட்ரியொட்டின் விசேட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு சென்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் முக்கியஸ்தர்களின் குழுவென்றும் அங்கு சென்றுள்ளது.

வியட்நாமின் நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். இன்று மாலை இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் சமூக, பொருளாதார, வர்த்தக,  மற்றும் விவசாய விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதியின் மாளிகையில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு விருந்துபசாரமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அனுமான் வால் போல் நீளும் துரோகப் பட்டியல்’ புலிகளின் புலம்பல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தம் துரோகிகளை மட்டுமே உருவாக்கியது. தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளை வாடகைக்கு அமர்த்தியே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அரசியலை நகர்த்தினர். அந்த வாடகைத் தலைவர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து போர் முழக்கம் இடவும் புலம்பெயர் தமிழர்கள் பின்நிற்கவில்லை. இன்று அந்த வாடகைத் தலைவர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகள் துரோகிப்பட்டியலில் இணைத்துள்ளனர். இத்துரோகப் பட்டியல் இன்னும் நீள்கின்றது என்றும் மிகவும் புலம்புகின்றனர். இது புலத்து புலி ஆதரவு சக்திகளின் புதிய துரோகப் பட்டியல் (புலி ஆதரவுத் தள இணையமொன்றில் இருந்து பெறப்பட்டது.):

1. கருணாநிதி
2. ஜெயலலிதா
3. திருமாவளவன்
4. ராமதாஸ்
5. விஜயகாந்த்
6. சிதம்பரம்
7. ஜெகத் கஸ்பர்
8. தினமலர்
9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள்
10. வைரமுத்து
11. வீரமணி
12. ஜெகத்ரட்சகன்
13. சுப. வீரபாண்டியன்
14. காங்கிரஸ் பன்னிகள்
15. நக்கீரன்

மடு கட்டளைத் தளபதி விபத்தில் பலி – குருநாகலில் சம்பவம்

குருநாகல் தோரயாய பிரதேசத்தில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் மடு, 611வது படையணியின் கட்டளையிடும் தளபதி கேர்ணல் துமிந்த பலிஹகார அமரசேகர உயிரிழந்துள்ளார்.

மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்து குருநாகல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக வந்த கேர்ணல் அமரசேகரவின் இராணுவ கெப் வாகனமும் பொலிஸ் டிரக் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னாள் சென்ற பொலிஸ் டிரக் வண்டியை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டபோது இராணுவ கெப் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் டிரக்குடன் மோதியுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேர்ணல் அதிகாலை இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வருட இறுதிக்கு முன் வடக்கில் சிவில் நிர்வாகம் : ஒரு இலட்சம் பேர் மீள்குடியேறுவர் – அமைச்சர் அமுனுகம

வட பகுதியில் இவ்வாண்டு இறுதிக்குள் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு இலட்சம் பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் (யு. என். டி. பி.) இணைந்து இதற்கென பாரிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யு. என். டி. பியின் பிரதிநிதி நீல் பூனுக்கும், தனக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த திட்டத்திற்கு இணக்கம் கண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் உரையாற்றுகையில்:-

கிராம சேவகர் பிரிவு தொடக்கம் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் வரையான சகல செயற்பாடுகளும் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொலைத் தொடர்பு உட்பட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகள் வெகு விரைவில் ஏற்படுத்தப்பட்டு இந்த மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

சுனாமி அனர்த்தத்தின் போதும், கிழக்கு மீட்டெடுக்கப்பட்ட பின்னரும் இது போன்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.

கிராம மட்டத்திலிருந்து நிர்வாக நடவடிக்கைகளை ஸ்தாபிக்க தேவையான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyமுருகையன் இறந்து ஏறத்தாழ நான்கு மாதங்களில் நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன?

1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது.

Dr Rajani Thiranagamaஅடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தமிழ் சூழலின் நிலமையினை விமர்சித்து “முறிந்த பனை” எழுதிய நான்கு  யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முதன்மையானவரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட மீதிப்பேர் ஒதுங்க வேண்டியிருந்தது அல்லது தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையும் நாடகவியலாளரும் பெண்ணியவாதியுமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞரும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு முருகையனிடமிருந்து முன்னுரையைப் பெற்றவருமான எம்.ஏ. நுஃமான் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்டார். நிலமை இவ்வாறு இருக்கும்போது நமது கவிஞர் முருகையனோ சற்றும் மனம் தளராது புலிப்பாசிச அரசியலுக்கு வெற்றுப்பிரச்சாரம் செய்யும் கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

‘தற்கொடை’ என்ற முருகையனின் கவிதையில் வள்ளுவரை கவிதைசொல்லி தெருவில் சந்தித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டிலோ வள்ளுவர் தான் இயற்றிய புதிய அதிகாரத்தை கொடுக்கிறார். கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு

தற்கொடை என்ப தமிழீழ
மைந்தர்கள்
நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரை தான் ஈயும்
சான்றாண்மை தற்கொடையாம்
ஏன்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்
உறுதியுமே
கூர்மதியோர் ஆவிக் கொடை

கற்கண் டினிது பழங் கள் இனிதே
என்பார்கள்
தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்
திடம் கொண்ட
வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்
ஏந்திடுவோர்
தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்
அணிவோரின்
நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்
கூடமாம்
பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்: அடங்கார்:
அவர்க்குயிரோ
துச்சம்: எதிரி வெறுந்தூள்.

கொல்வோரை மோதிக் கொடுபட்ட
இன்னுயிரை
ஏல்லா உலகும் தொழும்.

இதைவிட நல்ல பிரச்சார முத்து புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இப்பிரச்சாரத்தின் முன் புலிகளின் ஆஸ்தானக் கவிஞரான புதுவை ரத்தின துரையே பிச்சைதான் வாங்கவேண்டும்.

மேற்கூறிய கவித்துவச் சிறப்பு எதுவுமில்லை. திருக்குறளின் வடிவத்தை பிரதிபண்ணி கவிதை பண்ணும் இவ்வுக்தி மிகவும் மலினமானதும் இலகுவானதுமான முயற்சி. வழமையாக பாடசாலை மாணவர்கள் பாலியல் வசை மொழிகளை இதே யுத்தியைப் பயன்படுத்தி உருவாக்குவதுண்டு. இதற்கு நல்ல உதாரணம்:

ஏவ்வோழ் ஓழ்த்தார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
கள்ளோழ் ஓழ்த்தாருக்கு

எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்ப் புலமையுள்ள எந்தவொரு மாணவருமே இந்த வகையில் கவிதை கட்டமுடியும். இப்பருவ மாணவர்களையே புலிகளும் தங்களது ஆட்சேர்ப்புக்கு இலக்கு வைப்பதால்தான் முருகையனின் தற்கொடை கவிதை புலிகளுக்கு அற்புதமான பிரச்சார முத்து.

முருகையன் யாழ்ப்பாண சனத்தொகையில் 50 வீதமான ஆதிக்க வேளாள சாதியைச் சேர்ந்தவர். அதிலும் சைவ உணவு மட்டுமே உண்ணும் சாதியின் உட்பிரிவைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரின் அதியுச்ச கல்வி கலாச்சார நிறுவனமான  யாழ் பல்கலைக்கழகத்தின் முது துணைப்பதிவாளராக இருந்துகொண்டு தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியில் பாதி நரைத்த தாடி மீதி கவிஞன் நாடகாசிரியன் என்கிற படிமங்களோடும் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்திலிருக்கிற பெரும்பாலானோர் மாணவன் மாணவிகளுடன் ஈடுபடுகின்ற பாலியல் லீலைகளில் சம்பந்தப்படாத நல்ல மனிதர் என்ற பெயரோடும் ‘தற்கொடை’ எழுதுகிறபோது இக்கவிதையின் உச்ச பிரச்சார பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Selviபுலிகளுக்காக முருகையன் எழுதிய இன்னொரு பிரச்சாரப் படைப்பு உயிர்த்த மனிதர் கூத்து என்கிற நாடகம். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனான க. சிதம்பரநாதனோடு சேர்ந்து கூட்டு முயற்சியாக இதனை எழுதினார். நாடகத்துறையில் தனக்குப் போட்டியாக இருந்த செல்வி புலிகளால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது. சிதம்பரநாதனுடைய முன்னைநாள் மேலாளரான அதிபர் ஆனந்தராஜா புலிகளாலால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்ததான ஒரு குற்றச்சாட்டும் உண்டு. உயிர்த்த மனிதரின் கூத்து பிரதியை வாசித்துப் பார்த்தால் பிரச்சார அம்சம் மட்டும் மேலோங்கும் மிகச்சுமாரானது என்பது புரியும். விடுதலைப் புலிகளின் ஆணைப்பிரகாரம் (Commissioned to)    எழுதப்பட்ட நாடகம் போலவேயுள்ளது.

ஸ்ராலின் போன்ற ஒரு கொடுங்கோலனை மிகச் சரியாகவே வெறுத்த மகத்தான ரூஷ்ய பெண்கவிக்குக்கூட அவருடைய மகன் “குலாக்” கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போது ஸ்ராலினைப் போற்றிப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டியிருந்தது. ஆனால் புலிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடிகளும் முருகையனுக்கு இருந்ததில்லை. ஏ. ஜே.கனகரட்னா போன்ற உன்னத மனிதர்கள் புலிகள் பற்றிய மிகத்தெளிவான விமர்சனங்களையும் சிந்தனைகளையும் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடமே பகிர்ந்து கொண்டு இதே யாழ்ப்பாணத்தில் கௌரவம் அறம்சார் வீரம் நேர்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

“ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்பதற்கிணங்க ஒரு Hypocrite ஆக இயங்கி புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி புலிகளின் அனுதாபிகளாகவும் புலிகளின் பிரச்சாரகர்களாகவும் செயற்பட்ட பேரா. சிவத்தம்பி மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றவர்களின் அணியிலேயே முருகையனும் வருகிறார். முருகையனுக்கும் மேற்கூறியவர்களுக்கும் பிரபாகரனுடைய போராட்டத்திற்குப் “பதமான” பதின்ம வயதுக் குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே புலிகளின் பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகள் புலிகளில் இணையக்கூடாது என்பதற்காக அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கூட்டிவந்து கொழும்பு சென்னை முதலிய இடங்களில் வைத்து வளர்த்து சிறந்த பல்கலைக்கழக கல்வி பெறுவதை உறுதிப்படுத்தினார்கள். முருகையனுடைய பெண் திருமணமாகி கொழும்பில் சந்தோசமான குடும்ப வாழ்விலிருக்கிறார். முருகையனுடைய பையன் நிரந்தரமான ஒரு உளநோயாளி. ஆம் இது “போராட்டத்தில்” விலக்குப்பெறுவதற்கான நியாயத்தை வழங்குகிறது.

ஆனால் மறுபக்கத்தில் ஒரு உளப்பாதிப்புள்ள மகனின் தந்தையான முருகையனுக்கு என்ன குறைபாடுகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு அருமை பெருமையாகச் சீராட்டி வளர்ப்பார்கள் என்பது சொல்லிக்கொடுத்துத் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட முருகையன் மற்றவர்களுடைய குழந்தைகளை ஒரு தனி மனிதனின் நலனுக்காக நடத்தப்பட்ட பாசிசப் போராட்டத்திற்கு தாரை வார்த்துக் கொடுபடுவதற்காக பிரச்சாரம் செய்ததை புரிந்துகொள்வது எவ்வாறு? (முருகையனும் ஒரு உளநோயாளி. அவ்வப்போது நோய் முற்றுகிறபோது சிகிச்சை இளைப்பாறலுக்குச் சென்றுவிட்டு மீளவும் தேறி சித்த சுவாதீனமுள்ள மனிதராக மீண்டு வருகின்ற அளவில் தன் நோயை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்)

இந்த இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் முருகையனைப் போன்ற hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமான பண்டிதர் பரந்தாமன் வருகிறார். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு.  ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” re enact பண்ணப்படுவதாக  ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். இவ்வாண்டில் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான இறுதிச் சமரொன்றின் போது பண்டிதர் புதுக்குடியிருப்பில் தள்ளாத வயதிலும் போரிட்டு மடிந்தார். அவருக்கு நெற்றியிலோ நெஞ்சிலோதான் சன்னம் பாய்ந்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

பின்வருவது பண்டிதரின் நல்ல கவிதையொன்று.

நல்லையல்லை நெடுவெண்ணிலவே

இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம்
ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம்
வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல்
போற்றெருவோரம் புளியோ வேம்போ
ஆலோ அரசோ அருநிழல் தேடி
ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை
ஒழியுநாள் வருமோ?
முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல்
அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு
ஆர உண்டே மூரல் முறுவலர்
சேர இருந்து
திங்கள் சொரிந்த
பாலொழிப் பரப்பில்
மாலைத் தென்றல்
முல்லை நறுமணம் முகந்து வீச
மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த
எழில் வாழ்வு கழிந்தது மாதோ
இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன
வாரியிடையே வலைஞர் செல்லார்
குயிலும் கோழியும் கூவல் மறந்தன
கிள்ளை மழலையும் கேளா நல் ஆன்
கன்று துள்ளா கறவை சுரவா
எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல்
புல்லென்றாகிப் போன
யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி
கான விறகு கட்டி விற்கும்
அல்லல் வாழ்க்கையே ஆனோம்
இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார்
பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில்
ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி
மெல்ல வானில் வருகுவை
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

பண்டிதரோடு முருகையன் வகையறாக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

முருகையன் யூன் 27 ல் கொழும்பில் இறந்தபோது உடனடியயாக அவரைப் போற்றிப் புகழ்ந்து அஞ்சலி அறிக்கை விட்டவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். தேவானந்தாவை பல தடவைகள் கொல்ல முயன்ற புலிகள் குறைந்த பட்சம் இரு தடவைகளேனும் பெண் தற்கொலைதாரிகளைப் பயன்படுத்தி அவரைக்கொல்ல முயன்றுள்ளனர். தேவானந்தாவோ தற்கொலைக் குண்டுதாரிகளை நியாயப்படுத்தியும் பிரச்சாரப்படுத்தியும் கவிதை எழுதிய முருகையனை போற்றிப் புகழ்ந்ததானது பெருந்தன்மையாலோ அறியாமையாலோ அல்ல. முருகையன் இறந்து சரியாக ஆறு நாட்களின் பின் புலிக் காய்ச்சலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்துள் சண்டை சச்சரவு இல்லாமல் நுழைவதற்கு தேவானந்தாவுக்கு முருகையனை போற்ற வேண்டியிருந்தது. மேலும் இது வாக்குப்பெறுவதற்கான ஒரு மலினமான அரசியல் நடவடிக்கையும் கூட. மறைத்தும் மறந்தும் கடந்து செல்லுதல் அல்ல reconciliation என்பதை தேவானந்தா உணரவேண்டும்.

40 களில் ஈழத்து நவீன கவிதை மஹாகவியுடன் தொடங்கியது. மஹாகவி முதல் தலைமுறைக்கவிஞர். 50 களிலிருந்து கவிதை எழுதிவரும் நீலாவணனும் முருகையனும் இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள். (பார்க்க: பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலின் முன்னுரை). நவீன ஈழத்துக் கவிதையின் பிதாமகரான மஹாகவியின் கவிதைகள் அசலானவையும் தரத்தில் மிக உயர்வானவையும் ஆகும். இவருக்குப் பின்னர் வந்த நீலாவணனும் முருகையனும் பல சுமாரான கவிதைகளை எழுதியுள்ள போதும் நீலாவணனின் சிறந்த கவிதைகள் முருகையனின் சிறந்த கவிதைகளைவிட தரத்தில் உயர்வானவைகள். முருகையனில் அசலைவிட நகல்தான் அதிகமாக இருக்கிறது.

Arnold_Weskerமுருகையனின் படைப்புக்களில் வேறொருவரின் படைப்பை தழுவி அல்லது மொழிபெயர்த்து அல்லது வடிவம் மாற்றி எழுதியiவைதான் சிறப்பாக இருக்கின்றன. ஆனோல்ட் வெஸ்கர் என்ற பிரித்தானிய நாடகாசிரியரின் உருவகக்கதையொன்றை தழுவியே ஆதி பகவன் என்ற நெடுங்கவிதையை எழுதியுள்ளார். ஆதிக் கிரேக்க நாடகாசிரியரான Sophocles இனது நாடகங்களான  Antigone, Oedipus Rex  என்பவற்றை  தழுவி குனிந்த தலை தந்தையின் கூற்றுவன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். Bertolt Brecht  இன் Life of Galileo வை தழுவி கலிலியோவை எழுதியுள்ளார். அன்ரன் செக்கோவின் Enemies என்ற சிறுகதையைத்தழுவி இருதுருவங்கள் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். Terry Eagleton எழுதிய The Illusions of Post Modernism என்ற கட்டுரையை முருகையன் முதலாளியத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துவிட்டு  “பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற புத்தகத்தில் தனது கட்டுரையாகப் போடுகிறார். 

தான் சுயமாக எழுதிய நாடகங்களோடு தான் மொழிபெயர்த்த நாடகங்களையும்  தான் எழுதிய நாடகம் போன்ற மாயையோடு சேர்த்துத் தொகுக்கிறார். முருகையனுடைய அகராதியில் தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசமில்லை. மொழிபெயர்ப்பு சரியாக செய்ய முடியாவிட்டால் தழுவல் என்றும் தழுவல் திருட்டல்லவா என்ற குற்றச்சாட்டு வந்தால் மொழிபெயர்ப்புத்தான் என்றும் சொல்லித்தப்பலாம். உண்மையில் இவை அப்பட்டமான இலக்கியத் திருட்டுக்கள். ஐரோப்பிய மொழியொன்றில் இந்தத்திருவிளையாடல்களை முருகையன் செய்திருப்பாராயின் ரெறி ஈகிள்ரனின் பதிப்பாளர் முருகையன் மீது வழக்குத்தாக்கல் செய்திருப்பார்.

முருகையனின் சொந்த நாடகங்கள் மிகச்சுமாரானவையாக இருக்கின்றன. அதிலும் ‘வந்துசேர்ந்தன’ போன்ற நாடகங்கள் வேடிக்கைக்குரிய வகையில் பாடசாலை மாணவர்கள் எழுதுகின்ற தரத்தில் இருக்கின்றன. செய்யுளில் (Verse)  எழுதிவிட்டால் மட்டும் அது நல்ல நாடகமாகிவிடாது. ஆனால் நல்ல நாடகம் நாடகப்பிரதி பற்றிய புரிதல் இல்லாத ஒருவருக்கு செய்யுளில் எழுதப்பட்டது நல்ல நாடகப்பிரதி என்ற பிரமையைக் கொடுக்கக் கூடியது. முருகையனின் கவிதைத் தொகுதிகளிலுள்ள 80 வீதமான கவிதைகள் மிகச் சுமாரானவைவும் தனித்தன்மை இல்லாதவையும். ‘அகிலத்தின் மையங்கள்’ எழுதிய முருகையனால்தான் மேற்கூறிய 80 வீதமான கவிதைகளும் எழுதப்பட வேண்டுமல்ல.  மேமன் கவி அப்துல் ரகுமான் போன்ற மூன்றாந்தரமான ஒரு கவிஞராலோ சாதாரணமான தமிழ்ப் புலமையுள்ள ஒருவராலோ மேற்கூறிய 80 வீதமான கவிதைகளை எழுதமுடியும்.  முருகையனிடம் சொந்தச் சரக்கு இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

துரதிஸ்ட வசமாக மஹாகவியும் நீலாவணனும் தங்களுடைய 44 ம் வயதிலேயே மரணமடைந்துவிட்டதால் மூத்த கவிஞர் என்ற பதவி முருகையனுக்கு போட்டியின்றிக் கிடைத்தது. அவரது கவிதைகளின் தரத்தின் அடிப்படையிலன்றி வயது ஆங்கில மொழிப்புலமை அதிகாரம் மிக்க பதவிகளிலிருந்தமை என்பனவே முன்னணிக் கவிஞர் என்ற அடைமொழியை முருகையன் அடையக்காரணமாக இருந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் தங்களின் உக்கிப்போன கோவணங்களின் நாறல் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் ‘ஒறிஜினல்’  பேராசிரியர்களான சிவத்தம்பியும் சிவசேகரமும் முருகையனுக்கு எழுதிய அஞ்சலிகளில் மகா பொய்கள் சொல்லியுள்ளனர். சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்ந்து மஹாகவியை இருட்டடிப்புச் செய்தவர். சிவசேகரம் மஹாகவியை இருட்டடிப்புச் செய்த கைலாசபதிக்கு வக்காலத்து வாங்கியவர்.

எந்தவொரு அசலான கலைஞனும் ஒரு சித்தாந்துத்துக்குள் (Doctrine) சிறைப்பட்டுப் போகமாட்டான். மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம். இதன் காரணமாகத்தான் மஹாகவியும் நீலாவணனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற பிரச்சார இலக்கியத்தை முதன்மைப்படுத்திய கிளப் (club)களில் தங்களை இணைக்கவில்லை. மேலும் அசலான கலைஞர்கள் என்பதால் கைலாசபதி சிவத்தம்பி போன்ற Literary cognition  (இலக்கிய ஞானம்) ஐ  அரிதாக உடையவர்களிடம் சேவகம் செய்து இலக்கிய அந்தஸ்து பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை.

அடிப்படையில் மஹாகவியும் நீலாவணனும் முற்போக்காளராய் இருந்தார்களே தவிர பிற்போக்காளராயும் வலதுசாரிகளாயும் இருக்கவில்லை. நகல் கவிஞரான முருகையனோ கைலாசபதி சிவத்தம்பிக்கு சேவகம் செய்தார். மார்க்ஸியக் கிளப்பின் சீன சார்பு chapter ஆன தேசிய கலை இலக்கியப்பேரவையின் உறுப்பினர் முருகையன். இந்த மார்க்ஸியக் கிளப் களுக்கும் சாயிபாபா கிளப் மற்றும் மோட்டார் வண்டிக் கிளப்புக்களுக்கும் (Bikie clubs) பெரிய வித்தியாசங்களில்லை. இவ்வகையான இலக்கிய மார்க்ஸிய கிளப்புக்கள்தாம் குழுமனப்பான்மை முதுகுசொறிதல் காரணமாக உண்மையான இலக்கியத்தை சீரளிப்பவர்கள்.

இந்த அடிப்படையிலேயே சிவத்த தம்பியும் சிவத்த சேகரமும் முருகையனுக்கு எழுதிய புனைவுசார் அஞ்சலிகளை புரிந்துகொள்ள முடியும். சிவத்த சேகரத்தார் “குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.“ என்று முருகையனைச் சொல்கிறார். தேசிய கலை இலக்கியப்பேரவை பதிப்பித்த முருகையனின் கவிதை தொகுப்பில் “தற்கொடை” என்ற அவரது கவிதையும் முருகையனின் நாடகங்களின் தொகுப்பு நூலில் “உயிர்த்த மனிதர் கூத்து” என்ற புலிப்பிரச்சார நாடகமும் தவிர்க்கப்பட்டு உத்தியோக பூர்வமாக சுயதணிக்கை செய்யப்பட்ட பின்னர் சேகரத்தார் நம் காதில் பூச்சுற்றுகிறார். முருகையன் குறுகிய தமிழ்த் தேசியவாதத்துக்குப் பலியாகியிருந்தாலும் மன்னிக்கலாம். முருகையன் அதைவிடக் கேவலமாகிப்போய் புலிப் பாசிஸத்துக்கல்லவா பலியாகியிருக்கிறார். சேகரத்தார் மேலும் உன்மத்தம் கொண்டு “முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது”  என்கிறார். இதைவிட தம்பியும் சேகரமும் முருகையனை பாரதிதாசனுக்கு ஒத்தவராக அல்லது அவரையும் மீறியவராகக்காட்ட முற்பட தம்பியோ முருகையனைக் கொண்டுபோய் மஹாகவிக்கு அருகில் வைக்க முற்பட்டிருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தில் மஹாகவி ஒரு இரத்தினக்கல் என்றால் முருகையன் ஒரு கூழாங்கல்.

Sergei_Mikhalkovஇந்த ஆகஸ்டு 27 ம் திகதி சேர்ஜி மிகல்கோவ் என்ற ரூஷ்ய கவிஞர் இறந்தார். அவர் கிரெம்ளினில் ஆயுட்கால ஆஸ்தான கவி. முதலில் அவர் சோவியத் தேசிய கீதத்துக்கு இரண்டு வகையான பாடல்களை எழுதினார். ஸ்ராலின் உயிரோடு இருந்த போது ஸ்ராலினை மகிமைப்படுத்தி எழுதியது ஒன்று. ஸ்ராலின் இறந்தபின்னர் ஸ்ராலினை புறக்கணித்து எழுதியது மற்றது. சோவியத் உடைந்த பின்னரும் ரூஷ்ய அதிபர் பூட்டினின் கட்டளைக்கிணங்க அதே பழைய சோவியத் இசைக்கு மூன்றாவது முறையாகவும் ரூஷ்ய தேசிய கீதத்துக்கான பாடலை எழுதினார். அவர் சேவகம் செய்த எல்லா ஆட்சிகளும் அவருக்கு பதக்கங்களை வழங்கின. மிகல்கோவ் இறப்பதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முதல் யூன் 27 ல் இறந்த முருகையனோ மிகல்கோவையே விஞ்சிய சேவக்காரன். ருஷ்ய ஆட்சிகளுக்கு சேவகம் செய்த மிகல்கோவ் ஒருபோதும் ரூஷ்யர்களின் எதிரிகளான ஜெர்மானிய நாசிகளுக்கு சேவகம் செய்யவில்லை. முருகையன் அதற்கொப்பானதை செய்திருக்கிறார்.

முருகையன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முதலே பிரபாகரன் மண்டையில் போடப்பட்டு விட்டதால் முருகையனுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (இடது சாரிக்கட்சிகள் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது முருகையனின் இடதுசாரித் தொடர்பாலேயே இவ்விருது)  முருகையனுக்கு 2007 ல் வழங்கப்பட்டபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளையும் நியாயப்படுத்தி ‘தற்கொடை’ எழுதிய முருகையனுக்கு இலங்கை அரசு இவ்விருதைக் கொடுத்திருக்கிறது. (இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் 9 மணியிலிருந்து 5 மணி வரையான பகல்வேளைகளில் மட்டுமே தொழில் செய்வார்கள் என்று சக கவிஞர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். சிங்களவர்களுக்கு மேல் வீடு இல்லை என்று பிரபாகரனின் மதியுரைஞர் இலண்டன் சீமையில் பேசியிருக்கிறார்.)

திருடர்கள் தாக்கியதில் தமிழக வாலிபர் லண்டனில் மரணம்

லண்டன் குரொய்டனில் வாழ்ந்து வந்த சரவணகுமார் செல்லப்பன் (25) என்ற இளைஞர் ஒக்ரோபர் 19ல் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழ்நாடு நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தனது கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் வந்திருந்தார். தீபாவளி தினமான ஒக்ரோபர் 17ல் மாலை ஏழு மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பன் இனம்தெரியாத சில இளைஞர்களால் தாக்கப்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமாரின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பனிடம் இருந்த தொலைபேசி மற்றும் கிறடிட்காட் போன்ற உடமைகள் பறிக்கப்பட்டது என்றும் திருடிச் சென்றவர்கள் வீதியில் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பனின் பிடரியில் இரும்புக் குற்றியினால் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாகவும் சரவணகுமாரின் நண்பர் கூறினார்.

வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கு நடந்ததை தான் தங்கியிருந்த வீட்டுக்காரர் ராஜனக்கு தெரிவித்ததாக ராஜனின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தான் தன்னுடைய நண்பர்களுடன் மேடே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய நண்பர்களிடம் சென்றுள்ளார். நண்பர்களிடம் நடந்ததைக் கூறி விட்டு தனக்கு பிடரியில் வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மேடே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரவணகுமார் செல்லப்பனைக் காண்பித்துள்ளனர். சரவணகுமார் செல்லப்பனைப் பார்வையிட்ட மருத்துவர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியே அது என்று கூறி வலிநிவாரணியை வழங்கியாதாகத் தெரியவருகிறது. அன்றைய தினம் இரவு சரவணகுமார் தான் தங்கியிருந்த வீட்டில் தங்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் வீட்டிலேயே தங்கியதாகவும் சரவணகுமார் தங்கியிருந்த வீட்டுக்காரரர் ராஜனின் நண்பர் கூறுகிறார். இரவு படுக்கைக்குச் சென்ற போதும் சரவணகுமார் செல்லப்பனின் வலி குறைந்திருக்கவி;ல்லை என்றும் நண்பர்கள் அடிபட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தனர் என்றும் சரவணகுமாரின் நண்பர் தெரிவிக்கின்றார்.

வலியுடன் படுக்கைகுச் சென்ற சரவணகுமார் செல்லப்பன் மறுநாள் 18 ஒக்ரோபர் காலையில் எழுந்திருக்கவில்லை. காலை எழுந்து வேலைக்கு புறம்பட்ட நண்பன் வலியுடன் படுக்கைக்குச் சென்றவன் எப்படி உள்ளான் என்று பார்க்கச் சென்ற போதும் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிந்தபடி சரவணகுமார் செல்லப்பன் படுத்திருந்தார். உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து ரூற்றிங் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு சரவணகுமார் செல்லப்பன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மறுநாள் மதியம் ஒரு மணியளவில் சரவணகுமார் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரவணகுமார் செல்லப்பன் தனது இளம் வயதில் தன்னுயிரை இழந்ததையிட்டு உலகத் தமிழர் இயக்கம் (யுகே) தனது ஆழந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளனர். தமிழ்பேசும் நாங்கள் சரணவனகுமாரது உடலை பொறுப்பெற்காவிட்டால் கவுன்சில் அனாதையாக கருதி உடலை அடக்கம் செய்வவே வழமை. ஆதலால் சரவணகுமாரின் உடலைப் பொறுப்பெற்று அவரது உறுவினர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் இயக்கம் சார்பில் ஜேக்கப் ரவிபாலன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே விபத்தில் மரணமடைந்த மருத்துவத்தாதி செல்வி மஞ்சுளாவின் உடலையும் உலகத் தமிழர் இயக்கம் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 6ல் விபத்தில் மரணமான தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞரின் உடல் இங்கு உறவினர்கள் இல்லாத நிலையில் ரவர்ஹம்லற் கவுன்சிலால் அனாதையாக் கருதப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்ரம்பர் 9ல் முத்துக்குமாரின் உடலை கவுன்சிலர் போல் சத்தியநேசன் பொறுப்பேற்று லண்டன் சைவமுன்னேற்றச் சங்க ஐயரின் உதவியுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு அஸ்தியை முத்துக்குமாரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் 500 கோடியால்; வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்.

sri-lanka.jpgஇந்தியா வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபா மேலதிக நிதயுதவித் தொகை மூலம் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில். இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவை மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

மடு – தலைமன்னார் மற்றும் ஓமந்தை – பளைக்கிடையிலான ரயில் பாதைகளை புனரமைத்தல்  ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்தல்; யாழ். துரையப்பா விளையாட்டரங்கை புனரமைத்தல் மற்றும்  கலாசார நிலையம் அமைத்தல் போன்றவற்றை இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன்; இது குறித்து இரு நாடுகளுக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த தமிழக எம்.பி.க்கள் குழு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தியொன்றை முன்வைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக எம்.பி.க்களின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த உதவி கிடைக்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற வேண்டுமென்பதே தமிழக எம்.பி.க்களின் பிரதான கோரிக்கையாகும்.
அந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 11 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளாரஎன அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நவம்பர்; 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் – ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் தேர்தலின்  ஆரம்ப கட்ட முடிவுகளில் ஹமீட் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும்,  அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் 210 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது.  இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மீள்குடியேற்றத்தைத் துரிதமாக்க உதவியது தமிழக எம்.பீ.க்களின் வருகை : தினமுரசு

IDPs_TN_Delegationபத்து எம்.பீ.க்களைக் கொண்ட தமிழக எம்.பீ.க்கள் குழுவின் ஐந்து நாள் வருகை எழுப்பிய சலசலப்புகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் தமிழகத்திலும், இலங்கையிலும், இலங்கையின் தமிழ் மக்களின் வாழ்விடங்களிலும் வருகை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. தி.மு.க.வைச் சேர்ந்த ஐந்து பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர், சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல்.திருமாவளவன் ஆகியோரே இலங்கைக்கு வந்து போன பத்து எம்.பீ.க்களாவர். கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை மண்ணில் கால் பதித்தார்கள். கடந்த பதினான்காம் திகதி தமிழகம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் கப்சிப் பென வாய் பொத்திக் கருத்துக் கூறுவதைத் தவிர்த்தமை, அவர்கள் கட்டுப்பெட்டிகளாகவே இங்கு வருகை தந்திருப்பதை உணர்த்தியது. தமிழகம் திரும்பி, தமது வருகை தொடர்பான ஒன்பது பக்க அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்தனர். அதற்கு முன்னதாக முதல்வரே சென்னை விமான நிலையம் சென்று தமிழகக் குழுவை வரவேற்றமையும் ஒரு வகையில் அர்த்தம் பொதிந்த ஒன்றுதான். சென்னை விமான நிலையத்திலும் கூட ஊடகவியலாளர்கள், தமிழக எம்.பீ.க்களின் வாயைக் கிளற படாதபாடு பட்டார்கள். சர்வமும் கப்சிப் மயமாகவே கழிந்து போனது.

ஒன்பது பக்க அறிக்கையின் சாராம்சத்தைச் சொன்னபோது மட்டும் கலைஞர் வாயைத் திறந்தார். இலங்கையின் வடபகுதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 58 ஆயிரம் தமிழர்கள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார். ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்று இலங்கை அரசு உறுதியளித்திருக்கிறது என்றும் சொன்னார். 58 ஆயிரம் பேரை விடுவிப்போமென்று சொல்லவே இல்லை என்று மறுத்தலித்தார் அமைச்சர் யாப்பா அபேவர்த்தன. இலங்கை விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அரசாங்க அமைச்சர் அவர்.

சுமார் 1,30,000 பேரை இம்மாத முடிவுக்குள் மீளக் குடியமர்த்தி விடுவோம் என்று உறுதியளித்திருக்கிறார் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ். வவுனியா மெனிக்பாம் முகாமுக்குத் தமிழக எம்.பீ.க்கள் குழு சென்றிருந்தபோது திருமதி சார்ள்ஸைக் கண்ணீர் விட்டழ வைத்தார் டி.எஸ்.பாலு என்று இந்தியப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. அதனைச் சில இலங்கைப் பத்திரிகைகள் மறு பிரசுரம் செய்திருந்தன. டி.எஸ்.பாலு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூர் தொகுதி எம்.பீ. ராஜீவ் காந்தி புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாரியினால் கொல்லப்பட்ட இடம் ஸ்ரீபெரம்புதூர். இதே டி.எஸ்.பாலுதான் தமிழகக் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்தார். இலங்கையின் பல இடங்களில் கேள்வி கேட்க முனைந்த ஊடகவியலாளர்கள் மீது எரிந்து விழுந்தாரென்றும் இலங்கைப் பத்திரிகைகள் சில இவர் மீது எரிந்து விழுந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சந்திப்பொன்றின்போது யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சண்முகலிங்கத்தை இவர் பேசவிடாமல் தடுத்தாரென்றும் யாழ் பத்திரிகைகள் பொரிந்து தள்ளியிருந்தன.

இலங்கைக்கு வந்த குழு, இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு. அது சர்வகட்சிக் குழுவல்ல. தமிழக மாநில ஆளும் கூட்டணியின் சார்புக்குழு. தமிழக எம்.பீ.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடுத்த வேண்டுகோளை அடியொற்றியே இந்தக் குழு இலங்கை வந்தது. எனவே தமிழக எம்.பீ.க்கள் குழுவின் வருகையை வெறும் கண்துடைப்பு நாடகமென தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இப்படித்தான் புலி இயக்க ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ், பழ நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். புலிகளுக்காகவே அண்மைக் காலம்வரை ஆர்ப்பரித்து வந்த சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனும் வாயைத் திறக்க மறுத்தமையும் கவனத்துக்குரிய விடயம்தான். நீங்கள் பிரபாகரனுடன் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பீர்கள் என்று திருமாவளவனிடமே கைநீட்டிச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி சொன்னாரென்று கூட செய்திகள் வெளிவந்தன. அது வெறும் பகிடி என்று திருமாவளவனும் பின்னர் தமிழகச் செய்தியாளர்களிடம் பகிடி விட்டிருக்கிறார்.

இலங்கை, இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தமிழக எம்.பீ.க்களின் இலங்கை வருகை அமைந்திருந்தது என்பதற்கு அவர்கள் அளவோடு கருத்துகளைக் கூறியமை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இதனை வெளிப்படையாகவே இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் புதுடில்லிச் செய்தியாளர்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மீள்குடியேற்றம் தொடர்பில் நெருங்கிய உறவு உள்ளதாக நிருபமாராவ் தெரிவித்திருந்தார். இதற்கும் மேலாக தமிழக எம்.பீ.க்கள் குழு சமர்ப்பித்த ஒன்பது பக்க அறிக்கை முகாம்களிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் அவதிகளை அச்சொட்டாக வெளிப்படுத்தியிருந்தது. எந்த ஒளிவுமறைவுமின்றி முகாம் மக்களின் கஷ்டங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. முகாம்களிலுள்ள மக்களை விடுதலை செய்யுங்களென்ற வார்த்தைப் பிரயோகமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் சிங்கள அரசு தமிழ் மக்களை முட்கம்பிச் சிறைக்குள் தள்ளிக் கொடுமைப்படுத்துகிறது என்றும் தமிழகக் குழு கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. தமிழ் தேசியத்தை முன்தள்ளும் இலங்கை, இந்திய ஊடகங்களின் கருத்துகளில் இந்த எதிர்பார்ப்பின் தோல்வியைக் காண முடிந்தது. இதைப் போன்றே இலங்கை அரசைத் தமிழகக் குழு கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்த்த இலங்கை மற்றும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்தது ஏமாற்றமே.

தங்கக்கூடு என்றாலும் அடைத்து வைப்பது நியாயமல்ல என்ற தமிழக முதல்வர் வெளிப்படுத்திய அதே ஆதங்கத்தை தீர்க்கும் முயற்சியில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈடுபட்டிருக்கின்றன. கண்ணிவெடி அகற்றல் என்று சிங்கள அரசு சொல்வது, வேண்டுமென்றே புலிகள் என்று சந்தேகப்படுபவர்களைக் கொல்வதற்குத்தான். முகாமில் மெல்ல, மெல்ல சித்திரவதைப்படுவதை விட தங்களது இடம் நோக்கிச் செல்கையில் கண்ணிவெடியில் உயிர் துறப்பதே மேல் என்றுதான் முகாமிலுள்ள தமிழர்கள் கருதுகின்றனர் என்று நடிகர் விஜயகாந் கருத்துத் தெரிவித்திருந்தார். தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவரான இந்த நடிகர், இலங்கைத் தமிழர்களை வைத்துத் தமிழகத்தில் அரசியல் நடத்த முனைகிறார் என்பதைத்தான் இவரது கருத்துகள் காட்டுகின்றன. இதைத்தான் அனைத்துத் தமிழக மற்றும் இலங்கை எதிர்க்கட்சிகளும் நடத்த முனைகின்றன.

புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு இலங்கை ஜனாதிபதியினதும் இலங்கைப் படைகளினதும் உத்தி மட்டும் காரணமல்ல. அமெரிக்காவும், இந்தியாவும் அளித்த உதவிகளும் காரணம்தான். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்கின. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் ஆயுதக் கடத்தல் பற்றிய புலனாய்வுத் தகவல்களை அனுப்பியதோடு, தத்தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் இலங்கைக்கு உதவின.

பயங்கரவாத அமைப்புகள் என்று கூறப்படுவவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் பிந்திய கொள்கை. அதேநேரம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதும் இந்திய மத்திய அரசின் எதிர்பார்ப்பாகும். இதுவே தமிழக அரசின் பொறுப்பும், கடமையும் எதிர்பார்ப்பும். அதனைத்தான் தமிழகத்திலிருந்து வந்த எம்.பீ.க்களின் குழு செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக இலங்கை அரசு முகாம்களிலுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மேலும் ஐநூறு கோடி ரூபாவை இந்திய அரசு அளிக்கவுள்ளது. சர்வதேச சமூகமும் மீள்குடியேற்றத்துக்கெனத் தாராளமாக உதவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முகாம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்ததும் இலங்கைத் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு இந்தியாவும், தமிழகமும் அழுத்தம் கொடுக்கும். அதுவே நடக்கப் போகிறது. நந்திக்கடலில் செத்துப்போன புலிகளுக்கு இனியும் இந்தியா ஒக்சிசன் கொடுக்காது.

அண்டை நாடான சீனாவோடு உறவுகளைச் சுமுகமாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. சீனாவுக்கும் அந்த நோக்கம் இருக்கிறது. இருந்தாலும் இரு நாடுகளுக்குமிடையிலும் பிரச்சினைகளும் இருக்கின்றன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட பிறிக் (BRIC) என்ற அமைப்பிலும், ஆறு நாடுகளின் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்தியாவும் சீனாவும் அங்கம் வகிக்கின்றன. இதேவேளை அருணாசலப் பிரதேசம், காஷ்மீரின் சில பகுதிகள் உட்பட எல்லைப் பிரச்சினையும் இரு நாடுகளுக்கிடையிலும் இருக்கின்றன. இரு நாடுகளும் ஐக்கியமாகச் செயற்பட விரும்பினாலும் பிரச்சினைகளும் இருக்கின்றன. அண்டை நாடாள இலங்கையில் செல்வாக்கைச் செலுத்துவது என்பது இந்தியா, சீனா இரு நாடுகளுக்குமே முக்கியமானதாகும். எனவேதான் இலங்கைக்கு நான் முந்தி, நீ முந்தி என்று இந்தியாவும் உதவுகிறது. சீனாவும் உதவுகிறது. இதனால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவும் அடக்கி வாசிக்கிறது. தமிழகமும் அடக்கி வாசிக்கிறது.

‘நூல்தேட்டம்’ நூலகவியலாளர் என்.செல்வராஜா : நேர்காணல் ஜெ கவிதா

Selvarajah Nஉங்களைப் பற்றி எங்களுடன்…………….

இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் தண்டுகம என்ற கிராமத்தில் 20.10.1954இல் பிறந்த நான், நீர்கொழும்பில் என் இளமைக்காலத்தின் 16 வயதுவரை வாழ்ந்தேன். நீர்கொழும்பு விவேகானந்த (விஜயரத்தினம்) மகா வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றேன். எனது தந்தையார் அமரர் வ.நடராஜா, நீர்கொழும்பின் பிரபல P.W.D ஓவர்சியராக இருந்தவர். நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராகவும் ஒரு காலத்தில் பணியாற்றியவர். நிறைந்த நூலார்வம் மிக்கவர். தந்தையாரின் மரணத்தின் பின்னர் நீர்கொழும்பையும் விட்டுப் பிரிந்து, தாயாருடன்; எழுபதுகளில் யாழ்ப்பாணம் சென்று என் உயர் கல்வியைத் தொடர்ந்து, 1976இல் ஒரு நூலகராக உருவாகினேன்.

நூலகவியலாளர்களான எஸ்.எம்.கமால்தீன், கலாநிதி வே.இ.பாக்கியநாதன் ஆகிய உன்னதமான சிற்பிகளால் வடிக்கப்பெற்று இன்று ஒரு நூலகவியலாளனாக ஈழத்தமிழர்களிடையே வலம்வருகின்றேன். இலங்கையில் இருந்த வேளையில், சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் பாடசாலை நூலகராக 1978இல் முதல் நியமனம் பெற்றேன். பின்னர் புங்குடுதீவில் பிராந்தியத் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வோதய சிரமதான இயக்கத்தின் வடமாகாண நூலகராக 1979இல் இணைந்து 1983 வரை அங்கு பணியாற்றினேன். இக்காலகட்டத்தில் 1982இல் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் சேவையில் (UNDP-UNV) இந்தோனேஷிய நாட்டில் ஒருவருடகாலம் கிராம நூலக அமைப்பினைக் கட்டியெழுப்பும் பணிக்கு சர்வோதய இயக்கத்தின் சிபார்சின் பேரில் சென்றிருந்தேன். பின்னர் இலங்கை உள்ளுராட்சி சேவை நூலகராக – திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை கிராமத்திலும் ஒருவருடகாலம் பணியாற்றினேன். 1983 முதல் 1989 வரை, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு நூலகராக, அங்கு பேராசிரியர் கா.இந்திரபாலா இயக்குநராக இருந்தவேளையில் – பொறுப்பேற்றேன். அவ்வாண்டில் சடுதியாக அவர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பின்னர் அந்நிறுவனத்தின் இயங்கலுக்கான முழுப்பொறுப்பையும் படிப்படியாக ஏற்று 1989 வரை அந்நிறுவனத்தை யாழ்ப்பாணக் கல்லூரியின் சார்பில் கொண்டு நடத்தினேன்.

விடுதலை இயக்க, அரசியல், மற்றும் போர் நெருக்கடிகள் – குறிப்பாக இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள், மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும்- அந்த நிறுவனத்தை வழிநடத்திச் சென்றமை எனக்கு நிறைந்த வாழ்வியல் அனுபவத்தைத் தந்தது. பின்னர் 1989இல் கொழும்புக்கு குடும்பத்துடன் உள்ளகப் புலப்பெயர்வினை மேற்கொண்டிருந்தேன். அங்கும் அமரர் தமிழவேள் இ.க.கந்தசாமி அவர்களின் வேண்டுகோளின்பேரில், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பாரிய நூலகச் சேர்க்கைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் சேவை அடிப்படையில் ஈடுபடலானேன். அதேவேளையில் அமரர் சோமகாந்தனின் அழைப்பை ஏற்று இந்து சமய, கலாச்சார அலவல்கள் அமைச்சின் நூலகத்தினை புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கு எனது பணியினை அவதானித்த அமரர் நீலன் திருச்செல்வம் அவர்கள், எனது பணி நிறைவுற்றதும், தான் இயக்கும் International Centre for Ethnic Studies என்ற சமூக ஆய்வியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகராகப் பணியாற்ற அழைப்புவிடுத்தார். அவரது அழைப்பையேற்று சில காலம் அவரது நூலகத்தின் ஒழுங்கமைப்பிலும் பணியாற்றினேன். பின்னர் 1991இல் புலம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வந்து இங்கு நிரந்தர பிரஜாவுரிமைபெற்று, பிரித்தானிய தபால் திணைக்களத்தின் அந்நிய நாணயப் பிரிவில் அலுவலராகப் பணியாற்றி வருகின்றேன்.

அங்கு நூல்தேட்டம் தொகுப்பினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

லண்டன் வரும் முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு “நூல்தேட்டம்” என்ற பெயரில் காலாண்டுச் சஞ்சிகையொன்றை வெளியிடும் பணியில் ஏற்கெனவே 1990இல் ஈடுபட்டிருந்தேன். ஒவ்வொரு இதழிலும் 50 நூல்களைப் பற்றிய சிறு குறிப்பரையுடன் தொகுத்து, தமிழ் நூலகர்கள் அனைவருக்கும் அவை பற்றிய தகவல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது அவாவாக இருந்தது. அவ்வாறாக நூல்தேட்டம் சஞ்சிகையின் இரண்டு இதழ்கள் வெளிவந்தன. பின்னர் நான் கொழும்புக்கு வந்தபோது, அங்கு புத்தகச் சந்தையில் காணப்பெற்ற ஈழத்துத் தமிழ் நூல்களின் எண்ணிக்கையினைப் பார்த்துப் பிரமித்து விட்டேன். அதில் பத்தில் ஒரு பங்கினைக்கூட யாழ்ப்பாணத்தில் நான் அதுவரை அறிந்திருக்கவில்லை.

இலங்கையில் தமிழ் நூலகர்களுக்கு உள்ள பெரும் சவாலாக அமைந்திருப்பது – ஈழத்தவரின் நூல்களைத் தேடிப்பெற்றுத் தமது நூலகங்களில் சேகரிப்பதாகும். ஈழத்துத் தமிழ் படைப்பாளிகள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றைப் பற்றிய தகவல்கள் ஒருங்குசேர எங்குமே கிடைப்பதில்லை. இலங்கையின் பிரதான நூலகங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவேண்டும் என்ற அக்கறையோ, அந்நூலகங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்ப் புத்தகசாலைகளில் அவற்றை விற்பனைக்கு வைக்கவேண்டும் என்ற ஆர்வமோ அவர்களிடம் பொதுவாகக் காணப்படுவதில்லை. கொழும்பில் எனது பார்வைக்கெட்டிய பெருந்தொகையான நூல்களின் இருப்பைப் பார்த்ததும், எனது நூல்தேட்டம் சஞ்சிகையின் வரவை நிறுத்தி அதனை பாரிய நூல்தொகுதிகளாகவே வெளியிடவேண்டும் என்று தீர்மானித்தேன். சஞ்சிகையாக வெளிவந்து குறுகிய கால வாழ்வுடன் சில நூறு நூல்களை மட்டும் பதிவுசெய்துவிட்டு ஒதுங்கிவிடாது, ஒரு காத்திரமானதும் முழுமையை நோக்கியதுமான ஆவணத்தொகுப்பாக அதை உருவாக்கி எமது இனத்தின் பார்வைக்கும்- உலகத்தின் பார்வைக்கும் வைக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். புலம்பெயர்வாழ்வின் குடும்பப் பொருளாதார நிலையும், குடும்பத்தினரின் மேலான ஆதரவும் எனக்குச் சாதகமாயிற்று. ஒவ்வொரு தொகுதியும் 1000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டதாக இத்தொகுப்பு பரிணாமம் பெற்றது. இன்று ஆறாவது தொகுதியில் வந்து நிற்கின்றது. அதாவது 6000 நூல்களைத் தொகுத்துவிட்ட திருப்தியுடனும், இன்னும் எத்தனையோ ஆயிரங்கள் தொகுக்கப்படவேண்டி இருக்கின்றனவே இவை என் வாழ்நாளில் சாத்தியமாகுமா என்ற ஏக்கத்துடனும் உங்கள் முன் நிற்கின்றேன்.

ஈழத்துத் தமிழ் நூல்களுக்கு மாத்திரம் தான் நூல்தேட்டமா அல்லது அண்டை நாட்டு தமிழ் நூல்களுக்கும் அதனை விஸ்தரித்திருக்கிறீர்களா?

நூல்தேட்டத்தின் மூன்றாவது தொகுதியின் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் ஒரு தமிழ் நூலகம் இருப்பதாகவும் அங்கு பல அறியப்பெறாத ஈழத்தவர்களின் நூல்கள் பாதுகாக்கப்பெற்றிருப்பதாகவும் அறிந்து அங்கு சென்றேன். மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தான் அமரர் தனிநாயகம் அடிகளார் பணியாற்றினார். அங்கிருந்து தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அத்தகைய பெருமை பெற்ற அந்த நூலகத்தில் நான் பல ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோது வெளியிட்ட தமிழ் ஆங்கில நூல்களை பார்வையிட நேர்ந்தது. அவர்கள் பற்றி எந்தவொரு ஈழத்து இலக்கிய ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருக்கவில்லை. இதைப்பற்றி ஒரு விரிவான கட்டுரையும் எழுதியிருந்தேன். அது தினக்குரலில் தொடராக 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு வார இதழ்களில் வெளிவந்திருந்தது.

அங்கு நான் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில் என்னைச் சந்தித்த இந்திய ஆய்வியல்துறைத் தமிழ்ப்பிரிவின் தலைவர், மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் போன்றோர், மலேசிய சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்கும் ஒரு நூல்தேட்டத் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டிருந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் என்ற தலைப்பில் தனியான ஒரு தொகுதியை 2000 நூல்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளியிட்டிருந்தேன். ஈழத்து நூல்தேட்டம் போலல்லாது, மலேசிய நூல்தேட்டம் வெளியிட நான் செலவிட்ட பணத்தொகை அந்நூல்களின் விற்பனைமூலம் ஒரு வருடத்திலேயே பெற்றுக்கொள்ள முடிந்தது. தற்போது அதன் இரண்டாவது தொகுதியின் தொகுப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

மலேசிய நூல்தேட்டம் போன்றே தனித்தொகுதியாக ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களின் குறிப்புரையுடன் கூடிய தொகுப்பாக ஆங்கில மொழியிலமைந்த நூல்தேட்டம் (Noolthettam) தொகுதியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு (2009) இறுதிக்குள் அந்நூல் உலகெங்கிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர் பற்றிய- அவர்கள் இலங்கையின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு சிங்கள அறிஞர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகள் பற்றிய தகவல்களை தமிழர் அல்லாதவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்.

நூல்தேட்டம் தொகுப்பு முயற்சி பொருளாதார ரீதியில் உங்களுக்கு திருப்திகரமாக அமைந்துள்ளனவா?

எனது அனுபவத்தின்படி ஈழத்தமிழரான எம்மவர்களிடம் ஒரு பாரிய குறைபாடு உள்ளது. கவலைக்குரிய விடயமும் அதுதான். தமக்குத் தனிப்பட்ட முறையில் அல்லாது, தமது சமூகத்துக்கு பொதுவாக நன்மை பயக்கவேண்டிய எதையும் மற்றவர்களே தமது செலவில் செய்யவேண்டும் என்று கருதுவதுடன், தாம் பார்வையாளராகவும் விமர்சகர்களாகவும் மாத்திரம் இருப்பதே வசதி என்று நினைப்பது அந்தப் பண்பாகும். இன்றுவரை எந்தவொரு தனிமனிதரோ, பொது, சமூக, அறிவியல் நிறுவனங்களோ எனது நூல்தேட்டம் தொகுப்புப் பணியின் பொருளாதாரப் பழுவை தாம் கூட்டாக ஏற்க முன்வரவேயில்லை. குறைந்த பட்சம் ஈழத்து படைப்பாளிகள் ஒவ்வொருவரும் நூல்தேட்டத்தின் பிரதிகளை புத்தகசாலைகளில் விலைகொடுத்து வாங்கியிருந்தால், அல்லது இலங்கையிலுள்ள தமிழ் நூலகங்கள் அனைத்தும் தமது நூலகங்களுக்காக அதனை உசாத்துணை நூலாக வாங்கிப் போட்டிருந்தால்கூட அது மறைமுகமாக எனது பணிக்கு உதவுவதாகவே அமைந்திருக்கும்.

இன்றைய யதார்த்த நிலை என்னவென்றால், நூல்தேட்டம் தொடங்கப்பெற்று ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்றும் நூல்தேட்டத்தின் பிரதிகள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கிக் கிடப்பதாக பூபாலசிங்கம் பத்தகசாலை அதிபர் சிறீதர் சிங் தெரிவித்தார். அவரது கணக்கின்படி ஒவ்வொரு தொகுப்பிலும் 100 பிரதிகள் வரை கையிருப்பில் உள்ளன. இது மிக அண்மைக்கால கணக்கு. இவை உடனுக்குடன் விற்பனையாகியிருந்தால் இன்று நான் தடங்கலின்றி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையான தொகுதிகளைப் பதிவுசெய்திருப்பேன். எனது இந்த ஆவணவாக்கத்தின் முக்கியத்துவம் பற்றி இந்த நேர்காணலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியை ஒரு தடவை கேட்டுக்கொண்டால், எனது உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

இங்கிலாந்தில் நூலக ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க முனைவதாக பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிகின்றோம். அவ்வாறு ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனை உங்களுக்கு எவ்வாறு உருவானது?

நூல்தேட்டம் தொகுப்பு பரவலாக எம்மவரால் உள்வாங்கப்படும் போதெல்லாம், இந்த நூல்தேட்டத்தில் பதிவிலுள்ள ஆவணங்களை நீங்கள் சேர்த்து வைத்திருக்கிறீர்களா என்ற கேள்வி என்னையே நோக்கி எழுப்பப்படுவது வழக்கம். அவர்களின் வேண்டுகோளை எற்று, மேலதிக முயற்சியொன்றை அண்மைக்காலத்தில் மேற்கொண்டுள்ளேன். நூல்தேட்டம் பதிவுக்காக நான் எழுத்தாளர்களிடமிருந்தும், வெளியீட்டகங்களிடமிருந்தும் அன்பளிப்பாகவும், சில சமயங்களில் விலைகொடுத்தும் பெற்றுக்கொண்ட நூல்கள் சுமார் 3000 வரையில் என்னிடம் சேர்ந்துள்ளன. அதைத் தவிர தனிப்பட்டவர்களின் சேர்க்கைகளும் இங்கு லண்டனில் ஆங்காங்கே சேர்த்துவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஓரிடப்படுத்தி அவற்றை ஒரு ஆவணக்காப்பகமாகவும், ஆய்வு நிறுவனமாகவும் பேணவேண்டும் என்ற ஆவல் என்னுள் மேலெழுந்ததால் எனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த மே 2009இல் European Tamil Documentation and Research Centre என்ற தலைப்பில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளேன். ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் என்று தமிழில் அதை அழைக்கலாம். இது பிரித்தானிய அரசின் தர்மஸ்தாபன அமைப்பாகவும் பதிவுசெய்யப்பட்டு, அதற்கு தனியான நடைமுறை வங்கிக் கணக்கொன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் நிதி வருவாயுடன் இந்த அமைப்பினை நாம் கட்டியெழுப்ப அனுமதி சட்டபூர்வமாக கிட்டியுள்ளது.

இன்று ஈழத்தமிழர் தொடர்பான நூல்களும், அவர்கள் படைத்த நூல்களும் உலகெங்கிலுமிருந்து தமிழ் உள்ளிட்ட வௌ;வேறு மொழிகளில் வெளியாகியுள்ளன. இவை அனைத்தையும் இங்கு ஓரிடத்தில் பார்ப்பதென்பது மிகக் கடினம். பிரித்தானிய நூலகம், சொயாஸ் நூலகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலகங்கள் என்பன ஓரளவு இலங்கை தொடர்பான நூல்களை சேகரித்துப் பாதுகாத்து வைத்திருந்தாலும் அவை இறுக்கமான அங்கத்துவக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் பொதுவான வாசகரால் அவற்றை சுதந்திரமாகப் பார்வையிட முடிவதில்லை. இந்நிலையில் எமக்கென்றொரு ஆவணக்காப்பகம் தேவை.

மற்றது, இன்று தமிழர்கள் மாத்திரம் தான் இலங்கைத் தமிழர் பற்றியும் அவர்களின் சமயம், அரசியல், கலை, கலாச்சாரம், வரலாறு பற்றியும் அறிய ஆர்வம் காட்டுகிறார்கள் என்றில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை உலகளாவிய கவன ஈர்ப்பினைப்பெற்று விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் உலகில் பலரும் இலங்கை பற்றியும் இலங்கைத்தமிழர் பற்றியும் ஆர்வம் கொண்டவராகக் காணப்படுகிறார்கள். அவர்களது ஆய்வுக்கும், அறிவுக்கும் வேண்டிய தகவல்களை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கவேண்டியது முக்கியமான ஒரு பணியாகக் கருதுகின்றேன். அதனையும் நாம் வழங்காமல் இலங்கை அரசாங்கமே தானாக முன்வந்து வழங்கும்வரை காத்திருப்பதும் அதன்பின் விமர்சனம் செய்வதும் பொருத்தமானதா?

அடுத்தது இங்கு வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழப் பிள்ளைகள் தாம் ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டுத் தேசிய மொழிகளில் கல்வி பயில்கிறார்கள். எதிர்காலத்தில் எமது இனம் பற்றிய வாழ்வியலையும் வரலாற்றையும் தமிழில் அல்லாது பிற மொழிகளில் தான் அவர்கள் பரிமாறப்போகிறார்கள். இதுவே யதார்த்தம். அவர்களின் தேவைக்காகவும் தமிழில் அல்லாத ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் தமிழர் பற்றிய ஆவணங்களைத் தேடிப் பாதுகாத்துவைத்து வழங்க வேண்டியதும் எமது கடமையாகின்றது.

இவை அனைத்தினதும் கூட்டுவெளிப்பாடாகவே இந்த ஆவணக்காப்பகத்தின் உருவாக்கம் பற்றிய சிந்தனை என்னுள் உரம்பெற்றது என்று சொல்லலாம்.

நிறுவனமாக செய்யப்பட வேண்டிய ஒரு முயற்சியை தனித்து, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் எப்படி உங்களால் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது?

இவை அனைத்தும் விதிவசத்தாலும், எம்மவரின் பாராமுகத்தினாலும் சலிப்புற்று, அவமே காலம் கரைவதனால் வேறு வழியின்றி, தனித்துச் செய்கிறேனேயல்லாது, இது தனி ஒருவனால் செய்து முடிக்கக்கூடிய காரியமல்ல. காலக்கிரமத்தில் எம்மவர் உணர்ந்து எனக்குத் தோள் கொடுப்பார்கள் என்றும், எனக்குப் பின் அடுத்த தலைமுறையொன்று எனது பணியைத் தொடரும் என்றும் நிறைந்த நம்பிக்கைகளுடன்தான் எனது பயணத்தைத் தொடர்கின்றேன். இதனை ஒரு பாரிய பணிக்கான அத்திவாரமாகவே நான் கருதுகின்றேன்.

உங்களின் இந்த முயற்சிக்கு புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு எப்படி உள்ளது?

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் புலம்பெயர்தலுக்கும், அகதி அந்தஸ்தினைப் பெறுதலுக்கும், அங்கு வளத்துடன் வாழ்வதற்கும், தமது சமூக அந்தஸ்தினை உயர்த்திக்கொள்வதற்கும் தேவையான தேர்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே அக்கறை கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். -இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். பொதுவானதொரு நீண்டகாலத் திட்டத்தில்- வருவாய் ஈட்டாத ஒரு சமூக நலத்திட்டம் என்று எம்மவரிடம் எதுவுமே இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கு நிதி கொடுத்தால் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் புலத்திலும், புகலிடத்திலும் எல்லாம் தானாக நடக்கும் என்ற நம்பிக்கையில் பணத்தை வழங்குவதுடன் தமது கடமை முடிந்ததாகக் கருதித் திருப்திப்பட்டுக்கொள்ளும் அப்பாவிகளே அதிகம்.

புகலிடத் தமிழர்கள் கோவில்களைக் கட்டினார்கள். கடைகளை, வர்த்தக நிறுவனங்களைப் பெருக்கினார்கள், பாடசாலைகளைத் தொடங்கினார்கள். இவை அனைத்தும் ஒரு வகையில் பொருளாதார வருவாயை அடிப்படையாகக் கொண்டே கட்டி எழுப்பப்பட்டன. இவ்வமைப்புகளைச் சுற்றியுள்ளவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள், புலம்பெயர் தமிழர் மத்தியில் பகிரங்கமாக பொதுமேடைகளில் தலை காட்டாதவர்கள்;. இதனால் ஒரு பாரிய பிரிவு மறைமுகமாக எம்மிடையே ஏற்பட்டு வருகின்றது. பொருளாதார வளம் மிக்கவர்கள் பொதுநலத் திட்டங்களிலிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள். பொது நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செயற்பட முனைபவர்கள் பொருளாதார பலமற்று தனிமைப்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றார்கள். இங்குள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான நிதி வருவாய் கொண்டவை. அவை இணைந்து முன்வந்தால் இந்தப் புலம்பெயர் நாடுகளில் பாரிய சாதனைகளை செய்து முடித்திருக்கலாம். ஆனாலும் இன்றுவரை எந்தவொரு கல்விசார் ஆவணக்காப்பகமோ, ஆய்வு நிறுவனமோ ஏன் தமிழ் நூலகமோ இந்தச் சமூக அமைப்புகளால் புகலிடத்தில் சிறப்பாக வளர்த்தெடுக்கப்படவில்லை. அப்படி ஒன்றிரண்டை நான் இனம்காட்டக் கூடியதாக இருந்தாலும் அது தனிப்பட்ட ஒரு சிலரின் தியாகத்தாலும், கனவாலும் கட்டியெழுப்பப்பட்டவையாகவே உள்ளன.

இம் முயற்சிகளுக்கு ஈழத்தவர்களின் ஆதரவு போதுமானளவு கிடைக்கின்றதா?

எனது ஆவணக்காப்பக முயற்சி பற்றி இலங்கை ஊடகங்களில் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை எவரும் அணுகவில்லை. இலங்கையிலிருந்து ஆவணக்காப்பகத்திற்கு பணத்தை எதிர்பார்க்கவில்லை. விலைகொடுத்து வாங்க இயலாத ஏராளமான நூல்கள், சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள், அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அங்கு தேங்கிக்கிடக்கின்றன. அவை தனிப்பட்டவர்களிடம் சேகரிப்புகளாக இருக்கின்றன. அவற்றை உரியவர்கள் விரும்பினால் கொழும்பிலேயே ஒப்படைத்து இங்கு அவற்றை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான எளிய நடைமுறைகளையும் குறிப்பிட்டிருந்தேன். எதிர்காலத்தில் அவற்றை இலங்கையில் பாதுகாப்பதா, லண்டனில் பாதுகாப்பதா என்ற சிக்கலான கேள்விக்கு விடைதேட முடியாதவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். முடிவை அவர்கள் தான் எடுக்கவேண்டும். தமது சேர்க்கைகளில் ஒரு பகுதியை- அல்லது மேலதிகப் பிரதியொன்றை ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் என்ற எமது அமைப்புக்கு அனுப்பிவைப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணரும் பட்சத்தில் எம்முடன் தொடர்புகொண்டால் அவற்றை எமது செலவில் இங்கு எடுப்பிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

ஈழத்து எழுத்தாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களது நூல்கள் மாத்திரமா? அல்லது ஏனைய நாட்டு எழுத்தாளர்களது நூல்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகத்தில் ஆய்வுத் தேவைக்காக பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கையிலும் உலக நாடுகளிலும் வெளியிடப்பட்ட ஈழத்தமிழர்களினது தமிழ் ஆங்கில நூல்கள் பாதுகாப்பப்படும். மலேசிய-சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களும் இங்கு சிறப்புச் சேர்க்கையாக பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கையிலும் தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஈழத்தமிழர் பற்றி வெளிவந்த தமிழ், ஆங்கில, சிங்கள நூல்களும் பாதுகாத்து வைக்கப்படும். இவை தவிர ஈழத்துச் சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள், பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதி என்பனவும் பாதுகாக்கப்படுகின்றன.

நூல்களாகவே இவை இங்கு பாதுகாக்கப்படுகின்றனவா? அல்லது இணையத்தளத்தில் மாத்திரம் பாதுகாக்கப்படுகின்றனவா?

பெரும்பாலும் நூலுருவிலான ஆவணங்களும், ஒலி-ஒளிப்பதிவுகளும் இறுவட்டுகளும் பாதுகாக்கப்படுகின்றன. ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் இறுவட்டுகளாகப் பாதுகாக்கப்படுகின்றன. துண்டுப்பிரசுரங்கள் கூட இன்றைய காலத்தில் எமது வரலாற்றுப் பதிவுகளாகிவிட்டன. அவையும் எம்மிடம் உள்ளன. இவ்விடத்தில் நூல்களை இணையத்தில் பாதுகாக்கும் நடவடிக்கையில் நேரடியாக இயங்காதபோதிலும், நூலகம் டொட் நெற் (Noolaham.net) இணையத்தளத்தின் இணைய நூலகத்திற்கான முக்கிய பயனீட்டாளர்களாக ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் இயங்கும். எமது இனத்தில் ஒரு குழு மேற்கொள்ளும் மிக முக்கிமான பணியை வளர்த்தெடுக்க உதவுவது, அதைப் போன்ற மற்றொரு இணைய நூலகத்தை உருவாக்கிச் செயற்படுத்தவதைவிட சிறந்ததென்று கருதுகின்றேன்.

இங்கு நூல்கள் என்ன முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன?

காப்பகத்தின் நூல்கள், ஆவணங்கள் அனைத்தும் டூவி டெசிமல் பகுப்பாக்க முறையில் பகுப்பாக்கம் (Dewey decimal Classification – DDC) செய்யப்பட்டு கணணியேற்றம் செய்யப்பட்டுள்ளன. நூல்தேட்டம் பதிவும் இம்முறையைத் தழுவியே பகுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள். இன்று தேசிய நூலகம் உள்ளிட்ட இலங்கையின் பொது நூலகங்கள் அனைத்தும் இவ்வகைப் பகுப்பு முறையினையே பின்பற்றுகின்றன. ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமுமேயன்றி ஒரு பொது நூலகம் அல்ல. எனவே இங்குள்ள நூல்கள் closed access முறையிலேயே பாதுகாக்கப்படும். வெளிப்படையாக தட்டுகளில் ஒழுங்கமைக்கப்பட்டு யாரும் எந்நேரமும் தமது விருப்பப்படி எடுப்பதும், வீட்டுக்கு எடுத்துச் செல்வதும் சாத்தியமாக இராது.

புலம் பெயர் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

புகலிடங்களில் வெளிவந்த பெரும்பான்மையான கதை, கவிதை நூல்கள் போராட்டம் சார்ந்த இலக்கியங்களாகவே இருந்தன. தாம் புலம்பெயர்ந்த மண்ணின் இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருவதும், தமிழில் தாம் எழுதிய படைப்புக்களை புகலிடத்துத் தேசிய மொழிகளில் கொண்டுவருவதும் ஆங்காங்கே இடம்பெற்றுமிருந்தன. ஆயினும் அவை முனைப்புப் பெற்றிருக்கவில்லை. முன்னைய காலங்களைப் போலல்லாது போரியல்சார்ந்த படைப்பிலக்கியங்கள் வெளிவருவது மே 2009இன் பின்னர் நின்றுவிட்டன. இப்போது தான் ஆங்காங்கே ஒன்றிரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நான் அடிக்கடி குறிப்பிடும் விடயம் – தமது படைப்பகளை நூலுருவில் காண்பதுடன், வசதி குறைந்த ஈழத்துப் படைப்பாளிகளின் நல்ல படைப்புகளைப் பெற்றுப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபடுங்கள் என்பதாகும். எனது வேண்டுகோள் இடைக்கிடையே நிறைவேற்றப்பட்டிருப்பினும் அதில் போதிய வேகம் காணப்படவில்லை. இனிவரும் காலங்களில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம். இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரும் தமது படைப்பிலக்கியப் பணிகளில் முகம்காட்டுகின்றனர். இவர்களின் படைப்புக்கள் புதியதொரு அனுபவத்தை எமக்கு வழங்கும்.

இன்றைய எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுத்தாளர்களுக்கு என்ன எழுதவேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனை கூற நான் அருகதை அற்றவன் என்பதே எனது தாழ்மையான கருத்து. நான் ஒரு படைப்பாளியோ எழுத்தாளனோ அல்ல. ஏதோ எழுதுகின்றேன். மற்றும்படி நான் ஒரு நூலகவியலாளன். நூலியல் சார்ந்த விடயங்களில் நான் தாராளமாகக் கூறலாம். குறிப்பாக ஒரு நூலை எழுதும்போது அதன் வடிவமைப்பு, விநியோகம் பற்றியும் அக்கறை செலுத்துங்கள். வெறும் வெளியீட்டு விழாக்களையும், சுற்று வட்ட நண்பர்களையும் மாத்திரமே கருத்தில் கொள்ளாதீர்கள். அது உங்கள் படைப்புக்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வைத்திருக்கும். ஊர் கடந்து, நாடுகடந்து அந்நியரின் கைகளுக்குள் அது செல்லவேண்டும். அப்போது தான் அது புதிய வாசகர்களை உங்களுக்குத் தேடித்தரும். உங்களை நாடி எவராவது வரவேண்டும் என்று எதிர்பார்த்து கைகளில் புத்தகத்துடன் காத்திருக்காதீர்கள். உங்கள் நூல்களில் ஒரு சில பிரதிகளையாவது அது வெளிவந்ததும் உங்களைப்பற்றிய குறிப்புகளுடன் சேர்த்து புகலிட ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தால், உங்கள் நூல் பற்றிய செய்தி வெளியாருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும். புலம்பெயர் தமிழ் ஊடகம் பாரியது. உங்கள் நூல் பற்றிய விபரங்களை ஐரோப்பிய வாசகர்களிடம் என்னாலும் எடுத்துச் செல்லமுடியும். அதற்கு என்னுடனான உங்கள் தொடர்பு அவசியம்.

ஈழத்துப் படைப்புக்களை உங்களால் உடன் பெற்றுக்கொள்ள முடிகிறதா?

இல்லை என்பதே வேதனையான பதில். ஈழத்துப் படைப்புகள் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து வருகின்றன. அவை வெளிவந்த சுவட்டினைக்கூட நாம் அறிய முடிவதில்லை. ஒன்றிரண்டு நூல்கள் பற்றி பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவரும் அறிமுகச் செய்திகளை வைத்து நூலாசிரியரின் முகவரி கிடைக்குமிடத்து அவருக்கு கடிதம் எழுதுவது எனது வழக்கம். பெரும்பாலான நூல் அறிமுகங்களில் இந்தத் தொடர்பு முகவரி காணப்படுவதில்லை. இது கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையையே எம்மவர்களுக்குத் தோற்றுவிக்கும். ஒரு நூலை அறிமுகப்படுத்துபவரின் நோக்கம் வெறுமனே அந்நூல் பற்றித் தெரிவிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதில்லை. அந்நூல் வாசகரின் கைகளை அடைவதற்கும் அது ஒரு பாதைவகுத்துத் தரவேண்டும். அதற்கு ஏற்ப நூலாசிரியரின் முகவரி அவசியம் பதிவுபெற வேண்டும்.

குமரன் புத்தக இல்லம், சேமமடு பொத்தகசாலை ஆகிய வெளியீட்டகங்கள் தாம் அச்சிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்குத் தவறாமல் அனுப்பி வைக்கிறார்கள். பிற வெளியீட்டகங்களும் எனது நூல்தேட்டப் பதிவுப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டும். வெறும் வியாபாரிகளாக மாத்திரம் எம்மவர்கள் இருப்பது கொடுமையாகும். லாபீர், அந்தனி ஜீவா, ஞானம் ஆசிரியர்- கலாநிதி ஞானசேகரம் போன்றோரும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் முருகுவும், யாழ்.பல்கலைக்கழக நூலகர் கல்பனா சந்திரசேகர் போன்றோரும் தாமாக முன்வந்து நூல்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவை தவிர நான் வீடுவீடாக, ஊர் ஊராக, நாடுகடந்து சென்று தான் நூல்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எனது இந்த வரிகளை வாசிக்கும் எழுத்தாளர்கள், நூல் ஆர்வலர்கள் தாம் வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவைத்துவிட்டு சிந்தித்தால் அவர்களால் எனது தேடலுக்கு மிக எளிதில் உதவ முடியும். ஒரு தேசிய நூலகம் சட்டபூர்வமாகச் செய்யவேண்டிய பணி இது. உலகில் எங்குமே தமிழ்ப் படைப்புகள் முழுமையாகப் பதிவுபெறாத நிலையே இன்று காணப்படுகின்றது. ஈழத்தமிழரின் படைப்புக்கள் அந்நிலையிலிருந்து விலகி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தீவிரஉணர்வு கொண்டவர்கள் ஒரு சிலராவது எனக்கு உதவலாம் அல்லவா?

உங்களால் எழுதப்பட்ட நூல் முயற்சிகள்?

ஈழத்து நூல்கள் மாத்திரமல்லாது, மலேசிய சிங்கப்பூர் நூல்கள் பற்றியும் அதன் படைப்பாளிகள் பற்றியும், நூல் வெளியீடுகள் பற்றியும், நூலகவியல் பற்றியும் ஏராளமான கட்டுரைகளை இதுவரை இலங்கையிலும் புகலிட நாடுகளின் ஊடகங்களிலும் எழுதிவந்திருக்கிறேன். பிரித்தானிய தமிழ் வானொலியான ஐ.பீ.சீயில் காலைக்கலசம் என்ற நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம் மற்றும் நூல் வெளியீடுகள் பற்றி 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றக்கிழமைகளிலும் 15 முதல் 20 நிமிடங்கள் உரையாடி வருகின்றேன். ஞானம், சுடரொளி போன்ற சஞ்சிகைகளில் எனது பத்தி எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் அவ்வப்போது பல்வேறு உலகத் தமிழ் சிற்றேடுகளிலும் இணையத்தளங்களிலும் மீள்பிரசுரம் கண்டும் உள்ளன. நூல்களைப் பொறுத்தவரையில் 28 நூல்கள் வரையில் எழுதியிருக்கிறேன். அண்மையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஞானம் சஞ்சிகையின் வெளியீடாக “வேரோடி விழுதெறிந்து” என்ற தலைப்பில் எனது 20 கட்டுரைகள் கொண்ட நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கையிலேயே அச்சிட்டு விநியோகிக்கப்படுவதால், இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களில் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முயற்சிகளுக்காக நீங்கள் பெற்றுக்கொண்ட விருதுகள்………….?

எனது இலக்கியப் பணிக்காக 2004இல் கனேடிய நாட்டில் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர் தகவல் நிறுவனம் “தமிழர் தகவல்”; விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது. 2005இல் உடத்தலவின்னை சிந்தனை வட்டம் அமைப்பினால் திரு பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் “இலக்கிய வித்தகர்” விருதினை வழங்கி கௌரவித்திருந்தார். இவை தவிர பல்வேறு நாடுகளுக்கும் நான் நூல்தேடல் பணியினை மேற்கொண்டு செல்லும் போதெல்லாம் அவ்வந்நாட்டு தமிழ் இலக்கிய அமைப்புகள் என்னை வரவேற்று உபசரித்து பாராட்டுவதுடன் நூல்களைத் தேடியும் வழங்கிவருகின்றன. சுய அறிமுகம் ஏதுமின்றிப் பெறப்படும் இந்த அங்கீகாரமே பெரிய விருதாகக் கருதுகின்றேன்.

ஆவணக் காப்பகம் தொடர்பாக எதிர்காலத்தில் செயற்படுத்தவென எத்தகைய திட்டங்களை முன்வைத்துள்ளீர்கள்?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு தனியான கட்டடத்தில் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்பதே எனது கனவாகும். இதற்கு ஈழத்தமிழர்கள் நூல் ஆதரவும், புலம்பெயர் தமிழர் நிதி ஆதரவும் வழங்கினாலேயே என் கனவு மெய்ப்படும். இக்கனவு எனக்கானதொரு சுயநலக்கனவல்ல. எமது அடுத்த தலைமுறையினருக்கு எமது தேட்டத்தை விட்டுச்செல்ல என்ன நடவடிக்கைகளை நாம் எமது காலத்தில் எடுத்தோம் என்று சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒவ்வொரு புத்திஜீவியின் கனவுமாகும். இதற்கான வழி-அடிப்படையில் நிதி ஆதரவிலேயே தங்கியுள்ளது. ஆகக் குறைந்தது 500 பேர் மாதம் 5 பவுண் செலுத்தும் அளவு வளர்ந்தால், பிரித்தானிய அரசே எமக்கு பல வழிகளில் உதவும் வாய்ப்புள்ளது. இரண்டு லட்சம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில் பிரித்தானியாவில் இன்றைய தினத்தில் எமது வேண்டுகோள்கள் அனைத்தும் தீவிரமாக மக்களைச் சென்றடையவில்லை. இன்றைய இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் திடீர் முடிவு அவர்களை நிலைகுலையச் செய்திருக்கலாம். எதிர்காலத்தில் சிறிய அளவிலான கருத்தரங்குகளை ஒழுங்குசெய்து புத்திஜீவிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவிருக்கிறோம். இதற்கு தமிழறிஞர் ஐ.தி.சம்பந்தன் போன்றோர் உதவி வருகின்றனர். தற்போது ஆங்கிலத்தில் வெளிவரவுள்ள நூல்தேட்டம் தொகுப்பினை ஆவணக்காப்பக வெளியீடாகவே பிரசுரிக்கவுள்ளோம். தமிழர் அல்லாதவர்களிடையே இக்காப்பகச் செயற்பாடுகள் பற்றிய தெளிவான தகவல் ஒன்றினை இந்நூல் எடுத்துச் செல்லும் என்று நம்புகின்றோம். கணிசமான நிதி வருவாயினையும் இது எமக்குப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம்.

ஈழத்து எழுத்தாளர்கள் எவ்வாறு உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்?

தமிழ் எழுத்தாளர்கள், நூல் ஆர்வலர்கள் மற்றும் ஆவணக்காப்பகத்தின் உருவாக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவ முன்வருபவர்கள் என்னுடன் மின்னஞ்சல் வழியாகவோ. தொலைபேசி வழியாகவோ கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: selvan@ntlworld.com
தபால் முகவரி: Mr. N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom..
தொலைபேசி இலக்கம்: 0044 1582 703786
இலங்கையில் தமது நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பிற்கு:
Mr. V.T.Rajaram, C/1/6 Veluvanarama Flats, Off Hampden Lane, Wellawathe, Colombo

இந்நேர்காணல் தினக்குரல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்டது. இந்நேர்காணல் 27 09 2009 – 04 10 09 இதழில் வெளிவந்தது. (நன்றி தினக்குரல்)